அழகு,ஆபரணம், அற்புதம்!

அம்பிகையின் எந்த வடிவத்தைப் பார்த்தாலும், அதில் இடம் பெறக்கூடிய ஆபரணம் மூக்குத்தி! அதை ‘நாசிகாபரணம்’ என்கிறார்கள். கிருஷ்ண லீலையில் மனம் லயித்த லீலாசுகர், ‘நாஸாக்ரே நவ மௌக்திகம்’ என்று மூக்கில் அணியும் ஆபரணம் பற்றிப் பேசுகிறார். ஆதிசங்கரர், ‘முக்த முகோத்பாஸிதாம் நாஸாவிபூஷாமி மாம்’ என்று கூறுகிறார். பரசுராம கல்பம், ‘அம்பிகை தன் நாசியில் ஆபரணம் அணிந்திருந்தாள்’ என்று விவரிக்கிறது. மந்திர சாஸ்திர நூலான பிரபஞ்ச சார சார தந்திரம், ‘மூக்கில் தொங்கும் முத்தை உடையவள்’ என்று, லகு ச்யாமாவை வர்ணிக்கிறது.

நத்து, பேசரி, புல்லாக்கு... என்று ஆபரணப் பட்டியலில் இடம் கொண்டுவிட்ட மூக்குத்தி செய்த விளையாட்டுகள் பல.

இரவாகிவிட்டது. கரை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் கவலையில் இருந்தார்கள், கப்பலில் வந்தவர்கள். கண்ணுக்கு எட்டும் வரையில், கலங்கரை விளக்கு தென்படவில்லை. கரை சேருவோமா, மாட்டோமா என்ற பயம் பற்றிக்கொண்டது.

அப்போது, தொலைதூரத்தில் பளீரென்ற ஒளி. ஆவலுடன், அந்த ஒளியை நோக்கி கப்பலைச் செலுத்தினார்கள். ஒளியின் பரிமாணத்தை வைத்து, கரை இன்னும் தூரத்தில் இருப்பதாக நினைத்து வேகமாக வந்தார்கள். ஆனால், சட்டென்று தரைதட்டிப் பிளந்தது கப்பல்.

தடுமாறியவர்கள், நீரில் குதித்து நீந்தினார்கள்; கரை சேர்ந்தார்கள். ‘எங்கிருந்து வருகிறது அந்த ஒளி?’ என்று தேடிப் போனார்கள். அங்கே, அந்த ஒளிரும் மூக்குத்தியை அணிந்து காட்சி கொடுத்தாள் அம்பிகை. ஆச்சர்யம்; பிரமிப்பு என்றான உணர்ச்சிகளைவிட, ஆசை மேலோங்கியது.

‘அடேயப்பா...என்ன ஒளி? அபூர்வமான ரத்தினம்! இதை விற்றால் எவ்வளவு செல்வம் கிடைக்கும்?’

என்றெல்லாம் ஓடியது எண்ணம். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். ஒளிவீசும் ரத்தினம் பதித்த அந்த மூக்குத்தியைக் கழற்ற முயன்றனர். அவ்வளவுதான்... அனைவருக்கும் பார்வைபோயிற்று.

மறுநாள்...

கள்வர்களைச் சிறையிட்ட மன்னர், தேவியின் சன்னிதிக்கு எதிரே அமைந்த கதவை மூட உத்தரவிட்டார். இன்றுவரை, அந்தக் கதவு மூடப்பட்டேதான் இருக்கிறது. குமரிமுனையில் கோயில் கொண்டுள்ள, தேவி கன்யாகுமரியின் மூக்குத்தியைப் பற்றிச் சொல்லப்படும் கர்ணபரம்பரைச் செய்தி இது.

அந்த மூக்குத்தியில் உள்ள கல், அபூர்வமான நாகரத்தினம் என்றும், பதினெட்டாம் நூற்றாண்டில் மன்னர் மார்த்தாண்ட வர்மா சமர்ப்பித்தது என்றும் சொல்வார்கள். இது எப்படியிருந்தாலும், தேவியின் எதிரே அமைந்துள்ள கதவு மூடப்பட்டுதான் இருக்கிறது. அதில் சிறிய துவாரம் மட்டும் அமைத்திருக்கிறார்கள்.

