அருள்மழை பொழிந்தது!

வடலூர் தருமச் சாலைக்கு சித்திரை மாதத்தில் வந்தவர்கள் வெயிலின் கடுமையைத் தாங்காமல் துவண்டதை வள்ளலார் கண்ணுற்றார். ‘தண்ணீர், தண்ணீர்’ என்று அல்லல்பட்டதையும் நேரில் பார்த்தார். உடனே அன்பர் ஒருவரை அழைத்து, ஒரு குவளையில் நீர் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். குவளையில் நீர் வந்தது. வள்ளலார் அந்த நீரைத் தமது பாதங்களில் மெல்ல ஊற்றினார். பின்பு வானை நோக்கிய வண்ணம் கரம் குவித்தார்.
கூடியிருந்தவரெல்லாம் வியக்கும் வண்ணம் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.
சற்று நேரத்தில் இடியும் மின்னலும் தொடர்ந்து பெரு மழை பெய்தது. வெயிலின் கடுமையும் குறைந்தது. மக்களின் தண்ணீர் தட்டுப்பாடும் அகன்றது.
வடலூரில் நிகழ்ந்த இந்த அதிசயத்தைக் கேள்வியுற்ற புதுப்பேட்டை மக்கள், வள்ளலாரை தங்களுடைய ஊருக்கும் வருகைத் தர வேண்டும் என்றார்கள். புதுப்பேட்டை மக்களின் வேண்டுகோளை ஏற்ற வள்ளலார் அவர்களுடன் சென்றார்.
பலகாலமாக மழை பொய்த்ததால் அவ்வூரே வறட்சி பூமியாகத் திகழ்ந்ததைக் கண்டு வள்ளலார் துன்புற்றார். பூமி வெடித்திருந்தது. குளங்கள் பாழ்நிலமாக இருந்தன. இந்நிலையை மாற்ற திருவுளம் கொண்டார் வள்ளலார். புதுப்பேட்டை மக்களை இருகுடங்களில் நீர் கொண்டு வருமாறு கூறினார். குடங்களில் நீர் வந்தது. பெருமானின் கட்டளையின் பேரில் அவரை அந்நீரால் நீராட்டினார்கள். அந்நிகழ்ச்சி முடிவதற்கு முன்பாகவே வானம் இருண்டது. மழை பொழிந்து ஊரை நனைத்தது. வறண்ட பூமி வளமானது.
புதுப்பேட்டை மக்கள், சேறாகி இருந்த பூமி என்றும் பாராமல், உடல் தோய விழுந்து வணங்கி, அருள் மழை பெய்வித்த பெருமானைத் தொழுதார்கள்.

Comments