இலக்கணம் காட்டிய இளமுருகன்!

பக்திக் குறியீடான காஞ்சி, ஓங்கி உலகளந்த பெருமாள் முதல் அன்னை காமாட்சி வரை அனைவரின் அருளும் பொங்கித் ததும்பும் நகரம். இந்த ஆலயங்களின் பெருமைக்குக் குறைவிலாத மற்றொரு ஆலயமும் அங்கு உண்டு. அது, குமரகோட்டம்.
அன்றொரு நாள். கற்பூர ஜோதியில் குமரகோட்டத்தின் குமரப் பெருமானின் திருமுகம் ஒளிர்ந்தது. ஆனால் தீபாரா தனையை நடத்திக் கொண்டிருந்த அர்ச்சகர் காளத்தியப்ப சிவாச்சாரியாரின் மனம் சுய பச்சாபத்தில் உருகிக்கொண்டிருந்தது.
அவர் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ‘முருகா, உன் கருவறைக்குள் தினமும் உனக்கு பூஜை செய்யும் பெரும் பேற்றினை எனக்கு அளித்திருக்கிறாய். இதைவிட வேறு என்ன பேறு வேண்டும்? என்றாலும் இந்த பாழாய்போன மனம் அடங்க மாட்டேன் என்கிறது. இந்த உலக மாந்தர்கள் அனைவருக்கும் உள்ள ஒரு விருப்பம் எனக்கும்தான் இருக்கிறது. திருமணமாகிப் பல வருடங்கள் கடந்தும் குழந்தைப்பேறு இல்லாமல் துயரத்தில் வாடுகிறேன். எனக்கொரு வாரிசு வேண்டும். வளர்ந்தபின் அவனும் உன் ஆலயத்தில் அர்ச்சகராக வேண்டும். இந்த வரத்தை எனக்கு அருளக்கூடாதா?‘
பக்தர்களுக்கு சோதனைகள் வரக்கூடும். ஆனால் அவை நிரந்தரமானவையாக இருந்துவிடாதே.
காளத்தியப்பரின் மனைவி கருத்தரித்தாள். உரிய காலத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. கச்சியப்பன் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர் பெற்றோர்.
கச்சியப்பன் வளர்ந்தான். தந்தைமீது மிகுந்த பாசம் கொண்டிருந்தான். அதன் காரணமாக பணி நேரத்திலும் அடிக்கடி அவரிடம் சென்றான். அதாவது ஆலயப் பிரவேசம் அடிக்கடி நிகழ்ந்தது. மெல்ல மெல்ல முருகன்பால் ஈர்க்கப்பட்டார். அவர் கற்ற வளமான கல்வியும், வேதாகம சாஸ்திரங்களும் அவரைப் பதப்படுத்தின. நற்குணங்கள் அவரிடம் குடியேறின.
முருகப்பெருமானிடம் கச்சியப்பர் கொண்ட பக்தி நாள்தோறும் வளர்ந்தது. அர்ச்சகராகப் பணிபுரியும்போது மட்டுமின்றி, விழித்திருக்கும் அனைத்து நேரங்களிலுமே குமரனை எண்ணி ஆனந்தப்பட்டார்.
‘நீ விழித்திருக்கும் நேரத்தில்தான் நான் உன் நினைவில் நடமாட வேண்டுமா?’ என்று கேட்பதுபோல் ஒருநாள் கச்சியப்பர் கனவில் குமரன் தோன்றினான். ‘என் சரித்திரத்தை தமிழ்க் காவியமாக்கு கச்சியப்பா’ என்றான்.
கண் விழித்த கச்சியப்பர் இந்த கனவினால் பெரும் ஆனந்தம் அடைந்தார். ஆனால், அந்த ஆனந்தம் சில நொடிகளுக்குதான் நிலைத்தது. ’கல்வியிலும் பக்தியிலும் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். ஆனால் பாடல் இயற்றும் வல்லமை எனக்குக் கிடையாதே. என்ன செய்வேன்?’ என்று கண்கலங்கினார். குமரனின் ஆணைகளை நிறைவேற்ற முடியாமல் போவதில் அவரது குற்ற உணர்ச்சி அதிகமானது. அன்றிரவு குமரகோட்டத்தில் தனிமையில் அமர்ந்திருந்தபோது, கலங்கிய அவர் கண்கள் குமரப்பெருமான் திருமுகத்தின் மீது பதிந்தன. அப்போது அந்த முகத்தில் ஒரு புன்னகை தோன்றியதாக அவருக்குப் பட்டது. ‘விடை இல்லாமலா ஒரு கேள்வியை எழுப்பியிருப்பேன்? உன்னால் முடியாததையா உன்னை செய்யச் சொல்வேன்?’ என்று அந்தப் புன்னகை உணர்த்தியது.
