கடவுளைக் கண்ட கடவுள்!

’ஜல்’ ‘ஜல்’ ‘ஜல்’ என்று ஒரு குதிரை வண்டி, வட இந்தியாவில் பரோடாவின் தெருக்களில் விரைந்து கொண்டிருந்தது. யானைக்கு மதம் பிடிப்பதுபோல் குதிரைக்கும் மதம் பிடிக்குமா என்ன? திடீரெனத் தறிகெட்டுப் பாய்ந்தது குதிரை. அபரிமிதமான வேகத்தோடு, குதிரை கட்டுக்கடங்காமல் பாய்ச்சலெடுப்பதைப் பார்த்து, வழியில் நடந்தவர்கள் பயந்து பதறி விலகினார்கள். மலைமுகட்டில் கிடுகிடுவென ஓடியது வண்டி.
அந்த வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார் ஸ்ரீஅரவிந்தர். கிருஷ்ணரை நேரில் காண வேண்டும் என்ற வேட்கையோடு, தம் மனக்கோயிலில் கிருஷ்ணரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வரும் உன்னதமான பக்தர். அண்மைக்காலத்தில் உதித்த உயர்நிலை ஆன்மிகவாதி. வடஇந்தியாவில் பிறந்து வளர்ந்து, பின் தென்னிந்தியாவில் வாழ்ந்து உயர்ந்து அமரத்துவம் அடைந்த மகான்.
மிகச் சில கணங்களில் மலையிலிருந்து வண்டி கீழே விழும்; தான் இறக்கப் போகிறோம் என்று அவருக்குத் தோன்றியது. சரி; இறக்கும் முன் தன் இஷ்ட தெய்வமான கண்ணனைப் பிரார்த்திக்கலாம் என்று, கண்மூடி அகக்கண்ணால் கண்ணனைக் கண்டார். கண்டவர் கண்டு கொண்டே இருந்தார். என்ன அற்புதம் அந்தக் காட்சி!
அவரது மனக்கோயிலில் குடிகொண்டிருந்த கண்ணன் நகைத்தவாறே அவர் இதயப் பகுதியிலிருந்து குதித்து வெளியே வந்தான். சடாரென்று குதிரையின் லகானைப் பிடித்து நிறுத்தினான். குதிரை அமைதியாகத் திரும்பி நடந்தது. பார்த்தசாரதியாய் மகாபாரதப் போரில் தேரோட்டிய கண்ணனுக்கு, ஒரே ஒரு குதிரையை அடக்குவதா பிரமாதம்?
ஸ்ரீஅரவிந்தரைப் பார்த்துக் கண் சிமிட்டிக் குறும்பாகச் சிரித்த கண்ணன், மீண்டும் அவர் இதயக் கோயிலில் தன் வழக்கமான இடத்தில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டான். இந்த அகக்காட்சியைக் கண்டு திகைத்த அரவிந்தர் புறக்கண் திறந்து பார்த்தார். அவர் உடல் புல்லரித்தது. குதிரை நிறுத்தப்பட்டிருந்ததையும், அது அமைதியாகத் திரும்பி நடந்ததையும் பார்த்து வியந்தார். தன் மனக் கோயிலின் உள்ளே கண்ணன் வீற்றிருக்க இனி தனக்கென்ன மனக் கவலை? எந்தச் சோதனையிலும் கண்ணன் தன்னைக் காப்பான் என்ற உறுதி அப்போதுதான் அவருக்கு ஏற்பட்டது.
மனத்தையே கோயிலாக்கி தன் உள்ளத்தில் தெய்வ சக்தியை ஸ்ரீஅரவிந்தர் இறக்கிக்கொண்டது எப்படி?
ஸ்ரீஅரவிந்தர் மனத்தில் சதா ஓர் யோசனை. ‘இறைவனை மனத் தில் குடிவைத்திருக்கிறோமே? அவரை நேரிலேயே காண ஆசைப்படுகிறோமே? இதுவரை நாள்தோறும் நாம் செய்யும் சிறிது நேர ஜபதபங்களால் கிடைக்கும் அனுபவகளிலிருந்து, முழுமையாக இறைத்தேடலில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஈடுபட்டால் கண்ணனைக் கண்ணால் காண முடியும் என்று நம்பிக்கை தோன்றுகிறதே? என்றைக்கு முழுமையாகக் கிருஷ்ண பக்தியில் தோயப் போகிறோம்? இந்த சுதந்திரப் போரிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள இயலவில்லையே? கண்ணனைக் குறித்துத் தவம் செய்வது எப்படி?’
