ஸ்ரீசக்ரம் என்றதும், அம்பிகையின் நினைவுதான் வரும். ‘ஸ்ரீசக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி’ என்று கொண்டாடப்படுபவள் அம்பிகைதான். அந்த ஸ்ரீசக்ரத்தை, தம்முடைய லிங்கத் திருமேனியில் பாணத்தில் கொண்டவராகக் காட்சியளிக்கிறார் சிவபிரான், முக்தி தலங்களில் ஒன்றான காசியில்!
விஸ்வநாதர், விசாலாட்சி, கால பைரவர், அன்னபூரணி, டுண்டி விநாயகர்... என்று பிரசித்தமான மூர்த்திகளைத்தான் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், அதே காசியில், ஹனுமன் காட் பகுதியில்தான் அமைந்திருக்கிறது ஸ்ரீசக்ரலிங்கேஸ்வரர் ஆலயம்!
கோயில் என்றால் தமிழகக் கோயில்களைப் போல, பெரிய மதில்கள், விமானம், பிராகாரங்கள் என்று அமைந்ததல்ல. அதனாலேயே, பளிச்சென்று பலருக்கும் புலப்படவில்லை. என்றாலும், பளிங்குக் கற்களாலான கருவறையில் சிறிய மேடையில் எழுந்தருளியிருக்கிறார் பெருமான். ஐங்கோண வடிவில் அமைந்த மூலஸ்தானம். ஐந்துக்கும் சிவபிரானுக்கும் ஏகத் தொடர்பு உண்டு. சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம், தத் புருஷம், அகோரம் என ஐந்து திருமுகங் கள்; படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்து தொழில்கள். நமசிவாய என்கிற ஐந்தெழுத்து மந்திரம்... என்று நீள்கிறது சிந்தனை.
கருவறையின் வெளியே மேல்பகுதியில், அந்தந்த திசைகளுக்குரிய லிங்கோத்பவர், சக்ரதானர், திரிபுராந்தகர், கல்யாண சுந்தரர், தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்திகளை தரிசிக்கிறோம்.
இந்த மூர்த்திகள் ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு உண்டு. திருமணம் கைகூட வழிபட வேண்டிய மூர்த்தி கல்யாணசுந்தரர். திரிபுராந்தகரை வழிபட்டால், துன்பங்கள் நீங்கும். சக்ரதான மூர்த்தியை வழிபட்டால், வளம் கூடும்; வறுமை அழியும். மங்கலங்கள் பெருக, தோஷங்கள் விலக தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு. இந்த மூர்த்திகள் அனைவரையுமே, சக்ரலிங்கர் சன்னிதியை சுற்றிக் காணும்போது, ‘இவர்கள் வழியே அருள்பாலிப்பது நானே’ என்று அவர் சொல்வது போலவே உணர முடிகிறது.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில் இது. இந்த சக்ரலிங்கேஸ்வரரை வழிபட்டவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர். அம்பிகையின் மீது ஏராளமான பல்வேறு கீர்த்தனைகளைப் பாடிய இவருக்கு, ‘மஹாஷோடசி’ மந்திரத்தை அவரது குரு ஸ்ரீ சிதம்பர சுவாமிகள் உபதேசம் செய்தது; தாம் அடைந்த மந்திரம் சித்தியானதா என்று அறிய கங்கையை நோக்கி தீட்சிதர் கையை நீட்டியது; நீரிலிருந்து அபூர்வமாய் வீணை வெளிப்பட்டு அவர் கைக்கு வந்தது... என்று சங்கிலித் தொடராய் நீள்கின்றன எண்ணங்கள்.
அம்பிகைக்கே உண்டான ஸ்ரீசக்ரம், லிங்கத்தின் பாணத்தில் கவசம் அணிவித்த நிலையில் மின்னுகிறது.
கொல்லூரில் சுவர்ணரேகை படிந்த சுயம்புலிங்கத்தில் இடங்கொண்டாள் அம்பிகை. இங்கே, ஸ்ரீசக்ரத்தை தன் திருமேனியில் தாங்கியிருக்கிறார் பெருமான். அர்த்தநாரீஸ்வரனாக இப்படியும் என்னை தரிசிக்கலாம் என்று உணர்த்துகிறார் போலும்.
அடுத்த முறை காசி செல்லும்போது, ஹனுமன் காட் பகுதியில் அமைந்துள்ள சக்ரலிங்கேஸ்வரரை தரிசியுங்கள். உங்கள் வாழ்க்கைச் சக்கரத்தை சீராக ஓடச் செய்பவர், அங்கேதான் கோயில் கொண்டிருக்கிறார்.
Comments
Post a Comment