***

கருமித்தனம் மிகுந்த ஒருவனை, மகாபக்தனாக மாற்றியதும் இந்த மூக்குத்தியின் லீலைதான். செல்வம்... செல்வம்... செல்வம்.. என்று வளத்தில் மிகுந்த ஸ்ரீனிவாச நாயக்கின் மனத்தில், அந்த வளம் இல்லை. ‘கொடுக்கும் மனம் இல்லாதவர்கள், ஏழைகள்; தரித்திரர்கள்’ என்றே பெரியோர் வாக்கு. ஸ்ரீனிவாச நாயக் அப்படித்தான் இருந்தார்.

அவர் மனைவியோ, கருணையே வடிவாயிருந்தாள். கணவரை குறை சொல்லாமலும், அவருடைய கருமித்தனத்தால் கவலைப்படுபவளாகவும் இருந்தாள்.

‘செல்வச் செழுமையால் நவகோடி நாரா யணன் என்று கொண்டாடப்படு-பவரின் மனத்தில், ஏழைகள்பால் கனிவு பிறக்க வேண்டும்’ என்று, கடவுளைப் பிரார்த்திக்க மட்டுமே அவளால் முடிந்தது.

இந்தப் பெண்மணியைத் தேடி வந்தார் ஓர் அந்தணர். “அம்மா, உன் கணவரிடம் சென்று உதவி கேட்டேன். அவர் மறுத்து விட்டார். என் மகனின் உபநயனத்துக்கு உதவி செய்” என்று வேண்டினார். அவள் கலங்கினாள். எப்படி உதவுவது? சட்டென்று அந்த எண்ணம் உதித்தது. உள்ளே சென்றாள். நகைப் பெட்டியில் வைத்திருந்த மூக்குத்தியை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள். “இதை விற்று, பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றாள். வாங்கிய அந்தணர், அவள் கணவன் கடைக்கே போனார். மூக்குத்தியைக் கொடுத்து பணம் கேட்டார். அதைக் கையில் வாங்கிய ஸ்ரீனிவாச நாயக், திகைத்துப் போனார். ‘இது என் மனைவியின் நகை அல்லவா? பரதேசிபோல் தோன்றும் இவனிடம் எப்படி வந்தது?’ என்ற கேள்வி எழுந்தது. “ஒரு நிமிடம் இருங்கள்” என்று, அவரை அமர வைத்துவிட்டு வீட்டுக்குப் போனார்.

திடீரென்று வந்த கணவனைப் பார்த்து வியந்தாள் மனைவி. ‘எதையும் மறந்து போய்விட்டாரோ?’ என்று நினைத்தாள்? மனைவியின் மூக்கில் இருந்த மூக்குத்தியைக் கவனித்தவர், சட்டென்று கேட்டார்: “உன்னோட இன்னொரு மூக்குத்தியைக் கொண்டு வா.”

அவள் திகைத்துப் போனாள். ‘என்ன சொல்வது? அந்த ஏழை அந்தணனுக்குக் கொடுத்தேன் என்றா? எப்படிச் சொல்வது? சொன்னால், அதை எப்படி இவரால் ஏற்க முடியும்? எப்படிப் புரிந்து கொள்வார்? இறைவா, இதென்ன சோதனை?’ மனம் குழம்பித் தவித்தாள். ஒரே வழிதான் தோன்றியது.

ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்தாள்: அதில் விஷத்தைக் கலந்தாள். குடிக்க வாயருகே கொண்டு போனாள். ‘க்ளிங்’ என்றொரு சப்தம் பாத்திரத்தினுள் கேட்டது. ‘என்ன சத்தம்? வெறும் பாத்திரத்தில்தானே பாலை ஊற்றி விஷத்தைக் கலந்தேன்?’ யோசனையாய், பாத்திரத்தைக் கவனித்தாள். அதில் இருந்தது, அவள் கொடுத்த, அதே மூக்குத்தி!

