கேள்வி நேரம்

பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டுமா?
நான் இவரது மகன்; இவரது மகள் என்று, தனது பெற்றோரின் பெயரைச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது உலக வழக்கம். அவ்வாறு, தனது பெற்றோரின் பெயரை நாம் உபயோகித்துக்கொள்ள வேண்டுமானால், நமக்கு அதற்கான தகுதி வேண்டும். அதற்கானத் தகுதி என்ன? என்பதை சாஸ்திரம் கூறுகிறது.

ஜீவதோர் வாக்ய கரணாத் ப்ரத்யப்தம்

பூரிபோஜநாத்

கயாயாம் பிண்டதானாச் ச த்ரிபி:

புத்ரஸ்ய புத்ரதா

பெற்றோர் உயிர் வாழும் வரை அவர்கள் சொல்பேச்சு கேட்டு நடத்தல், பெற்றோர் இறந்த பின்பு அவர்களுக்காக வருஷா-வருஷம் சிரார்த்தம் (திதி) செய்தல், பெற்றோர் இறந்த பின்பு அவர்களுக்காக ஏதாவது ஒருமுறை, கயா என்னும் க்ஷேத்ரம் சென்று பிண்டதானம் செய்தல் ஆகிய மூன்று கடமைகளை ஒருவர் நிறைவேற்றினால் மட்டுமே, தான் அவரது மகன்-மகள் என்று அவரது பெயரை உபயோகிக்கலாம். அப்போதுதான் பெற்றோரின் பெயரை உபயோகித்துக்கொள்ள பிள்ளைகளுக்குத் தகுதி ஏற்படுகிறது என்கிறது சாஸ்திரம்.

மேற்கூறிய மூன்றில், பெற்றோரின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்கள் சொல்பேச்சு கேட்டு நடத்தல் என்பது பிள்ளைகளுக்கான கடமைகளுள் முக்கியமானது. அப்படிக் கேட்காவிடில், பெற்றோருக்கு ஏற்படும் மன வருத்தமே குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் பிள்ளைகளுக்கு பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபம்கூட ஏற்படலாம். இது அவர்களை மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகளையும்கூட பாதிக்கலாம்.

தனது தந்தை சொன்னார் என்பதற்காக பதிலேதும் கூறாமல் கோடாரியால் தனது தாயாரின் தலையைச் சீவி, பிறகு தந்தையிடன் வரம் பெற்று, தனது தாயை உயிர்பித்தார் மஹான் பரசுராமர். தனது தாயார் ஆசைப்பட்டார் என்பதற்காக, ஊரே திரண்டு வந்து எதிர்த்த போதிலும், தனது தாயாருக்கு, பிள்ளை செய்ய வேண்டிய சம்ஸ்காரத்தை (கிரியையை) செய்தார் ஆதிசங்கரர். தந்தை தசரதர் தன்னிடம் (காட்டுக்குப்போ என்று ) நேரடியாகச் சொல்லாதபோதிலும், தனது தந்தை சொன்னார் என்று தன் சின்னம்மா கைகேயி சொன்ன சொல்லை ஏற்றுக்கொண்டு, காட்டுக்குச் சென்றார் ஸ்ரீராமசந்திர மூர்த்தி.

ஆகவே கூடியவரை பெற்றோர் சொல் பேச்சைக் கேட்டு நடப்பதே குழந்தைகளின் எதிர்காலத்துக்குச் சிறந்தது.

ப்ராப்தே து ஷோடஸே வர்ஷே புத்ரம் மித்ரவத் ஆசரேத் 16வது வயது வந்துவிட்டால் அதாவது 15 வயது நிறைவடைந்துவிட்டால் குழந்தைகளை நண்பர்களைப் போல் பாவிக்க பார்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகவே பெற்றோரும், தனது பிள்ளைகள் வளர்ந்து அவர்களுக்கு ஓரளவு உலக அறிவு வரும் வரையில் (15 வயது முடிவடையும் வரையில்), அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கலாமே தவிர, அதற்குப் பிறகும் (அவர்கள் கேட்காமலேயே) அடிக்கடி அவர்களுக்கு அறிவுரைகள் ஆலோசனைகள் சொல்லிக்கொண்டிருப்பது சாஸ்திரப்படி சரியல்ல; ஆகவே பதினாறு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். 16 வயது வரையாவது பெற்றோர் கூறும் அறிவுரையைக் கேட்டு அதன்படி நடக்க பிள்ளைகளும் முயற்சிக்க வேண்டும். ஆனாலும், வாழ்நாள் முழுவதும் பெற்றோருக்கு மதிப்பளிப்பதையும் அவர்களுக்கு மரியாதை தருவதையும் ஒருபோதும் பிள்ளைகள் செய்யாமல் இருக்கக்கூடாது.

