இன்றைய தலைமுறையினர், தங்களுக்கு ஏதுவான நாட்களையும் நேரத்தையுமே தேர்வு செய்கிறார்கள்; சாஸ்திரம் பரிந்துரைக்கும் நாள், நேரத்தைப் பொருட்படுத்துவதில்லை. இது சரிதானா?

அன்றாடம் அலுவல்களுக்கு உரிய வேளையைப் பரிந்துரைப்பது பஞ்சாங்கம். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனும் கால அளவைகள் ஐந்தின் தொகுப்புதான் பஞ்சாங்கம். இந்த ஐந்துக்கும் ஆதாரம் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எனும் மூன்று ஒளிப் பிழம்புகள். சூரியனை வைத்து கிழமைகள், சந்திரனை வைத்து திதி, கரணம் - இவற்றுடன் நட்சத்திரமும் இணையும்போது யோகம். இவை அத்தனையும் காலத்தின் தராதரத்தை அளந்து சொல்லும்.

உடலின் ஆரோக்கியம், உள்ளத்தின் உயர்வு, உலகவியல், ஆன்மிகம் என அனைத்திலும் தன்னிறைவு பெற காலத்தின் பங்கை இணைப்பது முகூர்த்த சாஸ்திரம். பஞ்சாங்க மும்முகூர்த்த சாஸ்திரமும் வானவியலில் அடங்கும்.

சிந்தனையாளர்களான ரிஷிகளின் பரிந்துரை கள் பலனை இணைக்கும். நல்லதொருவேளை, ஒரு வேலையில் செயல்படுபவனின் இணைப்பு, நிறைவு செய்யும் வேளை ஆகிய மூன்றும் முகூர்த்த சாஸ்திரத்தின் பகுதிகள். இதை நித்ய சுத்தி, கர்த்ரு சுத்தி, லக்ன சுத்தி என்கிறது ஜோதிடம். முன்னேற்றத்தை உறுதி செய்யும் வாரம், நட்சத்திரம், திதி, கரணம் யோகம். இவற்றைத் தேர்ந்தெடுப்பது நித்ய சுத்தி. வேலையைச் செய்பவனது (கர்த்தா) நட்சத்திரத்தின் தொடர்பை காலத்துடன் இணைப்பது கர்த்ரு சுத்தி. கிரகங்களுடன் இணைந்த லக்ன காலம்- முகூர்த்த வேளையானது லக்ன சுத்தி.

அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வளர்ந்தோங்கி செழிப்புப் பெற வேண்டிய காரியங்களுக்கு உகந்தவை.

துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் உயர்வை வலுப்படுத்த உதவும். அதேபோன்று ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள், ப்ரீதி, ஆயுஷ்மான் போன்ற யோகங்கள் பவ பால வாதிகரணங்கள் ஆகிய அத்தனையும் உயர்வை உறுதி செய்பவை.

செயலில் இறங்கும் ஒருவரது நட்சத்திரத்தை வைத்து 1, 3, 5, 7 நட்சத்திரங்கள்... 2-வது, 3-வது பர்யாயத்தில் 1, 3, 5, 7 நட்சத்திரங்கள், 88-வது நட்சத்திர பாதம், சந்திராஷ்டமத்தில் வரும் மூன்று நட்சத்திரங்கள், 108-வது பாதமாக வரும் நட்சத்திரங்கள் விலக்கப்பட்டால், காலத்துடன் செய்பவனின் இணைப்பு உறுதியாக இருக்கும். லக்னத்தில் இருந்து 8-ல் ஒரு கிரகமும் இல்லாத கிரக நிலையானது லக்னசுத்தியாகும்.

இப்படிக் கால நிர்ணயம் செய்வது காலவிதான சாஸ்திரம். அறுவை சிகிச்சை, மருந்து உண்ணல், பயணம், பூணூல் கல்யாணம், திருமணம், வியாபாரம், கொடுக்கல்- வாங்கல், கிரஹாரம்பம், கிரஹப்ரவேசம், ஒப்பந்தம், கூட்டு வியாபாரம், விதை விதைத்தல், அறுவடை, ஏர் உழ, தானியம் சேமிக்க, செலவிட, கோடி உடுக்க, ஆபரணம் தரிக்க, தொட்டிலில் குழந்தையை விட... இப்படி எல்லா அலுவல்களுக்கும் வேளையை நிர்ணயம் செய்வதில் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் லக்னம், லக்ன சுத்தியில் மாறுதல் உண்டு.



உதாரணமாக... செயல்பாடு வளர்ந்தோங்க பஞ்சமி போன்ற பூர்ண திதிகள் பயன்படும். ஆனால், மருத்துவத்தில் பிணி குறைவதற்கு சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி போன்ற குறைந்து நன்மையைத் தரும் 'ரித்தா’ எனும் திதிகள் பயன்படும். பூரம், பூராடம் பரணி, திருவாதிரை, ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள், சூலங்கள் இருக்கும் கிழமைகளை பயணத்துக்கு விலக்க வேண்டும். நெருப்புடன் இணைந்த செயல்பாட்டிலும், தளவாடங்கள் தொடர்பான விஷயங்களிலும் கிருத்திகை, விசாகம் போன்ற நட்சத்திரங்கள் வெற்றியை அளிக்கும்.

