அழகு,ஆபரணம், அற்புதம்!

திருவடிகள் புனிதமானவை. அவை, பிரம்மனின் தலையெழுத்தையும் மாற்றவல்லவை. எப்படி? ‘முருகனின் திருவடிகள் தம் தலையில் பதிந்ததால், பிரம்மதேவனின் எழுத்தும் அழிந்துபோயின’ என்கிறார் அருணகிரிநாதர்.
அந்தத் திருவடிகளோடு தொடர்பு ஏற்பட்டதால், பாதுகைகள் சிம்மாசனம் ஏறும் பேறு பெற்றன என்பதை ராமாயணம் உணர்த்துகிறது.
பாதுகைகள் விஷயமே இப்படியென்றால், அந்தப் பாதங்களில் விரல்களில் இடம்பெற்ற அணிகள் செய்த லீலைகள் அனந்தம்!
திருமணம் முடிந்து, மாப்பிள்ளை பெண் உறவினர் புடைசூழ வந்து கொண்டிருக்கிறார்கள். அடர்ந்த காட்டுப்பகுதி. திடீரெனச் சூழ்ந்துகொண்டது கள்வர் கூட்டம். எல்லோரும் திடுக்கிட்டுப் போனார்கள்.
கள்வர்களின் தலைவன் கம்பீரமான குரலில் சொன்னான்:
“உங்களிடம் உள்ள விலையுயர்ந்த பொருட்களைத் தந்துவிடுங்கள். உயிருக்கு ஆபத்தில்லை.” சற்றும் இரக்கமில்லாத கடுங்குரல். மணப்பெண்ணின் மாங்கல்யம் தவிர, பிற அத்தனைப் பொருட்களும் இடம் மாறின. எல்லாவற்றையும் எடுத்து மூட்டையாகக் கட்டினான் அந்தக் கள்வன். அப்போதுதான், மணமகனின் பாதத்தில் படிந்தது அவன் பார்வை.
மணமகனின் பாத விரலில், காலாழி தென்பட்டது. (அருகாழி என்றும் சொல்வார்கள்) ஏளனமாகச் சிரித்தபடியே, “என்னையே ஏமாற்றப் பார்க்கிறாயே? அதையும் கழட்டித் தா” என்றான். மணமகன் நிதானமாகச் சொன்னாள்: “அதை என்னால் கழட்ட முடியவில்லை. நீயே கழட்டிக்கொள்.”
கள்வன் அசரவில்லை. மூட்டையாகக் கட்டிய ஆபரணங்களை கீழே வைத்தான். மணமகனின் அருகே சென்று, அவன் பாதத்தைப் பற்றினான். குனிந்து பற்களால், அந்தக் காலாழியைக் கடித்து இழுத்தான். பல்லோடு வந்தது காலாழி.
மணமகன் சிரித்தபடியே சொன்னான்: “சரியான கலியனப்பா நீ.” கலியன் என்றால், ‘வலிமை மிக்கவன்’ என்றும் பொருள். அந்தப் பாராட்டைப் பற்றிய அக்கறை ஏதுமில்லை கள்வனுக்கு. வந்த வேலை பிரச்னை இல்லாமல் முடிந்தது. மூட்டையை எடுக்க முயன்றான். அதை அசைக்கக்கூட முடியவில்லை. சந்தேகம் வந்தது. உடனே கோபமும் வந்தது. மிரட்டும் குரலில் கேட்டான் கள்வன்.
“என்ன செய்தாய்? ஏன் மூட்டையை நகர்த்த முடியவில்லை? ஏதும் மந்திரம் போட்டாயா? சொல்! இல்லாவிட்டால்...?”
மணமகன் அசரவில்லை. அதே புன் சிரிப்புடன் சொன்னான்: “அப்பா, நான் எந்த மந்திரமும் போடவில்லை. எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு மந்திரம்தான்.”
“அப்படியா? அது என்ன மந்திரம்?” கோபமாகக் கேட்டான் கள்வன்.
