'நட்ட கல்லும் பேசுமோ?' - சிவன்மலைக்கு வித்திட்ட சிவவாக்கியர்

“நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே; சுற்றி சுற்றி வந்து முணு, முணுக்க சொல்லும் மந்திரம் ஏதடா! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்..!” நாத்திகப் பாடல் போல் இருக்கும் இந்த வாக்கியத்திற்குள்தான் எத்தனை பக்திச்சுவை? இந்தப் பாடலுக்கு சொந்தக்காரர் நாத்திகர் அல்ல, ஆத்திகர். அவர்தான் சிவவாக்கிய சித்தர். சிவவாக்கியர் சித்தியடைந்தது கும்பகோணத்தில் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. ஆனால், அவர் திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் வாசம் செய்து மூலவர் வள்ளி சுப்பிரமணியரை அன்றாடம் பூஜித்து வந்திருக்கிறார் என்பது அந்நூல்கள் சொல்லாத செய்தி.

ராமாயண காலத்தில் ஆஞ்சனேயர் ராமலட்சுமணரை காக்க வேண்டி சஞ்சீவி மூலிகை பர்வதத்தை தூக்கிச் சென்றபோது சிந்திய சின்னத்துண்டுதான் சிவன்மலை என்ற ஐதீகம் உண்டு. இங்கு வள்ளியுடன் வீற்றிருக்கும் சுப்பிரமணியரை துதித்தால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும். கிடைக்காத பிள்ளைப்பேறுகள் கிடைக்கும். இம்மூலவரின் வலது பக்கத்தில் தனி அறையில் சிவவாக்கியருக்கும் சன்னதியுண்டு. இந்த சன்னதியிலிருந்து பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சுரங்க வழியாக சென்று பூஜித்து வந்ததாகவும், அதன்பிறகே வள்ளி, சுப்பிரமணியருக்கு ஆராதனைகள் செய்து இறைவன் திருவடியிலும் மெய்யுருகி நின்றார் சிவவாக்கியர் என்கின்றனர் கோயில் குருக்கள். இன்றும் அந்த அற்புத சித்தரின் அமானுஷ்யம் இங்கே உலாவி ஆண்டவனுக்கு அருள்பாவிப்பதாகவும் நம்புகின்றனர் பக்தர்கள். எனவே மூலவருக்கு பூஜைகள் நடக்கும் காலங்களில், இந்த சிவவாக்கியருக்கும் பூஜை புனஸ்காரங்கள் உண்டு. இவரை நினைத்து பாடல்களை பாடி, தியானங்கள் நிகழ்த்தினால் வாழ்வில் நடக்காத அற்புதங்கள் நடப்பதாகவும் ஐதீகம் உண்டு.

இறைவனின் திருவடிகளில் தன்னை மறந்து நின்ற தருணங்களை தமது சித்திகள் மூலம் சித்தர்கள் காட்டியிருக்கிறார்கள். அந்த அற்புதங்களை எல்லாம் தம் பாடல்களிலேயே அடக்கி காண்பித்தவர் சிவவாக்கியர். 'இட்ட குண்டம் ஏதடா, சுட்ட மண்கலயத்திலே சுற்று நூல்கள் ஏதடா. முட்டி நின்ற தூணிலே முளைத்தெழுந்து சோதியை பற்றி நின்றது ஏதடா. ஓசை உள்ள கல்லை நீர் உடைத்து இரண்டாய் செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர், பூசைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர். ஈசனுக்கு உகந்த கல் எந்தக்கல்லு சொல்லுமே!' என்று நீளும் இவருடைய பாடல்கள் யாவும் 'சிவவாக்கியம்' என்றே அழைக்கப்படுகிறது. சிவ, சிவ என சிவனின் திருவடிகளையே பற்றி நின்ற சித்தனுக்கு அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனின் மீது அலாதி பிரியம். எனவேதான் எத்தனையோ பக்தி ஸ்தலங்கள் இருக்க, வள்ளி சமேதராக வீற்றிருக்கும் சிவன்மலை சுப்பிரமணியரின்பால் சொக்கி நின்று பூஜைகள் செய்து வந்திருக்கிறார்.

