முன்னோர் ஆராதனை குடும்ப முன்னேற்றத்துக்கு அவசியம். சிவலோக பிராப்தி அடைந்தார், வைகுண்ட பதவி அடைந்தார், அமரர் ஆனார், இறந்து தெய்வமானார்... இப்படித்தான் உடலை விட்டு வெளியேறிய ஜீவாத்மாவைக் குறிப்பிடுவோம். காட்டில் வாழ்பவர்கள், பழங்குடியினர், இவர்களுடன் இணைந்த கிராமவாசிகளிலும் இறந்தவர்களைத் தெய்வமாகக் கொண்டாடுவோர் உண்டு. மதுரைவீரனையும் நல்லதங்காளையும் ஆராதிப்பவர்கள் உண்டு. பூத உடலில் இருந்து வெளிவந்த ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்து தெய்வமாக மாறியது என்கிற கருத்தில் வெளிவந்ததுதான் 'இறந்து தெய்வமானார்’ என்கிற வழக்கு. அமரர் என்றால் மரணமற்றவர். மரணமற்றது ஆத்மா. ஆன்மாவுடன் இணைந்து மரணம் அற்றவராக ஆனார் என்பதே, அமரரானார் என்ற சொல்லில் தெளிவுபடுத்தப்படுகிறது.
ஒருவர், தான் பிறந்த குலத்தை என்றென்றும் செழிப்போடு வாழ வைக்க, இறந்த பிறகு பித்ரு குலத்தில் இணைகிறார். மகான்கள் சமாதியில் மலர்வளையம் வைத்து வணங்குவது, அவர்கள் இறந்த நாளில் அவர்கள் கல்லறையில் அமர்ந்து அவர்களை நினைவுகூர்தல், மற்ற அலுவல்களிலிருந்து விடுபட்டு அவர்களின் இறந்த நாளில் பூஜை- புனஸ்காரம், பஜனை, வழிபாடு ஆகியவற்றை நிகழ்த்துவது ஆகிய எல்லாமும் முன்னோர் ஆராதனையில் அடங்கும். பிறந்தநாளைவிட இறந்த நாள் கொண்டாட்டத்தில் அதிகம் அக்கறை செலுத்துவது உண்டு. கடவுள் மறுப்பாளர்களும்கூட தங்கள் தலைவனுக்குச் சிலை அமைத்துப் பெருமைப்படுத்துவது உண்டு. அந்தச் சிலையில் தங்களின் தலைவனைப் பார்த்து மகிழ்வார்கள்.
இறந்தவரை ஆராதிப்பது என்பது வேத காலத்திலிருந்து தொடர்ந்து வரும் நல்ல நடைமுறை. இறைவன், பித்ருக்களை முதலில் படைத்தார். அவர்களுக்கு திவ்ய பித்ருக்கள் என்று பெயர். அதன் பிறகு தேவர்கள், மனிதர்கள், மற்ற உயிரினங்கள் என படைப்பு தொடர்ந்தது என்ற தகவல் வேதத்தில் உண்டு. தேவர்களின் அண்ணன் திவ்ய பித்ருக்கள் என்று சொல்லலாம். மூன்று கடமைகளில் பித்ருக்களை ஆராதிப்பதும் ஒன்று என்கிறது வேதம் (யஞ்ஞேநதேவேப்ய: ப்ரஜயா பித்ருப்ய:). மறைந்த பிறகு தந்தையை ஆராதிக்க வேண்டும் என்றும் வேதம் சொல்கிறது. புத்திரனை ஈன்றெடுப்பது தந்தைக்கு ஆராதனை செய்வதற்கே என்கிறது தர்மசாஸ்திரம் (புன்னாம்னோ நரகாத்யஸ்மாத் திராயதெ பிதரம்சுத: தஸ்மாத் புத்ரஇதி).
முன்னோரை என்றென்றைக்கும் சிறப்பாக ஆராதிக்க, இறந்தவரை திவ்ய பித்ருக்களுடன் இணைத்துவிடுவோம். அப்போது அவர் தெய்வமாக மாறிவிடுவார். அவர்கள் அந்தக் குலத்துக்கு ஆராதனை தெய்வமாக உருவெடுத்துவிடுவார்.