“அருகே வா” என்று அழைத்து, மணமகன் அந்த மந்திரத்தைச் சொன்னான்.
அதென்ன மந்திரம்? மணமகன் என்ன சொன்னான் என்று நமக்குத் தெரியாது. ஆனால், அந்த மந்திரத்தைக் கேட்ட கள்வன் மாறிப் போனான். திருட வந்தவன் திருட்டுக் கொடுத்துவிட்டான். ஆம்; அவனுடைய உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும், மணமகன் களவு செய்துவிட்டான். அதனால், திருட வந்தவன் பாட ஆரம்பித்தான்! அந்தப் பாட்டில் சொல்கிறான்:
“...துஞ்சும்போது அழைமின்; துயர்வரில் நினைமின்;
துயரிலீர் சொல்லினும் நன்றாம்;
நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு
நாராயணா என்னும் நாமம்!”
திருமங்கை மன்னனாக இருந்து, கள்வராக மாறியவர், திருமங்கையாழ்வாராக பெரிய திருமொழி பாட, எம்பெருமான் மந்திரோப தேசம் செய்தது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அதற்கு அடிப்படையாக அமைந்தது, பெருமான் தம் பாத விரல்களில் அணிந்திருந்த காலாழி. ‘கலியனை வழிப்படுத்தியது காலாழி’ என்று சொல்லத் தோன்றுகிறது. அப்படியானால், குருவாகவும் அதை நினைக்க நேர்கிறது.
பழங்காலத்தில் ஆண்களும் காலாழி அணிந்திருக்கிறார்கள். திருமணமான ஆண் என்பதை, அந்தக் காலாழியைப் பார்த்து, எதிரே தலைசாய்த்து வரும் பெண் தெரிந்துகொள்வாள்; எதிரே வரும் பெண் மணமானவள் என்பதை, அவள் அணிந்த தாலியைக் கண்டு நிமிர்ந்து நடக்கும் ஆண் அறிவான் என்பது, ஒழுக்கத்தை முதன்மைப்படுத்தி சமூக வாழ்வை முறைப்படுத்திய முன்னோரின் எண்ண ஓட்டம். இன்றும் திருமணத்தின்போது மட்டும், மணமகனுக்கு காலாழி அணிவிக்கும் பழக்கம் சமூகத்தில் சில பிரிவுகளில் காணப்படுகின்றன.
ஆண் அப்படித்தான் நடந்து கொள்கிறானா என்றால், உதாரணமாக ஒருவனைக் காட்ட முடியும். அவன் இளையபெருமாளான இலக்குவன்.
ரிஷ்யமுக பர்வதத்தில், சுக்ரீவனைச் சந்தித்தார்கள் ராமனும் இலக்குவனும். அப்போது “ராவணனால் ஒரு பெண் தூக்கிச் செல்லப்படுவதைப் பார்த்தோம். அவள் உதவி வேண்டி அலறினாள். தான் அணிந்திருந்த ஆபரணங்களை வீசினாள். அவற்றை வைத்திருக்கிறோம். இவை சீதையின் நகைகளா பாருங்கள்” என்று காட்டினான் சுக்ரீவன்.
மூட்டையைப் பிரித்து ஒவ்வொரு ஆபரணமாகப் பார்த்தார்கள். கழுத்தில் அணியும் சங்கிலிகள், வடங்கள், வளையங்கள், காதணிகள் என்று ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கிறார்கள். லக்ஷ்மணிடம் கேட்கிறான் ராமன்:
“தம்பி, இந்த நகைகளைப் பார்த்தாயா? இவை சீதை அணிந்திருந்தவை தானா?”
“தெரியவில்லை” என்று சொன்னான் இலக்குவன். ஏன் ராமனுக்குத் தெரியவில்லை? அவன், தன்னுடைய தாத்தா அஜனைப் போலவே, இருந்தான். ‘அஜன், தன் மனைவி இந்துமதியைப் பிரிந்தவுடன் பித்துப் பிடித்தாற்போல் காட்டிலேயே இருந்தான்’ என்கிறது ரகு வம்சம். ராமனும் காட்டில்தான் சீதையைப் பிரிந்தான். ஆக, மனைவியைப் பிரிந்த நிலையிலிருந்த அவனால், அந்த நகைகளை இனம் காண முடியவில்லை.