சிவவாக்கியர் சித்தர்களில் சிறந்த சித்தர் போகருக்கு முந்தைய காலத்தவர். போகர் தனது சத்த காண்டத்தில் இவரைப்பற்றி சொல்கிறார். பூமியில் பிறக்கும் ஜீவராசிகள் எல்லாம் 'ம்மா' என்ற நாதம் பற்றியே புறப்பட்டிருக்க, ஒரு தை மாத மக நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை, 'சிவ, சிவ' என்றே முதல் வார்த்தையை ஒலித்தது. அதனாலேயே சிவவாக்கியர் என்று அழைக்கப்பட்டார் இவர். தனது இளமைக்காலத்தில் சித்தர் மரபில் வந்த குருவை நாடி வேதங்களை படித்து தன் கருத்துக்குத் தக்கதொரு குருவை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறார். அப்படியரு அற்புத சித்தர் காசியில் உள்ளதாக கேள்விப்பட்டு அங்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அங்கு செருப்புத் தைக்கும் தொழிலாளியாக வீற்றிருந்த சித்தர் ஒருவரை கண்டதும் பெரிய ஞானவெளி வெளிச்சத்தில் தான் வீற்றிருக்கும் உணர்வை பெற்றார். அவரே தனது குரு சித்தர் என்றும் முடிவு செய்தார். குருவானவர் அவ்வளவு சுலபமாக சிவவாக்கியரை தனது சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை சோதிக்க விரும்பினார். தன்னிடம் இருந்த செருப்பு தைத்த காசுகளை கொடுத்து, 'இதைக் கொண்டு போய் என் தங்கை கங்கா தேவியிடம் கொடுத்து வா!' என்றார். தனது அருகிலிருந்த பேய்ச்சுரைக்காயை எடுத்துக் கொடுத்து, 'நீரில் கழுவி வா!' என்றார். சித்தரிடத்தில் தன்னை இழந்து நின்ற சிவவாக்கியர் கங்கைக்கரைக்கு சென்றார்.

கங்கையில் இறங்கி நீரைத்தொட நீரினுள்ளிருந்து வளைக்கரம் ஒன்று தன் கையை நீட்டி யாசித்தது. தன்னிடமிருந்த காசுகளை அந்தக்கை மீது சிவவாக்கியர் வைக்க, அந்த காசுகளை பெற்ற கை நீருக்குள் மூழ்கி மறைந்தது. அதைக்கண்டு அதிசயப்படாத சிவவாக்கியர் குருவானவர் இட்ட கட்டளையை நிறைவேற்றும் முகமாக பேய்ச்சுரைக்காயை நீரில் கழுவிக்கொண்டு வந்து சித்தரை வணங்கினார். அவரே மீண்டும் சிவவாக்கியரை சோதிக்க விரும்பினார். 'நான் அவசரப்பட்டுவிட்டேன். என் தங்கை வைதீகமானவள். இதோ இந்த தோல்பையிலும் தோன்றுவாள். அவளிடம் நீ கொடுத்த காசுகளை கேள். கொடுப்பாள்!' என்றார். சிவவாக்கியரும் கேட்டார்.

செருப்புத்தொழிலுக்காக வைத்திருந்த தோல் பையிலிருந்து கங்கையில் பார்த்த அதே வளைக்கரம் தோன்றியது. சிவவாக்கியரின் கைகளில் அவர் கொடுத்த காசுகளையே தந்துவிட்டு மறைந்தது. அதை ஏதோ சாதாரண நிகழ்வு போல் பார்த்து காசுகளை அப்படியே ஞானகுருவிடம் கொடுத்தார் சிவவாக்கியர். இதைப் பார்த்த காசி சித்தர் சிவவாக்கியர் பக்குவம் அடைந்துவிட்டார் என்பதை அறிந்து தான் கற்ற சித்துக்களை உபதேசிக்க ஆரம்பித்தார். இருப்பினும் கங்கா தேவியின் வளைக்கரம் காசு கொடுத்தபோது அவள் விரல்கள் தீண்டியபோது சிவவாக்கியரின் உடல் சிலிர்த்ததை கண்டு கொண்ட காசி சித்தர், சிவவாக்கியருக்கு பெண்கள் ஸ்பரிஷத்தில் ஆசை மிச்சம் இருக்கிறது என்பதை உணர்ந்தார்.