சூரியனில் சந்திரன் ஒன்றியிருக்கும் அமா வாசையில் அந்த ஆராதனை சிறப்பு பெறும். வருடத்தில் இருக்கும் இரண்டு அயனங்களிலும் வரும் அமாவாசை ஆராதனைக்குச் சிறந்தது. ஆடியில் வரும் தக்ஷிணாயன அமாவாசை, தை மாதம் வரும் உத்தராயன அமாவாசை இரண்டும் முன்னோர் ஆராதனைக்கு சிறப்புப் பெற்றவை. ஆடி மற்றும் தை அமாவாசைகளில் தீர்த்தக் கரையில் ஒன்றுகூடி வழிபடுவது காலம் காலமாகத் தொடர்கிறது. இந்த நாட்களில் நீராடி, எள்ளும் தண்ணீரும் அளித்து வழிபட வேண்டும். எல்லோரும் வழிபடுவதற்கு ஏதுவாக, முன்னோர் ஆராதனை 'தண்ணீரை அள்ளி அளித்தாலே போதும்’ என்று எளிதாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டவனின் படைப்பான தண்ணீரும் எள்ளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும். முன்னோரை நினைத்து அவற்றை அளிக்கும் வேலை மட்டும்தான் நமக்கு. முன்னோர் ஆராதனை ஒருநாளும் விடுபட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் வருடத்தில் இரண்டு நாளாவது செயல்பட்டால் போதுமானது என்றும் சாஸ்திரம் சொல்லும்.
தக்ஷிணாயனம் பித்ருக்களுக்குச் சிறந்த வேளை. ஆகையால், ஆடி அமாவாசைக்குத் தனிச் சிறப்பு உண்டு. 'ஆஷாடம்’ என்ற சொல் ஆடியாக மருவியது.
அந்த நட்சத்திரத்தின் தேவதை நீர். நீரோடு எள்ளையும் கலந்து, முன்னோர் பெயரைச் சொல்லி வழிபட வேண்டும். அவர்களது பெயரைச் சொல்லி, முடிந்த அளவு கொடை வழங்க வேண்டும். உத்தராயனத்துக்கும் அது பொருந்தும். வருடம் முழுக்க அமாவாசை யில் ஆராதனை செய்ய முடியாவிட்டாலும், ஆடி மற்றும் தை மாதங்களில் அவசியம் தேவை.
மேற்சொன்ன விளக்கம் எல்லோருக்கும் ஏற்புடை யதாக இல்லை. இடுகாட்டில் புதையுண்ட உடலானது மண்ணோடு இணைந்துவிடும். சுடுகாட்டில் எரிக்கப் பட்டால் சாம்பலாக மாறிவிடும். இதைக் கண்ணுற்ற பிறகும் அவரை இருப்பவராக எப்படி நினைப்பது? உலகைவிட்டே மறைந்தவரை ஆராதனைக்கு உகந்த பொருளாக ஏற்க இயலாது. இறந்த பிறகு அவரது தொடர்பு அற்றுப்போவதால், சம்பந்தம் இல்லாதவரை ஆராதிப்பதில் எந்தப் பலனும் இல்லை.
தனக்குப் பிறந்த பெண் குழந்தையைப் பார்த்து, 'இறந்துபோன என் தாயாரை அப்படியே உரித்து வைத்திருக்கிறது எனது குழந்தை’ என்று சொல்வான் தகப்பன். அவன் மனத்தில் தன் பெண்ணிடம் தன்னுடைய தாயாரைப் பார்க்கிறான். அப்படியிருக்க, அவனுடைய மனம் எப்படி தாயாரை முன்னோராகப் பார்க்கும்? பிறப்பும் இறப்பும் எல்லா உயிரினங்களுக்கும் உண்டு. பிறப்பு வாழ்வின் ஆரம்பம்; இறப்பு முடிவு. முடிவுற்ற பிறகும் அவர் வாழ்கிறார், அவருக்கு ஆராதனை என்பதெல்லாம் இன்றைய சிந்தனைக்குப் பொருந்தாது.
