விக்கிரக ஆராதனை வேண்டும். விக்கிரகம் என்றால் உருவம். அருவமான கடவுளை உருவத்தில் பார்க்க வேண்டும். உடலில் உள்ள ஆன்மா கண்ணுக்குப் புலப்படாது. உடல், உள்ளம் ஆகியவற்றின் செயல்பாட்டை வைத்து உள்ளே ஆன்மா இருப்பதை உணர்வோம். உலகம் என்ற உடலுக்குள் கடவுள் என்கிற ஆன்மா உறைந்திருக்கிறார். உலகம் இயங்குவதைப் பார்த்து, அதன் இயக்குநரை உணர்வோம். பாலில் நெய் பரவியிருப்பது போல் எங்கும் பரவி இருக்கும் சக்தியே கடவுள். ஒரு துளி பாலிலும் நெய்யின் அம்சம் இருக்கும். இடைவெளி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கேல்லாம் நிறைந்திருப்பவர் இறைவன். அவர், பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பார். இப்படியும் சொல்லலாம்... அவர்தான் பிரபஞ்ச வடிவில் தோற்றமளிக்கிறார். இந்த பிரபஞ்சத்தில், ஓர் ஊசி குத்தும் இடம்கூட அவர் இல்லாமல் இல்லை. கடவுளுக்குப் பணிவிடை செய்து மகிழ, நமது விருப்பத்தைப் பெற அவருக்கு உருவம் வேண்டும்.
அவர் விக்கிரகத்திலும் இருக்கிறார்; நம் மனத்திலும் இருக்கிறார். மனத்தில் இருப்பவரை விக்கிரகத்தில் இருத்துகிறோம். கணக்கு பயிலும் குழந்தை, தன்னுடைய கை விரல்களை வைத்துக்கொண்டு பயிலும். 9 என்ற எண்ணிக்கை கணக்கின் எல்லை. அதை, பத்து விரல்களை வைத்துக்கொண்டு பயிலும். அதன் பிறகு சிலேட்டு, எழுதுகோலைப் பயன்படுத்தும். பின்னர் கரும்பலகையைப் பயன்படுத்தும். பயிற்சி வளர வளர, மனத்திலேயே கணக்குப் போட்டு விடை கண்டுவிடும். விடைதான் நமது இலக்கு. விடை கிடைத்துவிட்டால், கணக்கை மறந்துவிடலாம். ஆண்டனை உணர்ந்தால், விக்கிரகத்தை மறந்துவிடலாம்.
மண்ணில் உருவாக்கிய பொம்மையில் ஈயம், பித்தளை ஆகியவற்றை உருக்கித் திரவமாக்கி செலுத்திவிடுவான். திரவம் கட்டியானதும் வெண்கல பொம்மை உருவாகும். அப்போது மண் பொம்மையை அகற்றிவிடுவான். அறுவடையான பிறகு, நெல்மணிகளை ஏற்று, வைக்கோலைத் துறந்துவிடுவர். படித்து மனதில் பதியவைத்த பிறகு, புத்தகத்தை மறந்துவிடுவர். சாரம் அமைத்துச் சுவர் எழுப்புவார்கள். கட்டட வேலை முடிந்ததும் சாரத்தை அகற்றிவிடுவார்கள். இங்கெல்லாம் ஓர் இலக்கை எட்ட மற்றொரு பொருளைத் துணையாக ஏற்பது உண்டு. இலக்கை எட்டியதும் அந்தப் பொருள் தேவையற்றுப் போவது உண்டு. பொய்யான வழியில் பயணித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பார் பர்த்ருஹரி (அஸத்யே வர்த்மினிஸ்தித்வா...).
