சிவகாசி அன்னபூரணி

சிவகாசி அருகே, காசிக்கு நிகரான ‘அன்னபூரணி காசி விஸ்வநாதர் ஆலயம்’அமைந்துள்ளது.
பட்டாசுக்குப் புகழ்பெற்ற சிவகாசியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் உள்ள, குகன் பாறை என்ற ஊரிலிருந்து, சாத்தூர் செல்லும் முக்கிய சாலையில் உள்ள கிராமம் சத்திரம். இந்த கிராமத்தில் அலங்கோலமாகக் காட்சி தருகிறது காசி விஸ்வநாதர் ஆலயம். லட்சக்கணக்கான சிவாலயங்கள் இருந்தாலும், ஒரு சில இடங்களில் மட்டுமே சிவபெருமான் அன்னபூரணி அம்மனுடன் இருப்பதைத் தரிசிக்க முடியும். இந்த அற்புதக் காட்சி, சத்திரம் கோயிலில் காணக் கிடைப்பது அபூர்வம். காசியின் நேர் பார்வையில் இந்தக் கோயில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
அன்னபூரணி அம்மனைத் தரிசிக்கச் சென்ற நமது விழிகள் கலங்கின. பழம்பெருமை வாய்ந்த புராதனமான கோயில், இன்று ஒருவேளை பூஜைகூட நடைபெறாமல் சிதிலமடைந்து உள்ளது. கோயிலின் முன்புறம் கட்டி முடிக்கப்படாத நிலையில் இருக்கும் மண்டபத்தைக் கடந்து உள்ளே நுழையும் போது அழகுற அமைந்துள்ளது கொடி மரம். தென்முகம் திரும்பி அன்னபூரணி அம்மனைத் தரிசிக்கும் வண்ணம் அமர்ந்த நிலையில் நந்தீஸ்வரர்; எதிரே மூலவர் காசி விஸ்வநாதர் சன்னிதி. வடக்குத் திசை நோக்கி அன்ன பூரணி அம்மன் சன்னிதி உள்ளது.
இந்த சிவாலயத்தில் நவகிரகங்கள் இல்லாமல், சப்தகன்னியர்களுடன் தட்சிணாமூர்த்தியின் தனிச் சன்னிதி உள்ளது. குபேர சனி பகவான், காலபைரவர், கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன் என பல சன்னிதிகள் உள்ளன. கோயிலின் உள்ளேயே தீர்த்தக் கிணறும் அமையப்பெற்றுள்ளது.
சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் உருவானதாக கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. கோயிலின் மூலஸ்தானம் கட்டி முடித்து பல நூறு ஆண்டுகள் கழித்து சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயிலில் உள்ள நூற்றுக்கணக்கான தூண்களின் சிற்பங்களும் அருமை. காசி விஸ்வநாதர் சன்னிதிக்கும், அன்னபூரணி அம்மன் சன்னிதிக்கும் கோபுரங்கள் உள்ளன. ராஜ கோபுரம் கட்டத் துவங்கிய நிலையில் உள்ளது. கோயிலின் அருகில் தேர்த்திருவிழா சமயங்களில் உற்சவச் சிலைகளை தேர் மீது அமர்த்துவதற்காக கல்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் எதிரே தெப்பக் குளம். இன்று அனைத்தும் பராமரிப்பு இன்றி சிதைந்து போய் உள்ளன.
ஆலயம், பாண்டியர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 1800ஆம் வருடம் வரை இந்தக் கோயிலில் 5 கால பூஜையும், வைகாசிப் பெருவிழாவும், தேரோட்டம் நடந்ததாகவும், செவிவழிச் செய்திகள் உள்ளன. இந்தத் தேரோட்டத்தில் தென்மாவட்ட மக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.
கடந்த 100 ஆண்டுகள் வரை ஓரளவு பூஜையுடனும், பராமரிப்புடனும் இருந்த கோயில். பழைமையான காசி விஸ்வநாதர், அன்னபூரணி அம்மன் மீண்டும் புதுப்பொலிவு பெற வேண்டும்; என்பதுதான் பக்தர்களின் எதிர்பார்ப்பும்.

Comments