அவரது மனப்போராட்டத்தை, அவர் மனத்திலேயே குடிகொண்டிருக்கும் கண்ணன் உணரமாட்டானா என்ன? அவன் ஒரு முடிவு செய்தான். செய்யாத குற்றமொன்றில் பழி சுமத்தப்பட்ட அரவிந்தர் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். ‘இந்த ஓராண்டு முழுவதும் என்னையே நினை’ என அவர் மனத்துக்குள்ளிருந்து உத்தரவு போட்டான். கண்ணனைக் குறித்துச் சிறையில் அரவிந்தர் தவம் செய்யலானார்.
அந்தக் கடும் தவத்தின் காரணமாக, அவர் மனத்துக்குள்ளிருந்து நேரில் வெளிப்பட்டு, சிறையிலேயே அவருக்குக் காட்சி தந்தான் கண்ணன்.
சிறையிலேயே பிறந்தவனுக்கு சிறையில் தோன்றுவது பிரமாதமா? ஸ்ரீஅரவிந்தருக்குக் கீதை போதித்தான். கீதையை நேரில் கேட்டவர் இருவர். ஒருவர் மகாபாரதப் போரில் அர்ச்சுனர். இன்னொருவர் சுதந்திர பாரதப் போரில் அரவிந்தர்.
தான் விடுதலையான பிறகு ‘உத்தர்பாரா’ என்ற இடத்தில் நிகழ்த்திய சொற்பொழிவில், “நான் நேரில் கண்ணனை தரிசித்தேன்” என்று அறிவித்தார் அரவிந்தர். பத்திரிகைகளில் இந்தச் செய்தி வெளியாகியது.
பாண்டிச்சேரியில் தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த பாரதியார், இது உண்மையாக இருக்குமா என்று திகைத்தார். கண்ணன் பாட்டு எழுதிய கிருஷ்ண பக்தர் அவர். அன்றைய காலகட்டத்தில் சுதந்திர வீரர்கள் பலர் ராம பக்தர்களாக இல்லாமல் கிருஷ்ண பக்தர்களாகவே இருந்தார்கள். தன் சொந்த நாட்டைத் தம்பிக்கு விட்டுக் கொடுத்த ராமனை விடவும், தனக்குச் சொந்தமில்லாவிட்டால்கூட, தர்மபுத்திரரின் நாட்டை அவருக்கு மீட்டுக் கொடுத்த கண்ணன், நாட்டு விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்த தியாகிகளைக் கவர்ந்ததில் வியப்பில்லையே?
பாரதியார், தான் தலைமறைவு வாழ்க்கை காரணமாகக் கல்கத்தா செல்ல இயலாததால், நிருபர் ஒருவரைக் கல்கத்தாவுக்கு அனுப்பினார். ஸ்ரீஅரவிந்தரை நேரில் அந்த நிருபர் சந்தித்தார். ‘கண்ணனைக் கண்டது நிஜத்திலா கனவிலா’ என்று விசாரித்தார். கண்ணனை உண்மையிலேயே தரிசனம் செய்தேன் என்றும், அவனைத் தொட்டுப் பார்த்தேன் என்றும் அரவிந்தர் கூறிய செய்திகளை நிருபர் பாண்டிச்சேரி திரும்பி வந்து பாரதியாரிடம் தெரிவித்தார்.
பாரதியார் ஸ்ரீஅரவிந்தரை கடவுளை நேரில் கண்ட சித்த புருஷர் என்று அறிவித்தார். ஸ்ரீஅரவிந்தர் பாண்டிச்சேரி வந்தபோது, கடவுளைக் கண்ட அந்தக் கடவுளுக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்தவரும், பின் அவருடன் தியானம் பழகியவரும் பாரதியார்தான். பாரதியார் மட்டுமா? தமிழின் முன்னோடிச் சிறுகதையை எழுதியவரும், வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடப் பயிற்சி தந்தவருமான வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட பல ஆன்மீகவாதிகள் ஸ்ரீஅரவிந்தருடன் தியானம் பழகினார்கள்.