புஷ்பத்தை அள்ளியெடுத்து, நமது பெருமூச்சு புஷ்பத்தில் படும்போது, மனத்தில் இருக்கும் இறைவன் மூச்சு வாயிலாக புஷ்பத்தில் சேர்ந்ததாக நினைத்து விக்கிரகத்தில் சேர்க்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு, அவரது புஷ்ப பிரசாதத்தை முகர்ந்து பார்க்க வேண்டும். புஷ்பத்தில் இணைந்த கடவுள், நாம் முகர்ந்து பார்க்கும்போது உடலின் உள்ளே சென்று நம் மனத்தில் ஒதுங்கி விடுவார் என்கிறது பூஜாவிதானம். 'எங்கிருந்து வந்தாரோ அங்கேயே மீண்டும் குடியிருத்துகிறேன்’ (யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி) என்று இறைவனை மனத்தில் குடியிருத்துவது உண்டு. இப்போது, மனத்தில் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் நிலைத்திருக்கும். ஒவ்வொரு நாளும் கடவுளை வணங்க, இந்த பூஜா விதானம் பயன்படும்.
ஒவ்வொரு நாளும், மனதில் இருக்கும் கடவுளை இறக்கி வைத்து அவரை வழிபட, ஓர் உருவம் வேண்டும். அதுதான் விக்கிரகம்.
உருவம் இல்லாத நிலையில் 16 பணிவிடைகள் செய்ய இயலாது. ஆகவே, ஸ்தூலமான விக்கிரகத்தில் சூட்சுமமான கடவுளை இருத்தி உபசாரம் செய்கிறோம். நம்மைப் போன்று பசி, தாகம் போன்றவை கடவுளுக்கு இல்லை என்பதால், நிவேதனத்தை அவரது பார்வைக்கு வைத்துவிட்டுத் திரும்பப் பெறுகிறோம். சூட்சும வடிவில் இணைந்திருக்கும் கடவுளின் ஸ்தூல வடிவத்துக்கு ஷோடசோபசாரம் செய்வோம். வெறும் சிலைக்கு உபசாரம் இருக்காது. நாம் செய்யும் உபசாரம், சிலையில் ஒளிந்திருக்கும் கடவுளுக்கு. உபசாரத்துக்காக விக்கிரகம் வேண்டும்.
மந்திர ஒலியில் வீரியம் பெற்ற கும்ப ஜலத்தை விக்கிரகத்துக்கு அபிஷேகம் செய்யும்போது, மந்திர ஒலியில் இருக்கும் ஒளி வடிவான கடவுள், விக்கிரகத்தில் ஊடுருவிவிடுவார். நமது மந்திர ஒலி ஆகாசத்தைத் தொடுமுன், ஒளி விக்கிரகத்தைத் தொட்டு விடும். இடியோசை காதை எட்டுமுன், ஒளி கண்களைச் சந்தித்து விடும். ஒளியோடு இணைந்த ஒலி வேதம். அது, புலன்களுக்கும் சிந்தனைக்கும் எட்டாததை வெளியிடும். விக்கிரகத்தில் ஒளி இணைந்திருப்பதை மனம் உறுதி செய்ய வேண்டும். அதற்குச் சான்றைத் தேடும் முயற்சி வீண். நமது சிற்றறிவுக்கு இலக்காகாதது தத்துவம். சந்தேகத்துக்கு இடமில்லாத முடிவை வேத ஒலி வெளியிடும். அதை, மனம் அப்படியே ஏற்றுக்கொண்டால் பயன் உண்டு. அந்த ஒளிக்கடவுளின் பூஜைதான் விக்கிரகத்தில் அரங்கேறுகிறது.
