ஆன்மிகம் கேள்வி - பதில்

திருக்கோயில்களின் உடைமைகள், சொத்துக்கள் மற்றும் தங்க, வெள்ளி ஆபரணங்களை வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு, சாஸ்திர சம்மதம் உண்டா?



மக்களின் மனம் தெளிவுபெறவும், பண்பான சிந்தனை வளரவும், ஆன்மிக அறிவைப் புகட்டவும், பரார்த்த பூஜையில் (மக்களின் உயர்வுக்காக பூஜை செய்வது) ஈடுபட்டார்கள் வேதம் ஓதுபவர்கள். இதைக் கண்ணுற்ற அரசர்கள் அவர்களுக்கு உதவ முன்வந்தனர். மக்களை நல்வழிப்படுத்தும் தங்களது கடமையை நிறைவு செய்யும் வகையிலான வேதம் ஓதுபவர்களின் முயற்சியால் மகிழ்ந்து, ஆலயங்கள் பல அமைத்து ஊக்குவித்தனர் அரசர்கள்.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆலயம் அரசுக்கு சொந்தமாகாது. அதை, நிரந்தரமான மக்கள் சேவைக்குப் பயன்படுத்தினார்கள். ஆலயம் ஒரு சேவை ஸ்தாபனம் அல்ல. சேவை புரிபவர்கள் அரசாங்க ஊழியர்களும் அல்ல. அவர்கள் சம்பளம் வாங்கிப் பிழைப்பவர்களும் அல்ல. சேவைக்கு வெகுமதியாகக் கிடைக்கும் செல்வத்தில் குடும்பத்தைப் பராமரித்து வாழ்பவர்கள்.

அவர்களுக்கு விடுமுறையோ, ஓய்வு ஊதியமோ கிடையாது. அவசர காலத்தில் தனக்குப் பதிலாக வேறொரு பூஜாரியை சேவையில் அமர்த்தும் பொறுப்பையும் அவர்களே ஏற்றுக்கொண்டு, இன்னொருவரை சேவையில் அமர்த்துவார்கள். அரசுக்கும் ஆலய நிர்வாகத்துக்கும் தொடர்பு இருக்காது. முழுப்பொறுப்பும் சேவை செய்பவர்களிடம் சுமத்தப்பட்டிருக்கும்.

அவர்கள் எல்லோரும் ஆலயத்தின் தூய்மையைப் பராமரிப்பதிலும், காலம் தவறாமல் பூஜையை நிறைவு செய்வதிலும், பிறர் தூண்டுதலை எதிர்பார்க்காமல் அறப் பின்னணியில் தன்னிச்சையாகச் செயல்படுவார்கள்.

ஆலயச் சொத்து பொதுவுடைமை. ஆனால், அரசுக்கு சொந்தம் கொண்டாட இயலாது. பூசாரி சமூகத்துக்கும் சொந்தமில்லை. பண்பைப் போதிக்கும் ஆலய சொத்துக்களை அவசர காலத்திலும் கைவைக்கக் கூடாது. அது அழிந்தால் பண்பு கேள்விக்குறியாகிவிடும். ஒன்றை அழித்து மற்றொன்றை வாழ வைப்பது என்பது திறமைசாலியின் அடையாளம் அல்ல. கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது பெருந்தன்மை ஆகாது. மக்களைக் காப்பாற்ற வேறு வழியை ஏற்க வேண்டும்.

பண்பின் ஊற்றான ஆலயச் சொத்தை எடுத்து மக்களுக்குக் கொடுத்துவிட்டு ஆலயத்தை முன்னேற்ற வேறு பொருளாதார வழியைத் தேடுவது அறியாமை. இரண்டும் நலிவடைந்து சூன்யமான இடைவெளியைத் தோற்றுவிக்க முற்படக்கூடாது.

இந்தக் கருத்து தவறானது. இதை ஏற்க இயலாது.

ஆலயங்கள் பொதுவுடைமை; தனி உடைமை ஆகாது. பொதுவுடைமையாக மாறினால் மட்டுமே ஆலயங்கள் பொருளாதார வளர்ச்சியை எட்டும். பொது மக்களின் பங்குதான் அதன் நிறைவுக்குக் காரணம். காணிக்கையாக அளிக்கும் பொருள் ஆலயத்துக்கு சொந்தமாகாது. ஆலயம் சொத்து சேர்க்கும் நிறுவனமும் அல்ல. ஆலயத்தில் நிவேதனம் செய்யப்படும் பொருள்களை மக்களுக்கு விநியோகிப்பார்கள்; அவை, பொருளாதாரத்தை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுவதில்லை.

