மௌஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாக யஜ்ஞோபவீதினம்
பாலேந்துவிலஸன் மௌலிம் வந்தேஹம் கணநாயகம்
(முஞ்ஜப்புல், மான்தோல் இவற்றைத் தரித்திருப்பவரும், ஸர்பத்தை பூணூலாகக் கொண்டவரும், பாலச்சந்திரன் பிரகாசிக்கிற சிரஸை உடையவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான ஸ்ரீ மஹா கணபதியை நமஸ்கரிக்கிறேன்.)
ஒருமுறை பகவான் நாராயணன் அனந்த சயனத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருந்தபோது, அவரது செவிகளிலிருந்து இரு அரக்கர்கள் தோன்றினர். மது, கைடபர் என்ற அவர்கள், வளைந்த கோரைப்பற்களுடன் பயங்கர தோற்றத்துடன் விளங்கினர். இவ்விருவரும் தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பல இன்னல்களைக் கொடுத்து வந்தனர். அச்சமுற்ற பிரம்மதேவன் உள்ளிட்ட இந்திராதி தேவர்கள் திருப்பாற்கடல் சென்று பரந்தாமனிடம் சரணடைந்தனர். ஆனால் அனந்தன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அவர்களின் இன்னல்களை அறிந்த நித்ராதேவி, விஷ்ணுவின் கண் தழுவலை விட்டு விலகிச் சென்றுவிட்டாள்.
கண் விழித்த கேசவன், சூழலை அறிந்தார். அவர்களுக்கு அபயம் கொடுத்தார். பலவித ஆயுதங்களை ஏந்திய வண்ணம் ஊழிகாலத்துப் பிரளயம் போல சங்கநாதம் செய்தார். அதைக்கேட்ட இரு அசுரர்களும் சண்டைக்கு வந்தனர். இதனால் சினம் கொண்ட ஸ்ரீதரன் அவர்களின் மமதையை அடக்க அவர்களோடு போர் தொடங்கினார். பல ஆண்டுகள் இந்த யுத்தம் நீடித்தது. மகாவிஷ்ணுவால் அவர்களை வெல்ல முடியவில்லை. அதைக் கண்ட சிவபிரான் சொன்னார்:
“நாராயணா! போர் புரிய புறப்பட்டபோது, விக்னங்களை போக்கியருளும் விநாயகரை நீர் வழிபடவிலை. அதனால்தான் இப்படி இடையூறு ஏற்பட்டது. இனியாவது பிள்ளையாரைத் துதித்து சண்டையைத் தொடங்கும். பகைவர்களை எளிதாக வெல்லலாம்” என்று சொல்லி, விநாயகரை வழிபட வேண்டிய முறையையும், அவரது சடாக்ஷரமந்திரத்தையும் போதித்தார். உபதேசம் பெற்ற நாராயணன் ஓர் குன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் உச்சியில் அமர்ந்து அமைதியாக ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார்.
அதனால் மனமகிழ்ந்த விநாயகர், விஷ்ணுவின் முன் தோன்றி அவரது விருப்பம் நிறைவேற பல வரங்களை அளித்தார். மீண்டும் யுத்தம் ஆரம்பித்தது.
பல ஆண்டுகள் போராடியும் அந்த அசுரர்கள் சளைக்கவில்லை. தந்திரத்தைக் கையாண்டுதான் முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எம்பெருமான் அவர்களை நோக்கி, “மது, கைடபர்களே! உங்கள் போர்த்திறனைக் கண்டு பூரிக்கிறேன். இருந்தும் நீங்கள் இருவரும் இப்போரில் மடிவது நிச்சயம். எனவே நீங்கள் இறக்கும் முன் உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள்” என்று கூறினார். அதைக்கேட்ட அசுரர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள். “டேய் பகைவனே! யுத்தத்தில் எங்களைத் தோற்கடிக்க முடியாமல் நீதான் திணறுகிறாய்! உனக்கு வேண்டிய வரத்தைக் கேள். நாங்கள் அளிக்கிறோம்” என்று இளக்காரமாகக் கூறினார்கள்.
