இரவில் வந்த பிரசாதம்!

வாழ்க்கையில் முதலாவது ஆன்மீகம்தான். வீணை கூட அதற்கு அப்புறம்தான்” என்று சொல்லும் வீணை காயத்ரி, விரும்பிச் செல்லும் தலங்கள் காஞ்சிபுரம், திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கம்.

“எனக்கு காஞ்சி காமாட்சி மீது அதீதமான பிடிப்பு உண்டு. அப்போ எனக்கு பத்துப் பன்னிரெண்டு வயசு இருக்கும். பெற்றோர்களோட காஞ்சிபுரம் மடத்தில் மஹா பெரியவா சந்திர மௌலீஸ்வர பூஜை செய்யும்போது வீணை வாசிச்சேன். அவர் என்னை ஆசிர்வதிச்சார். மதியம் சென்னை திரும்பத் தயாரானபோது, ‘மத்தியானம் பெரியவா ஓரிக்கைக்கு போறார். குழந்தை அங்கே வந்து வீணை வாசிக்கச் உத்தரவாயிருக்கு’ என்று மடத்தில் சொல்ல, நாங்கள் ஓரிக்கைக்குப் போனோம். அங்கே சுமார் ஒரு மணி நேரம் வீணை வாசிச்சேன். மஹா பெரியவா ஆனந்தமாக ரசித்து விட்டு, அறைக்குள்ளே போய்விட்டார். கொஞ்சநேரம் கழித்து வெளியில் வரும்போது, அவர் கையில் ஒரு மலர்க் கிரீடம் இருந்தது. என்னை ஆசிர்வதித்து, அந்த கிரீடத்தை என்னிடம் கொடுக்கச் சொன்னார். அதன்பின் என்னைப் பார்த்து, அதை தலையில் அணிந்துகொள்ளும்படி சைகை காட்ட, நான், அந்த கிரீடத்தைத் தலையில் வைத்துக் கொண்டேன். தொடர்ந்து, ‘வீணை வாசி’ என்று சைகை காட்ட, நானும் வாசித்தேன். அது மறக்க முடியாத இறை அனுபவம்.

சில நாட்களில், நான் அதிகாலை நாலு மணிக்கு எழுந்து, விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லிக்கொண்டே தியானம் செய்வேன். அப்போது, தியானம் ஆரம்பித்த சிறிது நேரத்துக்கெல்லாம், நான் ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் இருப்பதுபோல, உணர்வேன். முழுசாக சகஸ்ரநாமத்தை சொல்லி முடிக்கும்போது சுமார் இரண்டு மணி நேரம் ஆகி இருக்கும். ஒரு சமயம், சென்னையில் கடுமையான புயல். அன்றும் அதிகாலை தியானம் செய்தேன். அன்று முழுக்க ஒருவித வைப்ரேஷனை உணர்ந்தேன். இரவு, பதினோரு மணி இருக்கும், வாசலில் காலிங் பெல் ஒலித்தது. என் கணவர் வெளியூரில் இருந்ததால், நானும், என் மகள்களும் மட்டுமே வீட்டில் இருந்தோம். ‘இந்த இரவு நேரத்தில் யார் வந்திருப்பார்?’ என்று யோசித்துக் கொண்டே, கதவைத் திறக்காமல், ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தேன். வயசான ஒரு தம்பதி கையில் குடையோடு நின்று கொண்டிருந்தார்கள். யார் என்று விசாரித்தபோது, ‘ நாங்கள் உங்களுடைய பரம விசிறிகள். இன்று ஸ்ரீரங்கம் போயிருந்தோம். உங்களுக்கு பெருமாள் படம், பிரசாதம், துளசி மாலை, அபயஹஸ்தம் எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தோம். இந்தாருங்கள்’ என்று கொடுத்துவிட்டு, உடனே புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். ‘அவர்கள் யார்? ஏன் கொட்டும் மழையில் இரவில் வந்தார்கள்?’ இன்றுவரை புதிர்தான்.

‘கடவுள் அவ்வப்போது நமக்கு செய்தி சொல்லுவார்; வழி காட்டுவார்’ என்பதில் அழுத்தமான நம்பிக்கை உண்டு. குறிப்பாக, சில கேள்விகளுக்கு பதில் தேடும்போது, எங்கிருந்தாவது சரியான பதில் வரும். உதாரணத்துக்கு ஒன்று: ஒருநாள் சகஸ்ரநாமம் சொல்லி முடித்துவிட்டு, ‘நான் சொல்வது உனக்கு வந்து சேருகிறதா?’ன்னு பெருமாளைப் பார்த்துக் கேட்டேன். அன்று மாலை எங்கள் அபார்ட்மென்ட்டின் வாட்ச்மேன் மாதாந்திர மெயின்டனன்ஸ் பணத்துக்கான ரசீதைக் கொண்டு வந்து கொடுத்தார். வாங்கிப் பார்த்தால் ‘ரிசீவ்டு 1000/-’ என்று எழுதியிருந்தது. அந்த துண்டுக் காகிதத்தை பெருமாளின் பதிலாகவே பார்த்து நெகிழ்ந்தேன்.


கடிகாரத்தைக் கூட நான் கடவுளின் உருவகமாகவே பார்க்கிறேன். காரணம், கிருஷ்ணர், பகவத்கீதையில் ‘நான் காலமாக இருக்கிறேன்’ன்னு சொல்லி இருக்காரே! என் பூஜை அறையில் அநேகமாக எல்லா சாமி படங்களும் இருக்கும். தவிர, அங்கே கம்பீரமாக சிலையாக அமர்ந்து அருளாசி வழங்கிக் கொண்டிருப்பவர் - ஆந்திராவில் குண்டூர் அருகே வசித்த வித்யாரண்ய ஸ்வாமிகள் என்ற சித்த புருஷர். (இப்போது அவர் சித்தி அடைந்துவிட்டார்).”



Comments