காணிக்கையின் வரவு அளவுக்கு மீறி வளர்ந்தால், அதற்கு உரிமை கொண்டாட அரசுக்கு தகுதி உண்டு. ஆலய பராமரிப்பில் காப்பாளனாகச் செயல்படும் அரசுக்கு, அதன் சொத்தை ஏற்கவும் அதிகாரம் உண்டு. எனவே, அரசு தன் விருப்பப்படி ஆலய சொத்தை தன் வசம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை.

பண்டைய நாட்களில் அரசுதான் ஆலயத்தைக் கட்டிக் கொடுத்தது. பொது மக்களிடமிருந்து காணிக்கையாக வரும் செல்வத்தில், ஆலயப் பராமரிப்புக்கும் பூஜாரியின் குடும்ப பராமரிப்புக்கும் போக மிச்ச மிருப்பது அரசாங்கத்தைச் சேர்ந்தது. அதற்கு, எந்தவொரு தனி மனிதனும் உரிமை கொண்டாட இடம் இல்லை. அரசுக்கு 'க்ளைம்’ பண்ண இயலும். ஆலய நிர்வாகம் இடையூறின்றிச் செயல்பட பாதுகாவலனாக இருப்பதால், அது அரசுடைமை.



அன்று அரசு கட்டிக் கொடுத்த ஆலயம் என்பதால், அது அரசுடமையாக மாறிவிட்டது. தற்போது ஜனநாயகம் ஆனாலும், பொதுச் சொத்து அரசாங்கத்துக்குச் சொந்தம். தனி மனிதனின் உரிமையைக்கூட, மக்களின் உயர்வுக்கான காரியங்களின் பொருட்டு அரசு தன்வசமாக்க உரிமை உண்டு. சாலைகள் அமைக்க வசதியாக தனி மனிதனின் உடைமைகளைப் பறிமுதல் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு.

சுதந்திரத்துக்குப் பிறகு, அதுவரை இருந்த சிற்றரசுகள் அனைத்தும் மக்களாட்சி அரசுக்குச் சொந்தமாயின என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உண்மையைச் சொல்லப்போனால், இந்த நாடு அரசுக்குச் சொந்தம். குடியிருக்கும் வீடுகூட குடியிருப்பவனுக்குச் சொந்தம் இல்லை.

அந்த வீட்டில் குடியிருக்க அவன் வரி செலுத்த வேண்டும். வீட்டில் வாழ்வதற்குதான் உரிமை உண்டே தவிர, சொத்தில் முழு உரிமை இல்லை என்பது, வரி செலுத்துவதால் உறுதிப்படுத்தப்படுகிறது. குடிநீர், மின்சாரம், சாலை போன்றவற்றுக்கு மட்டுமல்ல, நில வரியும் செலுத்த வேண்டும். நிலத்தை நாம் அனுபவிக்கமுடியுமே தவிர, முழு சொந்தமாகாது. நிரந்தர வாடகைக்கு எடுத்ததற்குச் சமமாகவே இருக்கும். வாடகைக்கு விட்ட சொத்தை தனதாக்கிக்கொள்ள எவருடைய சிபாரிசும் தேவை இல்லை.

ஆக, இக்கட்டான சூழலில் மக்களைக் காப்பாற்ற, ஆலயச் சொத்தை ஏற்பதில் தவறு இல்லை. சேமித்த செல்வத்தை அவசர காலத்தில் பயன்படுத்தாமல் சுணக்கமுற்று, மக்களின் துயரைத் துடைக்காத அரசு தனது தகுதியை இழந்துவிடும்.

குழந்தைகளில் மூத்தவன் கையில் முறுக்கும், சீடையும், கடலை உருண்டையும் நிறைய வைத்துக் கொண்டு, தானும் சுவைக்காமல் மற்றவருக்கும் தராமல் சும்மா இருக்கிறான். அவனது இரு தம்பிகளும் பசியால் அழுதுபுரண்டு தங்களுக்கும் தருமாறு கேட்டும், அண்ணன் அவற்றை அளிப்பதற்கு முன்வரவில்லை. பொறுமை இழந்த தகப்பன், அவன் கையிலிருந்த பொருளைப் பறித்து இளைய குழந்தைகளுக்குக் கொடுத்து நிம்மதி பெறுகிறான்.