கொள்ளி வைப்பதற்காக வாரிசை ஏற்கிறான்; ஆராதனைக்காக ஏற்பதில்லை. ஆராதனை என்பது எதிர்பார்ப்பை வைத்து எழுகிறது. மறைந்தவனிடம் எதை எதிர்பார்க்க இயலும்? சிறு வயதில் தாய்- தந்தையை இழந்தவர்களும் உண்டு. அவர்கள் பெற்றோரைப் பார்த்திருக்கவே மாட்டார்கள். அவர்களின் நினைவில் பெற்றோர் எப்படித் தோன்றுவார்கள்? குழந்தைகளை கவனிக்காமல் இருக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். அப்படியான பிள்ளைகளிடம் பெற்றோரை ஆராதிக்க வேண்டும் என்ற எண் ணமே முளைக்காது; பகைதான் தோன்றும்.
சம்பந்தமில்லாத ஒன்றைச் செயல்படுத்துவதில், 'கடமை’ என்று நிர்பந்திப்பது அழகல்ல. வாழ் வில் முன்னேற ஏராளமான காரியங்கள் தேங்கிக் கிடக்கின்றன. அதற்கு நேரம் இல்லாத இந்நாளில் தேவையில்லாத சுமையைச் சுமத்துவதுதான் முன்னோர் ஆராதனை.
- இப்படியான கருத்தும் எண்ணமும் கொண்டவர் களும் உண்டு. ஆனால், இவர்களின் இந்த விளக்கம் தெளிவான சிந்தனையில் எழவில்லை எனச் சொல்லும் இன்னொரு கோணமும் உண்டு.
தகப்பன் மறைந்த பிறகு, அவன் சொத்துக்குத் தனயன் உரிமை பெறுகிறான். தனயன் இல்லையெனில் பேரனுக்கு அந்த உரிமை கிடைக்கும். சம்பந்தமில்லாத ஒருவருக்கு உரிமை அளிக்கும் சட்டம் எங்கும் இல்லை. தகப்பனுக்கு அளிக்க வேண்டிய வெகுமதி, அவன் மறைந்த பிறகு தனயனுக்கு அளிக்கப்படுகிறது. தகப்பன் ஈட்டிய செல்வாக்கும் பெருமையும் அவன் இறந்த பிறகு வாரிசுக்குக் கிடைத்துவிடுகிறது. மாங்கொட்டையில் உடலெடுத்த மாமரம், அதே மாங்கொட்டையை உள்ளடக்கிய மாம்பழத்தில் முற்றுப்பெறுகிறது. அந்த மாம்பழமானது மரம் வழியாக தன்னைப் போன்ற மாம்பழத்தை உருவாக்குகிறது.
'எனது உடலுறுப்புகளிலும் இதயத்திலும் இருந்து நீ உருப்பெற்றவன். எனது ஆன்மா நீ. புத்திரன் என்ற பெயரில் தோன்றிய நான்தான் நீ’ என்று இருவரது தொடர்பை உறுதி செய்கிறது வேதம் (அங்காதங்காத் ஸம்பவதி ஹிருதயாத் அதிஜாயதெ ஆன்மாவைபுத்ரநாமாசி). மனைவிக்கு 'ஜாயா’ என்று பெயர் உண்டு. மனைவியிடத்தில் பீஜம் வாயிலாக தானே புத்திரனாகப் பிறப்பதால், அவளுக்கு ஜாயா என்று பெயர் என விளக்கம் அளிப்பார் வராஹமிஹிரர் (ஜாயாயா: தத்திஜாயாத்வம் யதஸ்யாம் ஜாயதெபுன:).
தகப்பனின் ஜீவாணுக்களில் உருப்பெற்றவன் தனயன். அந்த ஜீவாணுக்கள் ஆறு தலைமுறைகளில் படிப்படியாகக் குறைந்து 7-வது தலைமுறையில் முற்றுப் பெறும். அதுவரையிலும் தகப்பனின் தொடர்பு ஒட்டிக் கொண்டிருக்கும். இதை வைத்துத்தான் தீட்டு என்ற பெயரில் அவனது தொடர்பை ஊர்ஜிதமாக்கியது தர்மசாஸ்திரம். தகப்பனின் சர்க்கரை வியாதி தனயனிடமும் தென்படுகிறது. அவனது வெள்ளைப்பாண்டு அவன் வாரிசிடமும் தென்படுகிறது. பிணிகளுக்கே தொடர்பு இருக்கும்போது, தந்தைக்குத் தொடர்பு இல்லை என்பது தவறு.
