'எட்டி'ப் பார்ப்போம்!

பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சென்னை-யின் புறநகராக இப்போது விரிவடைந்து வருகிறது மதுரவாயல். முன்பெல்லாம் அரும்பாக்கம் தாண்டி விட்டாலே ஏதோ ஒரு கிராமத்துச் சாலையில் பயணம் செய்வதுபோல இருக்கும். இப்போது மூச்சுமுட்டுகிறது! அங்கு சென்னைப் புறவழிச் சாலை மேம்பாலம் வழியே சென்று வலப்புறம் திரும்பும் சாலையில் பயணித்து, அப்போலோ மருத்துவமனையின் செவிலியர் பயிற்சிக் கல்லூரி அருகே, இடப்புறம் திரும்பி பயணம் செய்தால்... அயனம்பாக்கம் கிராமம். ஆம்; இன்னும் சில வீடுகள் கிராமத்து அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கிராமத்தில் ஒரு பெருமாள் கோயில் (கரிவரதராஜப் பெருமாள்), ஒரு சிவன் கோயில். ஒரு காலத்தில் ஜைனர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களாய் சில சாலையோரச் சிலைகள்.
இங்கே கோயிலுக்கான அடையாளம் எதுவுமின்றி வாழ்விடங்களுக்கிடையே ஒரு வாழ்விடம் போல ஒளிந்திருக்கிறது எட்டீசுவரர் ஆலயம்! கருங்கல் திருப்பணி என்பதால் புராதனமான கோயில் என்று ஊகிக்கிறோம். உள்ளே தெற்கு பார்த்த அம்மன் சன்னிதி. கிழக்குப் பார்த்த பெருமான் சன்னிதி. இவ்விரண்டையும் உள்ளடக்கிய ஒரு மகாமண்டபம். வெளியே நந்திதேவர். அவர் எழுந்தருள சிறு நாலு கால்மண்டபம். இவ்வளவு தான் கோயிலே!
விசாலமான கோயில் வளாகமும் அதை ஒட்டிய விரிந்து பரந்த திருக்குளமும் ஒரு காலத்தில் இது செழிப்பான கோயில் என்பதை அறிவுறுத்துகின்றன. இன்று பெரும்பாலும் பூட்டிக் கிடக்கிறது கோயில். ‘எட்டீசுவரர் என்று இப்போது அழைக்கப்படும் ஈசனது பெயர் முற்காலத்தில் எட்டியப்பர்’ என்கிறது கோயில் வாசல் படிக்கட்டின் மேல் பகுதியில் உள்ள கல்வெட்டு.
“இந்த வட்டாரத்தில் இருந்த எட்டு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. இதற்கான அடையாளங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள முள் காடுகளில் அநாமத்தாய் உள்ள சிவலிங்கங்கள்” என்று ஒன்றிரண்டு சிவலிங்கங்களைக் கொண்டு காட்டுகிறார் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் வேதவல்லி என்கிற அம்மையார். இவர் குடும்பமும் அக்கம்பக்கத்துச் சிலரும்தான் இன்றளவும் இந்தக் கோயிலின் புரவலர்கள். ஒரு காலத்தில் எட்டி மரங்கள் மண்டிய காடாக இருந்ததால் எட்டியப்பர் என்று பெயர் பெற்றாராம் பெருமான். ஒன்றுக்கும் உதவாத எட்டி மரத்துக்கு மாற்றாக, கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக மரமாய் உறைவதால், அம்பிகை கற்பகாம்பிகை என்று பெயர்பெற்றதாக நயம்படச் சொல்கிறார் இன்னொருவர்.
எட்டியப்பரின் திருவுருவம் பெரியது! கற்பகாம்பிகையின் திருவுருவம் சிறியது. நின்ற திருக்கோலம். நான்கு கரங்கள் மேற்கரங்களில் பாசம், அங்குசம் கீழ்க்கரங்களில் அபயம் வரத முத்திரைகள். இந்த அம்பிகைக்கு திரிபுர சுந்தரி என்ற பெயரும் உண்டாம்.
அம்பிகை சன்னிதியின் வலப்புற மேடையில் பெரிய வடிவில் விநாயகர். இவருக்கு ‘மாப்பிள்ளை விநாயகர்’ என்று பெயர். ஒண்டிக் கட்டைப் பிள்ளைகளை மாப்பிள்ளையாக்கும் வரம் தருபவராம். இவருக்கு வாழைப்பழ மாலை சாத்தி வழிபட்டால் கல்யாண வரம் தருவாராம். இதற்குச் சாட்சியாய் அவர் பக்கத்திலேயே முருகன் வள்ளி தெய்வானை சமேதராய் தரிசனம் தருகிறார்.
அம்பிகை சன்னிதியின் இடப்புற மேடையில் சண்டிகேசுவரரும் தர்ம சாஸ்தாவும் விளங்குகிறார்கள். ஒரு காலத்தில் தனித்தனி சன்னிதியில் எழுந்தருளியிருந்த மூர்த்தங்கள், பாதுகாப்பு கருதி மண்டபத்தின் உள்ளேயே இடம்பிடித்து விட்டார்கள் போலும்.
அர்த்தமண்டபத்தின் இருபுறமும் சன்னிதி வாயிலில் யானைமுக கணபதியும் நரமுக விநாயகரும் எழுந்தருளியிருக்கிறார்கள். இதேபோன்ற நரமுக விநாயக வடிவம் சிதம்பரத்திலும், திலதர்ப்பணபுரி என்கிற செதலப்பதியிலும் பார்த்தது நினைவுக்கு வருகிறது. ஒரு கையில் அங்குசமும் இன்னொரு கையில் மோதகமும் ஏந்தி மனித உருவ முகத்துடன் எழுந்தருளியிருப்பது நரமுக விநாயகர்தானா? அப்படியானால் இந்தக் கோயில் பல ரகசியங்களைத் தன்னுள் பொதிந்து வைத்துக்கொண்டு இருக்கிறதே! என்று அங்கலாய்க்கிறோம்.
வழக்கம்போலவே, திருக்குளம் புதர்கள் மண்டித் தூர்ந்து கிடக்கிறது. ‘எட்டி நிற்கும் நம் மனங்களைக் கண்டு, அவர் எட்டி நிற்கிறாரோ? அதனால் அந்தப் பெயரோ!’ என இன்று தோன்றுகிறது. இனியாவது எட்டிப் பார்ப்போமா?

Comments