மாப்பிள்ளை சாமி

உமாதேவியை சிவபெருமான் திருமணம் செய்துகொண்ட தலங்கள் பல உண்டு. அவற்றுள் மாப்பிள்ளை சாமி என்னும் திருநாமம் இறைவனுக்கு வழங்கப்படும் ஒரே தலம் திருவீழி-மிழலை. காத்யாயன முனிவரின் புதல்வியாக அவதரித்த உலகநாயகியை இறைவன் மணந்துகொண்ட தலமிது.
காழி பாதி வீழி பாதி என்று கூறுவர். காழி எனும் சீர்காழியும், வீழியெனும் திருவீழிமிழலையும் திருஞான சம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோருக்கு இறைவன் பொற்காசு அருளிய தலமிது.
அவர்கள் இத்தலத்தில் தங்கியிருந்தபோது கடும் பஞ்சம் நிலவியது. மக்களின் பசி தீர்க்க அப்பருக்கும் ஞானசம்பந்தருக்கும் தினமும் ஒரு பொற்காசை இறைவன் வழங்கினார். அதைக் கொண்டு இருவரும் அடியவர்களுக்கு அன்னதானம் செய்து வந்தனர். ‘வாசி தீரவே காசு நல்குவீர்’ என்னும் அற்புதப் பதிகத்தை ஞானசம்பந்தர் இங்குதான் பாடினார்.
ஜலந்தரனை வதம் செய்ய வலிமைமிக்க சக்கர ஆயுதம் ஒன்றை சிவபெருமான் உருவாக்கினார். இத்தலத்துக்கு வந்து அந்தச் சக்கரத்தைப் பெற்றார் திருமால்.
இவை மட்டுமல்ல;
“பண்ணமரும் மென்மொழியார்
பாலகரைப் பாராட்டும் ஓசை கேட்டு
விண்ணவரும் வியப்பெய்தி
விமானத்துடன் இழியும்
மிழலையாமே”
என்று, தேவாரப் பாடலில் இத்தலத்தைப் பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. இங்குள்ள தாய்மார்கள், இனிமையான குரலில் நீலாம்பரி என்னும் மேகராகக் குறிஞ்சி ராகத்தில் தங்கள் குழந்தைகளுக்குத் தாலாட்டு பாடுகிறார்கள். ஆகாயத்தில் புஷ்பக விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் தேவர்கள், அந்தத் தாலாட்டு பாடல்களின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்து, விமானத்துடன் இங்கே இறங்கி வந்துவிடுகிறார்களாம். இது அப்பர் பெருமானின் கற்பனை என்று கூறிவிட முடியாது. இத்தல விமானத்துக்கே விண்ணிழி விமானம் என்றுதான் பெயர்.
இங்கு மூலவரான விழியழகீசர், நேத்ரார்பணேஸ்வரர், வீழிநாதர் என்னும் ஈசன் சன்னிதி மேல் உள்ள விமானம்தான் விண்ணிழி விமானம். அதாவது, விண்ணி லிருந்து கீழே இறங்கி வந்த விமானம் என்று பொருள். பதினாறு சிங்கங்கள் தாங்கிப் பிடிப்பதுபோல் அமைந்துள்ள இந்த விமானம் தங்கக் கலசங்களுடன் ஜொலிக்கின்றது. சீர்காழியில், ஞானசம்பந்தருக்கு இறைவன் காட்சியருளியதும் விண்ணிழி விமானத்தில்தான்.
மூலஸ்தானத்தில், மூலவரின் பின்னே, சுதை வடிவில் திருமணக் கோலத்தில் பெருமானையும் தேவியையும் காண்கிறோம். திருக்கல்யாணம் நடைபெற்ற தலம் என்பதால் அரசாணிக்கால் தூணும், பந்தக்கால் என்னும் தூணும் இங்கே உள்ளன. தனி மண்டபத்தில் உற்சவத் திருமேனியாக ‘மாப்பிள்ளை சாமி’ என்னும் பெயருடன் கல்யாண சுந்தரேஸ்வரர் காட்சியருள்கிறார். இவருக்கு மாலை அணிவித்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்து சாம்பலாக்கிய புராணக் கதை அனைவருக்கும் தெரியும். அந்த மன்மதனை மீண்டும் பிழைத்து எழுந்து வரச் செய்த தலம் இது. இக்கோயிலில் அம்பாளான அழகிய முலையம்மனை தரிசிக்கும்போது, ‘ரதி ப்ரியாயை நம, ரதிரூபாயை நம’ என்னும் லலிதா சஹஸ்ரநாம வரிகள் நமக்கு நினைவுக்கு வரும். இத்தலத்து ஈசனுக்கு விளாம் பழம் நிவேதனம் செய்து, அதை நாம் உண்டால் தீராத நோய் நொடிகள் தீரும்.
தில்லை மூவாயிரவர் என்பதுபோல், திருவீழிமிழலை ஐந்நூற்றுவர் என்னும் 500 வேத விற்பன்னர்களால் பூஜிக்கப் பட்ட தலம் இது. தல விருட்சம் வீழிச் செடி. அதனால்தான் திருவீழிமிழலை என்று தலத்துக்குப் பெயர். விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பத்ம தீர்த்தம், குபேர தீர்த்தம், திரிவேணி தீர்த்தம் என்று பல புனித நீர்நிலைகள் இங்குள்ளன.
பிரம்மன், பிட்சாடணர், வசிஷ்டர், காமதேனு, ரதிதேவி உட்பட பலர் வழி பட்டு பேறுபெற்ற ஸ்தலம். அப்பர், திரு ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பட்ட தலம். சேந்தனாரின் திருவிசைப்பாவிலும், அருணகிரிநாதரின் திருப்புகழிலும் இத்தலம் பற்றிய பாடல்கள் உள்ளன. திருவாவடுதுறை ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ள கோயில்.
தல விநாயகர் படிக்காசு பிள்ளையார். ஈசன் வழங்கிய பொற்காசுகளை அப்பருக்கும், ஞானசம்பந்தருக்கும் வழங்கியவர் இவர்தான். ஒரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றார்.
ஆவுடையார் கோயில் கொடுங்கை, திருவாரூர் தேர், திருவலஞ்சுழி பலகணி போல், திருவீழிமிழலை வௌவால் ஒட்டி மண்டபம் அழகு. வௌவால் நத்து மண்டபம் என்பது இதன் பெயர். அதாவது வௌவால் வந்து ஒட்டிக்கொள்ள முடியாதபடி அமைக்கப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபத்தில் காட்சிதரும் மாப்பிள்ளைசாமி என்னும் திருமணக் கோல ஈசனையும், அம்பிகையையும் வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் தரிசித்து மாலை சாத்தி வழிபட்டு வந்தால், மாலை சூடும் மணநாள் வந்துவிடும். திருமணம் கைகூடும்.
கும்பகோணம்,நன்னிலம்,பேரளம்,திருவாரூர் ஆகிய ஊர்களிலிருந்து,திரு வீழிமிழலை செல்ல பஸ் வசதி உள்ளது.நன்னிலத்திலிருந்து 10 கி.மீ.

Comments