கச்சியப்பருக்கு ஞானம் பிறந்தது. நம்பிக்கை பொங்க ஓலையைக் கையில் எடுத்தார்.
‘திகடசக்கரச் செம்முகம் ஐந்துளான்’ என்ற வார்த்தைகள் குமரகோட்டக் கருவறையிலிருந்து வெளிப்பட்டன. வேகமாக இயங்கின கச்சியப்பரின் விரல்கள். கந்த புராணம் தொடங்கியது; தொடர்ந்தது; முடிவடைந்தது.
எந்தக் காவியத்துக்கும் அக்காலத்தில் ‘தேர்வு மையம்’ உண்டு. புலவர்களின் நடுவே காவியத்தை அரங்கேற்ற வேண்டும். அதில் தேர்வு பெற்ற பிறகுதான் அந்த நூல் அங்கீகரிக்கப்படும்; மக்களிடையே பரவும்.
கந்த புராணத்தை குமரகோட்டத்தில் அரங்கேற்ற நாள் குறிக்கப்பட்டது.
உரிய நாளில் புலவர்கள் தத்தம் இடங்களில் அமர்ந்தனர். கச்சியப்பர் கந்த புராணத்தைப் படிக்கத் தொடங்கினார்.
தொடக்கத்திலேயே வந்தது தடங்கல். “உங்கள் முதல் பாடல் ‘திகட சக்கர’ என்று தொடங்குகிறது. அதற்கான இலக்கண விதியையும் அதற்கான ஆதாரத்தையும் கூறுங்கள்” என்றார் ஒரு புலவர். கச்சியப்பர் திகைத்தார். கந்தனின் அருளால் அவர் கந்த புராணத்தை எழுதி விட்டார். எனினும் இலக்கண விதிகள் அவர் வசம் ஆகவில்லையே!
கேள்வி கேட்ட புலவரோ தன் உரிமையை விட்டுக்கொடுப்பதாக இல்லை. “கச்சியப்ப சிவாச்சாரியாரே, எழுதும் போதே இலக்கண அமைப்பும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள்தான் இருந்திருக்கும். அப்படி இருக்க இலக்கண விதி ஆதாரம் கேட்டால் எதற்காக மலங்க மலங்க விழிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
கச்சியப்பர் உண்மையான பின்னணியை வெளிப்படையாக விளக்கினார். “கந்த புராணத்தின் முதல் அடியை எனக்கு அருளியது சாட்சாத் குமரக் கடவுள்தான்.” இதை கூறியபோதே கச்சியப்பரின் உடலில் ரோமங்கள் குத்திட்டு நின்றன. அவர் குரலில் மகிழ்ச்சிப் பரவசம்; கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
இக்காலம் என்றால், இதை நம்பியிருப்பார்களோ என்னவோ?! கச்சியப்பர் கூறியதை சபையில் இருந்த புலவர்கள் நம்பினர். ஏற்கனவே “என்னைப் ‘பித்தா’ என்று தொடங்கி என்னைப் பாடு” என்று சுந்தரரை சிவபெருமான் பணிந்தது தெரிந்ததுதானே. தவிர கச்சியப்பரின் நாணயமும் பக்தியும் காஞ்சி நகரமே அறிந்தவை. எனவே, கச்சியப்பர் கூறியது தொடக்கத்தில் எதிர்பாராததாக இருந்தாலும், அதன் உண்மைத் தன்ப்மையை யாரும் சந்தேகிக்கவில்லை.
ஆனால், வினாவை வீசிய புலவர் நக்கீரர் பரம்பரையைச் சேர்ந்தவராக இருந்திருக்க வேண்டும். ‘முருகனின் மொழியாகவே இருந்தாலும், அதற்குரிய இலக்கணம் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒப்புக்கொள்ள முடியாது.’
