பாரகம் விளங்கிய பகீரதன் அருந்தவம் முயன்ற பணிகண்டு
ஆரருள் புரிந்தலைகொள் கங்கை சடையேற்ற அரன்மலையை வினவில்
வாரதர் இருங்குறவர் சேவலின் மடுத்தவர் எரித்த விறகில்
காரகில் இரும்புகை வீசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே
ஆரருள் புரிந்தலைகொள் கங்கை சடையேற்ற அரன்மலையை வினவில்
வாரதர் இருங்குறவர் சேவலின் மடுத்தவர் எரித்த விறகில்
காரகில் இரும்புகை வீசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே
- திருஞானசம்பந்தர்
பொருள்: பாரதப் பெருமண்ணில் சிறந்து விளங்கிய பகீரதன் எனும் மன்னன், தன் மூதாதையருக்கு நற்கதி உண்டாவதற்காக அரிய தவம் மேற்கொள்ள... அருள் புரியும் தன்மையால், கங்கையைத் தம் சடையில் கொண்டார் ஈசன். அவர் வீற்றிருக்கும் மலையானது... குறவர்கள் தீயை மூட்டி எரித்த விறகில், அகில் கட்டைகளின் புகையானது விண்ணில் பரவக் கமழும் காளத்தி மலையாகும்.கபில முனிவரின் மூலம், தன் சித்தப்பன்மார்கள் 60,000 பேரும் தீயில் எரிந்து சாம்பலான தகவலை அறிந்து வருந்தினான் அம்சுமான். பிறகு, கபிலரின் ஆசியுடன் யாகக் குதிரையை ஓட்டி வந்து சகரனிடம் ஒப்படைத்தான்! தன் மகன்கள் இறந்ததை அம்சுமான் மூலம் அறிந்த சகரன் மிகவும் வருந்தி னான். எனினும் யாகத்தை நிறைவு செய்தான். தன் பேரன் அம்சுமானுக்கு முடிசூட்டிவிட்டு, இமய மலைக்குச் சென்ற சகரன், தமது புதல்வர்கள் நற்கதி அடைய கடுந்தவம் இருந்தான். ஆனால், அவனது கோரிக்கை நிறைவேறவில்லை. அதற்குள் அவனது அந்திமக் காலம் நெருங்கவே, தனது புண்ணிய பலத்தால் சொர்க்கத்தை அடைந்தான்.
பின்னர், பல காலம் அரசாண்ட அம்சுமான், தன் மகன் திலீபனுக்கு அரசாட்சியை அளித்து விட்டு, முன்னோர்கள் நற்கதி அடைய தவம் இருந்தான். ஆனாலும் நினைத்தது நடக்கவில்லை. இதையடுத்து திலீபனும் தவம் மேற்கொண்டான். இவனது தவத்தாலும் நிறைவேற்ற இயலவில்லை. எனவே, தமது புதல்வன் பகீரதனுக்கு அரசுரிமையை வழங்கி விட்டு நற்கதி அடைந்தான். இதையடுத்து பகீரதன், தன் முன்னோர்களுக்காக கோகர்ண தலத்தில் தவமிருந்து பிரம்மதேவனை வேண்டினான். இவனது தவத்தில் மகிழ்ந்த பிரம்மா, ''உனது பாட்டனாரும் தந்தையும் பல காலம் தவம் இருந்தும், உன் முன்னோரைக் கரையேற்ற இயல வில்லை. எனினும் நீ விடாது முயற்சி செய்கிறாய். இதற்கு வழி ஒன்று சொல் கிறேன். வானுலகில் உள்ள கங்கையை பாதாள லோகத்துக்கு அழைத்து வந்து, அந்தப் புனித நீரால் உன் முன்னோர் களது சாம்பல் மற்றும் எலும்புகளை நனைத்து அவர்களை நற்கதி அடையச் செய்!'' என்றார்.
அவரிடம் ஆசி பெற்ற பகீரதன் வானுலகம் சென்றான். கங்காதேவியை வணங்கி, தன்னுடன் பாதாள லோகத் துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவுமாறு வேண்டினான். உடனே கங்காதேவி, ''நான் வானுல கில் இருந்து பூமிக்கு பாய்ந்தால் அது தாங்காது; என்னைத் தாங்கிப் பிடித்து பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன்'' என்றாள். பகீரதன், மகா பலசாலிகள் பலரது உதவியை நாடினான். ஆனால், அனைவரும் மறுத்தனர். பிறகு மகாவிஷ்ணுவை வேண்டினான். அவரோ, 'சிவனாரை தியானித்து தவம் செய்தால், காரியம் கைகூடும்' என்று அறிவுறுத்தினார்.