ஆலயச் சொத்து நிரம்பி வழிகிறது. மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. இந்தச் சூழலில் மக்களின் நன்மைக்காக சொத்தை தனதாக்கிக் கொள்ளுவது தவறாகாது.

அரசின் கண்ணோட்டத்தில் களங்கம் இல்லை. பொன்னாசையில் பறிக்க முயலவில்லை. அதைத் தனதாக்கிக் கொள்ள விரும்பவில்லை. மக்களின் துயரைத் துடைப்பதற்காகவே அதைப் பயன்படுத்துகிறது என்பதால், அரசு தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்கிறது என்றே பொருள்.

ஆராயாமல் சொன்ன அறிவுரை! இதைச் சிந்தனையாளர்கள் ஏற்கமாட்டார்கள்.

ஆலயங்கள் பக்தர்களின் நன்கொடையில் பராமரிக்கப்படுகின்றன. அலங்காரத்துடன் மிளிரும் ஆண்டவனை தினம் தினம் தரிசித்து மகிழ ஆடை-அணிகலன்களை வழங்கியிருக்கிறார்கள். வருங்கால பக்தர்கள் குழாமுக்காகவும் அந்த அலங்கார தரிசனம் தொடர வேண்டும்.

மனம் ஆண்டவனில் லயிக்க, அவர் அலங்காரத்துடன் காட்சி அளிப்பது அவசியம். உத்ஸவ காலங்களில் காலை, மதியம், மாலை வேளைகளில் மாறுபட்ட அலங்காரங்களில் அவரைப் பார்த்து மகிழ்வர். மக்களின் மனத் தெளிவுக்கும், பண்பை வளர்ப்பதற்கும் அது ஒத்துழைக்கும்.

பொருளாதாரத்தில் நலிந்தவர்களும் பக்தி மேலீட்டால் தனக்கு என்று வைத்துக்கொள்ளாமல், ஆண்டவனுக்கு ஆடை ஆபரணங்களை அளித்து மகிழ்வது உண்டு. மனம் சார்ந்த உயர்வுக்கு ஆண்டவனின் அலங்கார தரிசனம் நிச்சயம் வேண்டும். ஆண்டவன் எந்தப் பொருளையும் விரும்பமாட்டான். அவன் மகிழ்ச்சிக்காக அலங்காரம் இல்லை; மக்களின் மகிழ்ச்சியே அதன் குறிக்கோள்.

ஆக, அரசுக்கு ஆலயச் சொத்துக்களை தனதாக்கிக் கொள்ள உரிமை இல்லை. 'அவசர காலத் தேவை’ என்ற நோக்கில் அதை ஏற்பது, ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியை அழிப்பதாகும்.

தேனைச் சேமிக்கும் ஈக்கள், பூவை அழிக்காமல் மென்மையான அணுகு முறையில் அளவுடன் தேனை எடுத்துச் செல்லும். அதுபோன்று, மக்களின் அன்றாட அலுவல்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அவர்களை வாழவிட்டு, சிறிது அளவு வரியைப் பெறவேண்டும். அவர்களது வாழ்வாதாரத்துக்குப் போதிய அளவு பொருளை உறுதி செய்து, சொற்ப வரியை ஏற்க வேண்டும் என்று சாணக்கியன் சொல்வான்.

ஓய்வு ஊதியத்தில் கை வைப்பதில் இன்றும் தயக்கம் காட்டுவது உண்டு. சிறிதளவு வரியைப் பெற்றுக்கொண்டு, அதைப் பன்மடங்காக மக்களுக்கு அளிக்கவேண்டும் என்று காளிதாசன் கூறுவான்.

நில நடுக்கம், எரிமலை, புயல், பெரு வெள்ளம், கொள்ளிமீன் (எரிநட்சத்திரம்) போன்ற இயற்கை உபாதைகள் அலைக்கழிக்கும் வேளையில், மக்களின் வாழ்வாதாரம் சீர்கெட்டு பசி, பட்டினி, பஞ்சம் தலைவிரித்தாடும். அப்போது, சேமித்து வைத்திருக்கும் ஆலயச் சொத்துக்களைப் பயன்படுத்தலாம். மக்களின் சொத்து மக்களைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படுகிறது என்று பொருள்.

ஆனால், மனித சிந்தனைக் கோளாறால் விளைந்த அவசர காலத்தை முன்வைத்து, ஆலயச் சொத்துக்களை அரசுடைமை ஆக்குவது அறத்துக்குப் புறம்பானது.

