ராஜராஜனின் பேருள்ளம்!

தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் வரலாற்றுக் காலத் தனியர்களை மட்டுமல்லாமல் நிறுவனங்களையும் நம் கண் முன் நிறுத்துகின்றன. அந்த வகையில் குறிப்பிடத்தக்கது தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தில் உள்ள தளிச்சேரிக் கல்வெட்டு.

சோழப் பெருவேந்தர் முதலாம் இராஜராஜர் தஞ்சாவூரில் எழுப்பிய மாபெரும் கற்றளி இராஜராஜீசுவரம். இன்றளவும் உலகக் கட்டுமான அதிசயங்களுள் இது ஒன்று. அத்திருக்கோயில் சுற்று மாளிகையின் வட சுவரில், 55.78 மீ. நீளத்துக்கு மூன்று பிரிவுகளாக 73 வரிகளில் வெட்டப்பட்டிருக்கும் தளிச்சேரிக் கல்வெட்டு, அவர் கால, தமிழ்நாட்டின் ஆடற்கலை உறைவிடப் பள்ளிகளைப் பற்றிய பல பயனுள்ள தரவுகளைப் பகிர்ந்துகொள்கிறது.
‘தளிச்சேரி’ என்ற கூட்டுச் சொல்லில் உள்ள ‘தளி’- கோயிலையும் ‘சேரி’ - குடியிருப்பையும் சுட்டுகின்றன. இராஜ ராஜீசுவரத்துத் தளிச்சேரி, வடக்கில் ஒரு குடியிருப்பும் தெற்கில் ஒரு குடியிருப்பும் கொண்டிருந்தது. இவ்விரண்டுமே வட சிறகு, தென்சிறகு என இருபிரிவுகளைப் பெற்றிருந்தன. தெற்குத் தளிச்சேரி தன் இரு பிரிவுகளிலும் பிரிவுக்கு 92 வீடுகள் என 184 வீடுகளைக் கொள்ள, வடக்குத் தளிச்சேரி தென் சிறகில் 95 வீடுகளும் வடசிறகில் 96 வீடுகளும் கொண்டிருந்தது. இவை தவிர, கோயிலின் மற்றொரு திசையிலும் (? மேற்கு) 25 வீடுகளுடன் ஒரு குடியிருப்பு இருந்தது. இந்நானூறு வீடுகளிலும் சோழ மண்டலத் தளிச்சேரிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 400 ஆடற்பெண்கள் குடியமர்த்தப்பட்டனர்.
தளிச்சேரிப் பெண்டுகள் என்று அழைக்கப்பட்ட இவர்களின் பெயர்களில் 12, படிக்க முடியாத அளவுக்கு சிதைந்துள்ளன. ஏனைய 388 பெண்களின் பெயர்களை வகைப்படுத்தியபோது, அக்கால பெயரிடும் பாங்குகளை அறிய முடிகிறது. மிகச்சிறிய பெயர்கள் காமி, பூமி, பூதி, ஆலி, மாறி, பொன், உமை, திரு என இரண்டெழுத்துக்களில் அமைந்துள்ளன. மிக நீளமான பெயர்களாகப் பொற்கோயில் தில்லையழகி, இரவிகுலமாணிக்கம், நீறணிபவளக்குன்று ஆகியவற்றைச் சுட்டலாம். 40 விழுக்காட்டுப் பெண்கள் ஊர், கோயில், தெய்வம் அரச மரபுகள் சார்ந்த பெயர்களைக் கொண்டிருக்க, 60 விழுக்காட்டினர் பொதுவான பெயர்களைக் கொண்டிருந்தனர். பொதுப் பெயர்களில் எறி, குப்பை, தொட்டி, ஊதாரி, மூஞ்சி, பிட்டி, கல்லறை, பந்தல், பட்டம், நிச்சல், கண்டம், சண்டை, மண்டை, எச்சுமண்டை ஆகிய பெயர்கள் விநோதம்.
ஒரே பெயருடைய இருவர் ஓரிடத்தில் இருப்பின், அழைப்பதில் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க, ஒருவர் பெயருடன் ஏதேனும் அடை சேர்த்து அழைப்பது வழக்கம். அந்த வகையில் கிள்ளிக்குடியிலிருந்து வந்த சீருடையாள் என்னும் பெயர் கொண்ட இரண்டு பெண்களுள் ஒருவர் சிறிய சீருடையாள் என்றும், மற்றவர் பெரிய சீருடையாள் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். திருவடி என்னும் பெயருடைய இரண்டு பெண்களுள் ஒருவர் கருநிறத்தவராய் இருந்தமையால், அவரைக் கரிய திருவடி என்றழைத்தனர்.
