எல்லை கடந்த பக்தி!

மொழி, மதம் என்ற பேதம் கடந்தது பக்தி. தமிழ்நாட்டின் பத்திமைச் செழிப்பில் மகிழ்ந்து பூரித்து இங்குள்ள கோயில்களுக்குப் பொன்னையும் பொருளையும் பல்வேறு அறக்கட்டளைகளுக்காக வாரி வழங்கியுள்ளவர் பலர். விரல் விட்டு எண்ணத்தக்க அத்தகு பெரியாருள் ஒருவர் புழலயன்.

கருநாடகத்தைச் சேர்ந்த கங்கபாடியிலுள்ள (தற்போதைய மைசூர்) ‘கிறைகொட்டுள்’ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். வணிக நோக்கில் தமிழ்நாடு வந்தவர், ‘தஞ்சாவூர் மடிகை மாணிக்க வாணியன் கருநாடகப் புழலய செட்டி’ என்றே, தம்மை அழைத்துக்கொள்ளும் அளவு இங்கேயே வயப்பட்டுப் போனார்.

இவர், காவிரியின் கரையிலிருந்த உறையூர்க் கூற்றத்து அந்தணர் குடியிருப்பான ஈசானமங்கலத்துக்கு ஒருமுறை வந்திருந்தார். சலசலத்து ஓடும் காவிரியின் நீர்ப்பெருக்கும் செழிப்பான வயல்களுமாக அமைந்திருந்த திருச்செந்துறை அவர் உள்ளத்தை ஈர்த்தது. அவ்வூரில் ஏதேனும் செய்ய வேண்டுமென அவர் உள்ளுணர்வு உணர்த்தியது.

அதனால், ஊர்ப் பெரியவர்களிடம், ‘இவ்வூரில் சந்ததியாயிருக்க ஒரு தர்மம் செய்ய எண்ணுகிறேன். என்ன செய்யலாம்’ என்று விண்ணப்பம் செய்தார்!

ஈசானமங்கலத்து ஆட்சிக்குழு கூடியது. புழலயரின் எண்ணைத்தைப் பகிர்ந்துகொண்ட சபை உறுப்பினர்கள், ‘இவ்வூரின் மேற்குப் பகுதியில் விஷ்ணு பெருமானுக்கு உங்கள் பெயரால் புழலய விண்ணகரம் அமைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர். அதன்படியே, முதலாம் ஆதித்த சோழரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டின்போது, (கி.பி.-883ல்) தமக்கு ஊரவை தந்த இடத்தில் கல்லால் திருக்கோயில் அமைத்தார் புழலயன்.

விஷ்ணு பெருமானின் திருமேனியை நிறைவான அழகுடன் உருவாக்கிக் கோயிலில் இருத்தினார். விடியலிலிருந்து அந்திவரை ஏழு நாட்கள் விஷ்ணுயாகம் செய்யப்பட்டது. கோயிலை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு, செந்துறைப் பருடையார் நானூற்றொருவரிடமும் வைணவப் பெருமக்களிடமும் ஒப்பளிக்கப்பட்டது.

இந்தத் திருக்கோயில் நடைமுறைகள் செவ்வனே நடப்பதற்காக முதலாம் ஆதித்தரின் 20ஆம் ஆட்சியாண்டின்போது ஒருமுறையும், 28ஆம் ஆட்சியாண்டின்போது ஒரு முறையுமாக புழலயச் செட்டி நிலத் துண்டுகளை விலைக்குப் பெற்றுக் கோயிலுக்குக் கொடையளித்தார். இரண்டு நில விற்பனை ஆவணங்களிலும் நிலம் விற்றுத் தந்தவர்களாய்க் கோயிலாட்சியரான பருடையாரே கையெழுத்திட்டுள்ளனர். முதல் ஆவணம், ‘இவ்வூர்த் திருமேற்றளியான ஸ்ரீகோயிலைப் புழலய விண்ணகர் என்னும் பேரால் கற்றளி எடுப்பித்து, தேவரை பிரதிஷ்டை செய்வித்த புழலய செட்டி’ என்று, கோயிலெடுத்தவரை போற்றித் தொடங்குகிறது.

