திருவடி தந்த திருப்பம்!


யாராவது உங்களிடம் “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால், “கடவுளின் கருணையால் நன்றாக இருக்கிறேன்” என்பதே உங்களது இயல்பான பதிலாக இருக்கும். இதே கேள்வியை இளைஞர் பங்கஜ் பண்டாரியிடம் கேட்டால், அவர் சொல்லும் இதே பதில் உண்மையில் அர்த்தமுள்ளதாகவே இருக்கும். ஆம்! பங்கஜ் ஈடுபட்டிருக்கும் தொழில் அப்படி.

நமது ஆலயங்களில் விமானங்கள், கொடிமரங்கள், கவசங்கள், கலசங்கள், பிரபை, தேர் ஆகியவை தகதகக்கும் தங்கமாக ஜொலிப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி ஜொலிக்க வைப்பதையே, தன் தொழிலாகக் கொண்டவர்தான் பங்கஜ். இவரது ‘ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ நிறுவனம், தமிழ்நாடு மற்றும் மாநிலத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான கோயில்களில், இந்த வகையில் தனது தொழில் திறமையைக் காட்டி வருகிறது.

ராஜஸ்தானை பூர்விகமாகக் கொண்டது இவரது குடும்பம். ஆனால், இன்று தமிழ்நாட்டின் உட்புறப் பகுதியில் உள்ள ஒரு சிறு கோயிலைப் பற்றிக் கேட்டாலும் தகவல்களைக் கொட்டுவார் பங்கஜ்.

குடும்பத் தொழிலான வட்டி வியாபாரத்தை புறக்கணித்து விட்டு, தங்க முலாம் பூசும் புதிய தொழிலுக்கு வந்ததெப்படி?

“பணம், நம்மை வேலை வாங்கும் வட்டித் தொழில் எனக்குப் பிடிக்கவில்லை. பூஜை அறைக்கதவு கைப்பிடிகளில், கடவுளின் உருவத்தை வடிவமைத்து புதுவிதமான டிசைனில் கைப்பிடிகள் தயாரிக்கும் தொழிலில்தான் முதலில் ஈடுபட்டேன். பின்பு, வீட்டில் உள்ள சிறு விக்ரகங்களை யாராவது கொடுத்தால், அதற்கு தங்க முலாம் பூசித் தந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்த வகையில் வாடிக்கையாளர்கள் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில்தான் அந்தத் திருப்பம் வந்தது.

முகப்பேரில், சந்தான சீனிவாசப் பெருமாள் கோயில் என்று இருக்கிறது. அதில் ஸ்வாமியின் திருவடிகளுக்கு, தங்கக் கவசம் போடுவதாக முடிவெடுத்து, என்னிடம் பணியைக் கொடுத்தார்கள். முதன்முதலில் பெருமாள் திருவடி செய்ய வாய்ப்பு கிடைத்ததில் ஏக சந்தோஷம். அதன் பிறகு பெரம்பூர் ஐயப்பன் கோயில் கொடிமரம், விமானத்துக்கு தங்கக் கவசம் போட்டுக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பணியை செய்யத் தொடங்குவதற்கு முன்பே, சபரிமலையிலிருந்து அழைப்பு வந்து விட்டது. மலையில் உள்ள மாளிகைப் புரத்தம்மன், நாகர் மற்றும் பிள்ளையார் சன்னிதிகளில் விமானத்துக்கு தங்க கவசம் போட்டுக் கொடுத்தேன். அதன் பிறகு நிறைய அய்யப்பன் மற்றும் சாய் பாபா கோயில்களில் இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் உபயோகிக்கும் தங்கத்தின் தரம் மற்றும் அளவு, சொன்னது சொன்னபடி இருப்பதால், நிறைய கோயில்களில் இருந்து ஆர்டர்கள் வருகின்றன.” என்கிறார் பங்கஜ்.

நாமக்கல்லில் உள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயருக்கு உடல் முழுவதும் கவசம் செய்து மாட்டியிருக்கிறார் பங்கஜ். கண்கொள்ளாக் காட்சி. ஆனால், வருடத்துக்கு இரண்டு நாட்கள் மட்டும்தான் முழு கவசம் ஆஞ்சநேயருக்கு சாத்துவார்களாம்.

கடவுளுக்கு கவசங்கள் தயாரிக்க அளவெடுப்பது எப்படி?

