சுக வரம் அருளும் சுகவாசி நாராயணர்!

ழங்கால ஆலயங்கள், ஆன்மிக வழிபாட்டு மையங்களாக மட்டுமல்ல... பண்டைய கலாசாரத்தைப் பறைசாற்றும் மையங்களாகவும் சரித்திரத்தை விளக்கும் புராதனச் சின்னங்களாகவும் விளங்கியுள்ளன.
ஓர் ஆலயத்தின் கட்டட மற்றும் கருவறை அமைப்பைக் கொண்டே, அது எந்தக் காலத்தில் கட்டப்பட்டது என்பதைச் சொல்லி விடலாம். மேலும் ஆலயங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம்... குறிப்பிட்ட கோயிலைக் கட்டிய மன்னர் யார்? கோயிலுக்கு அவர் என்னென்ன திருப்பணிகள் செய்துள் ளார்? எப்படியான கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளார் என்பதை தெளிவாக அறியலாம். ஆம், ஆலயத்தின் பூர்வீகத்தை அறிய உதவும் சான்றுகளாக இன்றைக்கும் இருப்பவை கல்வெட்டுகள்தான்!
இதேபோல், ஆலயத்தின் தூண்கள் மற்றும் பிரதான மண்டபங்களில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களைக் கொண்டு, அந்த ஆலயத்துடன் தொடர்பு கொண்ட புராண நிகழ்வுகள் பற்றியும் அறியலாம்.
ஆனால் இத்தகைய சிறப்பு மிக்க - பழைமையான ஆலயங்கள், பல ஊர்களில் முறையான பராமரிப்பின்றி பாழ்பட்டு கிடப்பது, நிகழ்காலத்தின் சோகம்! இத்தனைக்கும் தங்களது காலத்துக்குப் பிறகும் தாங்கள் கட்டிய ஆலயங்கள் சிறப்புற்று திகழ வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட அரசர்கள், நித்திய வழிபாடு மற்றும் வருடாந்திர விசேஷங்கள் ஆகியவற்றுக் காக நிவந்தங்களையும் மான்யங்களையும் எழுதி வைத்தனர்.

ஆனால், இப்படி கோயிலுக்கு பட்டயம் எழுதித் தந்த சொத்துக்கள் பலவற்றை, ஆலயத்துக்குச் சொந்தமான இறைவன் அனுபவித்து வருவதாகத் தெரியவில்லை. இது பலரும் அறிந்த ஒன்றுதான்!
சொத்துக்களில் இருந்து ஆலயத்துக்கு வரும் வருமானம் நின்று போனதால், பல ஆலயங் களின் பராமரிப்பும் நின்று போனது; பராமரிப்பு இல்லாததால் வழிபாடுகளும் குறைந்து போனது; வழிபாடு குறைந்ததால் பக்தர்களின் வருகையும் இல்லாமல் போனது.
இத்தகைய நிலையில் உள்ள ஆலயங்களை வெளிக்கொணரும் வகையில் செயலாற்றி வருவதே 'ஆலயம் தேடுவோம்' பகுதி. இதுபோன்ற ஆலயம் குறித்து 'சக்தி விகடன்' இதழில் கட்டுரை வெளியானதும், ஆன்மிக அன்பர்கள் பலரின் பார்வையும் கருணையும் அந்த ஆலயத்தின் மீது படர்கிறது. உடனே, ஆலயத் திருப்பணிகள் துவங்குகின்றன. பின்னர் திருப்பணிகள் நிறைவுற்று, ஒரு சுபயோக சுபதினத்தில், ஆலயத்தில் குடமுழுக்கு செய்யப்பட்டு, கொண்டாட்டங்கள் தொடர்கின்றன.
இந்த இதழில், ஆற்றூர் எனப்படும் ஆத்தூர் சுகவாசி நாராயண பெருமாள் கோயிலை தரிசிப்போமா?