எல்லா ஆபரணங்களையும் ஒதுக்கித் தள்ளிய இலக்குவன், கடைசியில் மெட்டியைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்தில், “அண்ணியின் ஆபரணம்தான் இது!” என்று உணர்வு ததும்பச் சொன்னான். எப்படி? தினமும் பாதபூஜை செய்யும் போது, பார்த்துப் பார்த்து, அவன் மனத்தில் பதிந்திருந்தது, சீதை அணிந்திருந்த அந்த ஓர் ஆபரணம் மட்டும்தான். அதனால், அதை மட்டுமே அவனால் அடையாளம் காண முடிந்தது.
ஆக, ‘மெட்டி’யின் ஒலிதான், குடும்ப வாழ்வின் முதல் சங்கீதம். குழலினிது, யாழினிது என்பதெல்லாம், இதற்கு அப்புறம்தான்!
(அற்புதம் தொடரும்)
காலாழி, மெட்டி, மிஞ்சி என்று பாத விரல்களில் அணியும் ஆபரணங்களை பலவாகச் சொல்வார்கள். ‘மெட்டி’ என்பதும், மிஞ்சி என்பதும் ஒன்றுதான். அது வட்டாரத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. மிஞ்சி என்ற பெயர் ஏன் அமைந்தது என்பதற்கு, நகைச்சுவையாக ஒரு விளக்கம் சொன்னார் நண்பர் நாகை முகுந்தன்:
“அந்தப் பெண்ணுக்கு திருமணத்தின் போது அணிவிக்கப்படும் நகைகள் அனைத்தும், ஏதோ ஒரு அவசரத்தில், தேவையை முன்னிட்டு, விற்கப்படலாம்; ஆனால், ஏதாவது ஒன்றாவது அவளுக்கு மிஞ்சி இருக்க வேண்டுமே. அதற்காகத் தான், அதற்கு ‘மிஞ்சி’ என்று பெயர் வந்தது.”
இன்னொரு பொருளும் தோன்றுகிறது. சுலபமாக, பெண் தனக்கென்று எதையும் நினைப்பதில்லை. எல்லாம் தன் கணவன், குடும்பம் என்றுதான் அவளுடைய சிந்தனை நீளும். இதற்கு மிஞ்சி ஏதாவது இருந்தால், அது தனக்கு என்று ஏற்கும். இப்படி, தன்னை ஒடுக்கிக்கொள்ளும் தியாக மனோபாவம் பெண்மையின் தனிச்சிறப்பு. அதைத்தான், இந்த மிஞ்சி அடையாளப்படுத்துகிறது என்ற எண்ணமும் மேலிடுகிறது.
இடது பாதத்தின் கட்டை விரலின் அடுத்த விரலில் அணிவிக்கப்படும் ஆபரணம் மெட்டி. இந்த விரலுக்கும், பெண்ணின் கர்ப்பப்பைக்கும் நேரடியான நரம்புத் தொடர்பு உண்டு. இந்த விரலில் அணிவிக்கப்படும் மெட்டி, நடக்கும் போது தரையில் அழுந்துவதால், நரம்புகள் தூண்டப்பட்டு கருப்பை வலுவடைகிறது என்கிறார்கள்.

தவிர, வெள்ளியில் உருவான மெட்டியைத்தான் அணிய வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கர்ப்பகாலத்தில், பெண்களுக்கு ஏற்படும் சோர்வு, பசியின்மை, மயக்கம் போன்ற சமயங்களில், இந்த நரம்பை சற்று தேய்த்துவிட்டால் வலி குறையும். மெட்டி அணிந்து, நடக்கும் போது இயற்கையாகவே நடக்கும் உராய்வு காரணமாக, வலி குறையும்.

Comments