இயற்கைச் சீற்றங்களின்போது, ஆலயங் களே மனமுவந்து மக்கள் சேவையில் ஈடுபடத் தயார் நிலையில் இருக்கும்போது, அதை அரசாங்கம் தனதாக்கிக் கொண்டு, தனது சேவையாக மாற்றவேண்டிய அவசியம் இல்லை.

பெரும் வெள்ளத்தில் வீடு இழந்து தவிப்பவர் களுக்கு ஆலயங்களே அடைக்கலமாகச் செயல்படும். அரசாங்கம் நேரடி சேவைக்கு இடம் அளிக்க வேண்டும். ஆலயச் சொத்துக் களை தனதாக்கிக்கொண்டு, தனது சேவையாக மாற்றிக் கொள்ளக்கூடாது.

ஆலய சொத்துக்களை அபகரித்தவர்களை விரட்டியடிக்க அரசாங்கம் முற்படும். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சொத்தை தனது சொத்தாக மாற்றிக் கொள்ளாது; ஆலயத்துக்கு அளிக்கும். இதிலிருந்து, ஆலயச் சொத்தில் அரசுக்கு உரிமை இல்லை என்பதை அவர்கள் செயல்பாடு உறுதிப்படுத்துகிறது.

காணிக்கைகள் பெருகும் தறுவாயில், ஏலம் போட்டு பணமாக்கி ஆலயச் சொத்தில் சேர்ப்பார்கள். இதில் அரசு தலையீடு இருக்காது. பொதுமக்களின் பங்கில் வளர்ச்சியுற்ற ஆலயங்களின் செல்வத்தை, அவசர காலத்தில் ஆலயத்தின் பராமரிப் புக்காகப் பாதுகாத்து வர வேண்டும். இன்றும் சீரழிந்த ஆலயங்களைப் புதுப்பிக்க மக்கள் செல்வம்தான் கை கொடுக்கிறது. இதிலிருந்து, அது மக்கள் சொத்து என்பது உறுதி செய்யப்படுகிறது.

ஆலய வருமானத்தை ஆலயத்தின் செழிப்புக்காகப் பயன்படுத்த வேண்டும். அவசர கால சேமிப்பாக எண்ணி, அரசு தலையிடுவது பொருத்தமற்றது. இன்றும் பக்தர்களின் 'கட்டளை’களில் அன்றாடம் பூஜைகளும் உத்ஸவங்களும் நிகழ்கின்றன.

பொதுமக்களின் சொத்தை ஏற்று அவர்களுக்கு சேவை செய்வது என்பது பெருந்தன்மை ஆகாது. அவசர கால சேமிப்பை எச்சரிக்கையுடன் பராமரித்து வந்திருந்தால், ஆலயச் சொத்தை ஏற்கும் எண்ணம் அரசுக்கு வராது.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை.

மக்கள் தங்களின் உழைப்பில் சேமித்த பணத்தில் ஒரு பங்கை அரசுக்கு வரியாக அளிக்கிறார்கள். அதில் ஒரு பகுதி மக்களின் அவசர கால பாதுகாப்புக்குப் பயன்பட வேண்டும்.

மக்கள் தங்களின் சேமிப்பில் இன்னொரு பகுதியை கடவுளுக்குக் காணிக்கையாக அளிக்கிறார்கள். அது, பண்பாட்டை வளர்த்து, செயற்கையான அவசர காலத்தைத் தலைதூக்காமல் செய்துவிடும்.

அரசு, வெளியில் இருந்து வரும் ஈதிபாதைகளின் மூலம் நெருக்கடியைச் சமாளித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும். பண்பைப் புகட்ட காணிக்கை பயன்படவேண்டும். அவசர காலத்தில் ஒன்றை அழித்து ஒன்றைக் காப்பாற்ற முற்படுவது பொருந்தாது.

மக்களை மகிழ்விப்பது அரசனின் கடமை என்று காளிதாசன் கூறுவான் (ராஜா ப்ரக்ருதிரந்ஜனாத்). கண் காணிப்பாளராகச் செயல்படும் அரசு, கைவைக்க விரும்பக்கூடாது. ஆலயப் பொக்கிஷங்களை அரசுடைமை ஆக்குவது பொருத்தமற்றது. உடைமை ஆக்காமலேயே, ஆலயங்களின் உபரி நிதியை சேவை செய்வதில் திருப்பிவிடலாம். அது சிறப்பு!

Comments