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் இருக்கிறது ஆத்தூர். மண்ணியாறுக்கும் (பழைய பெயர் சுப்ரமண்ய நதி) பழவாறுக்கும் நடுவில் உள்ள ஊர் என்பதால் ஆற்றூர் என வழங்கப்பட்டு, இப்போது ஆத்தூர் ஆகி உள்ளது. மயிலாடுதுறைக்கு வடமேற்கிலும் பந்தநல்லூருக்கு கிழக்கிலும், திருவாள் ஒளிபுத்தூருக்கு மேற்கிலும், மண்ணியாறுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது ஆத்தூர் திருத்தலம். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தனது 'ஆற்றூர்ப் புராணம்' எனும் நூலில், சுகவாசி நாராயண பெருமாள் குறித்து 32 பாடல்கள் எழுதி உள்ளார்.
ஆத்தூரில் வைணவ ஆலயம் மட்டுமின்றி பழைமை வாய்ந்த சிவாலயமும் உண்டு. திருநாவுக்கரசர் சுவாமிகளால் வைப்புத் தலமாகப் பாடப் பெற்றுள்ள சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் ஆத்தூர் கிராமத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதே ஊரின் தென்கிழக்குப் பகுதியில் புராணப் பெருமை கொண்ட சுகவாசி நாரா யண பெருமாள் ஆலயம் இருக்கிறது. இங்கு சுகவாசி நாராயணபெருமாள் நிரந்தரமாக குடியேறுவதற்கு இடம் கொடுத்தவரே சொர்ண புரீஸ்வரர்தானாம்!
சுகவாசி நாராயண பெருமாள்... பெயரே வித்தியாசமாக இருக் கிறது அல்லவா? ஆனால், இன்று இவர் சுகவாசியாக இல்லை. செங்கல் கட்டுமானத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் இன்றைய நிலை அப்படியே தொடர்ந்தால், எதிர்கால சந்ததியினர் இந்த ஆலயத்தைத் தரிசிக்கும் பாக்கியம் அற்றவர் களாகி விடுவார்கள்!
இன்று செங்கல் கட்டடமாக இருக்கும் திருக் கோயில், எதிர்காலத்தில் செங்கல் குவியலாகத் தான் மாறும் சூழ்நிலை.
பரிதாபமாக திகழ்கிறது திருக்கோயில். ஆங்காங்கே முட்புதர்களும் செங்கல் சிதறலு மாகக் காட்சி அளிக்கிறது ஆலயம். ஆனாலும், தேவி- பூதேவியுடன் கருவறையில் கம்பீரமாகக் காட்சி தரும் சுகவாசி நாராயண பெருமாள் மட்டும், சாந்நித்தியம் குறையாமல் சந்நிதி தேடி வருபவர்களை ஆசிர்வதித்து வருகிறார்; தனது திருநாமத்தை உச்சரித்தபடி தரிசிக்க வரும் எவருக்கும் நல்லதையே வழங்கிக் கொண்டிருக் கிறார்.
ஆலயத்தை பராமரிப்பதற்கு உண்டான முறை யான எந்தப் பணிகளும் நெடுங்காலமாகவே இங்கு மேற்கொள்ளப்படவில்லை என்பது கண்கூடு. எழுபதுகளில் இருந்தே இந்த கிராமத்தில் வசித்து வரும் சிலரிடம் பேசினோம். ''இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து, நாங்க பார்த்ததே இல்லீங்க. எப்படியும் கும்பாபிஷேகம் நடந்து 300 வருஷங்களுக்கு மேல இருக்கும்னு சொல்றாங்க. வெளியூர்ல இருந்து பெருமாளை தரிசிக்க வர்ற பக்தர்கள் பலர், ஆலயத்தின் நிலை யைப் பார்த்துட்டு அழாத குறையா திரும்பிப் போறாங்க.