அரவிந்தர் மீண்டும் சுதந்திர உரை நிகழ்த்த வேண்டும் என்று தேவதாஸ் காந்தி மூலமாகவும், லாலா லஜபத்ராய் மூலமாகவும் மகாத்மா மறுபடி மறுபடி வேண்டுகோள் விடுத்தார். மறுத்த அரவிந்தர், “நான் தியான வழியில் பாரத சுதந்திரத்துக்காகப் பாடுபடுகிறேன். இது உண்மை என்பதற்கு, என் மனக்கோயிலில் குடிகொண்ட கண்ணன், எதிர்கால சுதந்திர வரலாற்றில் முத்திரை பதிப்பான்” என்று, சுதந்திரம் கிடைப்பதற்குப் பல்லாண்டுகள் முன்னால் சொன்னார். என்ன ஆச்சரியம்! சுதந்திரம் தற்செயலாக அரவிந்தரின் பிறந்த நாளன்று நமக்குக் கிட்டியது!
கடவுளுக்கு மனக்கோயில் கட்டி வழிபட்டு, பின்னர் கடவுளை நேரிலேயே தரிசித்த அரவிந்தர், மெல்ல மெல்லக் கடவுளாகவே மாறிய கதை, புராணமல்ல; கற்பனை கலவாத அண்மைக் கால வரலாறு!
(நிறைந்தது)
சுதந்திரப் போர் வேகம்கொண்ட காலம். இந்து முஸ்லிம் கலவரங்களும் எங்கும் நடந்துகொண்டிருந்த தருணம். தாகூர், முஸ்லிம் மசூதிகளுக்குச் சென்று முகமதியப் பெண்களுக்கு ராக்கி கட்டி, ‘இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களே’ என அறைகூவிக் கொண்டிருந்தார். காந்தியின் தாக்கத்தால் எங்கும் கதரின் மகிமை பேசப்பட்டுக் கொண்டிருந்தது. மணமக்கள் கதர் ஆடை அணியாவிட்டால், திருமணத்தில் புரோகிதர்கள் புரோகிதம் செய்ய மறுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஸ்ரீஅரவிந்தர் உற்சாகமாக சுதந்திர மேடைகளில் உரையாற்றிக் கொண்டிருந்தார். வெள்ளமென அவர் வாக்கில் பொங்கியது ஆங்கிலேயர்களே வியந்த, அவரது அழகிய ஆங்கிலம்! ஸ்ரீஅரவிந்தரின் எழுச்சிமிக்க உரை காரணமாக, எங்கும் சுதந்திரக் கனல் பற்றிக்கொண்டது.
அம்புபாய் புரானி என்ற சாதகர் இடையே மூன்றாண்டுகள் அரவிந்தரைச் சந்திக்க இயலாமல் வெளியூர் சென்றிருந் தார். திரும்பி வந்தபிறகு அரவிந்தரைப் பார்த்து திகைத்தார். “இது என்ன, மாநிறமாக இருந்த உங்கள் உடல் பொன்னிறமாக இருக்கிறதே?”
அரவிந்தர் முறுவல் பூத்தவாறே பதில் சொன்னார்: “கடவுள் சக்தி என் உடலில் மெல்ல மெல்ல இறங்குவதால் ஏற்படும் மாற்றமாக இருக்கலாம்!”
ஜெயடேவி என்ற சாதகர் ஒருநாள் அரவிந்தரிடம் கேட்டார்: “இது என்ன, பாண்டிச்சேரியில் இதுவரை யாரும் நுகராத ஒரு மனோகரமான வாசனை?”
அரவிந்தர் பதிலளித்தார்: “கடவுள் சக்தி தியான ஆற்றல் காரணமாக மண்ணில் இறங்கும் நேரம். அதனால் விளைந்த வாசனையாக இருக்கலாம்!”

Comments