வாழ்க்கை

லகில் பிறந்த எல்லா உயிர்களும் இன்புற்று வாழவே விரும்புகின்றன. வாழ்க்கை, வலிகள் தரும் ஜீவ மரணப் போராட்ட மாகத் தொடர்ந்தாலும், விலங்கிலிருந்து மனிதன் வரை, வாழ்க்கை நேசத்தை விட்டு விடுவதில்லை. ஆண்டவன் படைப்பில் அதிகமாக அழுவதும் அடுக்கடுக்கான துன்பங்களில் மிக மோசமாக அலைக்கழிக்கப்படுவதும் மனித இனம் மட்டுமே! மனிதரைப் போல் பிற உயிர்கள், தம் தவறான செயல்களால் வாழ்வை சிக்கலாக்கிச் சீரழிவதில்லை. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தேவைகள் குறைவு. எனவே, அவற்றுக்கு வந்து சேரும் வாழ்க்கைத் துயரங்களும் குறைவு. ஆசையும் கனவும் தேவையும் மனிதனுக்கு நிறைவின்றி நீண்டு கொண்டே போவதால், துன்பங்களும் நிழலாய்த் தொடர்ந்து வருகின்றன.
விலங்குக்கும் பறவைக்கும் சிரிக்கத் தெரியாது. ஆனால், அவை அன்றாடம் அழுவது கிடையாது. சிரிக்க முடிந்த மனித இனம்தான் மண்ணில் கண் மூடும் கடைசிக் கணம் வரை கண்ணீரில் கரைகிறது. மனிதரால் ஒரு பூவைப் போல் மனம் விட்டுப் புன்னகை பூக்க முடியவில்லை; ஒரு பறவையைப் போல் உல்லாசமாகப் பாடித் திரிய இயலவில்லை; ஒரு மரத்தைப் போல் மரண பயம் இல்லாமல், காற்றின் தழுவலில் மகிழ்ச்சியுடன் தலையசைத்துப் பூ, காய் மற்றும் கனியைப் பிறருக்குத் தந்து பிறவிப் பயன் அடையத் தெரியவில்லை. வாழும் கலையை அறியாத வரைக்கும், மண்ணில் நல்ல வண்ணம் வாழ முடியாது.
'ஆயிரம் கோடி வண்டிகளில் தானியம் வந்து குவிந்தாலும், தனக்குத் தேவை ஒரு படிதான் என்றும், பரந்து விரிந்த மாளிகை அமைந்தாலும் தான் படுக்கும் இடம் ஆறடி நிலம்தான் என்றும், எவனுக்குத் தெளிவு பிறக்கிறதோ, அவனே வாழத் தெரிந்தவன். பஞ்சணையும் வெறுந்தரையும், அறுசுவை உணவும் அரிசிக் கஞ்சியும் எவனுக்கு ஒன்றுபோல் படுகிறதோ அவனுக்குத் துன்பம் இல்லை. வெற்றி- தோல்வி, லாபம்-நஷ்டம், மகிழ்ச்சி- துயரம் ஆகியவை எவனுக்குச் சமமாகத் தோன்றுகிறதோ அவனுக்குப் பிரச்னை இல்லை...' என்கிறது மகாபாரதத்தில் சாந்தி பருவம்.

பராசரரிடம், 'இகத்திலும் பரத்திலும் எல்லா உயிர்களுக்கும் நன்மையைத் தருவது எது?' என்று கேட்டார் ஜனகர். 'தன்னால் செய்யப்பட்ட தருமமே ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைத் தரும். விதையின்றி எதுவும் விளை யாது. நல்ல கர்மாவைச் செய்யாமல் சுகத்தை அடைய முடியாது. அடக்கம், பொறுமை, தைரியம், வலிமை, உண்மை, நாணம், உயிர்களைக் கொல்லாமை ஆகிய நற்பண்புகளே வாழ்வில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டியவை' என்று விளக்கினார் பராசர முனிவர்.
நதியில் வீசியெறியப்பட்ட கல், தரையில் தங்கி விடுகிறது. கரையோர மரத்திலிருந்து காற்றில் உதிர்ந்த இலை, நதியின் பிரவாகத்தில் ஆனந்தமாக தவழ்ந்து செல்கிறது. கல்லைப் போல் ஆசைகள் கனக்கும் மனிதன், வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர முடியாமல், ஒரே இடத்தில் விழுந்து கிடக்கிறான். இலையைப் போல் லேசாக இருப்பவன், இறுதி வரை இன்பமாக நடக்கிறான். உயர உயரப் பறக்க வேண்டும் எனும் வெறியில் நெறி தவறிப் பள்ளத்தில் விழுந்தவர்கள் நம்மில் பலர்.
