அழகுதான் கற்பனைக்கு ஜீவாதாரம்!
எது அழகு என்பதில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அழகு என்கிற தளத்தில்தான், அனைத்து இயக்கமும் அலுங்காமல் நடக்கிறது.
குழந்தையின் பொக்கைவாய்ச் சிரிப்பு முதல், அனுபவச் சுருக்கம் நிரம்பிய வயோதிகத்தின் புன்னகை வரை அனைத்திலும் அழகு வியாபித்திருக்கிறது. ‘உண்மைதான் அழகு; அழகுதான் உண்மை’ என்பது கீட்ஸின் கூற்று.
துள்ளிவிழும் அருவிப் புனலில் இருந்து, புகையாக மாறிப் பரவும் பனி வீச்சு வரை, மனத்தை வசீகரிக்க ஆயிரமாயிரம் விஷயங்கள். இப்படி, பல பரிமாணங்களைக் கொண்ருந்தாலும், ஒரு பெண்ணின் அழகுதான் அனைவருக்குமான ஆதர்சம். அதிலும் கவிஞர்கள், இந்த அழகில் தோய்ந்து, முக்குளித்து கரைகண்டிருக்கிறார்கள்.
அழகுதான், எண்ணங்களை விரிவடைய வைக்கிறது; கற்பனைகளுக்கு சிறகு பூட்டுகிறது; வார்த்தைப் புதையல்களை அகழ்ந்தெடுக்கிறது.
அரக்கி சூர்ப்பனகையை வர்ணிக்க முடியாத தாபத்தில், அவள் உருமாறியவுடன் அந்தப் பேரழகை வர்ணிக்கிறான் கம்பன்:
‘பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென
அன்னமென மின்னும் வஞ்சி...’
கம்பன் மட்டுமா? கவிஞர்கள் அனை வருக்குமே, பெண்ணழகு ஆதர்ச பீடம் தான்!
அத்வைதம் பாடிய ஆதிசங்கரர், அம்பிகையின் அழகை அழகின் அலைகளை, அந்த அலைகளால் ஏற்பட்ட தாக்கத்தை ‘சௌந்தர்ய லஹரி’யாகப் பாடினார்.
அம்பிகை அழகுதான். அழகு என்று நடைமுறையில் சொல்லப்படும் அனைத்தும் அவளிடமிருந்து பிறந்தவைதானே. அப்படியிருக்க, அவள் அழகாய் இருப்பதில் என்ன ஆச்சர்யம்? என்றாலும், அந்த அழகை மேலும் அழகுபடுத்திப் பார்க்க ஆசைப்படுவது மனிதமனம்!
அழகே உருவாக சீதை இருக்கிறாள். அவளுக்கு ஆபரணங்களைப் பூட்டி அழகு சேர்க்கிறார்களாம் தோழிகள். அதை ‘அழகினுக்கு அழகு சேர்த்தார்’ என்பான் கவிச்சக்கரவர்த்தி.
இந்திர விழாவின்போது, நடனமாடக் கிளம்பிய மாதவி அணிந்திருந்த நகைப் பட்டியலை, இளங்கோவடிகள் வர்ணிக்கும்போது படிக்கவே மூச்சு முட்டுக்கிறது.
...அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
நலத்தரு மெல்விரல் நல்அணி செறிஇப்
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து
குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து...
இவை இடுப்புவரை அணிந்தவை தான். அதற்குமேல் கழுத்தில், கைகளில், விரல்களில், காதுகளில் என்று அடுக்குகள் தொடர்கின்றன. இவ்வளவு ஆபரணங்களையும் அணிந்தால், எப்படி அவளால் நடக்க முடிந்தது? எப்படி நடனமாடினாள்? என்றெல்லாம் கேள்வி வருகிறது.
‘தங்கரதம் வந்தது வீதியிலே’ என்று பால முரளி கிருஷ்ணா பாடுவதை மனம் ரீவைண்ட் பண்ணிக் கேட்கிறது. அவ்வளவு ஆபரணங்களைப் பூட்டியிருந்தாளாம் மாதவி.