கனவுகளுக்கு பலன்கள் உண்டா? சொப்பனத்தில் எருமையைக் கண்டால் கெட்ட செய்தி வருமா? (கனவில் பெரிய கொம்போடு எருமை முட்ட வருவது போல்... அதற்குள் தெருவில் சிலர் அதை கொம்பெடுத்து அடித்து விரட்டிவிடுகின்றனர்). இதுபோல் கனவுகள் ஏன் வருகிறது. வராமல் இருக்க ஏதேனும் ஸ்லோகம் உண்டா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முறை தூங்கும்போதும், தூங்குவதற்கு முன்பாகவும், தூங்கி எழுந்த பின்பும் ஆக இரண்டு முறை கனவுகள் வரும். தூங்குவதற்கு முன்னால் வரும் கனவுகள் பெரும்பாலும் நமக்கு நினைவில் இருக்காது. ஆனால், தூங்கி எழும்போது நமக்கு ஏற்படும் கனவு நமக்கு நினைவில் வரலாம். ஏனென்றால் அதற்குப்பின் நாம் விழித்துக் கொண்டு விடுகிறோம்.

அப்படி ஏற்படும் கனவுகளுக்கான பலன்களை சாஸ்திரம் கூறுகிறது. அதற்கு ‘ஸ்வப்ன சாஸ்திரம்’ என்றே பெயர்.

அதன்படி, கனவு எப்போது ஏற்பட்டது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். பகலில் தூங்கும்போது ஏற்படும் கனவுகள், உடலில் (கபம், வாதம், பித்தம் என்னும் மூன்றில்) பித்தம் அதிகமாகும்போது ஏற்படுவது. ஆகவே, பகலில் ஏற்படும் கனவுகள் நல்லதோ கெட்டதோ நிச்சயம் பலிக்காது. இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் தூங்கும்போது ஏற்படும் கனவுகள்தான் பலிக்கும். கனவுகளில் வருபவை மற்றும் நடக்கும் நிகழ்வுகள் ஆகியவற்றைப் பொறுத்தே கனவுகளின் பலன்களும் மாறுபடும்.

தங்கள் கனவில் வந்தவற்றையும் நடந்த நிகழ்வுகளையும் காணும்போது, இந்தக் கனவு நல்ல பலனைத் தருவதற்கான அறிகுறியாக அமையவில்லை.

குடும்பத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் யாரோ ஒருவருக்கு மரணம் நிகழும் நேரம் நெருங்குவதாகவும், ஆனால், தங்கள் குடும்பத்தில் வசிக்கும் அல்லது தங்கள் வசிக்கும் கட்டடத்தில் வசிக்கும், யாரோ சிலரது புண்ணிய பலத்தால், அந்த நிகழ்வு (மரணம்) தடுக்கப்படுவதாகவும், இதற்கான பலனை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

இதற்குப் பரிகாரமாக சாஸ்திரத்தில் கூறியபடி, ‘ம்ருத்யு மஹிஷீ தானம்’ என்பதை, அதாவது எருமை மாட்டை தானம் செய்யும் பரிகாரத்தைச் செய்ய வேண்டும். ம்ருத்யு (மரண) பயம் விலகி நீண்ட ஆயுள் ஏற்படும்.

மற்றும் பொதுவாகவே தூங்கும் போது கெட்ட கனவுகள் ஏற்படாமலிருக்க, ஒவ்வொரு நாளும் தூங்கும் முன்பு, இரண்டு கால்களையும் நன்கு அலம்பி, ஈரமில்லமால் துடைத்துக்கொண்டு (தனது வீட்டில்) கிழக்கில் தலை வைத்து, கீழ்க்கண்ட ஸ்லோகம் சொல்லி படுக்க வேண்டும்.

அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸத்யம் ஜநார்தனம்

ஹம்ஸம் நாராயணம் கிருஷ்ணம் ஜபேத் துஸ் ஸ்வப்ன சாந்தயே


இந்த ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டு ஹே அச்யுதா! கேசவா! விஷ்ணோ! ஹரே! ஸத்ய சங்கல்ப! ஜனார்தன! ஹம்ஸ! நாராயண! கிருஷ்ண! என்னும் பகவான் நாமாவையும் சொல்லிவிட்டு படுத்துக்கொண்டால் கெட்ட கனவுகள் தோன்றாது. தோன்றினாலும் பலிக்காது. ஆனால், இந்த ஸ்லோகத்தை சொல்லி விட்டு, சிறிது நேரம் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்துவிட்டு (அல்லது டி.வி. பார்த்துவிட்டு), தூங்கினால் மேற்கூறிய பலனை எதிர்பார்க்க முடியாது.

Comments