கச்சியப்பரிடம் விளக்கம் இல்லை. எனவே, அன்று அரங்கேற்றம் நடைபெற வில்லை. பிறகு அனைவரும் வருத்தத்துடன் அங்கிருந்து சென்றுவிட, கச்சியப்பர் மட்டும் குமரகோட்டத்திலேயே தங்கினார். “கந்தா உன் ஆணைப்படி, உன் அருளால் உருவானதுதான் இந்த காவியம். நான் வெறும் கருவி மட்டுமே. இந்த நிலையில், இந்தக் காவிய அரங்கேற்றம் தடைபட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. தமிழ்க் கடவுள் எனப்படுபவன் நீ. நீ எடுத்துக் கொடுத்த சொற்தொகுப்பில் குற்றம் இருக்கிறது என்று பிறர் கூறலாமா? நிலையை நீதான் சரிசெய்ய வேண்டும்” என்று விம்மினார். அடுத்த நாள் குமர கோட்டத்தில் மீண்டும் புலவர்கள் கூடினார்கள். முதல்நாள் கேட்கப்பட்ட இலக்கண ஐயங்களுக்கு மறுநாள் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத விதி.
கச்சியப்பர் பார்வை வந்திருந்த அனைவர் முகங்களையும் வலம் வந்தது. முதல் நாள் வந்திருந்த புலவர்கள் அத்தனை பேரும் வந்திருந்தனர். அனைவர் முகங்களிலும், ‘எழுப்பப்பட்ட ஐயத்தை கச்சியப்பர் எப்படி தீர்த்து வைக்கப்போகிறார்’ என்பது குறித்த எதிர்பார்ப்பு. எனினும் கச்சியப்பர் மனத்தில் தவிப்பு உண்டாகவில்லை. ‘அவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன். இனி அவன்பாடு’ என்ற எண்ணம் சொல்லப்போனால் நம்பிக்கை.
அப்போது ஆலயத்தில் உருவாகியிருந்த சபைக்குள் ஓர் உருவம் நுழைந்தது. மாறாத இளமையும் வற்றாத ஞானமும் அவர் வதனத்தில் மிளிர்ந்தது. “இந்த புலவனுக்கும் உங்கள் திருச்சபையில் இடம் உண்டா?” என்று மிடுக்குடன் குரல்கொடுத்தார் நுழைந்தவர்.
‘யார் இந்தப் புலவர்? இதுவரை பார்த்ததில்லையே. வயதில் குறைந்தவராக இருந்தாலும், கல்விக்களை முகத்தில் சொட்டுகிறதே’ என்ற எண்ணம் அனைவர் மனதிலும் எழுந்தது. கச்சியப்பர் மட்டும் வந்தவரை உடனே இனம் கண்டுகொண்டார். அவர் தாமாக எழுந்துகொண்டார். அவர் கைகள் குவிந்தன. அவர் மனத்தில் உவகையும் நன்றியும் பெருக்கெடுத்தோடின.
“எந்தப் புலவருக்கும் இங்கு இடம் உண்டு” என்றபடி பிற புலவர்கள் புதிதாக நுழைந்தவருக்கு இருக்கை அளித்தனர்.
“காவிய அரங்கேற்றம் தொடங்கலாம். அதற்குமுன் நேற்று எழுப்பப்பட்ட இலக்கண சந்தேகத்துக்கு விடை பகர வேண்டும்” என்றார் ஒரு புலவர்.
“நான் இன்றுதான் வருகிறேன் என்பதால் உங்கள் சந்தேகத்தை சுருக்கமாக விளக்கமுடியுமா?” என்று கேட்டார் புதிய புலவர்.
“சுருக்கமாக எப்படி விளக்குவது? இரண்டும் நேரெதிரானவை அல்லவா?” என்றார் ஒருவர்.
“அதுதானே புலவர்களின் சாமர்த்தியம். மிக நீண்ட விளக்கத்தையும் ஒரே பாடலில் சுவைபடச் செதுக்குவதுதானே புலவரின் சிறப்பு?” என்றார் புதியவர்.
அட, இந்த இளம்புலவர் வாதுக்கும் தயாராக வந்திருக்கிறாரோ?
“கச்சியப்பர் தனது படைப்பின் தொடக்கமாக ‘திகட சக்கர’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கான இலக்கண விதிவேண்டும்” என்றார் ஒரு புலவர். உடனே மற்றொரு புலவர் எழுந்து, “முருகப்பெருமானே அடியெடுத்துக் கொடுத்தார்” என்கிறார் கச்சியப்பர். அதற்காக முருகனா வந்து விடை தருவார்? விளக்கம் அளிப்பது கச்சியப்பரின் கடமைதானே” என்று கூறினார் மற்றொரு புலவர்.
