பலன் தரும் பஞ்சமுக ஹனுமன்!

வாயு புத்ரனான ஹனுமன், தம் முகம் தவிர, சிம்ம முகம், வராக முகம், பரிமுகம், கருடமுகம், ஆகிய நான்கு முகங்களையும் கொண்டவராக, 36 அடி உயரத்திரு மேனியுடன் - பஞ்சமுக ஆஞ்சநேயராகக் காட்சி தரும் இடம் பஞ்சவடி.

“ராமனை வெல்லமுடியாத ராவணன், 100 தலைகள் கொண்ட மஹி ராவணனிடம் உதவி கேட்டான். மஹி ராவணனும் அதை ஏற்று, காளி கோயிலில் யாகம் பண்ண விரைந்தான். விபீஷனர், இதை ராமரிடம் தெரிவிக்கிறார். அந்த மஹி ராவணனை அழிக்க, ஹனுமன் மேற்கொண்ட திருக்கோலம் இது!” என்கிறார்கள்.

பரிமுகம் என்னும் ஹயக்ரீவர் முகம் ஞானமயம்; எதிரிகளையும், பயத்தையும் போக்கி உடன் காக்கும் நரசிம்ம முகம்; நிலம் தொடர்பான சிக்கல்கள் அனைத்தையும் போக்கும் வராகமுகம்; தடைகள், விஷங்களைப் போக்கும் கருட முகம்; இவற்றோடு, தம்முகம் துலங்கக் காட்சி தருகிறார் ஸ்ரீஆஞ்சநேயர்.

அது, 1999 ஆம் வருடம். பெரியவர் சந்தானம் ஐயங்கார் தமக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில், ரமணியோட (இவர் ஆஞ்சநேய உபாசகர்) பாதம் படணும்னு ஆசைப்பட்டு, அவரை அழைத்துவந்தார். அந்த மனைக்கு சென்ற உடனேயே, ‘எனக்கு இங்கே கோயில் கட்டு, நீ ஆலய வேலைகளை ஆரம்பி, நான் பார்த்துக்கறேன்’ என்ற அசரீரி கேட்டது பெரியவருக்கு. அதை அறிந்த சந்தானம், தம் இடத்தை ஆலயம் அமைவதற்காக தர முன் வந்தார். இந்த அசரீரி உண்மை தானா?ன்னு புரிஞ்சுக்க நங்கநல்லூர் ஹனுமன் கோயில்ல திருவுளச் சீட்டு; கேரளாவுல ப்ரஸ்னம் பார்த்தார். அப்பத்தான், ‘ஆஞ்சநேயர் விஸ்வரூப திருமேனியாக வரணும்னு ஆசைப்படுகிறார். திருப்பதிக்கு சென்று பூஜை போட்டுவிட்டு ஆலய வேலைகளை ஆரம்பிக்கவும்’ என்று வந்தது.

“36 அடி ஆஞ்சநேயர் உருவாக தோதான கல் தேட ஆரம்பித்தோம்.

சிறுதாமூர் என்ற இடத்தில் 40 அடி விக்ரஹ கல்லையும் அந்த ஆஞ்சநேயரே மனுஷ ரூபத்தில் காட்டிக் கொடுத்தார். இரண்டு ஆண்டுகளில், ஆஞ்சநேயர் பஞ்ச முகத்தோடு விஸ்வரூபமாக வடிவம் கொண்டார். ஜூன் 12, 2003 விக்ரஹ ஸ்தாபனம் நடந்தேறியது. 2007, ஜனவரி 31 அன்று வெகுசிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தது!” என்கிறார்கள் நெகிழ்வுடன்...

இத்திருக்கோயிலில் இன்னொரு விசேஷம், பட்டாபிஷேக ராமன். இங்கே ஸ்ரீராமன், தன் தேவி மற்றும் தம்பிகளோடு மட்டுமல்ல; ஹனுமன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், விபீஷணன் என்று பத்துபேரோடு தரிசனம் அளிக்கிறான். ஒரே சன்னதியில் இந்த மாதிரி ஒரு அமைப்பை எங்கேயும் பார்க்க முடியாது.

தொடங்கும் வினையாவும், வெற்றி கரமாக முடிக்கும் வேழமுகப் பெருமான், வலம்புரி விநாயகராக இங்கே சன்னிதி கொண்டிருக்கிறார். நாராயண ஸ்வரூபமாக காட்சி தரும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, துவார பாலகர்களாக நிற்பவர்கள் அங்கதனும், சுக்ரீவனும்.


ஆண்டு முழுவதும் பல ஹோமங்கள், ராம நவமி மற்றும் ஹனுமத் ஜயந்திக்கான மஹோத்ஸ்வங்கள் என விழாக்கோலம் காணும் பஞ்சவடி திருக்கோயிலுக்கு எல்லா நாட்களுமே விசேஷம்தான். ஆரோக்கியம் பெருக, கடன் பிரச்னைகள் நீங்க, நிலம் தொடர்பான சிக்கல்கள் விலக, சுப காரியங்கள் நடக்க என்று வந்து நலம் பெற்றுக்கொண்டே இருக்கிறர்கள் பக்தர்கள். அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொண்டே இருக்கிறார் பஞ்சவடியில் உள்ள ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர்!

திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் திண்டிவனத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பஞ்சவடி. ஆலய தொடர்பு எண்: 0413-2671232 / 262.



Comments