“கடவுள் நமது வடிவியல்(geome&try) கணக்குக்குள் அடங்கமாட்டார். இவ்வளவுதான் தங்கம் தேவைப்படும் என்று நாம் போடும் கணக்கில் சற்று வித்தியாசம் வரத்தான் செய்யும். விமானமோ, கொடி மரமோ, விக்ரகமோ எதுவாக இருந்தாலும், முதலில் மெழுகில் அச்சாக எடுத்துக் கொள்வார்கள். அந்த அச்சை வைத்து குறிப்பிட்டப் பகுதியில் தாமிரத் தகடாக செய்வார்கள். பிறகு இந்த தாமிரத் தகடு எங்களிடம் தங்க முலாம் பூசுவதற்கு கொடுக்கப்படும். 99 சதவிகிதம் நாங்கள் கணிக்கும் தங்கத்தின் அளவையே பயன்படுத்த வேண்டியிருக்கும்.”

தங்க முலாம் பூசுவதற்கு பங்கஜ் கடைப்பிடிப்பது மிக லேட்டஸ்ட் தொழில்நுட்பம். இதற்கு NTGD என்று சொல்கிறார்கள். இந்த வகை தொழில் நுட்பத்தை, லண்டனில் சென்று பயிற்சி பெற்று வந்திருக்கிறார். இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகையில், தங்கம் அதன் வழக்கமான தன்மையில் இருக்காது. பல ரசாயன மாற்றங்களுடன் தங்கம், நைஸாக அரைத்த உப்பு (gold salt) போன்று மாற்றப்படுகிறது. பின்னர், அந்த தங்கம் பலவித ரசாயன ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டு தங்க முலாமாகப் மாற்றம் பெறுகிறது.

“இந்த வகையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குக் கூட, தாங்கள் தங்கத்தை கையாள்கிறோம் என்ற நினைப்பு வராது. ஆனால், பழைய தங்க ரேக்கு (மெல்லிய தகடு) முறையில் கோயில் வளாகத்திலேயே தங்கக் கட்டிகளோடு ரசாயனங்களைப் பயன்படுத்தி, இயந்திரங்கள் இல்லாமல் செய்வார்கள். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். இந்த தங்க ரேக்கு முறையில் அதிக தங்கம், அதிக பணியாட்கள் என்று தேவைப்படுவது மட்டுமல்லாமல், காலப்போக்கில் பருவநிலை தாக்கம் காரணமாக தங்கம் பொலிவிழந்து போய்விடும். வேலை முடிய அதிக காலமும் தேவைப்படும். ஆனால், நாங்கள் பயன்படுத்தும் இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம் காரணமாக, தங்க முலாம் புதுபொலிவுடன் பல்லாண்டுகள் நீடித்திருக்கும். அதுமட்டுமல்லாமல், பயன்படுத்தப்பட்ட தங்கத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, 95 சதவிகிதம் திருப்பி எடுக்க முடியும்” என்கிறார் பங்கஜ்.

“நாங்கள் உபயோகப்படுத்திய தங்கத்தின் அளவை துல்லியமாக கணக்கிட்டு சான்று தர, மத்திய மின் ரசாயன ஆராய்ச்சிக் கழகம் (சிக்ரி) இசைந்திருக்கிறது. தவிர, தரத்தைக் குறித்து, நுகர்வோர்களை எங்கு வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கச் சொல்கிறோம். இதுவரை எந்த புகாரும் கிடையாது. எனவே, ஆர்டர்கள் பெருகுகின்றன” என்கிறார். தங்க முலாம் பூசும் தொழில் தவிர, சிறு விக்ரகங்கள், தீபங்கள் ஆகியவற்றையும் தயார் செய்கிறார் பங்கஜ்.


“நமது கோயில்களில் கோபுரங்களின் உச்சியில் கலசம், முன்புறம் கொடி மரம் போன்றவற்றை வைத்ததில் ஒரு இறை அர்த்தம் இருந்தாலும், மின்னல், இடி போன்ற இயற்கையின் தாக்குதல்களிலிருந்து ஊரைக் காப்பாற்றும் வகையில் தான் அவை அமைக்கப்பட்டன. அந்தக் கால சமூகம் கோயிலைக் கொண்டாடியது. கோயில்களும் சமூகத்தின் தேவைகளுக்கு உதவியாக நின்றன. இடையில் சில காலம் தொய்வு ஏற்பட்டிருந்த கோயில் திருப்பணிகள், இப்போது உத்வேகம் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் இது, பொற்காலம். இங்கு வேலை செய்யும் நாங்கள், கடவுளுக்கு ‘பயந்து’ வேலை செய்யவில்லை. அதே சமயம், உள்ளார்ந்த பக்தியோடுதான் எங்கள் ஒவ்வொரு பணியும் அமைகிறது” என்று முடித்தார் பங்கஜ்.



Comments