அடிக்கடி பூஜையில் ஈடுபட்டு பழக்கம் வரும்போது, நம் மனத்தில் கடவுள் நிரந்தரமாகக் குடியேறிவிடுவார். தியானம் வழியாக அவரை உபாஸிக்கும் அளவுக்கு உயர்ந்துவிடுவோம். உபாசனையால் அவர் நம் மனத்தில் இடம்பிடிக்க, உலகை மறந்து அவர் நினைவில் லயிக்கும்போது, அந்த நிலை கடவுளை உணரவைத்துவிடும். வேதம், புராணம், இதிகாசங்கள் அத்தனையும் விக்கிரகத்தின் உருவங்களைப் பரிந்துரைக்கும். புராணத்தில், கடவுளின் உருவங்களை விளக்கும் பகுதிகள் நிரம்ப இருப்பதால், கடவுளை வழிபட விக்கிரகம் நிச்சயம் வேண்டும்.
மேற்சொன்ன விளக்கம் திருப்தியளிக்கவில்லை. சப்பைக்கட்டு கட்டுவது போன்று தோற்றம் அளிக்கிறது!
கடவுளுக்கு உருவம் இல்லை என்றால், விக்கிரகம் எதற்கு? இயற்கையின் படைப்பைக் கண்ணால் பார்க்கிறோம். கடவுள் இருந்தால், அவரையும் கண்ணால் பார்க்க இயலும். அவர் இல்லை. எனவே, கண்ணுக்குப் புலப்படவில்லை. கண்ணுக்குப் புலப்படாததால் அவர் இல்லை என்று சார்வாகர் சொல்வார்கள்.
பிரபஞ்சத்தின் இயக்கத்துக்காக ஒரு கடவுள் தேவை இல்லை. இயற்கை தானாகவே இயங்கும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியன மாறுபட்ட நிறத்தில் தென்படும் பொருட்கள். இந்த மூன்றின் சேர்க்கையில் சிவப்பு நிறம் உதய மாகிறது. சிவப்பு நிறத்தைத் தோற்றுவிக்கக் கடவுள் வேண்டாம். பொருட்களின் தகுதியே அதைத் தோற்றுவிக்கும். உடல்தான் ஆன்மா. உடல் அழியும்போது ஆன்மாவும் மறைந்துவிடும். உலகவியல் சுகம்தான் பேரின்பம். அதை எட்டுவதுதான் பிறவிப் பயன். கடவுளே இல்லை எனும்போது, அவருக்கு பூஜை எதற்கு? அதை நடைமுறைப்படுத்த விக்கிரகம் எதற்கு?! இல்லாத ஒன்றை இருப்பதாக நினைப்பது பாசாங்கு. பிறந்தோம், இயற்கை வளங்களைச் சுவைத் தோம், மறைந்தோம் என்பதுதான் உண்மை.
கண்ணுக்குப் புலப்படவில்லை என்பதால், கடவுள் இல்லை எனும்படியான இந்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை.
கண்ணுக்குப் புலப்படாததை, 'இல்லை’ என்று சொல்ல இயலாது. உள்ளதை உள்ளபடி பார்ப்பதற்குக் கண்களுக்குத் திறமை போதாது. கண்களானது எல்லாக் காட்சிகளையும் காட்டித் தரும். ஆனால், அந்தக் கண்கள் நம் கண்களைப் பார்க்காது. அதன் ஸ்தூல வடிவத்தைப் பார்க்குமே தவிர, அதன் சூட்சும வடிவத்தை அது பார்க்காது. பார்க்க இயலவில்லை என்பதால், சூட்சும வடிவம் இல்லை என்றாகுமா?
பார்வை இல்லாத ஒருவனுக்கு கண்ணின் ஸ்தூல வடிவம் நன்றாக இருக்கும்; சூட்சுமவடிவம் இருக்காது. அதுதான் பார்வைக்குப் பயன்படுகிறது. அதற்குத்தான் 'கண்’ என்று பெயர். சூட்சும வடிவைப் பார்க்க இயலாத கண்ணுக்குக் கடவுளைப் பார்க்க இயலாது. கண்களை மட்டுமா? எல்லா அறிவுப் புலன்களையும் பார்க்க முடியாது. அதற்காக அவையெல்லாம் இல்லை என்றாகிவிடுமா?