இப்படி, ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் செயல்பாட்டை ஒட்டி நட்சத்திரம், திதி, கிழமை, யோகம், கரணம் ஆகியவற்றில் மாறுபாடு உண்டு. பொதுவானதொரு நல்ல நாளை எல்லா வேளைக்கும் தேர்ந்தெடுக்கக் கூடாது. வேலையின் தரம், அதன் உயர்வு- தாழ்வு ஆகியவற்றை ஒட்டி முகூர்த்த சாஸ்திரம் துல்லியமான வேளையை வரையறுக்கும். ராகு காலம், குளிக காலம், ஹோரை, நிஷ்பஞ்சகம் ஆகியவற்றை மட்டும் பார்த்து நல்ல நாளைத் தேர்வு செய்வது, விரும்பிய பலனை அளிக்காது.

பரணி, கிருத்திகை, அஷ்டமி, நவமி, சனி, செவ்வாய் எனச் சொல்லி, நாமாகவே நிர்ணயம் செய்யக்கூடாது. ஜோதிடரை அணுகி, அவரிடம் சாஸ்திரத்துக்கு உகந்த முறையில் நல்லதொரு நாளைப் பெற்றுச் செயல்படுத்தினால் வெற்றியை எட்டலாம்.

பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் நல்ல நாளும் முகூர்த்தங்களும் பொதுவானவை. எல்லோருக்கும் பொருந்தாது. எனவே, நாம்தான் நல்லது- கெட்டதை அறிந்து செயல்பட வேண்டும். ஒரு வேலையில் வெற்றி பெற வேளையின் ஒத்துழைப்பு தேவை. இதனால் பல இழப்புகளைத் தவிர்க்கலாம். கேள்வியறிவு மற்றும் புத்தக அறிவின் மூலமாக எளிதில் ஜோதிடத்தை நிர்ணயம் செய்வது என்பது விரும்பிய பலனை அளிக்காது.

அதெப்படி... இன்றைய சூழலில் ஜோதிடத்தின் பரிந்துரையில் நாள் பார்த்துச் செயல்படுவது மிகவும் கடினமாயிற்றே என்றொரு கோணமும் உண்டு.

இன்றைக்கு எல்லாச் செயல்பாடுகளிலும் அவசரகால நிலையில் செயல்பட வேண்டியுள்ளது. நாள் பார்க்க முயன்றால் வேலை கெட்டுவிடும். உடம்பு சரியில்லை என்றால், நல்ல நாள் பார்த்து மருத்துவரை அணுக இயலாது. ஆம்புலன்ஸுக்கு ஃபோன் பண்ணி துரிதகதியில் செயல்பட வேண்டியிருக்கும். அப்போது நல்லநேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? பிரசவ வலி ஏற்பட்டதும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். வேலைக்கு ஆர்டர் வந்தால், உடனே ஏற்க வேண்டியிருக்கும். ரயில், பேருந்துகளில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத நேரத்தில், எது கிடைக்கிறதோ அந்த வண்டியில் பயணிக்க வேண்டியிருக்கும். அதேபோல் திங்கள், புதன், சனி போன்ற நாட்களில் ராகு காலம் பார்த்துப் பயணிக்க இயலாது. ஞாயிறு மாலை 4 1/2 மணிக்கு (ராகு கால ஆரம்பத்தில்) தொடர் வண்டி புறப்படும். ஏறாமல் இருக்க முடியாது. காதல் திருமணத்திலும் பதிவுத் திருமணத்திலும் நல்ல நாள் பார்க்க இயலாது; அதற்கான அலுவலகம் திறந்திருக்கும் வேளையில்தான் பதிவுத் திருமணம் செய்ய இயலும்.

துணிகள் நைந்து போனால் கடையில் ரெடிமேடாக வாங்கி உடுக்க வேண்டியிருக்கும். பணம் இருக்கும்போது, மனம் விரும்பும் வேளையில் தங்க ஆபரணங்கள் வாங்க வேண்டியது இருக்கும். நம் மனம் தற்போது நமது சௌகரியத்துக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது. சத்திரம் கிடைக்கும்போது திருமணத்தை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இப்படிக் காலத்தின் தாக்கம் முகூர்த்த வேளையைத் தேர்ந்தெடுத்துச் செயல்பட வைப்பதில்லை. கண்ணுக்குப் புலப்படாத காலத்தின் பங்கை நம் மனம் ஏற்பதில் நம்பிக்கை இல்லை. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது; புனர் பூசம் ராமனின் நட்சத்திரம், ரோகிணி கிருஷ்ணனின் நட்சத்திரம், உத்திரம் ஐயப்பனுக்கு உகந்தது, பூசம் முருகனுக்கு உகந்தது, திருவோணம் விஷ்ணுவின் நட்சத்திரம்... இப்படி, நமது விருப்பப்படி செயல் படத் துணிவு வந்துவிட்டது. மக்கள் முகூர்த்த சாஸ்திரத்தை தெரிந்தே விலக்குகிறார்கள்; வெற்றியும் பெறுகிறார்களே!

