சூரியோதயமா? அருணோதயமா?

ந்து தர்ம புராணங்களின்படி ஒற்றைச் சக்கரம் உள்ள தேரில் அமர்ந்து, வானவில்லின் வர்ணங்களாலான ஏழு குதிரைகள் இழுக்க விண்வெளியில் வலம் வந்து, தன் வெப்பத்தாலும் வெளிச்சத்தாலும் உலகைக் காக்கும் அனுக்ரஹ தேவதையே சூரியன். ஸ்ரீமன் நாராயணரின் அம்சமான அவரை, ஸ்ரீசூரிய நாராயணர் என்று பூஜித்து வணங்குகிறோம்.
அவர் நவக்கிரகங்களின் நடுநாயகன். மனித ஜாதியின் அறிவு, ஆற்றல், புத்தி, நினைவு, பகுத்தறிவு ஆகிய சக்திகளுக்கு அவரே ஆதார தேவதை. மகரிஷி காஸ்யப முனிவருக்கும் அவரின் மனைவி அதிதிக்கும் மகனாகத் தோன்றியவர். உலகில் இருளை நீக்கி உயிரினங்கள், தாவரங்கள் ஆகிய அனைத்தும் உயிர்
வாழ ஆதார சக்தியாக இருப்பவரும் அவரே! பஞ்ச பூதங்களில் அக்னியாக இருப்பவர். அவருக்கு ஆதித்யன் என்ற பெயரும் உண்டு. சூரிய உதயத்தை அருணோதயம் என்றும் குறிப்பிடுவார்கள். இது ஏன் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

சூரிய பகவானுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவர் அருணன்; மற்றவர் கருடன். காஸ்யப முனிவருக்கு திதி, அதிதி மட்டுமின்றி கத்துரு, வினதை ஆகிய மனைவியரும் உண்டு. உலகில் தோன்றிய சர்ப்பங்களுக்குத் தாய் கத்துரு. வினதைக்குக் கால்களே இல்லாத மனித உருக்கொண்ட ஒரு குழந்தையும், கழுகின் தலை வடிவமும், மனித உடலும் கொண்ட ஒரு குழந்தையும் பிறந்தனர். அவர்களே அருணன் மற்றும் கருடன். இவர்களில் கால்கள் இல்லாத அருணனே சூரியனின் தேரோட்டியானான். அதனால்தான் சூரிய உதயத்தை அருணோதயம் என்று குறிப்பிடுகிறோம்.
அருணன் சூரியபகவானுக்குத் தேரோட்டியான வரலாற்றைக் காண்போம்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டி, பாற்கடலைக் கடைந்தனர். முதலில் விஷம் தோன்றியது. சிவபெருமான் அதனை உண்டு, தேவர்களையும் அசுரர்களையும் காத்தருளினார். அதைத் தொடர்ந்து, அமிர்தம் தோன்றியது. ஸ்ரீமஹாவிஷ்ணு மோகினி வடிவெடுத்து வந்தார். நல்லவர்களுக்கு மட்டும் மரணமில்லா வாழ்வு தர வேண்டும் எனக் கருதி அமிர்தத்தை முதலில் தேவர்களுக்கு மட்டுமே வழங்கினாள் அந்த மோகினி. அப்போது அசுரன் ஒருவன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே நின்று, அமிர்தத்தைப் பெற்றுப் பருகிவிட்டான்.
அதனை சூரிய- சந்திரர்கள் மூலம் அறிந்ததும், மோகினி அவனது சிரசைத் துண்டித்து விட்டாள். இருப்பினும், அமிர்தம் அசுரனின் உடலில் கலந்து விட்டதால், வெட்டுப் பட்ட தலை ஒரு பாம்பின் உடலைப் பெற்று உயிர் பெற்றுவிட்டது; வெட்டுப் பட்ட உடல் ஒரு பாம்பின் தலையைப் பெற்று உயிர் பெற்றது. அவர்களே ராகு, கேது எனும் சாயா கிரகங்களாகி, நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றனர்.