எனவே, 'உனக்கு முத்தி சித்திக்கும் வரையில் நீ இல்லறத்தில் சிலகாலம் இருக்க வேண்டும்!' என்று கட்டளை பிறப்பித்து அவர் கையில் கொஞ்சம் மணலும், பேய்ச்சுரைக்காய் ஒன்றையும் தந்தார். 'இதை வைத்துக்கொண்டு உனக்கு எந்த பெண் சமைத்து போடுகிறாளோ அவளையே நீ மணம் செய்து கொள்ளவேண்டும்!' என்றும் அருளினார். பேய்ச்சுரைக்காய், மணல் ஆகியவற்றை வைத்துக்கொண்டு பெண் தேடும் இவரைக்கண்டு ஆண்கள் பலர் பரிகாசம் செய்தனர். இவரது வனப்பை கண்டு பெருமூச்சு விடும் பெண்கள் இவர் சமைக்க கொடுக்கும் பேய்ச்சுரைக்காய், மணலைப் பார்த்து மிரண்டு ஓடினர். 'உமக்கு பைத்தியம் முற்றிவிட்டது!' என்று ஏளனம் செய்த பெண்களிடம், 'என் குருநாதர் இட்ட கட்டளை இது. இதை சமைத்துதரும் பெண்ணே எனக்கு மனைவியாகப்பட்டவள்!' என்று எடுத்துக்கூறினார். அவர்களோ தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

இந்த வேளையில் ஒருநாள் நரிக்குறவர் கூடாரங்கள் அமைத்த பகுதியில் சிவவாக்கியர் நுழைந்தார். அந்த கூடாரங்கள் ஒன்றிலிருந்து வந்த கன்னிப்பெண் ஒருத்தி இவர் தேஜஸைப் பார்த்து உள்ளுணர்வுகள் மீட்ட விரகம் ததும்ப வணங்கி நின்றாள். சிவவாக்கியர் ஒரு விநாடிதான் அவளைப் பார்த்தார். 'எனக்கு பசிக்கிறது. அதற்கு பெண்ணே உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும்?' என்றார். 'கேளுங்கள் சுவாமி செய்து தர சித்தமாக இருக்கிறேன்!' என்றாள் பதிலுக்கு. சிவவாக்கியர் தன்னிடமிருந்த பேய்ச்சுரைக்காயையும், மணலையும் கொடுத்து சமைக்க சொன்னார். குறப்பெண் கொஞ்சமும் தயங்கவில்லை. பேய்ச்சுரைக்காயை கழுவி, மணலை கலைந்து சமைக்க தொடங்கினாள்.

என்ன ஆச்சர்யம்? மணல் அருமையான சாதமாக வெந்தது. பேய்ச்சுரைக்காய் ருசிமிக்க கறி உணவானது. சமையல் தயாரானதும், 'சுவாமி சாப்பிட வாருங்கள்!' என்று சிவவாக்கியரை அழைத்தாள் குறப்பெண். உணவு உண்ட பின் சிவவாக்கியர் களைப்பாறினார். மூங்கில் வெட்டி கூடை முனைய சென்றிருந்த குறப்பெண்ணின் பெற்றோர்கள் இல்லம் திரும்பினர். நடந்த சங்கதிகளை சொல்லி அவர்களிடம் பெண் கேட்டார். 'உங்களுக்கு பெண்ணைத் தருவது நாங்கள் செய்த பாக்கியம். எங்களோடு தங்குவதாக இருந்தால் அதற்கு தடையில்லை!' என்றனர் பெற்றோர்கள். அவர்களது நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அவர்கள் குல வழக்கப்படியே குறப் பெண்ணை மணந்து கொண்டார் சிவவாக்கியர். அவர்களுடனேயே தங்கியவர் அவர்களது குலத்தொழிலையே செய்யத் துவங்கினார். இருந்தாலும் அவர் தவத்தை விடவில்லை.

ஒரு நாள் சிவவாக்கியர் கூடைகள் முனைவதற்காக மூங்கில்கள் வெட்டி வர காட்டிற்குள் சென்றார். ஒரு மூங்கிலை வெட்டியபோது வெட்டுப்பட்ட இடத்திலிருந்து தங்கத்துகள் கொட்ட ஆரம்பித்ததை கண்ணுற்றார். அதில் துணுக்குற்றவர், 'இறைவா, உன்னிடம் முக்தியை நாடி விரைந்து கொண்டிருக்கிறேன். எனக்கு பொருளாசையை உண்டாக்கப் பார்க்கிறாயே? இது நியாயமா?' என்று புலம்பினார். இவரது புலம்பலைக் கண்டு நரிக்குறவ இளைஞர்கள் சிலர் ஓடி வந்தனர். என்னவென்று விசாரித்தனர். சிவவாக்கியர் பதட்டம் நிறைந்த குரலில், 'அதோ அந்த மூங்கிலிலிருந்து எமன் வருகிறான். அதைக்கண்டுதான் பயப்படுகிறேன்!' என்று சொல்லி தங்கம் உதிரும் மூங்கில்களை காட்டினார்.