உயர்வு குறித்து அலைபாயும் மனிதர்கள் தெளிவடைய காஞ்சி முனிவர் ஒரு கதை சொன்னார். 'திருமணப் பருவத்தில் உள்ள பெண்ணின் பெற் றோர், உறவினருள் ஓர் இளைஞனை மாப்பிள்ளை யாகத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவளோ, 'எல்லா மனிதர்களையும் விட உயர்ந்தவன் யாரோ, அவனையே மணப்பேன்' என்று அடம் பிடித் தாள். உயர்ந்தவனைக் கண்டறியும் தேடலில் அவள் ஈடுபட்டாள். அரசன் பல்லக்கில் பவனி வரு வதைப் பார்த்தபோது, 'அரசனே அனைவரிலும் உயர்ந்தவன்' என்று நினைத்தாள். ஆனால், அந்த அரசன் வழியில் வந்த துறவியைப் பார்த்து, பல்லக்கில் இருந்து இறங்கிப் பணிவுடன் வணங்கிய போது, அவளுக்குத் துறவியே உயர்ந்தவன் என்று தோன்றியது. துறவியை அவள் பின்தொடர்ந்தாள். வழியில் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையார் முன்பு துறவி, பயபக்தியுடன் தோப்புக் கரணம் போட்டதைக் கண்டவள், பிள்ளையாரே பெரியவர் என்று முடிவுக்கு வந்தாள்.
பிள்ளையார் இருக்கும் இடத்துக்கு வந்த நாய் ஒன்று, எந்த அச்சமும் இன்றி அந்த இடத்தை அசிங்கம் செய்தது. 'விநாயகரை விட தெரு நாய் உயர்ந்ததா?' எனும் வியப்பு அந்தப் பெண்ணுக்கு! அப்போது சிறுவன் ஒருவன், அந்த நாயின் மீது கல்லெறிந்ததும், அது வீறிட்டலறியபடி அங்கிருந்து ஓடியது. பிள்ளையாரையே அலட்சியப்படுத்திய நாய் ஒரு சிறுவனிடம் அஞ்சி ஓடியதும், அவள் சிறுவனை உயர்ந்தவனாகச் சிந்தித்தாள். அப்போது, 'நாயை ஏன் அடித்தாய்?' என்று இளைஞன் ஒருவன் வந்து சிறுவனை மிரட்டினான். 'இனி இதுபோல் செய்ய மாட்டேன்; மன்னித்துவிடுங்கள்' என்று சிறுவன் அழுதான். 'நான் பார்த்தவர்களில் இந்த இளைஞனே உயர்ந்தவன். இவனையே மணப்பேன்' என்று தீர்மானித்துப் பெற்றோரிடம் சொன்னாள். அவள் காட்டிய இளைஞனைப் பார்த்த பெற்றோர், 'உனக்காக நாங்கள் நிச்சயித்தது இவனைத்தான்!' என்று சொல்லி நகைத்தனர். இந்தக் கதையைச் சொன்ன பரமாச்சாரியர், 'அந்தப் பெண்ணைப் போல்தான், நாம் அனைவரும் வாழ்வில் எதையெதையோ உயர்ந்ததென்று எண்ணி, இயல்பாக இருப்பதை விட்டு எங்கெங்கோ அலை பாய்கிறோம்' என்றார்.
வாழ்க்கையைப் பற்றிய உண்மை ஞானம் இல்லாததால்தான் மனிதர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர். ஆண்- பெண் உறவைத் தவிர உலகில் வேறெதுவும் இல்லை என்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகின்றனர். திருப்தியுறாத ஆசைகளுடன் 'தான்' என்ற அகந்தையை வளர்த்து, தீய நோக்கங் களுடன் செயல்படுகின்றனர். ஆசை விரித்த வலை யில் வீழ்ந்து, 'இது என்னுடையது', 'இது என்னால் சாதிக்கப்பட்டது' 'எனக்கு நிகர் யார்?' என மன மயக்கமுற்று மீண்டும் மீண்டும் பிறவிச் சுழலில் சிக்குகின்றனர்.
'மனிதன் உடலெடுத்தபோது அதைச் சார்ந்து சுகங்களும், துக்கங்களும் உருவெடுக்கின்றன. ஒரு நீண்ட பயணத்தின் நடுவில் ஒருவன் விடுதியில் தங்கும்போது, அவனுக்கு அங்கே சிலர் அறிமுகம் ஆகின்றனர். அந்த விடுதியிலிருந்து அவன் புறப்பட்டதும் அறிமுகமானவர்கள் பிரிகின்றனர். அதே போன்றுதான் வாழ்க்கையில் உண்டாகும் உறவு முறைகள் வந்து போகக்கூடியவை. தாய்- தந்தை, மனைவி- மக்கள், உடன் பிறந்தோர் என்ற எல்லா உறவுகளும் நடைப்பயண நட்புகள் என்று தெளிந்து, பாசவலையில் சிக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்கிறார் வியாசர்.