ஒரு காலத்துல இந்த ஊர் (ஆத்தூர்) அக்ர ஹாரத்துல 350 பிராமண குடும்பத்தினர் இருந்தாங்க. பட்டாச்சார்யர்களோட பிரபந்த கோஷங்களுக்கு இடையே இந்தக் கோயில்ல பல விழாக்கள் நல்லாத்தான் நடந்துச்சு. ஆனா பாருங்க... வேலை, பொழப்பு, குடும்பம்னு சொல்லி ஒவ்வொருத்தரா ஊரைக் காலி பண்ணிட்டு, வெளியூர்ல செட்டில் ஆயிட்டாங்க. இதேபோல ஊர்ல இருந்த இன்னும் பலரும் பல காரணங்களைச் சொல்லி இடம் பெயர்ந்துட்டாங்க! இந்த நிலைல, வெளியூர் பக்தர்களோட வருகையும் மெள்ள மெள்ள நின்னுருச்சு. தவிர, உள்ளூர்க்காரங்களோட உபயமும் இல்ல. விளைவு... கோயிலோட நிலைமை இப்படி ஆகிப்போச்சு. ஒரு காலத்துல ஓஹோனு இருந்த பெருமாள், இப்ப அநாதரவா இருக்கறதைப் பாக்கறதுக்கே வருத்தமா இருக்குது. இப்பதான் திருப்பணி துவங்கி இருக்கு. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடும்னு நம்பிக்கையோட வேலை பார்த்திட்டு இருக்கோம்'' என்றனர் கிராமத்தில் வசிக்கும் முதியவர்கள்.
ஆத்தூர் திருத்தலத்தின் பெருமைகள் அளவிடற் கரியது. பிரம்மதேவர், முருகப் பெருமான், இடப தேவர், நந்திதேவர், இந்திரன், சிலாத முனிவர், சங்கரமறையோன், சாத்தனார், சோழேந்திரன், துர்கை ஆகியோர் பூஜித்த பெருமைக்குரிய தலம் இது. ஸ்காந்த புராணம் மற்றும் ப்ரும்மாண்ட புராணத் திலும் இந்த ஆலயம் தொடர்பான குறிப்புகள் இருப்பதாக தலபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
சுகவாசி நாராயண பெருமாள் ஆலயத்தைப் போலவே சொர்ணபுரீஸ்வரர் ஆலயமும் பாழ் பட்டுக் கிடக்கிறது. இரண்டு கோயில்களையும் பார்க்கும் போது, மனம் பதைபதைக்கிறது. பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தின் பெருமைகள், உள்ளூர்க்காரர்கள் பலருக்கும் தெரியவே இல்லை. தல புராணத்தை அறிந்த வெளியூர் அன்பர்கள் சிலர், அடிக்கடி வந்து இறைவனை தரிசித்துச் செல்கின்றனர்.
சுகவாசி நாராயண பெருமாள், சுகமாக இருந்தே பல நூறு ஆண்டுகள் கடந்திருக்கும் போல! இதில் முக்கியமான சோகம்... இந்த ஆலயத்துக்கு இது வரை மின் இணைப்பு இல்லை! சில தருணங்களில் 'எமர்ஜென்ஸி லேம்ப்' உதவியுடன் கருவறைக்குள் நுழைந்து பூஜை புனஸ்காரங்களைச் செய்கிறார் அர்ச்சகர்.
தவிர, 'நாகராஜாக்கள்' அவ்வப்போது கோயிலுக் குள் உலா வருவார்களாம்! இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இது நாக தோஷம் போக்கும் திருத்தலம்! ராகு- கேது தோஷ நிவர்த்திக்குப் பரிகாரம் செய்ய விரும்புவோர், இங்குள்ள சைவ மற்றும் வைணவ ஆலயங்களில் செய்யலாமாம்! தவிர, இந்த ஊரில் பாம்பு கடித்து எவரும் இது வரை இறந்ததே இல்லையாம்.
சரி... சுகவாசி நாராயண பெருமாள், ஆத்தூரில் குடிகொண்ட கதையைப் பார்ப்போம்.