விண்வெளியில் சந்திரன் ஓர் அப்பளம் அளவு தென்படுவான். ஆனால், அதன் உருவம் மிகப்பெரியது. அந்தப் பெரிய வடிவம் நம் கண்ணுக்குப் புலப்படவில்லை என்பதால், சந்திரன் சிறியது என்று சொல்ல இயலாது. குளத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. ஆகாயத்தின் உருவம் அதில் தென்படுகிறது. அந்த வேளையில் அந்த நீர்நிலை ஆழமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் காலை வைத்தால், கணுக்கால் அளவே தண்ணீர் இருக்கும்! இங்கே... கண்ணுக்கு ஆழமாகத் தோன்றுவது உண்மை இல்லை. நம் கண்களானது கானல்நீரை நிஜ நீராகப் பார்க்கும். கிளிஞ்சலை வெள்ளியாக எண்ணும். உள்ளதை உள்ளபடி பார்க்க இயலாத கண்களை எப்படி நம்புவது?
கடவுளைக் கண்ணால் பார்க்க இயலாது. அவற்றுக்கு அந்தத் திறமை இல்லை. அப்படியான கண்களுக்குப் புலப்படாததால் 'கடவுள் இல்லை’ என்பது எப்படிப் பொருந்தும்? 'புலன்களுக்கும் சிந்தனைக்கும் எட்டாதவர் கடவுள்; மனம் உணரும்’ என்கிறது வேதம். கடவுளை மறுப்பது அறியாமை. அவர் ஆராய்ச்சிகளுக்கு எட்டாதவர். பகுத்தறிவும் அவரை அறிந்துகொள்ளாது.
புழுக்கத்தில் ஈசல் வெளிவரும். அதற்கு உயிரூட்டுவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் சைதன்யம். கருவில் இருக்கும் குழந்தையிடம் சைதன்யம் நுழைகிறது. தாம்பூலத்தில் சிவப்பு நிறம் உதயமாவது, அப்பொருட்களில் ஊடுருவிய பரம்பொருளின் செயல்பாடு. 'பொருட்களில் தென்படும் சிறப்பம்சம் எனது பங்கு’ என்று சொல்வான் கண்ணன் (யத்யத்விபூதிமத்ஸத்வம்...).
இயற்கையில் சிந்தனைக்கு எட்டாத விசித்திரத்தை தோற்றுவித்தது கடவுள். இயற்கை, அதாவது பஞ்ச பூதங்களின் கலவை என்பது ஜடம். அதைச் செயல்பட வைக்கும் சைதன்யம் கடவுள். ஆன்மா வடிவில் ஊடுருவிய கடவுள்தான், ஒருவனை இயங்க வைக்கிறார் என்ற உண்மையை அறியாதவர்களே, வெளிப் பிரபஞ்சத்தில் தன் கண்களால் தேடிப் பார்ப்பார்கள். கண்களுக்குப் பார்க்கும் சக்தியை அளித்தது சைதன்யம் என்பதை அறியாதவர்கள் மாற்றுக் கருத்தை வெளியிடுவது இயல்பு.
ஆணும் பெண்ணும் இணைந்து உருவாக்கிய உடலை, தன்னுடைய சைதன்யத்தால் இயக்குபவர் கடவுள். அந்த சைதன்யம் தவிர, மற்றவை அழிவைச் சந்திக்கும். சைதன்யம் வெளியேறிய உடலை எரிக்கிறோம். இயற்கை அல்லது பகுத்தறிவால் திரும்பவும் உயிரூட்ட இயலாது. உடல் உருப்படிகளை மற்றுமொரு உடலில் பொருத்தலாம். அதை இயங்க வைக்கும் ஆன்மாவை, கடவுள் சைதன்யத்தை அப்படி இணைக்க இயலாது. அது, கடவுளின் பங்கு. மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது.