தலை முதல் கால்வரை ஆபரணங்களைப் பூட்டி, அலங்கரிப்பதைக் கலையாகவே ஆக்கியிருக்கிறார்கள் முன்னோர்கள். பாத விரல்களில் மெட்டி, மிஞ்சி, காலாழி என்று தொடங்கி, தலைக்கு புல்லகம், செருகுப்பூ, சூடாமணி, சடைத்திருகு, தலைப்பட்டம் என்று அடுக்கியிருக்கிறார்கள்.
இந்த ஆபரணங்கள், பெண்களுக்கான சொத்தாக வழங்கப்பட்டவை என்றும் மரபியல் ரீதியான கருத்து ஒன்றை ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அது எப்படியிருந்தாலும், அழகும் ஆபரணமும் ஒன்றையொன்று சார்ந்து, வசீகரிப்பது நிஜம்.
ஆபரணங்களை நான்காக வகைப்படுத்துகிறார்கள். உறுப்புகளைத் துளைத்து அணிவது ஆவேத்யம் (காதணி போன்றவை); கட்டி அணிவது பந்தனீயம் (மேகலை போன்றவை); அணிவது - ப்ரக்ஷேப்யம் (நூபுரம் போன்றவை); சுற்றி வடமாக அணிவது - ஆரோப்யம் (சங்கிலி போன்றவை).
இந்த ஆபரணங்களில் எவ்வளவோ கதைகள்... தத்துவங்கள்! ஒவ்வொன்றிலும் ஒரு உட்பொருள் ஒளிந்திருக்கிறது.
அப்படியென்ன அற்புதங்களை வெறும் ஆபரணங்கள் நிகழ்த்தியிருக்க முடியும்?
பாம்பையே தன்னுடைய ஆபரணமாக உடலெங்கும் அணிந்து, நாகாபரணனாக மீனாட்சியை மணக்க வந்தார் சொக்கநாதர். நாடாளும் இளவரசியை மணக்க இந்தக் கோலம் பொருந்துமா என்று நினைத்தாளாம் சொக்க நாயகி. அதைப் புரிந்துகொண்ட சடை முடிப் பெருமான், அந்த நாகங்களையே ஆபரணங்களாக நகைகளாக உரு மாற்றம் அடையச் செய்தாராம்.
ஆமாம்; மதுரையில் மீனாட்சியை மகாராணியாகத்தானே தரிசிக்கிறோம். செங்கோல் ஏந்தியல்லவா இருக்கிறாள். ‘மீனாட்சி கொண்டை’ என்று, அவளுடைய அலங்காரத்துக்கும் தனி அந்தஸ்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
ஒவ்வொரு ஆபரணத்திலும் ஒரு கதை, ஒரு தத்துவம், ஒரு நிகழ்வு ஒளிந்திருக்கிறது. அவை என்ன சொல்கின்றன என்பதைத் தொடர்ந்து பார்க்கப் போகிறோம். அந்தப் பார்வையில் முதலில் படுபவை, திருவடிகள்!
கரங்களை நான்கு, ஆறு, எட்டு, பன்னிரெண்டு என்று பலவாகக் கொண்டிருக்கும் பரமன், பாதங்களை மட்டும் ஏன் இரண்டாகக் கொண்டான் என்று வாரியார் சுவாமிகளிடம் கேட்டார்கள். அவர் தமக்கே உரிய பாணியில் சொன்னார்: “பற்றிக் கொள்வதற்கு நமக்கு இரண்டு கரம்தானே இருக் கிறது. அதனால், நாம் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இரண்டு திருவடிகளைக் கொண்டு இலங்குகிறான் இறைவன்.”
அந்தத் திருவடிகளைத் தம் தலையில் சூட்டு என்றுதான் பெரியவர்கள் பலரும் பாடியிருக்கிறார்கள்.
சுந்தரருக்கு சித்தவட மடத்திலே திருவடி சூட்டி தீட்சை கொடுத்தான்; திருநல்லூரிலே திருநாவுக்கரசருக்கு திருவடி சூட்டினான். மணிவாசகருக்கு திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் திருவடி சூட்டினான் என்று, சிவபிரானின் சிறப்பைச் சொல்வார்கள்.
அந்தத் திருவடிகள் நம் கண்ணில் ஜொலிக்கின்றன. அதில் அணிகளும் தென்படுகின்றன. ‘துயரறு சுடரடி’ என்பது ஆழ்வார் வாக்கு.
Comments
Post a Comment