கல்கி அவதாரப் பெருமாள்!

பகவானின் கடைசி அவதாரம் ‘கல்கி.’ அதையடுத்து பிரளயமும் பிறகு சிருஷ்டியும் தொடங்கும்’ என்கின்றன புராணங்கள். சரி; ‘கல்கி’ அவதாரம் எடுக்கப்போகும் பெருமாள் யார்? அவர் எந்தத் தலத்தில் கோயில் கொண்டுள்ளார்? மகாபலிபுரம் என்னும் கடல்மல்லையில் தலசயனம் கொண்டுள்ள பெருமாள்தான் என்கிறார் திருமங்கையாழ்வார்.
மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் மகாபலிபுரம் 108 திவ்யதேசங்களில் ஒன்று; பூதத்தாழ்வாரின் அவதாரத் தலம்! பஸ் நிலையம் அருகேயே அமைந்துள்ள போதிலும், இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.
பல இடங்களுக்கு யாத்திரையாகச் சென்று வழிபட்டு, இந்த மல்லைக்கு வந்த புண்டரிக மகரிஷி, அங்கிருந்த தடாகத்தில் அலர்ந்த தாமரை மலர்களைக் கண்டு அவற்றை கொய்து திருமால் திருவடிக்கு சமர்பிக்க விரும்பினார். அப்போது, திருப்பாற்கடலுக்குச் சென்று தாமரை மலர்களை பரந்தாமனுக்கு அணிவிக்குமாறு ஒலித்தது அசரீரி! மஹரிஷி திருப்பாற்கடல் செல்ல நினைத்து, அதற்கு தடையாய் இருந்த கடலின் நீரை இறைக்கலானார். பல நாட்கள் ஆகியும் தன் எண்ணம் நிறைவேறாமையால் வருந்தினார். மக ரிஷியின் மீது கருணைகொண்ட திருமால், அவர் முன்னதாக ஓர் வயோதிகராகத் தோன்றி தனக்கு பசி தீர்க்க உணவு கொண்டு வருமாறும் மஹரிஷியின் முயற்சிக்கு தானும் உதவிபுரிவதாகவும் தெரிவித்தார்.
இதன்படி உணவு கொண்டு வரச்சென்று திரும்பியவர் ஆச்சர்யம் அடையும்படி கடல் ஒரு மைல் தூரம் அளவு வற்றியிருந்தது. மேலும், அங்கு தரையில் சங்கு சக்கரமின்றி சயன கோலத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தார் திருமால். இதைக்கண்டு மகிழ்ந்த மக ரிஷியின் விருப்பப்படி, இன்றும் நிலமங்கைத் தாயாரோடு பக்தர்களுக்குக் காட்சி தந்துகொண்டிருக்கிறார் திருமால்.
இங்குதான், ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் திருமாலின் கதாயுதத்தின் அம்சமாக குருக்கத்தி மலரில் அவதரித்தார் பூதத் தாழ்வார். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட திவ்ய தேசம் இது!
முதலில், கடற்கரையில் அமைந்திருந்த கோயில், கடல் சீற்றத்தால் அழிவு பெற்றது. தற்போதுள்ள கோயில் விஜய நகர சாம்ராஜ்ய மன்னரான பராங்கு சன் என்பவரால் கட்டப்பட்டதாக தெரியவருகிறது.
மூலவர், ஸ்தல சயனப் பெருமாள்; தாயார் நிலமங்கை, தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.
பூதத்தாழ்வார் தனி சன்னிதியிலும் மற்றும் ஸ்ரீராமர், ஸ்ரீலஷ்மி நரஸிம்மர் சன்னிதிகளும் இத்தலத்தில் அமைந்துள்ளன. மாசிமக உத்ஸவம் இத்தலத்தில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சேது சமுத்திர ஸ்நானம் தரும் அதே பலன்களை, மாசி மகத்தில் இங்கே நீராடிப் பெறலாம். அதனால், இத்தலத்துக்கு அர்த்தஸேது என்ற பெயரும் உண்டு.
இவர்தான் கல்கி அவதார மூர்த்தியாய் திரு மங்கையாழ்வாருக்கு அருள்காட்சி தந்திருக்கிறார்.
‘கடும்பரிமேல் கற்கியை
நான் கண்டுகொண்டேன்
கடிபொழில் சூழ்
கடல்மல்லை தலசயனத்தே’
என்கிறார் ஆழ்வார்.
எனவே, கல்கி அவதாரம் எடுக்கப் போகும் பகவான் இவனே என்று தெரிந்து கொள்ளலாம்.
பூமி பிராட்டியை கடலின் அடியில் சென்று அழுத்திய அசுரணை, வராஹ அவதாரம் எடுத்து மீட்டருளினான் பகவான். வராஹமூர்த்தியால் மீட்கப்பட்ட பூமிப்பிராட்டி, நிலமங்கை என்ற பெயருடன் இங்கே எழுந்தருளியிருப்பது கூடுதல் சிறப்பு!

இவர்களோடு, பூமிப் பிராட்டியை தன் வலப்புறம் தாங்கி ‘திருவல எந்தை’யாக, ஞானப் பிரானான வராஹ மூர்த்தியும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்.
நிலம் தொடர்பான பிரச்னைகள், சொத்து, வீடு அமைவதில் தடைகள் என்று பூமி தொடர்பான சிக்கல்களில் துன்புறுபவர்கள், இந்த நிலமங்கைத் தாயார் சகித தலசயனப் பெருமாளையும், வராஹப் பெருமானையும் தரிசித்து வழிபட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.

Comments