மற்றோர் ஆவணம் நண்பகல் போதில் எழுதப்பட்டது. காடன் சேந்தன், இளைய சேந்தன் மனைவி, ஆத்திரையன் நக்கன், நக்க நாராயணன், ஆதித்தன் கண்டன், கண்டன் விக்கிரமகேசரி ஆகியோரின் நிலத்துண்டுகள் எல்லைகளாய்ச் சூழ விளங்கிய நிலப்பகுதியைப் பருடையாரிடமிருந்து, ‘விடேல் விடுகு’ என்றழைக்கப்பட்ட நிறுத்தல் அளவையால் நிறுக்கப் பட்ட துளைகொண்ட செம்பொன் நாற்பதுக்குப் புழலயர் விலைக்குப் பெற்றார். அந்நிலத்துக்கான இறை, எச்சோறு உள்ளிட்ட பல்வகை வரியினங்களைச் செலுத்துவதற்காக இறை காவலாகப் புழலயரிடமிருந்து பருடையார் துளைச் செம்பொன் எழுபது பெற்றனர். ஆக, நூற்றுப்பத்துக் கழஞ்சுப் பொன்னுக்கு நில ஆவணம் எழுதப்பட்டது.

இரண்டுமே நிலவிலை ஆவணங்கள். இரண்டிடங்களிலும் நிலத்தை விற்றவர்கள் கோயிலாட்சியரான பருடையார். இரண்டு விற்பனைகளின்போதும் நிலவரிகளைச் செலுத்த, ‘இறை காவல்’ என்ற பெயரால், தொகையொன்று பருடையாரால் கொடையாளியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டுமே பருடையார், வைணவர் காப்பில் செயற்படுமாறு அமைந்தன. இவை ஒற்றுமை!

முதல் ஆவணத்தில் நிலத்தின் விலை; இறை காவலுக்குப் பெற்றுக் கொள்ளப்பட்ட தொகை; ஒன்றுபோல் ஐந்து கழஞ்சுப் பொன்னாக அமைந்தன. இரண்டாம் ஆவணத்தில், நிலத்தின் விலை நாற்பது கழஞ்சுப் பொன்; இறை காவலாகப் பெற்ற தொகையோ எழுபது கழஞ்சுப் பொன். இது நிலவிலையைப் போல ஒன்றே முக்கால் மடங்கு கூடுதல் தொகை! முதல் நிலம் புழலயச் செட்டியின் பெயரில் அவரால் விலைக்கு வாங்கப்பட்டது. இரண்டாவது ஆவண நிலமோ, இறைவன் பெயரில் வாங்கப் பட்டது. ‘புழலய விண்ணகர் எம்பெருமானுக்காக எம்மிடை விலை கொண்டு குடுத்த நிலம்’ என்பது ஆவணத்தின் முதற்பகுதி வரி. தொடர்ந்து, ‘விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம் எம்பெருமானுக்கு’ என்கிறது ஆவணம். இவை, இரண்டு ஆவணங்களுக்கும் உள்ள மாற்றங்கள்.

புழலயரால் கி.பி. 883ல் உருவாக்கப்பட்ட புழலய விண்ணகரம் முதலாம் இராஜாதிராஜ சோழரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுவரை (கி.பி.1030) வழிபாட்டில் இருந்தமைக்கு அம்மன்னர் காலக் கல்வெட்டுச் சான்றாகிறது. வைகானச ஆகமப்படி வழிபாடுகள் நடந்த இக்கோயிலில் அந்திப் போதில் திருவிளக்கொன்று ஏற்றுவதற்காகச் செந்துறையில் வாழ்ந்த வேளாளர் ஆதித்தன் உடைய பிள்ளை என்பார் கோயில் வைகானசரில் ஒருவரான திருவரங்கமுடையான் வேங்கடவனிடம் ஐந்து காசுகளைக் கொடையாகத் தந்தார். அதற்கான ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ள வேங்கடவன், ‘இவ்விரு சபையார் திருமுடி என் தலை மேலது’ என்று பணிந்து ஒப்பமிட்டுள்ளார்.


இந்த விண்ணகரம் நாளடைவில் நலியத் தொடங்கியது போலும்! அடையாளம் காட்டும் நான்கு கல்வெட்டுகளும் பொறிக்கப்பட்ட தாங்குதளப் பகுதி, இன்று திருசெந்துறைத் திருக்கோயிலின் தென்மேற்குப் பகுதியில் உள்ள விசுவநாதர் கோயிலுக்கு அடித்தளமாகியுள்ளது. அங்கிருந்த விஷ்ணு திருமேனி எங்கோ மறைந்துவிட்டது. விண்ணகரத் தாங்குதளத்தில் சிவபெருமான் கோயில் சிறியதொரு விமானமாய் அருமையான சோழச் சிற்பங்களுடன் இன்றும் காட்சி தருகிறது. எந்தப் பெருமகனோ புழலயரின் கல்வெட்டுகளைக் காப்பாற்றியிருக்கிறார். புழலயரின் திருப்பணியைக் காத்த அந்தத் திருமகனின் திருவடிகள் வரலாற்றின் தலை மேலன.

(தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 8; கல்வெட்டு எண்கள்: 633-636)

Comments