கீதையின் பாதையில்...

குருகே்ஷத்திர யுத்த பூமி... எங்கும் பேரிரைச்சல்... கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் லட்சக்கணக்கான வீரர்கள் இருபுறமும் அணிவகுத்து நிற்கிறார்கள்... பேரிகைகளும் எக்காளமும் முழங்குகின்றன... சற்று நேரத்தில் போர் தொடங்கப் போவதற்கு அறிகுறியாக இருபுறமும் சங்குகள் ஊதப்படுகின்றன... அந்தப் புகை மண்டலத்தில் இரு சேனைகளுக்கும் நடுவே அர்ஜூனன் நின்று கொண்டிருக்கிறான்.

மிகச் சிறந்த வில்வீரன்; சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரங்களைப் பெற்றவன்; துரோணா சாரியரின் மிகச்சிறந்த மாணவன் என்றெல்லாம் போற்றப்படும் அர்ஜுனன், திகைத்து நிற்கிறான். பயத்தால் அவனது உடல் நடுங்குகிறது. மயிர் கூச்செறிகிறது. வியர்த்துக் கொட்டுகிறது. உள்ளத்தில் உள்ள குழப்பமும் துயரமும் உடலில் வெளிப்படுகின்றன.

இடி இடித்தால் பயப்படாமல் இருக்க அர்ஜுனனை அழைப்போம். ஆனால், அந்த அர்ஜுனனே பதறிப் போயிருக்கிறான். எதிர்திசையில் நிற்கும் குருமார்களையும் பாட்டனாரையும் உறவினர்களையும் பார்க்கிறான். உள்ளம் பதைக்கிறது.

இவர்களை எதிர்த்தா போர்புரியப் போகிறேன்? இவர்களைக் கொன்று குவித்த பிறகு, தான் வெற்றி பெற்று அடையப்போகும் ரத்தம் பூசிய ராஜ்ஜியத்தை நினைத்துப் பார்க்கிறான். புலம்புகிறான், அழுகிறான். துறவியாகச் சென்றுவிட்டால் நல்லதோ என்று தோன்றுகிறது. அவனது போராட்டத்தை உற்றுப் பார்த்தபடி ஒருவர் அங்கே அமர்ந்திருக்கிறார். குதிரைகளின் கடிவாளக் கயிற்றைக் கையில் இறுக்கியபடி, பார்த்தனுக்கு சாரதியாக, ஒரு சாதாரண தேரோட்டியாக மட்டும் இருக்கிறார். அவரது நாராயண சேனை முழுவதையும் எதிரில் போர் புரிபவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அமைதியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

அர்ஜுனன், தனது நண்பனும் தேரோட்டியுமான கிருஷ்ணரிடம் புலம்புகிறான். தான் சோல்வதை சரியென்று ஏற்றுக்கொண்டு, தன்னை இந்தப் போராட்டத்திலிருந்து விடுவிப்பார் என்று எதிர்பார்க்கிறான். பகவானிடம் ஒரு அசைவுமில்லை. அவன் கூறுவதை ஆமோதிக்காமலும் எதிர்க்காமலும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அர்ஜுனன் போன்ற நிலையில் நாமும் பல சமயங்களில் இருந்திருக்கிறோம். வீடு, அலுவலகம், சமூகச் சூழல் என ஏதோ ஒரு போர்க்களத்தில், இடதா வலதா என்று தெரியாமல் குழம்பி நிற்கும் நிலை நமக்கும் ஏற்படுகிறது. மிகத் துயரமான, சங்கடமான நேரங்களை எதிர்கொள்ளாத மனிதர்களே இல்லை எனலாம். சூளுரைத்துக் கொண்டு கிளம்பி, வெறும் கையோடு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தத்தை ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தருணத்தில் உணர்ந்திருப்பார்கள்.

குழப்பமும் துயரமும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. பல நேரங்களில் தெளிவான பார்வை இன்றி, பயத்துடனேயே நாம் வாழ்வில் அடுத்த அடியை எடுத்துவைக்க வேண்டியிருக்கிறது. எச்செயலைச் செய்யும் போதும், அறிவில் தெளிவும் உள்ளத்தில் உறுதியும் நமக்கு வேண்டியிருக்கிறது. அதைத்தான் பகவான் அருளப் போகிறார்.

