தட்சன் செய்த வேள்வி!


“பக்திக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய அம்சம் வைராக்கியம். அப்படிப்பட்ட வைராக்கியம் இல்லாததால்தான், தட்சன் பல பாவங்களுக்கு துணை போனான்.

தனது கடும் தவத்தால், வரங்கள் பெற்று ஆணவத்தோடு வாழ்ந்தான் தட்சன். இதைப் பார்த்த வியாழ பகவான், அவனுடைய செருக்கு அடங்க வேண்டும் என நினைத்து, வேதவல்லி (மறைக்கொடி) என்னும் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார். அவர்களுடைய வாழ்க்கை நன்றாக அமைந்தது. 1000 குழந்தைகள் அவர்களுக்கு பிறந்தன. ஆனாலும் தட்சனின் திமிர் அடங்கவில்லை. அவன், படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவுக்கு சவாலாக அமைந்தான்.

தன்னுடைய பிள்ளைகளை அழைத்து, “படைக்கும் தொழிலை இனி நீங்கள் தான் பார்க்கவேண்டும், சிறிது காலம் பிரம்மாவுக்கு ஓய்வு வேண்டும்.

நீங்கள் உங்களுடைய கடும் தவத்தால் பிரம்மாவிடம் இருந்து இவ்வரத்தை பெறலாம்” என்றான்.

அவர்களும் தந்தை சொன்னதுபோல், தவத்தை ஆரம்பித்தனர். இதைப்பார்த்த நாரதருக்கு பயம் வந்துவிட்டது. அவர்களின் தவத்தை திசைதிருப்ப எண்ணினார். “நீங்கள் கடவுளை சேரும் நிலைக்கான தவத்தை செய்யுங்கள். படைத்தல் என்பது பிரம்மரின் தொழில். உங்கள் தந்தை சொன்னதைக் கேட்டு பாவங்களை சேர்க்காதீர்கள்” என்று அறிவுறுத்தினார். அதன்படியே தவம் செய்து, அவர்கள் கடவுளை சேர்ந்தனர்.

இதைக் கேள்விப்பட்ட தட்சன், “உனக்கு, எந்த உலகிலும் நிலையான இடம் இல்லாமல், அங்கும் இங்குமாய் திரிவாய்” என்று நாரதருக்குச் சாபமிட்டான். அதனால்தான் நாரதர் ஒரு இடத்தில் தங்காமல் திரிந்துகொண்டு இருக்கிறார்.

தட்சனுக்கு மீண்டும் 23 பெண்கள் பிறக்கிறார்கள். அதில் 13 பெண்களை தர்மத்துக்கு திருமணம் செய்து வைக்கிறான். மற்ற 10 பெண்களை, 10 முனிவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.

அதன்பிறகு, 27 நட்சத்திர தேவதைகள் பிறக்கிறார்கள். இந்த 27 நட்சத்திர தேவதைகளை சந்திரனுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.

இந்தத் திருமணத்தில்தான் தட்சனின் ஆணவம் இன்னும் அதிகமாகிறது. சந்திரனுக்கு ரோஹினி, கார்த்திகை தேவதைகள் மீதுதான் அதிகம் காதல். அவர்களுடன் மட்டுமே இருப்பார்.

இது தெரிந்து மற்ற 25 பெண்களும் தட்சனிடத்தில் முறையிட்டார்கள். இது தெரிந்த தட்சன் மிகவும் கோபப்பட்டு, சந்திரனுக்கு “உன் அழகு அழியட்டும், நீ மறைந்து போவாய்” என சாபமிட்டான். சந்திரன், பிரம்மாவிடம் சென்று, தட்சன் சாபத்தைப் பற்றி கூறினார். பிரம்மா அவரை, சிவனிடம் சென்று வேண்டுமாறு அனுப்பி வைத்தார்.

சந்திரன் கயிலைக்குச் சென்று, சிவனைப் பார்த்து, தட்சன் சாபத்தைப் பற்றி விளக்கினார். சிவன் அதை கேட்டு, “உன் அழகு மீண்டும் கிடைக்கும். ஆனால், ஒருநாள் நீ உலகுக்கு தோன்றாமல், ஓய்வில் இருப்பாய். தேய்ந்து மீண்டும் 15 நாட்கள் கழித்து, முழு நிலவாய் வளர்வாய்,” எனக் கூறி சந்திரனை அனுப்பி வைத்தார்.

இதனால் தட்சன், சிவனிடம் சண்டையிடுகிறான். அச்சூழலில், சிவன் உமா தேவிக்கு வேதசாரத்தைப் பற்றி கூறுகிறார். “சக்தி என்பவள் வடிவம்; சிவம் என்பது ஜீவன்” என்கிறார் சிவன். உமா தேவி, “வடிவம் இல்லை என்றால், ஜீவன் எப்படி வரும்?” என்று சிவனை கேட்கும் போது, சிவன் “இதைப்பற்றி நீ தெரிந்து கொள்ள, பூமிக்கு போக வேண்டும்” என்றார். அம்பிகையும் சம்மதம் தெரிவித்து, பூமிக்கு அவதாரம் எடுக்கிறாள்.