நரிக்குறவ இளைஞர்கள் தங்கத்துகள்களை கண்டு வாய்பிளந்தார்கள். 'சிவவாக்கியனுக்கு பிழைக்கத் தெரியவில்லை!' என்று நக்கல் செய்தார்கள். எல்லோரும் சேர்ந்து தங்கத்துகள்களை மூட்டையாக கட்டினார்கள். அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். ஓரிடத்தில் அனைவருக்கும் பசித்தது. இரண்டுபேர் மூட்டைக்கு காவல் இருக்க, இரண்டு பேர் உணவு வாங்க செல்வது என்று முடிவெடுத்து அங்கனமே செய்தனர். உணவு வாங்க சென்ற இருவரும் 'தங்க மூட்டையை நாம் மட்டுமே பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்!' என்று திட்டமிட்டு மூட்டைக்கு காவல் இருந்தவர்களுக்கு வாங்கிய உணவில் விஷம் கலந்தனர். உணவு கொண்டு வந்த இருவரை மூட்டைக்கு காவலிருந்தவர்கள் பக்கத்தில் உள்ள கிணற்றில் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறும் பணித்தனர்.

அவர்களும் கலயத்தை எடுத்துக் கொண்டு செல்ல, அவர்கள் அறியாதவண்ணம் பின்னாலேயே சென்ற தங்கமூட்டைக்கு காவலர்கள் கிணற்றருகில் அவர்கள் சென்றதும் அவர்களை உள்ளே தள்ளிவிட்டனர். 'நம் திட்டப்படி உணவு கொண்டு வந்தவர்கள் இரண்டு பேரின் கதையும் முடிந்துவிட்டது. இனி இந்த தங்க மூட்டை முழுவதும் நமக்கு இருவருக்கும்தான்!' என்ற சந்தோஷத்துடன் வாங்கி வந்த உணவை பிரித்து உண்டார்கள். விஷம் கலந்த உணவு அவர்கள் இருவரையும் கொன்று விட்டது. மறுநாள் மூங்கில் வெட்ட அதே பகுதிக்கு சென்ற சிவவாக்கியர் இந்த நான்கு பேரின் உடல்களையும் பார்த்தார். 'பொன்னாசை இவர்களை இப்படி கொன்றுவிட்டதே!' என்று மனம் வருந்தியவர் மறுபடி மூங்கில் வெட்டவே சென்றார்.

தங்கம் செய்யும் ரசபாசன வித்தையை சிவவாக்கியர் அறிந்திருந்தார். அப்படியிருந்தும் இந்த சித்தர் வறுமையில் வாடுகிறாரே என்று வருந்தினார் கொங்கணவர் என்ற சித்தர். ஒரு முறை சிவவாக்கியர் மனைவியை வீட்டில் சந்தித்த கொங்கணவர், 'வீட்டில் உள்ள இரும்புத்துண்டுகள் ஏதாவது கொண்டு வா!' என்று கேட்டுக்கொண்டார். சிவவாக்கியரின் பத்தினியானவளும் வீட்டில் சில இரும்புத்துண்டுகளை தேடிப்பிடித்து கொண்டு வந்து கொங்கணவரிடம் கொடுத்தார். அவைகளை தங்கமாக மாற்றி தந்து விட்டு சென்றார் கொங்கணவர். சிவவாக்கியர் வீடு திரும்பியதும் நடந்தை சொன்ன மனைவி கொங்கணவர் மாற்றித்தந்த தங்கபாளங்களை அவர் முன் கடைவிரித்தாள்.