ஒரு முறை, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே நிகழ்ந்த போர், முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்க... தினமும் அசுரர்களின் அசுரபலமே வென்று வந்ததாம்! 'வெற்றி எங்களுக்கே' என்று கொக்கரித்தனர் அசுரர்கள். இவர்களின் தாக்குதலில் திணறித் தவித் தனர் தேவர்கள். வெற்றிக் களிப்பு மேலோங்க, தேவர்களை மேலும் துன்புறுத்தத் துவங்கினர் அசுரர்கள். இதில் மனம் வருந்திய தேவர்கள் பலரும் ஒன்று கூடி, இந்திரனிடம் முறையிட்டனர். உடனே இந்திரன், ''வாருங்கள்... நான்முகனிடம் சென்று முறையிடலாம். அவர் நல்ல தீர்வு ஒன்றைச் சொல்வார்'' என்று தேவர்களை அழைத்துக் கொண்டு, பிரம்மனைச் சந்தித்து முறையிட்டார். எல்லாவற்றையும் கேட்டறிந்த பிரம்மன், தேவர்களை அழைத்துக் கொண்டு மகா விஷ்ணுவை சந்தித்து முறையிட்டார்.
அனைத்தையும் அறிந்த மாலவன், அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், ''கவலையின்றி செல்லுங்கள். உங்களைக் காக்கிறேன்'' என இந்திரன் முதலான தேவர்களுக்கு அருளினார்.
இதையடுத்து பூலோகம் வந்த மகாவிஷ்ணு, தான் தவம் இருப்பதற்கு உரிய இடமாகத் தேர்ந்தெடுத்தது, மந்தார வனமாக இருந்த இந்த ஆத்தூரைத்தான். அசுரர்களை அழிப்பதற்கான பலத்தை, இங்கு எழுந்தருளி உள்ள சொர்ணபுரீஸ்வரரிடம் பெற விரும்பினார் திருமால். எனவே, சிவ குமாரனால் உருவாக்கப்பட்ட சுப்ரமண்ய நதியில் (மண்ணியாறு) நீராடி, ஆலயத்துக்கு வந்து, அபிஷேகம் செய்து கயிலைவாசனை குளிர் வித்தார்; அவனின் திருநாமங்களைச் சொல்லி வாழ்த்தினார்; கமகமக்கும் நைவேத்தியங்கள் தயாரித்து, ஈசனுக்குப் படைத்து வழிபட்டார். மைத்துனனின் வழிபாட்டில் மனம் கனிந்த இறை வன், மாலவன் முன் தோன்றினார்.
மகிழ்ந்து போனார் மாலவன். தனது தவத்துக்கான பலன் கிடைத்ததை எண்ணி பூரிப்பு அடைந்தார். ''உனது தவத்தில் யாம் மகிழ்ந்தோம். என்ன வரம் வேண்டும் உனக்கு?'' என்றார் ஈசன்.
உடனே திருமால், ''அசுரர்களின் அட்டூழியத் தால் தேவர்கள் பெருமளவில் அவதிப்படுகிறார்கள். அவர்களால் யாகம் மற்றும் தவம் ஆகியவற்றை செய்ய முடியவில்லை. எனவே, தேவர்களைக் காப்பதற்காக அசுரர்களுடன் போர் புரிந்து, அவர்களை அழித்து, தர்மத்தையும் நியாயத்தையும் நிலை நாட்ட தாங்களே அருள்புரிய வேண்டும்'' என்றார். இதைக் கேட்ட சிவனார் ''நீ விரும்புவது நிறைவேறும். அசுரர்களை அழிக்கும் வல்லமையைத் தந்தோம். போரில் நீயே வெற்றி பெறுவாய். தேவர்கள் உன்னைப் போற்றுவர்'' என அருளினார்.
இதைக் கேட்டதும் மகிழ்ந்த திருமால், ''கயிலை வாசா... இன்னுமொரு விருப்பம்...'' என்றார். உடனே ஈசனும் ''சொல் மணிவண்ணா... நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று மாறா அன்புடன் கேட்டார்.
''தாங்கள் குடி கொண்டுள்ள இந்தத் திருத்தலத்தில், தேவியர் மற்றும் பரிவாரங்களுடன் நானும் சுகமாக எழுந்தருள வேண்டும். இங்கேயே தங்கி இருக்க, தங்களின் அனுமதி தேவை'' என்று பணிந்தார் திருமால்.
