கல்யாண வரம் தரும் காத்யாயனி!

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் காத்யாயனி மகாமாயே மகாயோகின்யதீஸ்வரி நந்தகோப சுதம் தேவம் அதிசீக்ரம் பதிம் மே குருதே நம.’
ஆலயம் முழுவதும் பரவி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது இந்த மந்திரம். திருமணம் கைகூட வேண்டி, ஆண்களும் பெண்களுமாக இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இது குன்றத்தூர் முருகன் மலைக்கோயில் கிழக்குப் பாகத்தில் உள்ள ஸ்ரீகாத்யாயனி அம்மன் சன்னதி.
தேவியின் சன்னிதியை தரிசிக்குமுன் தோரண வாயிலில் காட்சி தருபவர் தோரண கணபதி. அடுத்து சூல மண்டபத்தில், துவார பாலகிகளாக கங்கை, யமுனை ஆகியோர்.
பல்லவர் காலக் கட்டடக்கலை அமைப்பில் தேரைப்போல வடிவமைக்கப்பட்டுள்ள, ஏகதள விமானத்தின் கீழ், மங்கள மாரிதேவியும் கிருஷ்ண மாரிதேவியும் அருள்பாலிக்கின்றனர். கருவறையைச் சுற்றிலும் அஷ்டலக்ஷ்மிகள்.
கருவறைக்குப் பின்புறம் வேம்பு மரத்தின் கீழ் ஸ்ரீநாகராஜர், நாகதேவி, குளிகன் என குடும்பத்துடன் தரிசனம்.
மூலஸ்தானத்தில் கமல விமானத்தின் கீழே, சந்திர காந்தக் கல்லால் ஆக்கப்பட்ட, ஈர்க்கும் சக்தியாக தேவி ஸ்ரீகாத்யாயனி. அம்பிகையின் எதிரில் நிம்ப விருட்சம் என்கிற மலை வேம்பு!
திருமணத் தடை நீங்க பிரார்த்தனைக்குச் செல்லும் பெண்கள் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் ஒன்றை தேர்வு செய்து கொண்டு மூன்று முறை செல்ல வேண்டும். முதல் தரிசனத்துக்கு ‘ஸ்ரீகாத்யாயனி பூஜை’ என்று பெயர். இரண்டு தேங்காய்களை வைத்து மாலை அணிவித்து அர்ச்சனை செய்து மங்கள மாரி சன்னிதியிலும், காத்யாயனி சன்னதியிலும் தீபம் ஏற்றி இரண்டு சன்னிதிகளையும் மூன்று முறை சுற்றி வந்து, 16 முறை காத்யாயனி திருமண மந்திரம் சொல்ல வேண்டும்.
இரண்டாவது வாரத்தில் செய்யும் பூஜை, விருட்ச பூஜை! யாருக்கு தோஷம் நீங்க வேண்டுமோ, அவர் பெயரில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, விருட்சத்தில் பூஜிக்கப்பட்ட மஞ்சள் காப்பை அம்மன் முன்பு அணிதல் வேண்டும்.
மூன்றாவது வாரத்தில் செய்யப்படும் பூஜை, ‘ஜென்ம பத்ரிகா பூஜை.’ பெண்ணின் ஜனன ஜாதகத்தை அம்பாள் மடியில் வைத்து, அர்ச்சனை செய்து ஜாதக தோஷங்கள் விலகிட வேண்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்து கொள்பவர்களுக்கு அடுத்த ஆறு மாதத்துக்குள் திருமணம் கைகூடுகிறது. அப்படி பலன் அடைந்தவர்கள் தங்கள் துணையோடு வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.
தவிர, திருமணத் தடை இருந்தால், பெண்களுக்கான காமேஸ்வரி துளசி யக்ஞமும் ஆண்களுக்கான கந்தர்வ ராஜ யக்ஞமும் பக்தர்கள் விருப்பத்துக்காகச் செய்கிறார்கள். ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் மாலை 6 மணிக்கு பாலகாத்யாயனி ஹோமம் செய்து, அன்று தரிசிக்க வரும் எல்லா பெண்களுக்கும், மலைவேம்புடன் கூடிய மூலிகை மருந்து பிரசாதம் ஆலயத்தின் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.
அழகு பெருகவும், பொன் ஆபரணங்கள் மிகுதியாகக் கிடைக்கவும், தேவலோக அழகியான ரம்பை, காத்யாயனியை வழிபட்டாள். அந்த நாள்; ரம்பா திருதியை. அதாவது, கார்த்திகை மாதம் வளர்பிறை திருதியை. இந்த நாளில், சந்தோஷமான வாழ்வு, தொழில் வளர்ச்சி, செல்வ வளர்ச்சி, ஆகியவற்றுக்காக காத்யாயனி தேவியை வழிபட்டால் நற்பலன் கைகூடும்.
குழந்தைப்பேறு வேண்டி மடிபூஜை என்ற முறையையும் இங்கே செய்வதுண்டு. மேரு வடிவில் உள்ள அம்மன் உருவை, பெண் மடியில் வைத்து அப்பெண்ணின் கணவன் பூஜை செய்து பிரார்த்திப்பது, இத்தலத்தில் நடக்கும் மிக வித்தியாசமான சக்தி வாய்ந்த வழிபாடு.
- கே. குமாரசிவாச்சாரியார், சென்னை
முச்சக்தி வேட்டல்!


திருவேற்காடு கருமாரி, மாங்காடு காமாட்சி, குன்றத்தூர் அருகில் உள்ள திருமுறைக்காடு காத்யாயனி ஆகிய தேவியர் மூவரையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷ பலனளிக்கும்.
சென்னை-குன்றத்தூர் முருகன் கோயில் மலை அடிவாரத்திலிருந்து திருநீர் மலைக்குப் பிரியும் சாலையில் நடை தூரத்தில் உள்ளது ஸ்ரீகாத்யாயனி அம்மன் கோயில். பிராட்வேயிலிருந்து 60A, 88H, 88C.தாம்பரத்திலிருந்து 55K ஆகிய பேருந்துகள்.
தரிசன நேரம்: காலை 8 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 8 வரை.

Comments