அதை தொடக்கூட மறுத்த சிவவாக்கியர் அவற்றை பாழும் கிணற்றில் போடச்சொன்னார். அப்படியே செய்துவிட்டு வந்தாள் மனைவி. இருந்தாலும் மேலும் மனைவியை சோதிக்க எண்ணிய சிவவாக்கியர், அருகிலிருந்த ஒரு கல் மீது சிறுநீர் கழித்தார். அதுவும் தங்கப்பாளமாக மாறியது. 'இதை எடுத்துக் கொள்!' என்றார் மனைவியிடம். அவளோ நடுங்கிப் போனாள். 'உங்களது மாறாத அன்பே என் வாழ்வு!' என்றாள் பாசத்துடன். 'நீயல்லவோ என் துணைவி!' என்று மனைவியை பாராட்டினார் சிவவாக்கியர்.

ஒருமுறை அவரை சிலர் அணுகி, 'சித்தர்களை நாங்கள் தரிசிக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும். சித்தர்கள் மூலம் தங்கம் செய்யும் வித்தையை அறிந்து உலக மக்களின் வறுமையை அகற்ற முயல்வோம்!' என்றனர். அதற்கு சிவவாக்கியர், 'தங்கம், தங்கம் என்று அலைய வேண்டாம். அது கொலை, களவுகளுக்குத்தான் ஆட்படுத்தும். உங்கள் பொருளாசையை ஒழியுங்கள். சித்தத்தை சிவனிடம் வையுங்கள். பின் நீங்களே தங்கமாக ஆவீர்கள். தங்கத்தை அடைய இதுவே சுலபமான வழி!' என்றார். வந்தவர்கள் தலைகுனிந்து சென்றனர்.

'வேதம் ஓதுபவர்கள் திருவடி ஞானம் அடைந்ததுண்டோ? பெறவில்லையெனின் பாலில் நெய் இருப்பது பொய்யாகிப் போகுமே. கோயில் ஏது? குளம் ஏது? கண்ட இடமெல்லாம் குழம்பி திரியும் மூடர்காள்!' என்று சிவவாக்கியர் உரத்துப்பேசும்போது நாத்திகத்தின் குரலாகவே அவரது பாடல்கள் ஒலிக்கிறது. ஆனால், அதற்குள், 'கோயில் உங்கள் மனதில் இருக்கிறது. கடவுள் உங்கள் எண்ணத்தில் இருக்கிறது. அது அழிவதும் இல்லை. அந்தக்குளம் வற்றுவதும் இல்லை!' என்ற கருத்தை உணரும்போது இவரின் ஆன்மிக நெறி எதிர்மறை சிந்தனைக்குள் இருக்கும் நேர்கூற்றுகளாகவே கனிகின்றன.

'பசுவின் மடியில் கறந்த பாலை மீண்டும் அதன் மடியில் செலுத்த முடியாது. கடைந்தெடுத்த வெண்ணெய் தயிராகாது. பறித்த பூவும், உதிர்த்த காயும் மரத்தில் ஒட்டாது. அதுபோல இறந்தவர்கள் யாவரும் திரும்ப பிறப்பதில்லை. என்பது சிவவாக்கியரின் ஆன்மிக சிந்தனை. காலையும் மாலையும் குளித்தால் உடல் அழுக்கு போய்விடும் உள்ளத்து அழுக்குகளை குளிப்பாட்டுவது யார்? இதை எப்படி குளிப்பாட்டுவது? எங்கேதான் அழுக்கில்லை. அழுக்குள்ள இடங்களை கண்டறிந்து தூய்மைப் படுத்த இயன்றால் தூய ஜோதியுடன் உள்ள இறைவனுடன் இரண்டறக்கலந்து வாழமுடியும் என்கிறார் இவர்.

'இறைவா மக்களுக்கு அகத்தூய்மை என்பது ஏற்படாதா? அதை உருவாக்கத்தான் எத்தனைகோயில்கள்? எத்தனை தெய்வங்கள்? எத்தனை ஞானநூல்கள்? எத்தனை உபதேசங்கள்? எத்தனை இருந்தும் மக்கள் வீண்பொழுதை கழிக்கும் வேலையிலேயே ஈடுபடுகிறார்களே? இவர்களுக்கு நற்சிந்தனையை அளித்து கருணை அருளக்கூடாதா?' என்று வேண்டி நின்றதோடு, அதற்கான பல்லாயிரக்கணக்கான பாடல்களை இயற்றியவர் சிவவாக்கியர். சிவ,சிவ மந்திரத்தை உள்ளளியாக கொண்டிருந்தாலும், சிவனையே துதித்து மனம் உருகினாலும் குறப்பெண்ணை மணந்து குறவர் வாழ்க்கையை¬யே மேற் கொண்டதாலே என்னவோ வள்ளிக்குறத்தியுடன் காட்சியளிக்கும் சுப்பிரமணியரை மூலவராக கொண்ட சிவன்மலையில் வாசம் செய்து அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனுக்கு பூஜை செய்து வந்திருக்கிறார் சிவவாக்கியர். சுப்பிரமணியக்கடவுள் மூலவராக இருந்தாலும் இந்த மலை சிவன்மலை என்று அழைக்கப்படுவதற்கு பெயர்க் காரணமே சிவவாக்கியர் தங்கி பூஜித்த மலை என்பதால்தான். சிவவாக்கியர் மலை, சிவமலையாகி, பிறகு சிவன்மலையாக உருமாறியிருயிருக்கிறது.