இலவம், ஒருபனை, முருங்கை, வெண்ணாவல் என்னும் மரப்பெயர்கள்; இளங்கா என்னும் சோலைப் பெயர்; மன்றமுடையாள், மழலைச் சிலம்பு, எடுத்தபாதம், ஆடலழகி, சீருடைக்கழல், தில்லைக்கூத்தி, அம்பலக்கூத்தி, கூத்தாடி, ஆடலுடன் தொடர்புடைய பெயர்கள்; காமம் என்ற சொல்லோடு தொடர்புடைய காமி, காமக்கோடி, காமுத்திரி எனும் பெயரினர்; சோதிவிளக்கு, திகைச்சுடர் என்று ஒளியுடன் தொடர்புடைய பெயரினர்; சங்கம், அறிவாட்டி என்று அறிவுடன் தொடர்புடைய பெயர்கள்; எண்ணுப் பெயராய் ஆறாயிரம் என்று ஆச்சர்யமான பெயர்களைக் காண்கிறோம்.
வானலோகத்தாரை நினைவுபடுத்துமாறு விச்சாதிரி, ஆடற்கரணங்களில் வல்லவள் என்பதை உணர்த்துமாறு கரண விச்சாதிரி, பொன் என்ற சொல்லோடு தொடர்புடைய பெயர் கொண்ட 12 பெண்கள், வல்லி, சுந்தரி, மாணிக்கம், தேவி என்று முடியும் பெயர்களில் முறையே 3,5,8,14 பெண்கள் இருந்தனர். சாதி அல்லது குழுச் சார்ந்த பெயர்களாகச் சாத்தம், சங்கம், நகரத்தாள், எட்டி, செட்டி, குலமான் என்னும் பெயர்களைக் குறிப்பிடலாம். ஊர்ப்பெயர்களுள் திருவையாற்றுக்குப் பெருமை கிடைத்துள்ளது. அப்பெயரில் 9 பெண்கள் இருந்தனர்.
பொதுப் பெயர்களை அடுத்த நிலையில் அரசமரபுப் பெயர்களே பேரிடம் வகிக்கின்றன. இது நானூறில் ஏறத்தாழப் பத்தில் ஒரு பங்கு. அவற்றுள், சோழ மரபு சார்ந்த பெயர்கள் மூன்று மடங்குக்கும் மேலாக உள்ளன. தஞ்சாவூரில் சோழராட்சியைத் தொடங்கிய விஜயாலயர் பெயரும் தக்கோலப் போரில் உயிர்நீத்த இராஜாதித்தர் பெயரும், உத்தமசோழர் பெயரும் தவிர, முதலாம் இராஜேந்திரர் வரையிலான பிற சோழ வேந்தர்கள் அனைவர் பெயரும் இப்பெண்களால் கொள்ளப்பட்டுள்ளன.
சோழ அரசியர் பெயர்களுள் செம்பியன்மாதேவி, குந்தவை, ஒலோகமாதா, பஞ்சவன் மாதேவி, சோழமாதேவி, திருபுவனமாதேவி, காமக்கோடி என்னும் பெயர்களைச் சில பெண்கள் கொண்டிருந்தனர்.
இதுபோன்றே, தென்னவன்மாதேவி, மீனவன்மாதேவி, மானாபரணி எனும் பெயர்கள் பாண்டிய மரபு சுட்ட, சேர மங்கை, வில்லவன் மாதேவி எனும் பெயர்கள் சேரர் தொடர்பு காட்டுகின்றன. தவிர, கோயில்களைக் குறிக்கும் பெயர்களையும், சப்த மாதரில் சிலர் பெயரையும் சில பெண்கள் கொண்டிருந்தனர்.

சைவ மற்றும் வைணவத் தலங்களின் பெயரை, தம் பெயராகக் கொண்டவர் பலர். இவை தவிர, உத்தமதானி, கற்பகதானி, காரைக்கால், பட்டம், ஒக்கூர், திட்டைச்சேரி, விரையாச்சீலை எனும் ஊர்ப்பெயர்களையும் சிலர் கொண்டிருந்தனர். தளிச்சேரிப் பெண்டுகள் பெயர்களாகக் கொண்டிருந்த வைணவத் தலங்கள் அனைத்துமே மங்களாசாசனம் பெற்றவை. அவர்தம் பெயர்களாக அமைந்த பதினாறு சிவத்தலங்களுள் 15 பாடல் பெற்றவை. தளிச்சேரிப் பெண்டுகள் என்று சாதாரணமாக வைக்காமல், அவர்களையும் தம்முடைய பிரும்மாண்டத்தில் ராஜராஜீசுவரத்தில் இடம்பெறச் செய்த ராஜராஜனின் பேருள்ளம், அந்த ஆலயத்தைப் போன்றே விரிந்தது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன, தளிச்சேரி கல்வெட்டுகள்!
டாக்டர் இரா.கலைக்கோவன்

Comments