முதுமையை அடைந்த தனயன் தன் தந்தையின் உருவத்தில் தென்படுவது உண்டு. உருவம், பிணி, ஜீவாணுக்கள், தீட்டு போன்றவற்றால் தொடர்பு தென்படுவதால், அவர்களுக்கு, அதாவது முன்னோருக்கு ஆற்றவேண்டிய கடமைகளில் இருந்து நழுவுவது, அவனது முன்னேற்றத்தைச் சீர்குலைக்கும். தந்தைக்குச் செய்யும் கடமைகள் அத்தனையும் தனது முன்னேற்றத்துக்கானதாக மாறிவிடும். தந்தையின் பூத உடலானது சாம்பலாக மாறினாலும், தனயன் மனத்தில் கட்டுமஸ்தான தந்தையின் உருவம் பதிந்து இருக்கும். மனத்தில் இடம்பெற்று சிரஞ்ஜீவியாக மாறிய தகப்பனை ஆராதிப்பது தகும். அவரில் குடிகொண்ட நல்ல எண்ணங்கள், பெருமைகள் அத்தனையும் தன்னிலும் தென்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஆராதனையில் ஈடுபடுவது சிறப்பாகும்.
நல்ல தனயன் அவன் குலத்தின் ஒளிவிளக்காக மாற வேண்டும் (சுபுத்ர: குலதீபக:). குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பாக மாறக்கூடாது. தந்தையின் மாண்புக்கும் பண்புக்கும் காரணமான, அவர் செயல்படுத்திய முன்னோர் ஆராதனையைத் தனயனும் கடைப்பிடிக்க வேண்டும். அது, அவனுக்கும் குலத்துக்கும் மேன்மை அளிக்கும். சங்கிலித் தொடர்போல வாரிசு பரம்பரைகள் கையாளும்போது, அத்தனைபேரும் பண்புடன் விளங்குகிறார்கள். தனயன் இறந்த பிறகும், அவனுடைய தகப்பன் ஜீவாணு வாயிலாக பேரனிடத்திலும் தென்படுவான். விடுபட முடியாத தொடர்பு, வாரிசுகளில் இருக்கும்.
தேவர்களும் ரிஷிகளும் இந்த அளவு தொடர்பு உடையவர்கள் அல்லர். உடலோடு ஒட்டிய தொடர்பு அவர்களில் இருக்காது. அந்த இருவரையும்விட முன்னோர் ஆராதனை சிறப்பு வாய்ந்தது. பீஷ்மர் பிரம்மசாரியாக இருந்தும், தன்னுடைய பித்ருக்களுக்கு ஆராதனையை நிகழ்த்தினார் என்கிறது பாரதம். அவரின் தந்தை 'பிண்டத்தைத் தந்துவிடு’ என்று சொன்னபோது, 'தரையில்தான் வைப்பேன். கையில் தருவதில் சாஸ்திரத்துக்கு உடன்படில்லை’ என்று சொல்லி, முன்னோர் ஆராதனையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கி யிருக்கிறார். 'பித்ருக்கள் ஆராதனையில் சுணக்க முறாதே. சுறுசுறுப்பாக இயங்கு’ என்று வேதம் கட்டளையிடும் (தேவ பித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதி தவ்யம்). எனவே, வேதம் சொன்னதை ஏற்கலாம். முன்னோர் ஆராதனையை மறக்கக்கூடாது.
தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...
தந்தையின் ஜீவாணுக்களில் உருப்பெற்று விளங்குகிறான் தனயன். இவன் தோற்றத்துக்கு அவன் காரணம். தனக்கு உடலையும், அது வழி வாழ்வையும் அளித்தவருக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும். அதுதான் பண்பு, அறம். அதை விட்டவன் அறத்தைத் துறந்தவன் ஆவான். அவனுக்குப் பெருமை சேர்ப்பது முன்னோர் ஆராதனை.
Comments
Post a Comment