ஆச்சர்யம் மாறாமல், வேகமாய் வந்து கணவனிடம் அதைக் கொடுத்தாள். வாங்கியவன், அதைவிட ஆச்சர்யப்பட்டான். அவன், கடையில் வைத்துவிட்டு வந்த, அதே மூக்குத்தி. மனைவியை விசாரிக்க, அவள் உண்மையைச் சொன்னாள்; உண்மையை அறிந்தான். வியப்பு மிகுந்தவர்களாய் இருவரும் கடைக்கு வந்தார்கள். அங்கே, அந்த அந்தணரும் இல்லை; பெட்டியினுள் வைத்த மூக்குத்தியும் இல்லை.

நவகோடி நாராயணனின் செல்வப் பற்றை நீக்கி, பக்தியை அவர் மனத்தில் புக வைத்தது, மூக்குத்தியின் லீலைதான். ‘கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர்’ என்று போற்றப்படும், புரந்தரதாசரின் சரிதம் இது.




மூக்கில் ஆபரணம் அணியும் பழக்கம் மிகப் பிற்காலத்தில் - சுமார் 1000 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதை உண்மை என்பதுபோல, பாதத்தில் இருந்து தலைவரை மாதவி அணிந்த ஆபரணங்களைப் பேசும் இளங்கோவடிகள், மூக்கில் அணியும் ஆபரணம் பற்றிச் சொல்லவில்லை. ‘எள்ளுப்பூ போன்ற நாசி’ என்று வர்ணனை செய்தவர்கள், அதில் அணிகலன் அணிவதைப் பற்றிப் பேசாததும் வியப்புதான். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் பரதமுனியின் நாட்டிய சாஸ்திரத்திலும், மூக்குத்தி பற்றிய செய்தி இல்லை என்கிறார்கள்.

பிற்காலச் சோழர் காலம் வரை, ஆலயங்களில் அமைக்கப்பட்டுள்ள பெண்களின் சிலாரூபங்களில் மூக்கணிகள் காணப்படவில்லை என்கிறார் கல்வெட்டு ஆய்வாளரான திரு. கலைக்கோவன்.

பருவ வயதை அடைந்த பெண்களுக்கு தலையில், கபாலப் பகுதியில் உள்ள வாயு வெளிப்படுவது நல்லது. அதனால், மூக்கின் மடலில் துளையிட்டு, மூக்குத்தி அணியும் பழக்கம் ஏற்பட்டது. இடதுபுறம் மூக்குக் குத்துவது மன அமைதியையும், ஒரு முகச் சிந்தனையையும் ஏற்படுத்துகிறது. அந்தத் துளையில், தங்கத்தை அணிவதால் உடலின் வெப்பநிலை ஒரே சீராக இருக்கும் என்கிறார்கள்.

“மூக்குக் குத்திக்கொள்ளமாட்டேன்னு சொல்றா?” மகா பெரியவரிடம் வருத்தமாகச் சொன்னாள் தாய். உடன் வந்த பெண் மௌனமாய் நின்றாள். பெரியவர் கவனிக்காத மாதிரி இருந்தார். அடுத்து, அவரைத் தரிசிக்க ஒரு கணவன்-மனைவி வந்தார்கள். அந்தப் பெண்மணி இரண்டு மூக்கும் குத்தியிருந்தாள்.


சற்று நேரம் பேசி, அவர்களை அனுப்பிய பெரியவர், அந்தப் பெண்ணிடம் கேட்டார்:

“அந்தப் பெண் மாதிரி, புல்லாக்கு போட்டுக்கிறியா?” அதைக்கேட்ட மாத்திரத்தில், “நான் மூக்குக் குத்திக்கிறேன்” என்றாள் அந்தப் பெண். ஏனென்றால், புல்லாக்கு என்பது மூக்கின் கீழ், உதட்டுக்கு மேல் அணியும் ஆபரணம்! இப்போது, துளையிடாமல் அணியக்கூடிய மூக்குத்திகள் எல்லாம் வந்துவிட்டன.



Comments