- இப்படியான கருத்தும் உண்டு. இது சரிதானா?

சாஸ்திரத்தின் பரிந்துரை பயனற்றுப் போகாது. தன்னிச்சையாகச் செயல்படுவனுக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்ல முடியாது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக, எங்காவது வெற்றி இருக்கலாம். அதுவே சாஸ்திரத்தைத் துறக்க ஏதுவாகாது.

புதிய கார். பெட்ரோல் நிரம்ப இருக்கும். திறமையான டிரைவர் இருப்பார். சக்கரங்களில் காற்றும் போதுமான அளவு இருக்கும். பேட்டரியும் வேலை செய்யும். இப்படி எல்லாமே சரியாகத்தான் இருக்கும். ஆனால் பயணப்படும்போது அடைமழை ஆரம்பமானது. கண்ணாடியில் துடைப்பான் வேலை செய்யவில்லை. இப்போது காரை ஓட்ட இயலாது. மிகச் சாதாரணமான துடைப்பான் பயணத்துக்கு முட்டுக்கட்டை ஆவது உண்டு. வெற்றிக்கான பல காரணங்களில், வேளையின் பங்கு தனிச்சிறப்பைப் பெறுகிறது.

காலத்தில் மழை பெய்யவில்லை. விதை விதைக்க இயலாது. தவறான வேளையில் தாலிகட்டிய திருமணங்கள் விவாகரத்தில் முடிவ டைந்துள்ளன. வலி ஏற்பட்டிருக்கிறது என்பதை வைத்து, குறிப்பிட்ட வேளைக்கு முன்பாகவே குழந்தையை எடுத்து இழந்தவர்களும் உண்டு. தவறான வேளையில் புதிய வீட்டில் குடியேறி, சண்டை- சச்சரவில் மாட்டிக்கொண்டு, பிறகு அடிமாட்டு விலைக்குக் குடியிருப்பை விற்று நஷ்டமானவர்களும் உண்டு.

பேராசையின் காரணமாக பொல்லாததொரு வேளையில், பார்த்துக்கொண்டிருக்கும் பணியை விட்டு வெளியூர் வேலையை ஏற்று, குறுகிய காலத்தில் வேலையை இழந்து வீடு திரும்பியவர்களும் உண்டு. லாட்டரியில் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தைப் பொல்லாத வேளையில் முதலீடு செய்து, கோர்ட்டுக்கு அலைந்தவர்களும் உண்டு. பொல்லாத வேளையில் பயணம் மேற்கொண்டு தொடர்வண்டி விபத்துக்குள்ளாக... உடல் சுகாதாரத் தையும் பணத்தையும் இழந்தவர்களும் உண்டு.

சந்திராஷ்டமத்தை அலட்சியப்படுத்தி, தகுதி இருந்தும் நேர்காணலில் வேலை கிடைக்காமல் தவித்தவர்களும் உண்டு. அஷ்டமச்சனியில் தீர்த்த யாத்திரையை ஏற்று, எதிர்பாராத விதமாக 'பந்த்’தை (போராட்டம்) சந்தித்து பாதியிலேயே ஆகாய விமானத்தில் வீடு திரும்பியவர்களும் உண்டு. 88-வது நட்சத்திர பாதத்தில் பயணம் மேற்கொண்டு, விபத்தில் சிக்கி உடல் ஊனமற்றவர்களும் உண்டு.

நல்லவேளை பார்த்துச் செயல்பட்டால், தீமை யைவிட நன்மை அதிகம் வந்து, தீமையும் ஒரு கோணத்தில் நன்மையாக மாறும். நல்ல நாளை அலட்சியப்படுத்தினால், நன்மையைவிட தீமை அதிகமாக இருக்கும். கிடைத்த நன்மையும் குறுகிய காலத்தில் தீமையைச் சந்திக்க வைக்கும். பேராசை, அவசரம் ஆகியவற்றில் சிக்காமல் நல்ல நாள்- நேரம் பார்த்துச் செயல்படுவது நீண்டகால உயர்வுக்கு ஏதுவாகும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

காலத்தின் தாக்கம் நமது சிந்தனையை மாற்றிவிடும். பொல்லாத காலத்துடன் இணைந்த சிந்தனை, விரும்பிய பலனை அளிக்காது.

அஷ்டமச்சனியில் தவறான வேளையில் அவசரம், ஆசை காரணமாக... தெரிந்தே திருமணத்தை முடித்துக்கொள்கிறான். ஆனால், திருமணத்துக்குப் பிறகு வேலை மாற்றத்தால் இருவரும் பிரிய நேரிட்டது. சேர்ந்து இருக்க மனம் இருந்தும், பொருளாதாரம், பதவி ஆசையில் பிரிவை ஏற்கிறான். மனைவியின் நினைவோடு கசப்பையும் ஏற்கிறான். அந்தக் கசப்பை இணைய வைத்தது வேளையின் தாக்கம். வேலையைத் துறந்து சேர்ந்து இருப்போம் என்கிற சிந்தனையை முடக்கியது கெட்ட வேளை.

Comments