நம்மைப் படைத்த இறைவன், நம்மை திக்குத் தெரியாத காட்டில் விட்டுவிடவில்லை. எப்படி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற அறிவையும் வேதங்கள் வாயிலாக வழங்கியிருக்கிறார்.

வேத உபநிஷதங்களே பசுக்கள்; கீதை பால்; அர்ஜுனன் கன்றுக்குட்டி; பால் கறப்பவர் பகவான்; பாலை அருந்துபவர்கள் நல்லறிவாளர்கள். மகாபாரத காலத்தில் பகவான் அளித்த கீதை என்னும் பால், இன்றும் புத்தம் புதிதாக நமக்குக் கிடைக்கிறது.

அழுது தீர்த்து உணர்ச்சிகள் வடிந்த பின்னர், அர்ஜுனன் உள்ளத்தில் ஒரு சிறுகீற்றாய் வெளிச்சம் பிறக்கிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை நமஸ்காரம் செய்கிறான். கழிவிரக்கம், சுயபச்சாதாபமாகிய சிறுமையில் ஆழ்ந்திருக்கும் தன்னைக் காப்பாற்றுமாறு கூறுகிறான். தனக்கு எது நன்மையோ அதனை உபதேசிக்கும்படி வேண்டுகிறான்.

வாழ்வில் துன்பம் வருவதும் நன்மைக்கே. துன்பம் வரும்போதுதான், நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம். துன்பத்தை உணரும் மனதில்தான் தத்துவக் கேள்விகள் பிறக்கின்றன. ‘உலகில் ஏன் பிறந்திருக்கிறேன்? இப்படிப்பட்ட சூழலில் ஏன் பிறந்திருக்கிறேன்? ஏன் துன்பப்படுகிறேன்?’ போன்ற தத்துவக் கேள்விகள் வாழ்வின் ஏதோ ஒரு சமயத்தில் எல்லோருக்கும் ஏற்படத்தான் செய்கின்றன.

இந்த வாழ்க்கையை மிக உண்மை என்று நினைத்து, வருங்காலத்தைப் பற்றி கனவுக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கும்போது, வாழ்வின் நிலையற்ற தன்மையும், நாள்தோறும் நம்மைச் சுற்றி நிகழும் மரணங்களும் நமக்குள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பத் தவறுவதில்லை.

வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் நம் பிரச்னைகளுக்கான தீர்வுகளை, நாமே தெரிந்து கொண்டுவிட முடியாது. குறிப்பாக, நம் சிற்றறிவைக் கொண்டு பிரச்னைகளின் ஆணிவேரை அறிய முயல்வது சுய மருத்துவம் செய்து கொள்வதைப் போல ஆபத்தானது.

நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன், மருத்துவரிடம் சென்று, அவர் பரிந்துரை செய்யும் மருந்தை நம்பிக்கையோடு எடுத்துக் கொள்கிறோம். நல்ல மருத்துவர் போல... நமக்கு உதவுவதற்காகவே வேதங்களும், இதிகாச புராணங்களும், மகான்களும் காத்திருக்கின்றனர். தன்னிடம் சரணடைந்த அர்ஜுனனை பகவான் கனிவோடு பார்க்கிறார். அர்ஜுனனை நிமித்தமாகக் கொண்டு, மனித குலத்திற்கே நல்வழி காட்டப் போவதை நினைத்து, பகவான் புன்முறுவல் பூக்கிறார்.

‘அர்ஜுனா! அறிவாளிகள் கவலைப்படுவதில்லை’ என்று கூறி உபதேசத்தைத் தொடங்குகிறார்.

கவலை என்ற வலைக்குள்தான் மனித சமூகமே மாட்டிக் கொண்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் கவலைப்படுகிறோமே! நாம் அறிவாளி இல்லையா?

கவலை ஏன் தோன்றுகிறது? கவலையிலிருந்து விடுபடுவது எப்படி? என்ற கேள்விகள் நம்முள் எழத்தானே செய்கிறது. இதற்கான பதிலை, கொஞ்சம் பொறுங்கள்... காண்போம்.

Comments