இதில் மனம் நெகிழ்ந்த மகேசன், ''அப்படியே ஆகட்டும். இதே திருத்தலத்தில் நீ சுகமாக இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தமையால், 'சுகாசீன நாராயணர்' எனும் திருநாமத்துடன், யாம் குடி கொண்டிருக்கும் ஆலயத்தின் தென் கிழக்கு திசையில் (அக்னி மூலை) நீயும் கோயில் கொண்டு வாழ்வாய். உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சகல சுகங்களையும் அருள் வாய்'' என்று வரம் தந்தார்.

இதையடுத்து, முதல் கட்டமாக அசுரர்களை சம்ஹாரம் செய்த திருமால், அடுத்து ஆத்தூரை அடைந்தார். அங்கு... ஈசன் சுட்டிக்காட்டி அருளிய இடத்தில், 'சுகாசீன நாராயணர்' எனும் திருநாமத்துடன் தேவியருடன் அமர்ந்தார். இவரே பின்னாளில், சுகவாசி நாராயண பெருமாள் ஆனார்.
ஆதியில், வைணவ ஆலயத்துக்கே உண்டான அனைத்து வைபவங்களும் குறையின்றி நடை பெற்றன. எனினும் காலப் போக்கில்... அனைத்துமே காணாமல் போயின.
இனி சுகவாசி நாராயண பெருமாள் ஆலய தரிசனம்!
ராஜகோபுரம், கொடிமரம் எதுவும் இல்லை. வெளியே கருடாழ்வார் சந்நிதி. மகா மண்டபத்தில் நின்ற கோலத்தில் மகாவிஷ்ணு, ஸ்நான பேரர், யோக பேரர், ஆழ்வார்கள் ஆகியோரின் திருமேனிகளைத் தரிசிக்கிறோம்.
சுகவாசி நாராயண பெருமாளின் கருவறை சற்றே விஸ்தாரமானது. கிழக்கு திருமுக மண்டலத்தில் தேவி- பூதேவி சமேதராக அமர்ந்த திருக்கோலத்தில் - அதாவது சுகாசனத்தில் தரிசனம் தருகிறார் சுகவாசி நாராயண பெருமாள். பீடத்தின் மீது இடது காலை மடித்து, வலது காலைத் தொங்க விட்டபடி அமர்ந்துள்ளார். மேல் திருக்கரங்களில் சங்கு- சக்கரம்; கீழ்த் திருக்கரங்களில் அபய ஹஸ்தம்- கட்க ஹஸ்தம்!
''சுகவாசி நாராயண பெருமாள் விக்கிரகம் சுதையால் ஆனது என்று நினைத்துதான் வருடத்துக்கு ஒரு முறை தைலக் காப்பு நடத்தி வந்தோம். கடந்த 23.3.09 அன்று பாலாலயத்தின் போதுதான், இந்தப் பெருமாள் சுதையால் ஆனவர் இல்லை; சிலா விக்கிரகம் என்பது தெரியவந்தது. எனவே, சம்ரோக்ஷணத்துக்குப் பிறகு, பூஜைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பது குறித்து பண்டிதர்கள் பலரிடமும் ஆலோசித்து செயலாற்ற தீர்மானித்துள்ளோம்'' என்றார் திருப்பணிக் குழு வில் உள்ள அன்பர் ஒருவர்.
வாழ்வில் நாம் சுகமாக இருப்பதற்கு வரங்களை அள்ளி வழங்குபவரான, சுகவாசி நாராயண பெருமாளை மனமார வணங்கி வெளியே வருகிறோம்.
பிராகார வலத்தின்போது மடப்பள்ளி, கிணறு, தென்மேற்கில் தாயார் சந்நிதி, வசந்த மண்டபம் ஆகியவற்றை காண்கிறோம்.
தனியே அமைந்துள்ளது தாயார் சந்நிதி. தாயாரின் திருநாமம்- கோமளவல்லி. அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து தரிசனம் தரும் அழகிய திருவடி வம். காமாட்சி அன்னையை நினைவுபடுத்தும் திருக் கோலம். மேல் திருக்கரங்களில் தாமரை மலர்கள்; கீழ்த் திருக்கரங்களில் அபய மற்றும் வரத முத்திரைகள்.
