துளசியின் மகிமை!

செடி, கொடி, இலைகளிலும் இறைவன் உறைகிறான் என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
நமது இந்திய கலாசாரத்துக்குப் பெருமையே, அனைத்து பொருட்களிலுமே பகவான் ஊடுருவி அமர்ந்துள்ளான் என்னும் தத்துவம்தான். ஆகவேதான், தெய்வங்களை மட்டுமில்லாமல் செடிகள், கொடிகள், மரங்கள், இலைகள் என அனைத்தையும்-அனைத்தாலும்- பூஜை செய்கிறோம். பசுவின் உடல் நிறையப் பால் இருந்தாலும் அதன் மடிமூலமே அதனைப் பெற முடிகிறது. அதுபோன்றே அனைத்து பொருட்களிலும் கடவுள் இருப்பினும், அவரது அருளை ஒரு சில பொருட்களின் மூலமே பெறமுடியும்.

சிவபெருமானுக்கு உகந்தது - விபூதிப் பச்சிலை, கொன்னை, வில்வம் போன்றவை. அம்பாளுக்கு வேப்ப இலை சிறப்பானது. விநாயகருக்கு வன்னி இலை மற்றும் அருகம்புல் சிறப்பானது. சூரியனுக்கு எருக்க இலை சிறந்தது... என்று வகைப்படுத்துவதன் மூலம், சிலவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அவ்வளவுதான்! இறைவனின் தொடர்பு இல்லாத சிருஷ்டி என்று எதுவுமே கிடையாது. நம்மைப் போல தாவரங்களும் உணர்கின்றன என்கிறது அறிவியல். ரமணர் உட்பட பல மகான்களும் இதை உணர்த்தியிருக்கிறார்கள்.

மற்ற செடிகளை விட, துளசிக்கு அப்படியென்ன சிறப்பு?
மகாவிஷ்ணுவின் அம்சம் நிறைந்துள்ள துளசிச் செடி, விஷ்ணுவின் மனைவி. இவளுக்கு, பிருந்தா என மற்றொரு பெயரும் உண்டு. பிருந்தா, கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானவள். பிருந்தையாகிய துளசிதேவி, மகாவிஷ்ணுவை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாத சுக்லபட்ச துவாதசி திதி. ஆகவேதான், அன்றைய தினத்துக்கு ‘ப்ருந்தாவன த்வாதசீ’ என்று பெயர். எந்த ஒரு பொருளைத் தானம் செய்யும் போதும், அந்தப் பொருளுடன் துளசியையும் சேர்த்து தானம் செய்வதால், கொடுக்கும் பொருளின் அளவும் மதிப்பும் கூடுகிறது என்கிறது சாஸ்திரம்.

தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும் அன்னம் போன்ற உணவுப்பொருளில் துளசி இதழைப் போட்டால், அது அசுத்தத்தை நீக்கி சுத்தமாக்கும். துளசிக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது என்பதால், மற்ற இலைகளைப் போலல்லாமல் பறித்ததிலிருந்து மூன்று நாட்கள் வரை வைத்திருந்து துளசியால் விஷ்ணுவை அர்ச்சனை செய்யலாம். துளசியை வளர்த்து பூஜை செய்யும் வீட்டில் - துர்மரணங்கள் நிகழாது, விஷ ஜந்துக்கள் அண்டாது.

வாழ்க்கையின் இறுதியில் துளசி கலந்த ஜலத்தைச் சாப்பிட்டால், வாழ்நாளில் செய்த அனைத்து பாபங்களும் விலகிவிடும். தினசரி மதியம் சாப்பிட்டவுடன் ஒரே ஒரு துளசி இலையை வாயில் போட்டுக் கொண்டால் - சாப்பிட்ட உணவில் இருந்த அசுத்தம் நீங்கி சுத்தத் தன்மை ஏற்படும், நன்கு ஜீரணமாகும்.

துளசிக்கு நிகரான பொருள் வேறில்லை. கிருஷ்ண பகவான் தனது பிரியைகளான சத்தியபாமா, ருக்மணி ஆகிய இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். ருக்மிணி தேவி கிருஷ்ணர் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். சுத்ய பாமாவோ, கண்ணனை தனக்கே உரிமையாக்கிக் கொள்ள நினைத்தாள். இதற்காக கண்ணனை, துலாபார தட்டின் ஒருபுறமும், மற்றொரு தட்டில் பொன், மாணிக்கம், நவரத்னங்கள் என தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால், தராசு சமமாகவில்லை.

அப்போது அங்கு வந்த ருக்மிணி, கண்ணனுக்குப் பிடித்த துளசி இலை ஒன்றை தராசுத் தட்டில் வைத்த போது, தராசு சமமாகியது என்று படித்திருப்போம். அதுமுதல் துளசியின் மகிமை உலகுக்கு வெளிப்பட்டது. துளசியைப் பற்றி சில முக்கிய தகவல்கள்... பூஜை செய்யும் துளசிச் செடியிலிருந்து துளசியைப் பறிக்கக் கூடாது. மற்ற துளசிச் செடியிலிருந்து துளசியைப் பறிக்கும் போதும் மந்திரம் சொல்லித்தான் துளசியைப் பறிக்க வேண்டும்.