சுற்றிலும் நீர் நிறைந்து இருந்ததால், நீரில் தங்களை கொல்ல முடியாது என்று அசுரர்களுக்குத் தெரியும். எனவே நீர் இல்லாத இடத்தில் தங்களைத் தோற்கடிக்கலாம் என்று நாராயணனுக்கு வரம் அளித்தனர். இந்த சந்தர்ப்பத்தை சாதகமாகக் கொண்டு, விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு மது, கைடபரைத் தன் அகன்ற மடியில் இருத்தி, சக்ராயுதத்தை அவர்கள் மீது ஏவினார்! செங்கரும்பைத் துண்டிப்பதுபோல் சக்ராயுதம் அவர்களது உடல்களை துண்டித்தது. மது, கைடபர் இருவரும் உயிர் துறந்தனர்.
எந்தக் குன்றின்மேல் அமர்ந்து ஜபத்தில் விஷ்ணு ஈடுபட்டாரோ அவ்விடத்திலேயே அவர், ஒளிமிகுந்த பளிங்கு கற்களால் நான்கு கோபுர வாயில்கள் கொண்ட ஓர் அழகிய ஆலயத்தை நிர்மாணித்தார். கண்டகி நதியிலிருந்து எடுத்து வரப்பட்ட கருங்கல்லில் விக்னேஸ்வரர் சிலையை வடித்து, பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். நாராயணனுக்கே சித்தி கிடைத்ததால், அவ்விடம் ‘சித்தி டேக்’ என்று பெயரடைந்தது. கணபதி ‘சித்தி விநாயகர்’ என்ற திருநாமம் பெற்றார்.
திருமாலால் எழுப்பப்பட்ட அத்திருக்கோயில், சில காலம் சென்றபின் பெருந்தீ விபத்தில் முழுவதும் சேதமடைந்துவிட் டது. கூரையின்றி வெயிலிலும், மழையிலும் அனாதரவாக விடப்பட்ட சித்தி விநாயகர், அங்கு மாடு மேய்க்கும் சிறுவன் கனவில் ஒருமுறை தோன்றி, தான் தனித்திருப்பதாக கூறினார். அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடுத்த அச்சிறுவன் இவ்விஷயத்தைக் கிராமத்தாரிடம் கூறவே, அவர்கள் ஒன்று சேர்ந்து தற்காலிகமாக ஒரு கோயிலை எழுப்பினர். பேஷ்வா காலத்தில்தான் சித்தி விநாயகருக்கு மீண்டும் கட்டடமாக கோயில் எழும்பியது.
சித்திடேக்கில் ஒரு குன்றின்மேல் கிழக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறது கோயில். 15 அடி உயரமும் 10 அடி அகலமும் கொண்ட மேடையில் இந்தௌர் ராணி அகல்யா பாய் ஹோகாரினால் சித்தி விநாயகரைச் சுற்றி கருவறை கட்டப்பட்டது. இம்மேடையை ஒட்டி ஒரு பெரிய மண்டபம் உள்ளது. கருவறையில் சித்தி விநாயகர் கம்பீரமாக அமர்ந்து தரிசனம் அளிக்கிறார்.
வலம்புரி விநாயகரான இச்சிலை சுயம்பு என்று சிலர் கூறுகிறார்கள். பெருவயிறும், சிறு முகமும் கொண்ட இக்கணபதியின் இரு மருங்கிலும் ஜய விஜயர்களின் வெண்கல சிலைகள் தென்படுகின்றன. சித்தி விநாயகரின் மடி மீது அமர்ந்துள்ள சித்திபுத்தி தேவியரின் உருவங்கள் கூர்ந்து நோக்கினால்தான் தென்படும்.
