நான்டெட் நகரைச் சேர்ந்த வக்கீல் புண்ட்லிக்ராவ். அவர் தன் நண்பர்களுடன் கோதாவரி நதிக்கரையில் தங்கியிருந்த ஸ்ரீ தேம்பே ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி என்கிற மகானைத் தரிசித்தார். அப்போது ஷீரடிக்கு செல்ல இருப்பதைத் தெரிவித்தார். உடனே ஸ்ரீதேம்பே ஸ்வாமிகள் அவர்களிடம் ஒரு தேங்காயைக் கொடுத்தார். “இந்தத் தேங்காயை என் வணக்கங்களுடன் என் சகோதரர் சாயியிடம் சமர்ப்பித்துவிடுங்கள். என்னை மறந்துவிடாமல் எப்போதும் என்னிடம் அன்பாக இருக்கச் சொல்லுங்கள்” என்றார். “ஸ்வாமிகள் பொதுவாக யாரையும் வணங்குவதில்லை. இந்த விஷயம் ஒரு விதிவிலக்காகும்!” என்றும் கூறினார்.
சில நாட்களுக்குப் பிறகு புண்ட்லிக்ராவும் அவருடைய நண்பர்களும் ஷீரடிக்குப் புறப்பட்டனர். மன்மாட் நகரை அடைந்தவுடன் தாங்கள் கட்டிச் சென்ற ‘சிவ்டா’ என்கிற உணவை உண்ண ஓர் ஓடைக்கரையில் அமர்ந்தனர். ‘சிவ்டா’ என்பது, அவலில் செய்யப்படும் உணவு. அது மிகக் காரமாக இருந்ததால், குழுவிலிருந்த ஒருவர் தங்களிடமிருந்த தேங்காயை உடைத்து அவலுடன் கலக்க ‘சிவ்டா’ அதிக ருசியுள்ள உணவாக மாறியது. சாப்பிட்டு விட்டுக் கிளம்பும்போதுதான், உடைக்கப்பட்ட அந்த தேங்காய் தேம்பே ஸ்வாமிகளால் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிய வந்தது. ‘தவறு செய்துவிட்டோமே!’ என்று நடுங்கிப் போனார் புண்ட்லிக்ராவ்.
ஷீரடியில், அவரைப் பார்த்ததும், “எங்கே என் சகோதரன் சமர்ப்பித்த தேங்காய்?” என்றார் பாபா. புண்ட்லிக்ராவ் பாபாவின் பாதங்களில் வீழ்ந்து கதறி தன்னுடைய தவறையும் கவனமின்மையும் ஒத்துக்கொண்டு தன்னை மன்னிக்க வேண்டினார்.
பாபா, புண்ட்லிக்ராவைப் பார்த்துச் சொன்னார்: “இந்த விஷயத்தைப் பற்றி நீ ஏன் அலட்டிக் கொள்கிறாய்? உன்னிடம் ஒப்படைக்கப்பட்டது; பிறகு உங்களுக்கு உணவானது எல்லாமே என் விருப்பம்தான் என்று உனக்குப் புரியவில்லையா?”
‘வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் இறைவனால் தீர்மானிக்கப்படுகின்றன’ என்பதை இப்படி உணர்த்தினார் பாபா.
Comments
Post a Comment