சிராத்தம் என்பது நம் வீட்டில் செய்ய வேண்டிய ஒன்றுதானே? இதை சில புரோகிதர்சள் தங்கள் வீட்டிலேயே செய்து வைக்கிறோம் என்கிறார்களே!
அவரவர்களின் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய சிராத்தத்தை அவரவர் தாங்கள் வசிக்கும் வீட்டிலேயே செய்ய முயற்சிக்க வேண்டும். தற்காலத்தில் தக்க நபர்களை வீட்டுக்கு வரவழைத்து கால் அலம்பி வஸ்திரம் தந்து, (வீட்டில் சமையல் செய்து) சாப்பாடு போட்டு முன்னோர்களுக்குச் செய்ய, முடிக்க வேண்டிய சிராத்தத்தை முறையாகச் செய்ய மனம் மற்றும் பணம் இருந்தாலும் இடவசதி இல்லை. பலரும் ஒன்றாகக் கூடி ப்ளாட்டில் வசிக்கும்போது இவ்வித செயல்களைச் செய்ய இயலவில்லை.

ஆகவே, திருமணம் போன்ற பல்வேறு செயல்களுக்கும் தனித்தனியாக இடங்கள் ஏற்படுத்தப்பட்டதைப் போல் சிராத்தத்துக்கும் தனியாக இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சிலர், தாங்கள் வசிக்கும் இடத்திலும் சிராத்தத்தைச் செய்ய அனுமதிக்கிறார்கள். ஆசாரத்துக்குக் குறைவில்லாமல் மன நிம்மதியுடன் சிராத்தம் செய்ய இயலும் என்றால், இப்படிப்பட்ட இடங்களில் சிராத்தம் செய்வதில் தவறேதும் இல்லை. சிராத்தத்தை, செய்யாமல் விட்டுவிடக் கூடாது என்னும் நோக்கத்தில் இதை அணுகினால், இதில் தவறேதுமில்லை.

ஆனாலும், சிராத்தத்தில் முக்கியமாகக் கடைபிடிக்க வேண்டிய ஆசாரம் இதில் முக்கியம். கூர்ந்து கவனித்தால், அவரவர் வசிக்கும் இடத்தில் சிரத்தையுடன், ஆசாரத்துடன் (சிறிய அளவில்) சிராத்தத்தைச் செய்தாலும் போதும். அதையும் பித்ருக்கள் பெரிதாகவே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள். ஆகவே, சிராத்தத்தை தாங்கள் வசிக்கும் இடத்திலேயே செய்ய முயற்சிக்கலாம்.


திருப்பதிப் பெருமாளுக்கு காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டவர்கள், வேறு இடங்களில் உள்ள பாலாஜிக்கு அதைச் செலுத்தலாமா?

ஏழுமலை என்னும் திருமலையில் இடங்கொண்ட பெருமாள், ஸ்ரீநிவாஸன், வெங்கடேஸ்வரர் என்ற பெயருடன் பல்வேறு ஊர்களில் அமைந்துள்ள ஆலயங்களில் காட்சி தருகிறார். ஊர் வேறுபட்டிருந்தாலும் ஆலயத்திலுள்ள பெருமாளின் அருட்சக்தியிலும் வழிபாட்டு முறையிலும் எந்த ஒரு மாற்றமுமில்லை. ஆகவே, அனைத்து தெய்வமும் ஒருவர்தான் என்பதால், எந்த ஊரிலும் அமைக்கப்பட்டிருக்கும் தெய்வத்துக்குச் செய்யலாமே என்று தோன்றும். ஆனால், இது முழுமையாக சரியாகாது. ஏனென்றால், ஒரு ஆலயத்தின் மகிமை, 1)ஆலயத்தில் வீற்றிருக்கும் தெய்வம், 2)ஆலயம் அமைந்துள்ள இடம், 3)ஆலயத்தின் (அபிஷேகம் போன்றவைகளுக்காக உபயோகிக்கப்படும்) புஷ்கரிணி என்னும் தீர்த்தம் ஆகிய மூன்றின் பெருமைகளையும் உள்ளடக்கியது. ஆகவே, நாம் செய்து கொள்ளும் பிரார்த்தனையானது - மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றும் சேர்ந்த ஆலயத்தில்தான் என்பதால், அதே இடத்தில், அதே ஆலயத்தில், அதே தீர்த்தக்கரையில் வீற்றிருக்கும் தெய்வத்திடம்தான் நிறைவேற்ற வேண்டும். இதுவே - சரியான, முழுமையான பலனைத் தரும்.



Comments