பகீரதன் அப்படியே செய்ய... சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்து, ''உன் முன்னோர்கள் நற்கதி அடைய நீ மேற்கொண்டுள்ள முயற்சியையும் மன உறுதியையும் கண்டு மகிழ்கிறேன். கங்கையை அழைத்து வர உனக்கு உதவுகிறேன். எனது சடையை விரித்துப் பிடிக்கிறேன். அதில் கங்கையைக் குதித்துக் கீழே பாயச் செய். அவளை பூமியில் தவழ விடுகிறேன்'' என அருளினார்.
உடனே பகீரதன், சிவானாரின் உதவி குறித்து கங்கையிடம் தெரிவிக்க... அவளும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள்; பலத்த சத்தத்துடன் பூமியை நோக்கிப் பாய்ந்தாள்! சிவனார், தன் சடையை விரித்துப் பிடித்தார். இதைக் கண்ட கங்கை, 'என் ஆற்றலையும் வேகத்தையும் சிவபெருமானால் தாங்க இயலுமா?' என்று அகங்கார எண்ணம் கொண்டாள். இதையறிந்த சிவனார், தமது சடையுடன் அவளை சுருட்டி, முடிந்து கொண்டார். திணறிப் போனாள் கங்கை; வெளியே வர வழியின்றி தவித்தாள்! வானுலகில் இருந்து பூமி நோக்கி வந்த கங்கை நெடுங்காலமாகியும் சிவனாரது சடையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் கவலையுற்ற பகீரதன், சிவபிரானை நோக்கி தவம் புரிந்தான். அவன் முன் தோன்றிய சிவனார், 'கங்கையின் கர்வத்தை அடக்கவே இப்படிச் செய்தேன்' என்றார். பிறகு, கங்கையை வெளிப்படுத்தினார். அவளை அப்படியே தாங்கி, இமயத்தில் விட்டார் நந்தியெம்பெருமான். கங்கை, அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் வழி காட்ட, அவனைப் பின்தொடர்ந்தாள்.
வழியில் ஜான்ஹவி முனிவரது ஆசிரமம் வந்தது. தமது அலைக் கரங்களால் அந்த ஆசிரமத்தை உருட்டித் தள்ளிக் கொண்டு பாய்ந்தாள் கங்கை. இதனால் கோபமுற்ற முனிவர், கங்கையை அள்ளிக் குடித்து ஆசமனம் செய்தார். அவ்வளவுதான்... கங்கை மீண்டும் சிறைப்பட்டாள்!
பகீரதன் கலக்கத்துடன் முனிவரை வேண்டினான். வேண்டுதலை ஏற்றார் முனிவர். கங்கையின் கர்வத்தை அடக்கியவர், தம் செவி வழியே பாய விட்டார், கங்கையை! எனவே, ஜான்ஹவி (சானவி) என்ற பெயரும் கங்கைக்கு உண்டு.
இதன் பிறகு, கங்கையை பாதாள லோகத்துக்கு அழைத்துச் சென்றான் பகீரதன். கபில முனிவரைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றான். தம் மூதாதையரின் எலும்பு மற்றும் சாம்பல்களை கங்கையால் நனைக்கச் செய்து புனிதப்படுத்தினான். சகர புத்திரர்கள் அனைவரும் நற்கதியடைந்து சொர்க்கத்துக்குச் சென்றனர்; அனைவரும் பகீரதனை வாழ்த்தி ஆசீர்வதித்தனர்.
அன்று முதல், மூவுலகங்களிலும் பாய்ந்து... தான் செல்லும் இடமெல்லாம் புனிதமும் வளமும் பெருகச் செய்கிறாள் கங்காதேவி! இத்தனை விடாமுயற்சிகளுக்குப் பிறகு பகீரதன், கங்கையைக் கொண்டு வந்ததால், 'பகீரதப் பிரயத்தனம்' எனும் முதுமொழியும் உண்டானது!
Comments
Post a Comment