சூட்சுமப் பலன் தரும் கணநாதர் ரகசியம்!

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் பெருமான் கோயிலில் உள்ள ‘சிதம்பர ரகசியம்’ போலவே, கும்பகோணம் திருநாகேஸ்வரம் ஆலயத்திலும் ஒரு ரகசியம் உள்ளது. அது ‘கணநாதர் ரகசியம்.’

திருநாகேஸ்வரம் கோயிலுக்குள் நுழைந்ததும், கொடிமரத்துக்கு வலதுபுறம் உள்ள சன்னிதி இது! இந்தச் சன்னிதியின் உள்ளே விக்ரகம் ஏதும் இல்லை. தெய்வ விக்ரகம் இருக்க வேண்டிய இடம் வெற்றிடமாக உள்ளது. அங்கே, இரண்டு இடங்களில் பூக்கள் தூவி வழிபாடு நடத்தப்பட்ட அடையாளம் தெரிகிறது. என்ன காரணம்?

சுமார், நூறு ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலின் ராஜகோபுரம் அருகில் பேய், பிசாசுகள் போன்ற தீய சக்திகள் அட்டகாசம் செய்து, பக்தர்களைக் கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுத்தனவாம். மீறி கோயிலுக்குள் செல்ல முயற்சித்தவர்களை, ஏதோ ஒரு சக்தி பின்னுக்குத் தள்ளுவதுபோல் உணர்ந்தார்கள். ஒரு சிலர் கீழே விழுந்ததுதும் உண்டு.

அந்த வேளையில், மகான் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் தம்முடைய யாத்திரையில் இங்கு வந்தார். அவரிடம் தங்கள் குறைகளையும் பயத்தையும் சொன்னார்கள் பக்தர்கள். அதைக்கேட்ட சதாசிவர், அங்குள்ள சூழ்நிலையை மாற்ற, பூத கணங்களுக்குத் தலைவனாகத் திகழும் மகா கணபதியையும், ஒரு யந்திரத்தையும் சூட்சுமமாக பிரதிஷ்டை செய்தாராம். அதாவது யார் கண்களுக்கும் புலப்படாதபடி அமைத்தாராம்.


மறுநாள் முதல், அந்த தீய சக்திகளால் அந்தப் பகுதியிலேயே இருக்க முடியவில்லை. கோயில் வாசலில் தோன்றிய அக்னி ஜுவாலை அவற்றை விரட்டியடித்தது. அப்படி அமைந்த சன்னிதிதான் ‘கணநாதர் ரகசியம்.’

ராகுதோஷம் நீங்க திருநாகேஸ்வரம் செல்பவர்கள், இந்த கணநாத ரகசியத்தையும் வணங்கி வாருங்கள். சூட்சுமமாக நற்பலன்கள் கூடும்.

Comments

  1. கணநாதர் ரகசியத்தை வணங்கிவிட்டு இல்லம் திரும்பியதும் காளை மாடுகளுக்கு பழம் வழங்கும்படி அறிவுறுத்தினார்கள்..!

    ReplyDelete

Post a Comment