நியூயார்க்கில் ரங்கநாதர்!



நியூயார்க் மாநிலத்தில் பொமோனா (Pomona) என்ற இடத்தில் மிக அழகாக அமைந்துள்ளது ரங்கநாதர் திருக்கோயில். பார்க்கிங் வசதியுடன், பளிங்குபோல் காட்சியளிக்கும் இந்தக் கோயிலில் ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், சத்யநாராயணர், மஹாலஷ்மி, ரங்கநாதர், ஸ்ரீதேவி-பூதேவி, இராமானுஜர் போன்ற விக்ரகங்களை அற்புதமாக அமைத்துள்ளனர்.

பெருமாள் கோயிலில் அர்ச்சனை, பிரசாதம் ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிப்பது கிடையாது. யதாஷக்தி (yathasakthi) என்று எழுதி வைத்திருப்பார்கள். நாம் விருப்பப்பட்டால் இயன்ற அளவு தட்சினை தரலாம். தட்சினை தந்தாலும், தராவிட்டாலும் அதே புன்சிரிப்புடன், மரியாதையுடன் நடத்தப்படுவது, இங்குள்ள தனிச்சிறப்பு.

ஆலயத்தில் நுழைந்தவுடன் கூடைகளில் இரண்டு பழங்கள் போட்டு வரிசையாக வைத்திருப்பார்கள். அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறினால், ஒரு கூடையை எந்தவிதக் கட்டணமுமின்றி, இலவசமாகக் கொடுப்பார்கள். மிக ஸ்பஷ்டமாக, கணீர்க் குரலில், சிரத்தையாக மந்திரம் கூறி, இங்குள்ள பட்டாச்சாரியர்கள் அர்ச்ச்னை செய்வதே கொள்ளை அழகு.

அரங்கனை கண்ணாரத் தரிசித்ததும், பேஸ்மென்ட்டில் புளியஞ்சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல், அக்காரவடிசல் போன்ற பிரசாதங்களை, பெரிய பாத்திரங்களில் நிரம்ப வைத்திருப்பார்கள். வயிறார நாம் சாப்பிடலாம்; தேவாமிர்தமாய் இருக்கும்.

நம்மூர் திவ்யதேசங்களையே மிஞ்சும் அளவுக்கு, பல நாட்கள் வெள்ளி வாகனங்களில் கோலாகலமாக உலா உண்டு. பிரம்மோற்சவம், நவராத்திரி, தீபாவளி போன்ற விழாக் காலங்களில் கர்நாடக இசை கச்சேரி, பரதநாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். பங்குனி உத்திரம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம், ஸ்ரீஜெயந்தி போன்றவையும் விசேஷம்.

சாஃப்ட்வேர் கம்பெனிகளில் உயர் பதவி வகிப்பவர்கள், டாக்டர்கள், ஆடிட்டர்கள் என்று பலரும், துளிகூட கௌரவம் பார்க்காமல் எச்சில் தட்டுகள் நிரம்பிய குப்பைகளை அகற்றுவது, பூத்தொடுப்பது, பிரசாத அண்டாக்களை கழுவுவது, வஸ்திரங்களை அயர்ன் செய்து மடிப்பது போன்ற பெருமாள் கைங்கர்யங்களை, மனம் உவந்து செய்வதை பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படும்.




வார இறுதி நாட்களில் குழந்தைகளுக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் ஸ்லோக வகுப்புகளை இலவசமாக எடுக்கிறார்கள். பட்டுப் பாவாடை உடுத்தி, சின்னஞ்சிறு குழந்தைகள், ஒருமித்த குரலில் ஸ்லோகம் சொல்லுவதைப் பார்க்கப் பார்க்க பரவசம். அமெரிக்கா செல்லும்போது, பொமோனா ரங்கநாதர் ஆலயத்துக்கு செல்லும் பாக்கியம் பெற்றவர்கள், கோயிலின் ஆசாரத்தையும், கடல் கடந்து பக்தி சிரத்தையுடன் பெருமாள் சேவிக்கப்படுவதையும் கண்டு மெய்சிலிர்ப்பது சர்வ நிச்சயம்!



Comments