வீட்டில் தாத்தாவும் பேரனும் நெருங்கிப் பழகி வந்தனர். ஒருநாள், தாத்தாவின் உயிர் பிரிந்துவிட்டது. பள்ளிக்கூடத்தில் இருந்து பேரன் வீட்டுக்குத் திரும்பியதும் அவனின் தந்தை, 'தாத்தா தாத்தா என்று சுற்றிச் சுற்றி வருவாயே! அந்தத் தாத்தா போய்விட்டார்’ என்று கதறி அழுதார். தாத்தாவின் உடலைப் பார்த்த பேரனோ, 'அதோ, தாத்தா படுத்திருக்கிறாரே?’ என்றான். அவன் தந்தையோ, 'அது பூதவுடல். தாத்தா இறந்துவிட்டார்’ என்று சொன்னார். கண்ணுக்குப் புலப்படாத ஆத்மா- சைதன்யம் வெளியேறியிருக்கிறது. அதையே 'தாத்தா’ என்கிறார் தந்தை. ஆன்மா வேறு, உடல் வேறு. ஆன்மா சைதன்யம், உடல் ஜடம் என்ற உண்மையை அவரையும் அறியாமல் விளக்கிவிட்டார்.
பெரிய மனிதர் ஒருவர் உயிருக்குப் போராடு கிறார். அப்போது அவர் குறித்துக் கவலையோடு விசாரிப்பான். உயிர் பிரிந்த தகவல் எட்டியதும், 'பாடி (பூதவுடல்) எப்ப வரும்?’ என்று கேட்பான். இங்கும் உடல் வேறு, ஆன்மா வேறு என்று சொல்லாமல் சொல்வான். 'சைதன்யம் ஆன்மா; உடல் ஜடம்’ என்ற விளக்கமும் அதில் அடங்கியிருக்கும். அவன் உள்மனம் கடவுளை நம்புகிறது. தெரிந்துகொண்டும் இருக்கிறான். ஆனால், உதட்டளவில் எதிர்ப்பை வெளியிடுகிறான்.
தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்ப இயலாது. வாதத்துக்கு அவனை அங்கீகரிப்பது வீண் வேலை. அப்பாவி மக்கள் கடவுளைத் தெரிந்துகொள்ள, வழிபட எளிய வழி விக்கிரக ஆராதனை. அதனால் பிறப்பின் பயனை எட்டிவிடுவார்கள்.
தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...
நம் உடலில் 9 ஓட்டைகள் உண்டு. அவற்றுக்குக் கதவுகள் இல்லை. உள்ளே இருக்கும் உயிரானது தன்னுடைய விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். ஆனால், அது வெளியேறாமல் இருப்பதுதான் ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தை நிகழ்த்துபவர் கடவுள். வெளியேறாமல் தடுப்பதும், வெளியேற வைப்பதும் அவர்தான். ஆண்- பெண் இணைப்பில் உருவான மனிதனின் சிந்தனைக்கு, அதை அறிந்துகொள்ள மட்டுமே இயலும். அந்தத் திறமையை தன்னில் வரவழைத்துக்கொள்ள இயலாது.
வாழ்க்கையை அளிப்பதும் அழிப்பதும் கடவுளின் செயல். 'நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கிறது’ என்ற சொல் வழக்கு உண்டு. அதற்கு, நமக்கு எட்டாத விஷயங்களை அவர் வெளியிடுகிறார் என்று பொருள். இந்த மாறுபாட்டை விளக்கும் தகவல்களை ஏற்காதவர்கள் சிந்தனை வளம் குன்றியவர்களே! அவர்களை என்றும் திருப்திப்படுத்த இயலாது.
ஒருவனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் வலுக்கட்டாயமாக விக்கிரக ஆராதனையில் ஈடுபட வைத்துப் பழக்கப்படுத்தினால், கடவுள் வழிபாட்டை இயல்பாக ஏற்பான்.
Comments
Post a Comment