காளிந்தி நதிக்கரையில் (இன்றைய யமுனை நதி), அழகான சங்கு நிறத்தில் ஒரு சிறு குழந்தையாக அவள் பிறந்தாள். தட்சனுக்கு அந்தக் குழந்தையை பார்த்ததும் அவ்வளவு ஆசை வந்துவிட்டது.

தட்சன்-வேதவல்லி, அந்தக் குழந்தையை வளர்த்தனர். தட்சனின் குழந்தை என்பதால், அந்த குழந்தைக்கு ‘தாட்சாயணி’ என பெயரிட்டனர்.

வேதவல்லிக்கு எல்லாக் குழந்தைகளைவிட, தாட்சாயணி மீது அதிக பாசம். அவளை மிகுந்த பாசத்துடன் வளர்த்தாள்.

சிவன் ஏழை பிரம்மாச்சாரி வேடமிட்டு, தாட்சாயணியை மணக்க பூமிக்கு வந்தார். அவருக்கு தன் மகளை திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகளை செய்தான் தட்சன். ஆனால், சிவன் முகூர்த்த நேரத்தில் மறைந்துவிட்டார். இதனால் தட்சன் பெரிதும் சினம் கொண்டு, சிவனை கடுஞ்சொற்களால் பேசினான். மேலும், படைகளை போருக்காக ஏற்பாடு செய்தான். அத்தருணத்தில் சிவன், தாட்சாயணியை தூக்கிக்கொண்டு கயிலை சென்றுவிட்டார். படைகளை கூட்டிக்கொண்டு, கயிலைக்குப் புறப்பட்டான் தட்சன். அங்கு நந்தி அவனைப் போகவிடாமல் தடுத்தார்.

இது தட்சனின் சினத்தை தணிக்காமல், இன்னும் கடுமையாக்கியது. அவன் அங்கிருந்து புறப்பட்டு, ‘சிவன் இனி என் தெய்வம் இல்லை. அவரை யாரும் எக்காரணத்துக்கும் வணங்குதல் கூடாது’ என்றெல்லாம் உத்தரவு போட்டான். மேலும், சிவகணங்களையும் எதிரியாகவே கருதினான். ‘தட்சனின் ஆணவம், அவனுக்கு மிகுந்த துன்பத்தைத் தரும்; மீண்டும் மீண்டும் பிறக்கின்ற சூழ்நிலையையும் ஏற்படுத்திவிடும்’ என்று வருந்தினாள் உமாதேவி. எனவே, தட்சனின் ஆணவத்தை அடக்கி, மோட்சத்தை கொடுக்கும்படி, சிவனிடம் கேட்கிறாள். சிவன் பார்வதியை, பூலோகத்தில் தட்சன் நடத்தும் யாகத்தில் பங்கெடுத்து வரும்படி அனுப்பி வைக்கிறார்.

தட்சன் யாகத்தில் அனைவரும் இருக்கலாயினர், சிவனை தவிர. பார்வதி இதைப் பார்த்து சினம் கொண்டு, தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கிறார். தட்சன் பார்வதியை அவமானப்படுத்துகிறான். அதனால், பார்வதி அவமானம் தாங்காமல், தன் சரீரத்தை யோகத்தால் துறக்கிறாள். அதை அறிந்த சிவன் பெருங்கோபம் அடைகிறார்.


வீரபத்ரரை தட்சனுடன் போர் புரிய அனுப்பி வைக்கிறார் சிவன். வீரபத்ரர் தட்சனின் தலையை வெட்டி கயிலைக்குத் திரும்புகிறார். தட்சனின் உடம்பு சிவனை தேடிச் சென்று, பாதங்களில் விழுந்து மன்னிப்பும், மோட்சமும் கேட்கிறது. சிவபூதங்கள் தட்சன் தலையை விழுங்கியதால், சிவன் ஆட்டின் தலையை வெட்டி தட்சனுக்கு வைக்கிறார். தட்சனுக்கு மோட்சம் கிடைக்கிறது.

தவம் சிறந்தது; வரம் சிறந்தது; ஞானம் சிறந்தது; பக்தி சிறந்தது; வேள்வி சிறந்தது... என்று சிறந்த அனைத்தும் ஒன்று சேர்ந்திருந்தது தட்சனிடம். ஆனால், அறவே இருக்கக்கூடாத ஆணவம் - திமிர் அதுவும் அதிகமாகவே சேர்ந்திருந்தது. அது அழிவைத் தரும் என்பதைத்தான் தட்ச வேள்வி நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

Comments