சென்னை ராயப்பேட்டை பாலசுப்பிரமண்ய பக்தஜன சபாவில் முனைவர் சரளா ராஜாகோபாலன் பேசியதிலிருந்து...
விருந்தோம்பல் என்பது நமது பண்பாட்டின் சிறப்பான அங்கம். அந்த விருந்தோம்பலில் சிறந்த ஒரு நாயன்மார் இளையான்குடி மாறன். அரிய சிவபக்தர். இவருடைய மனைவியும் ஆழ்ந்த சிவ பக்தை. இவர்கள் செல்வமும், சிவ பக்தியைப்போல், குபேரனுக்கு ஈடாக இருந்தது.
தினமும் சிவனடியார்க்கு உணவிட்டு, அவர்களின் பசியைப் போக்கிய பின்பு தான் இவர்கள் சாப்பிடுவார்கள். செல்வந்தரான மாறனிடம்தான் வணங்கும் முறையை கற்க வேண்டும்.
இவர் சிவனடியாரைப் பார்த்தால் இருகரம் குவித்து, நெஞ்சு அருகே கைகளை வைத்து வரவேற்பார்.
எந்த சாதி, என்ன நிலை என்றெல்லாம் பார்க்காமல், அடியாரை இன்முகத்தோடு வரவேற்று விருந்தோம்பல் செய்யும் மனம் படைத்தவர்.
இந்த விருந்தோம்பலால், திருமகள் இவர்கள் வீட்டிலேயே குடியேறிவிட்டாள். இவர்களின் செல்வத்தைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் பொறாமைப்பட்டனர். ஆனால் அவரைப் போன்று விருந்தோம்பல் செய்ய நினைக்கவில்லை. மாறாக, அவருக்கு செல்வம் இருப்பதால் விருந்தோம்பல் செய்கிறார் என்ற எண்ணம் மக்களிடையே நிலவியது. இதை பொய்ப்பிக்க நினைத்தார் சிவபெருமான். மாறனுக்கு வறுமையைத் தந்தார். அவரது செல்வம் நாளுக்கு நாள் குறைய ஆரம்பித்தது. சிறிது நாளில் பொருட்களை விற்று விருந்தோம்பல் செய்யும் நிலை வந்தது. அப்போதும், அவரது மனவளம் சிறிதும் குறையவில்லை.
ஒருநாள்... சிவனே இவரது வீட்டுக்கு வரத் தீர்மானித்தார். தம்முடைய பாதம் மண்ணில் தோய, மாறனின் வீட்டுக்கே ஏழை சிவனடியாராகச் சென்றார்.
இறைவன் வந்தால் எப்படி இருக்கும்?
சோதனைகள் இல்லாமல் அருள் செய்வாரா என்ன? அவர் வந்த போது மழை; வேகமான காற்று; நள்ளிரவு நேரம். மாறனின் வீட்டுக் கதவை தட்டினார்.
தம்பதியர் சிவனடியாரை வரவேற்றனர். அடியாராக வந்த சிவன், பசிக்கிறது என்று சொன்னதும் தவித்துப் போயினர். ஏன்? விற்க அவர்களிடம் ஏதுமில்லை; கடன் வாங்கக்கூட கடை இருக்காத நள்ளிரவு. சோதனை கடினமாகத்தான் இருந்தது.
மாறனின் மனைவிக்கு சட்டென்று ஒரு யோசனை. அன்று காலை விதைத்த நெல்லை, வாரி எடுத்து வர கணவரை வயலுக்கு அனுப்பி வைத்தார். மாறனார், சேறான வயலில், அந்த நெல்லை சலித்து கூடையில் எடுத்து வந்தார். நீரில் ஊறி அது பதமாக இருந்தது.
சமைக்க விறகும் இல்லை. வீட்டுக் கூரையில் இருந்து சிலவற்றை உருவி கட்டையாக்கி, அம்மையார் சமைக்கத் தொடங்கினார்.
வெறும் சோறு போதுமா? காய் வேண்டாமா? வீட்டின் பின்புறத் தோட்டத்தில் இருந்து கீரையைப் பறித்து வந்தார். உணவு தயாரானது.
தூங்குவதுபோல் நடித்த சிவன், இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை சாப்பிட அழைத்தபோது, அவர்களது விருந்தோம்பலில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஜோதி ஸ்வரூபமாய் மாறினார். திகைத்து நின்ற மாறன் தம்பதியினருக்கு, ரிஷப வாகனத்தில் பார்வதி தேவியோடு தரிசனம் அளித்தார்.
ஒவ்வொரு நாயன்மாருக்கும் சிவன் தரிசனம் அளித்தார். இங்கு கணவன், மனைவி இருவரின் பக்தியில் திளைத்ததால், பார்வதி தேவியோடு வந்து தரிசனம் அளித்தார்.
விருந்தாளியாக கடவுளே வருகிறான். ‘அதிதி தேவோ பவ’ என்பது ஞாபகம் வருகிறதல்லவா?
Comments
Post a Comment