தவிர, விஷ்ணு துர்கையின் சிலா விக்கி ரகத்தையும் இங்கு காணலாம். மகிஷ வாகனம் இல்லை. உரிய வயது வந்தும் திருமணம் ஆகாதவர்கள் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகளில், ராகுகால வேளையில் இந்த துர்கைக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால், திருமணம் விரைவில் கைகூடுமாம். தவிர புத்திர பாக்கியம் மற்றும் எதிரிகளை வெல்லும் திறன் ஆகியவற்றையும் அருளுகிறாளாம் இந்த விஷ்ணுதுர்கை!
ஆலயத்தின் பரம்பரை அறங்காவலராக இருந்து வருகிறார் எஸ். பாலகிருஷ்ணன். ஊர்க்காரர்களின் ஒத்துழைப்புடன், 'சுக வாசி நாராயண பெருமாள் கைங்கர்ய சபா' எனும் அமைப்பு சமீபத்தில் துவங்கியுள் ளது. இதையடுத்து கடந்த 23.3.09 (திங்கட் கிழமை) அன்று பாலாலயம் செய்து திருப்பணிகளைத் தொடங்கியுள்ளனர் கைங்கர்ய சபாவினர்.
இழந்த சுகத்தை பெருமாள் திரும்பப் பெறட்டும். இழந்த பொலிவு திருத்தலத்துக்கு திரும்பவும் கிடைக்கட்டும். மந் நாராயணனின் திருமகிமை திக்கெட்டும் பரவட்டும். ஆன்மிக நாட்டம் கொண்ட அன்பர்களின் துணையுடன் ஆத்தூரில் அருள் வெள்ளம் பெருகட்டும்!
தகவல் பலகை
தலம் : ஆத்தூர்
மூலவர் :தேவி-பூதேவி சமேத சுகவாசி நாராயண பெருமாள்; கோமளவல்லி தாயார்
எங்கே இருக்கிறது?: மயிலாடுதுறைக்கு வடமேற்கில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆலயம். மயிலாடு துறையில் இருந்து கடலங்குடி, திருசிற்றம்பலம் மற்றும் பந்த நல்லூர் செல்லும் பேருந்துகள் ஆத்தூர் வழியே செல்லும். பந்தநல்லூரில் இருந்து சுமார் 7 கி.மீ.
எப்படிப் போவது?: மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து 1, 1சி, 18, 18ஏ ஆகிய பேருந்துகளில் சென்று ஆத்தூர் பாலம் எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து கோயி லுக்கு நடந்தே சென்று விடலாம். வைத்தீஸ்வரன்கோவில் - திருப்பனந்தாள் சாலையில் பயணித்தாலும் 'ஆத்தூர் பாலம்' நிறுத்தத்தில் இறங்கி, கோயிலை அடையலாம். வைத்தீஸ்வரன்கோவில்- திருப்பனந்தாள் நடுவே இருக்கிறது ஆத்தூர். அதாவது, இரண்டு ஊர்களில் இருந்தும் ஆத்தூருக்கு சரியாக 16 கி.மீ. தொலைவு.

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் '17' மற்றும் '37' ஆகிய பேருந்துகளில் பயணித்தால், ஆத்தூர் கடைத்தெரு எனும் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
தொடர்புக்கு:
* எஸ். மகாலட்சுமி
3, கீதகோவிந்தம், துளசி அபார்ட்மெண்ட்,
11/6, குப்புசாமி தெரு, தி.நகர்,
சென்னை 600 017.
போன் : (044) 2815 2533
மொபைல் : 98400 53289
----------------------------------
* பா. சிவகுமார்
கேசிங்கன், ஆத்தூர் போஸ்ட் 609 204
திருமேனியார்கோவில் வழி
மயிலாடுதுறை தாலுகா
போன் : 04364- 254369
மொபைல் : 94862 78454

Comments