காங்கயம் சிவன்மலையில் கைலாசநாதர், ஞானம்பிகை, தண்டபாணி சன்னதி, நவகன்னிகைகள் சன்னதி, சனிபகவானுக்கு தனி சன்னதி என்று பலவிருந்தாலும் இங்கே ஆண்டவன் உத்திரவு என்ற விஷயம் ரொம்பவும் பிரசித்தம். இறைவன் பக்தர் ஒருவரின் கனவில் வந்து இந்த பொருளை சிவன்மலையில் வைத்து பூஜிக்க சொல்லு என்று உத்திரவிட்டால் அதையே வைத்து பூஜிக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பக்தர் கனவில் நீரை வைத்து பூஜை செய்யுமாறு ஆண்டவன் உத்திரவு கிடைத்தது. அதன்படி நீரையே வைத்து பூஜித்தார்கள். சுனாமி ஏற்பட்டது. ஒரு முறை மண்ணை வைத்து பூஜித்தார்கள் நிலங்கள் விலை எகிறியது. மஞ்சளை வைத்து பூஜித்தார்கள். மஞ்சள் விலை எகிறியது.

இங்குள்ள நவக்கிரஹங்கள் எல்லாம் சூரியனை பார்த்தே அமைந்துள்ளது. சூரியன் மூலவரைப் பார்த்து அமைந்துள்ளது. மொத்தமுள்ள இருபத்தியெட்டு ஆகமங்களில் எல்லா கோயில்களிலும் வைதீகம் ப்ளஸ் ஆகமம் கலந்தேயிருக்கிறது. இங்கே ஆகம விதிமுறையில் மட்டுமே கிரஹங்கள் வீற்றிருக்கிறது. அதுவும் காரண ஆகமத்தின்படி பிரகாரம் இருக்கும். இந்த திக்கில் இருக்கக்கூடியது எல்லாம் சுப கிரஹங்கள். வடகிழக்கு, வடமேற்கு என்று இருக்கும் கிரஹங்கள் அசுப கிரஹங்கள். இங்கே அனைத்து கிரஹங்களும் சூரியனைப்பார்த்தே இருப்பதால் அசுப கிரஹங்கள் கூட மத்திமமான பலனைக் கொடுக்கும். எனவே கிரஹாச்சாரங்களில் பாதிக்கப்பட்ட பக்தர்களின் உஷ்ணத்தை இந்த கிரஹங்கள் ஓரளவேனும் குளிர்விக்கிறது. இதற்குள் எல்லாம் புகுந்து சிவவாக்கிய சித்தரின் ஆன்ம ஒளி இன்னமும் பூஜித்து வருவதாக நம்புகிறார்கள் பக்தர்கள்.

எனினும் இக்கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏனோ இங்கு வாசம் செய்த சிவவாக்கிய சித்தரின் மகிமை தெரியாமலும், அறியப்படாமலும், அதை வெளிப்படுத்தப்படாமலும் இருக்கிறது. பழநியில் வாசம் செய்த போகர், மருதமலையில் வீற்றிருக்கும் பாம்பாட்டி சித்தர் ஆகியோருக்கு அந்தந்த கோயில் நிர்வாகிகள் முக்கியத்துவம் கொடுப்பது போல் இங்கு செய்யாதிருப்பதே அதற்கு காரணம். விரைவில் சிவன்மலை கும்பாபிஷேகம் காணவிருக்கிறது. அந்த காலங்களிலாவது இந்த அற்புத சித்தருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு நடத்துவார்கள் என்று நம்புவோமாக.

Comments