இவ்விநாயகரையோ அல்லது இக்கோயிலையோ வலம் வருவதற்கில்லை. அதற்கு வேண்டிய வசதி இல்லாததே காரணம். வலம் வரவேண்டின் கோயில் உள்ள குன்றைதான் பிரதிட்சணம் செய்ய வேண்டும். சுமார் 5 கி.மீ. தூரமுள்ள பிரதிட்சணத்தை ஆர்வமுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏற்கிறார்கள். இவ்வாறு வலம் வந்து பலன் பெற்ற ஓர் அரிய நிகழ்ச்சி அங்கு பரவலாகப் பேசப்படுகிறது.
புனேயில் பேஷ்வாவின் சேனாதிபதியாக இருந்த ஹரிபந்த் படுகே, திடீரென்று பதவி இழந்து தவித்தார்! பறிபோன பதவியை அடைய, இப்பெருமானை வேண்டிக் கொண்டார். அவ்வேண்டுதலின்படி ஒரு நாளைக்கு இக்குன்றை 21 முறை வலம் வருவது என்றும், அம்மாதிரியான பிரதிட்சணம் 21 நாட்கள் தொடர்ந்து செய்வது என்றும் சங்கல்பம் செய்துகொண்டு பிரார்த்தனையைத் தொடங்கினார். சரியாக 21ம் நாள் 21வது தடவை பிரதிட்சணம் முடிவுறும் தருவாயில், அரசாங்க தூதுவன் ஒருவன் அவரை அணுகி, பேஷ்வா அவரை மீண்டும் சேனாதிபதி பதவியில் அமர்த்திய செய்தியைக் கூறினான். ஹரிபந்த் படுகேவுக்கு மயக்கம் வராத குறை! விநாயகப் பெருமானின் அருளை வியந்து, மீண்டும் அப்பதவியில் அமர்ந்தாராம்.
வைகறை பூஜை, கிச்சடி நைவேத்யம், பஞ்சாமிர்த பூஜை, மகா நைவேத்யம், மூன்றாம் கால பூஜை, தீப ஆரத்தி முதலிய வழிபாடுகள் காலை 4 மணி முதல் இரவு 9.15 மணி வரை நடத்தப்படுகின்றன. இரவில் நடைபெறும் தீப ஆரத்தி மெய்சிலிர்க்க வைக்கிறது. இதன்பின் நடைசார்த்தப்பட்டுவிடும்.
வட இந்திய பஞ்சாங்கத்தின்படி பாத்ரபதம் (ஆவணி) மற்றும் மாகம் (தை) மாதங்களின் சுக்ல பக்ஷ பிரதமை முதல் பஞ்சமி வரையில் ஐந்து நாட்களுக்கு அங்கே பெருந்திருவிழா நடை பெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்தடேக்கில் அத்தினங்களில் கிராமத்தையொட்டி அழகாக காட்சி அளிக்கும் பீமா நதியில் புனித நீராடி குன்றில் குடிகொண்டுள்ள வேழ முகத்தோனை பிரார்த்திக்கிறார்கள். அப்போது மூன்று நாட்களுக்கு மகா பூஜையும், மகா நைவேத்தியமும் கணேசருக்கு தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மூன்று இரவுகள் சித்தி விநாயகர் பல்லக்கில் பவனி வரும் காட்சியைக் காண இரு கண்கள் போதாது.
இந்த விநாயகர் என்றும் விழிப்பு நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. அறியமை என்னும் உறக்கத்தில் இருக்கும் நமக்கும் விழிப்பைத் தர, சித்தி விநாயகரை வணங்கித் துதிப்போம்.
சித்திடேக் கிராமம் அழகான பீமா நதிக்கரையில் உள்ளது. இதை அடைய பல மார்க்கங்கள் உண்டு. சென்னை-மும்பை வழியில் ‘தோண்ட்’ ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 18 கி.மீ. தொலைவிலுள்ள சித்திடேக்கை சுலபமாக அடையலாம். பூனாவிலிருந்து இத்தலத்துக்கு அடிக்கடி பேருந்துகள் போகின்றன.
Comments
Post a Comment