“இந்த சபையில் விளக்கங்களை யாரும் அளிக்கலாம் அல்லவா?” என்று புன்னகையுடன் கேட்டார் புதியவர்.
“அதிலென்ன சந்தேகம்? உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள்கூட விளக்கலாம்” என்று ஒரு புலவர் கூறியபோது, அதில் எள்ளல் வெளிப்பட்டது. “பழுத்த புலவர்களான தங்களுக்கே விளங்காத இலக்கணக் குறிப்பு இந்த பிஞ்சிடமா வெளிப்பட்டுவிடும்?!”
புதிய புலவர், “ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுள்ள ஒரு பாடலில் இடம்பெற்றுள்ள சொல்லுக்கு எதற்காக மீண்டும் இலக்கணம் கூறவேண்டும்?” என்றார். சபையில் இருந்த புலவர்கள் முகங்களில் வியப்பு படர்ந்தது. “நீங்கள் கூறும் ஆதாரம் என்ன?” என்று கேட்டனர்.
புதியவர், தான் கொண்டு வந்திருந்த நூலை வெளியே எடுத்துக்காட்டினார். அது வீரசோழியம் எனப்படும் நூல். அதை விரித்தார். ‘சக்தி படலம்’ என்ற தலைப்பில், பதினெட்டாம் செய்யுளில் திகடச்சக்கரம் எனப் புணருவதற்கு விதியிருப்பதை சுட்டிக்காட்டினார்.
புலவர்கள் பிரமித்தனர். “முருகனே அருளிய வாக்கியத்தில் குறை கண்டது நம் தவறுதான்” என்றனர். அவர்கள் முகங்களில் பூரண திருப்தி. அடுத்த கணம் புதியவர் மறைந்தார். பிறர் திடுக்கிட்டனர். பின்னர் உண்மையை உணர்ந்து பிரமித்தனர். கச்சியப்பரை நோக்கிக் கைதொழுதனர். அவரால் இதையெல்லாம் காணமுடியவில்லை. தன் கண்களை மூடியபடி, குமரனின் கருணையை நன்றிப் பெருக்கோடு ஏற்றுக்கொண்டிருந்தார் அவர்.
கந்தபுராண அரங்கேற்றம் இனிது நிறைவேறியது. இன்றும் காஞ்சியில் உள்ள குமரகோட்டத்தில், கந்தபுராண அரங்கேற்ற மண்டபம் அதற்கு சாட்சியாக விளங்குகிறது.
(பரவசம் தொடரும்)
வழிகாட்டிய வள்ளல்
குமரகோட்டம் குறித்த மற்றொரு சுவையான சம்பவமும் உண்டு. சண்முக கவசத்தை அருளியவர் பாம்பன் சுவாமிகள். அவர் ஆலய யாத்திரையில் ஈடுபட்டிருந்தார். காஞ்சி ஆலயங்களையும் தரிசித்த அவர், குமரகோட்டத்தை தரிசிக்கவில்லை. காரணம் வேறொன்றும் இல்லை. அந்த ஆலயம் அவர் கண்ணுக்கு தட்டுப்படவில்லை. கீரைப் பாத்திகளால் சூழப்பட்டு இருந்ததால் குமரக்கோட்டம் சாலையில் செல்லும் புதியவர்களுக்கு சட்டென புலப்படாமல் இருந்தது.

அப்போது ஒரு சிறுவன் பாம்பன் சுவாமிகளிடம் வந்தான். ‘காஞ்சிபுரத்தில் எல்லா ஆலயங்களையும் தரிசித்து விட்டீர்களா?‘ என்று கேட்டான். ஆம் என்பதுபோல் சுவாமிகள் தலையாட்ட “அதோ அந்த கீரைப் பாத்திகள் வாழியாக உள்ளே செல்லுங்கள். இல்லாவிட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள்” என்று கூறிவிட்டு மறைந்தான். திகைப்புடன் அந்த பாத்திகளைக் கடந்த பாம்பன் சுவாமிகளுக்கு ஆனந்த வியப்பு காத்திருந்தது. உள்ளே அமைந்திருந்தது குமரக் கோட்டம். வழிகாட்டியாக வந்தது வள்ளல் முருகன்தான் என்பதை அறிந்து கைதொழுதார் பாம்பன் சுவாமிகள்.

Comments