வடகரை பாண்டுரங்கன்!

கலியுகத்தில் இறைவனை அடைய நாம சங்கீர்த்தனம் மிகச்சிறந்த உபாயம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.

ஒருசமயம் மகாவிஷ்ணு நாரதரிடம், நான் வைகுண்டத்தில் இருக்கிறேன்; கே்ஷத்திரங்களில் இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால், நிச்சயமாக எங்கே எனது பக்தர்கள் இசையுடன் கூடிய ஆடல் பாடல்களால் மெய்மறந்து பக்தி செய்கிறார்களோ, அங்கே இருப்பேன்!" என்றாராம். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பாண்டுரங்கன்.

மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்க விட்டலன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பாண்டுரங்கன் நிகழ்த்திய லீலைகள் அநேகம். அவன் தெய்வமாக மட்டுமில்லாமல், தாயாக, தந்தையாக, நண்பனாக, ஏன், வேலையாளாகக் கூட வந்து அருள்பாலித்திருக்கிறான். ஆடி மாதத்தில் வரும் ஆஷாட ஏகாதசி, பாண்டுரங்கன் ஆலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அச்சமயம் ‘ஜய ஜய விட்டல, பாண்டுரங்க விட்டல, ஹரி நாராயண விட்டல’ என்ற கோஷங்கள் விண்ணை எட்டும்.

பண்டரிபுரத்தில் மட்டுமல்ல! பக்தர்கள் எங்கெல்லாம் அன்புடன் ‘ஜய ஜய விட்டல, பாண்டுரங்க விட்டல’ என அழைத்தாலும் அங்கெல்லாம் பாண்டுரங்கன் ஓடிவருவான் என்பது உறுதி. தமிழகத்தில் (புதுக்கோட்டை மாவட்டம்) புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில், பல்லவன் குளம் வடகரையில் உள்ள விட்டோபா ஆலயம் பழைமை வாய்ந்தது.

பண்டரிபுரம் ஆலயத்துக்குச் சமமாகக் கருதப்படும் இத்திருக்கோயில், குருவாயூருக்கு இணையாகவும் விளங்குகிறது. தற்போதுள்ள ஆலயம், கி.பி.13-14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

மூலவர் ருக்மணி சமேத விட்டோபா. மூலவர் சன்னிதி, சத்யபாமா சமேத கிருஷ்ணர் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, தன்வந்திரி சன்னிதி, கருடாழ்வார் சன்னிதி என அனைத்து சன்னிதிகளும் புனரமைக்கப் பட்டு வருகின்றன. வியாச முனிவருக்கும் தனிச் சிலை உள்ளது. பழைமை வாய்ந்த இவ்வாலயத்தின் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை என்னும்போது, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகோபால கிருஷ்ண பாகவதர் ‘ஜெய் ஜெய் விட்டல’ என்று உயிருருகச் சொன்னபடி கால்களில் சதங்கை கட்டி ஆடியதை, வெளியூர்களில் தற்போது வசித்தாலும், புதுக்கோட்டை வாசிகளால் மறந்திருக்க முடியாது. அவர் போற்றிய விட்டலனின் ஆலயம் எழில் பெறுகிறது என்றால், நம் வாழ்க்கை ஒளிபெறுகிறது என்பதும் நிச்சயம்!

தொடர்புக்கு: 9443493639/9750948111

Comments