தங்களை மோகினியிடம் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களைப் பழிவாங்க அவர்களுக்குப் பகைவர்கள் ஆனார்கள் ராகுவும் கேதுவும். கிரஹண வேளைகளில் அவர்கள் சூரிய- சந்திரர்களை மறைத்து அவர்களின் ஒளியும் சக்தியும் இல்லாமல் செய்தனர்.
தொடர்ந்து இந்தப் பகையால் பாதிக்கப்பட்ட சூரியன், ஒருமுறை கடும் கோபம் கொண்டார். அப்போது அவர் விஸ்வரூபம் எடுத்தார். அவர் வீசிய அக்னிக் கதிர்கள் ஏழுலகங் களையும் சுட்டெரிக்க ஆரம்பித்தன. எங்கும் அக்னி ஆறு பெருக்கெடுத்து ஓடியது. எரிமலைகள் அக்னிக் குழம்பைக் கக்கின. கடலே வற்றும் அளவுக்கு வெப்பம் தாக்கியது. தேவர்கள் கலங்கி நின்றனர்.
ஆபத்துகள் வரும்போது அனைவரும் ஸ்ரீமந் நாராயணரிடம் சென்று முறையிடுவதே வழக்கம். அந்த நாராயணனே கோபத்தீயைக் கக்கும் போது யாரிடம் முறையிடுவது? இதனை அறிந்த பிரம்மதேவன் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டி, அகில உலகங்களையும் காக்க ஒரு வழி செய்தார். சுட்டெரிக்கும் சூரியக் கதிர்கள் அண்டசராசரங்களில் பரவி அழிவை ஏற்படுத்தாமல் இருக்க, சூரியனுக்கு ஒரு திரை போட முடிவு செய்தார். அந்தத் திரைதான் சூரிய ரதம். அதனை ஓட்டுவதற்கு சூரியனின் சகோதரனான அருணனை நியமித்தார். ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்களைக் குதிரைகளாக்கி, சூரியனுக்கு முன்னே நிறுத்தினார். குதிரைகளைச் செலுத்தும் சாரதியான அருணன் அவற்றின் பின்னே அமர்ந்தார். இவர்களுக்குப் பின்னே சூரிய தேவனை அமரச் செய்தார் பிரம்மன்.
தேரும், வண்ணக் குதிரைகளும், அருணனும் சூரியனுக்கு ஒரு கவசமாகப் போட்டது போல் அமைந்ததால், சூரியனின் வெப்பக் கதிர்களிலிருந்து ஜீவராசிகள் காக்கப்பட்டனர். சூரியன் உதிக்கும் முன்பே கீழ் வானில் தோன்றும் வர்ண ஜாலங்கள் உலகை விழித்தெழச் செய்கின்றன. சூரியனுக்கு முன்னே உலகுக்குத் தோன்றுவது அருணன்தான். அதனால்தான் அதிகாலை நேரத்தை அருணோதயம் என்கிறோம். தவம், தியானம் மற்றும் பிரார்த்தனைக்கு உகந்த காலம் அது. கோபத்தால் கொதித்தெழுந்த சூரியன், தனது தேர் மற்றும் சாரதியின் சக்தியால் சாந்தி அடைந்தான்.
அருணனுக்கு சூரியனின் அனுக்ரஹம் பூரணமாகக் கிடைத்தது. ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனைப் 'புத்திரகாரகன்’ என்று சொல்வார் கள். குழந்தைச் செல்வங்களை நல்கவல்ல அனுக்ரஹ தேவன் சூரியன். அதனால், அருணனுக்கு நான்கு குழந்தைச் செல்வங்களைப் பெறும் பாக்கியம் கிடைத்தது. இது பற்றிய விவரம் வால்மீகி ராமாயணத்தில் கூறப்படுகிறது.
ராமாயணத்தில் முக்கிய பங்கு வகித்த ஜடாயு, சம்பாதி எனும் கழுகு வடிவம் கொண்ட தேவர்கள் அருணனின் புதல்வர்களே. சீதாபிராட்டியை ராவணன் தூக்கிச் சென்ற போது, அவனோடு போராடி, அவனால் சிறகுகள் வெட்டப்பட்டு வீழ்ந்து, உயிர் துறக்கும் முன் இந்தச் சம்பவத்தை ராம- லட்சுமணருக்கு எடுத்துக் கூறி பெரும் தியாகம் செய்த ஜடாயுவை தன்னுடைய தந்தைக்கு நிகராகப் போற்றி வணங்குகிறார் ஸ்ரீராமர்.
ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, தான் இருந்த இடத்திலிருந்து எழுந்து பறக்கமுடியாத நிலையில் இருந்தார். எனினும், கண்ணுக்கெட்டாத வெகு தூரம் வரையிலும் பார்க்கும்படியான பார்வை தீட்சண்யம் பெற்றிருந்தார் அவர். அவரே சீதை இருக்குமிடத்தை அனுமன், சுக்ரீவன் முதலா னோர்க்கு தெரிவித்து, அனுமன் இலங்கை செல்ல வழிவகுத்து தந்தவர். இவ்வாறு ஸ்ரீராம சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இரண்டு புதல்வர்களின் தந்தை என்ற பெருமை அருணனுக்கு உண்டு. ஜடாயு, சம்பாதி தவிர, அருணனுக்கு வேறு இரண்டு புதல்வர்களும் இருந்தனர். அது பற்றிய சுவையான சம்பவம் ஒன்று சூரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருமுறை நாராயினி என்ற பதிவிரதையின் சாபத்தில் சூரியனே உதிக்காமல் போகும் நிலை ஏற்பட்டது. உலகெங்கும் இருள் சூழ்ந்தது. சூரிய ரதம் நின்றது. அப்போது, அருணன் சூரியனின் அனுமதியுடன் பிரம்மலோகம் சென்று, பிரார்த்தனை செய்துவரப் புறப்பட்டார்.
தேவலோகம் சென்று இந்திரனை முதலில் வழிபட நினைத்தார் அருணன். எனவே, அழகான அப்சரஸ் வடிவை எடுத்து, அருணாதேவி என்ற பெயருடன் இந்திரனைச் சந்தித்தார். அவள் அழகில் மயங்கினான் இந்திரன். அவர்கள் இருவருக்கும் ஒரு தெய்வீக குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை அகல்யாதேவியிடம் விட்டுவிட்டு, மீண்டும் தனது ரதத்துக்கு திரும்பிய அருணன்,  சூரிய பகவானிடம் நடந்ததை விவரித்தார். அருணனின் எடுத்த அப்சரஸ் வடிவை சூரியபகவானும் பார்க்க விரும்பினார். எனவே, அருணன் மீண்டும் அருணாதேவியாக மாற, சூரிய தேவனின் அனுக்ரஹ பார்வையில் ஒரு தெய்வீக குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையையும் அகல்யாதேவியிடம் விட்டுவிட்டு, தனது தேரோட்டும் பணியைத் தொடர்ந்தார் அருணன்.
இந்திரனுக்கும் சூரியனுக்கும் பிறந்த தெய்வீகக் குழந்தைகளால் தன் மனைவி அகல்யாவின் தவம் கெட்டுவிடக் கூடாது எனக் கருதிய கௌதம ரிஷி, அந்தக் குழந்தைகளை வானர வடிவம் பெறுமாறு மாற்றிவிட்டார்.
இதை அறிந்த இந்திரன் இரண்டு குழந்தைகளையும் எடுத்துச்சென்று, கிஷ்கிந்தை என்ற கானகத்தில் வளர அருள்புரிந்தான். இந்திரனின் புதல்வன்தான் வாலி. சூரியனின் புதல்வன்தான் சுக்ரீவன். நீண்ட வாலைக் கொண்டவன் வாலி. அழகிய கழுத்தைக் கொண்டவன் சுக்ரீவன். ஸ்ரீராம காவியத்தில் இருவருக்குமே சிறப்பான இடம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே!
ஸ்ரீராமன் சூர்ய வம்ஸத்தில் உதித்தவர். அன்றாடம் சூரியனை வணங்கியவர். அதனால்தானோ என்னவோ, அந்த ராமனுக்கு சேவை செய்து ஸ்ரீராம காவியத்தில் அழியாத இடம் பெற நினைத்த அருணனின் எண்ணம் நிறைவேறும் விதமாக அவரது நான்கு புதல்வர்களும் ஸ்ரீராம சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.

Comments