'ஓர் அறையில் நீங்கள் அமர்ந்தபடி மரங்கள், மலர் களின் நிறங்கள், காக்கை கரைவது, நாய் குரைப் பது, மனிதர்கள் நடந்து செல்வது, ஆதவனின் அஸ்தமனக் காட்சி, நட்சத்திரங்கள் என்று வெளியே இருப்பதை அறிய முடிகிறபோது, உங்களுக்குள்ளே இருக்கும் எண்ணங்களை, உணர்வுகளை, நோக்கங் களை, உந்துதல்களை, தவறான அபிப்ராயங்களை, பொறாமையை, பேராசையை அறிந்துகொள்ள முடியும். அடுத்தவருடனான உறவில் உங்களது எதிர் வினை... உங்களுக்குள் இருக்கும் விருப்பம், நம்பிக்கை, கவலை, அச்சம் ஆகியவற்றைப் பொருத்தே அமைகிறது' என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. 'நாம் விரும்பும் பாதுகாப்பு நமக்குக் கிடைக்காதபோது வாழ்க்கையே போராட்டமாகிறது. சமூகத்திலும், சம்பிரதாயங்களிலும், குடும்ப உறவுகளிலும் நாம் பாதுகாப்பைத் தேடுகிறோம். ஆனால் வாழ்க்கையோ நமது பாதுகாப்புச் சுவர்களைத் தகர்த்துக் கொண்டே போகிறது' என்ற உண்மையைத் தோலுரிக்கிறார் ஜே.கே.
'ஒரு நிமிட அபத்தம்' என்ற நூலில், வாழ்வின் அர்த்தம் உணர்த்தும் அழகிய செய்தி ஒன்று உண்டு. மாஸ்டர் ஒருவர் பேருந்தில் பயணித்தார். ஓரிடத்தில் பேருந்து சிறிது நேரம் நின்றது. அதிலிருந்து இறங்கிய மாஸ்டர் அருகிலிருந்த உணவு விடுதிக்குள் நுழைந்தார். அங்கு ருசி மிக்க சூப் மற்றும் கறி வகைகள் கவர்ச்சிகரமாக வைக்கப்பட்டிருந்தன. மாஸ்டர் சூப் ஆர்டர் செய்தார். பரிமாறுபவர் வந்து, 'இப்போது வந்து நிற்கும் பேருந்துப் பயணியா நீங்கள்?' என்று கேட்டார். 'ஆமாம்' என்று மாஸ்டர் தலையசைத்ததும், 'உங்களுக்கு சூப் கிடையாது' என்றார் பரிமாறுபவர். 'போகட்டும். வேக வைத்த அரிசியும், கறியும் கொடுங்கள்' என்றார் மாஸ்டர். அதற்கும் மறுத்த அந்த மனிதன், 'ஏதாவது ரொட்டி, பிஸ்கட் சாப்பிடுங்கள். இங்குள்ள உணவுப் பொருள்களை நான் காலையில் இருந்து சிரமப்பட்டுத் தயாரித்திருக்கிறேன். நீங்கள் அதன் ருசி அறியாமல் ஐந்து நிமிடங் களில் சாப்பிட்டு விடுவீர்கள். ருசித்துச் சாப்பிட நேரம் இல்லாதவர்களுக்கு நான் உணவு பரிமாறுவதில்லை' என்றான்.
பயணத்தின் நடுவில் பேருந்தில் இருந்து இறங்கி, அவசரம் அவசரமாகப் பசியாறுவது போன்றே நாம் ஒவ்வொருவரும் எந்திர கதியில் வாழ்வின் ருசி அறியாமல், கண்டதே கண்டும், கேட்டதே கேட்டும், உண்டதே உண்டும், உடுத்ததே உடுத்தும் என கடவுள்
தந்த நாட்களைக் கழித்து வருகிறோம். மண்ணில் நல்ல வண்ணம் எப்படி வாழ்வது?
எந்த உயிருக்கும் தீமை செய்யாமல், எல்லோரிட மும் நட்பும் கருணையும் கொண்டு, அகந்தையைத் துறந்து, இன்ப- துன்பங்களைச் சமமாய் ஏற்று, அதீத ஆசையை விட்டொழித்து அறத்தின் பாதையில் நல்ல வண்ணம் யாரும் வாழலாம்.

Comments