விஸ்வரூப ஆஞ்சநேயர்!

ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா- ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சுமார் 32 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது பரிட்டாலா என்ற சிற்றூர்.
இங்கு 135 அடி உயரத் திருமேனியாக அருள்பாலிக்கிறார் ஸ்ரீஹனுமன். ‘ஸ்ரீவியாச ஆசிரம வியாச பீட ஸ்ரீராமபாத க்ஷேத்திரம்’ எனப்படும் கோயிலில் காட்சி தரும் இவருக்கு, ‘திவ்விய சுந்தர அபய ஹனுமன்’ என்று பெயர். இவரது பாத உயரமே 6 அடி. இந்த ஆஞ்சநேயரைத் தரிசிக்க வசதியாக, ஆலயத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய அமைப்பு உள்ளது.
உட்புறத்தில் உள்ள ஆஞ்சநேயரின் அர்ச்சா விக்ரகத்துக்கு தினமும் அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
வெண்ணிறமான இந்த ஹனுமனின் சிலையை வடிவமைக்க, 14,000 மூட்டை சிமென்ட்; 150 டன் இரும்பு மற்றும் ராஜஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்ட மார்பிள் கற்கள் ஆகியவை பயன்படுத்தபட்டன. இந்த ஹனுமனின் எடை சுமார் 2,500 டன்.

தன்னுடைய தேவியான சீதையைத் தேட, இலங்கைக்கு அணைகட்டிப் போனான் ஸ்ரீராமன். ஆனால், ஸ்ரீராமனின் அணுக்கத் தொண்டனான ஹனுமனோ, கடலையே தாண்டினான். ராமன், தன்னை பரம்பொருள் என்று சொல்லி, விஸ்வரூபம் காட்டவில்லை. ஆனால், ராம பக்தன் என்று சொல்லப்படும் ஹனுமன், விஸ்வரூபம் எடுத்தான். ‘பரமன், தன் பக்தன் உள்ளத்து ஒடுக்கம்’ என்பார்கள். அந்த பக்தப் பிரபாவத்தை உணர்த்துவது போலவே, பரிட்டாலாவில் காட்சி தருகிறார் விஸ்வரூப ஆஞ்சநேயர்!
தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 20 அடிக்குள்ளேயே ஹனுமன் ஆலயம் அமைந்திருப்பதால், தினசரி திரளாக பக்தர்கள் வந்து தரிசனம் பெறுகின்றனர்.

Comments