இப்போது ரயில் வண்டி உண்டு; பேருந்து உண்டு; ஆகாய விமானம் உண்டு. பாரதத்தின் எந்த மூலையில் உள்ள புண்ணியத் தலத்துக்கும் சென்று வருவது கடினமல்ல.
ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்த வசதிகள் கிடையாது. பாத யாத்திரைதான். செல்லும் வழியில் கொள்ளையர், கொள்ளை நோய்கள் போன்ற அபாயங்களில் இருந்து காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் உண்டு. எனவே, கூட்டமாக பக்திப் பயணத்தை மேற்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர்.
ஆந்திரப் பகுதியில் உள்ள வித்யாநகரம் என்ற ஊரிலிருந்து அந்தணர்கள் சிலர் இப்படிப் புண்ணிய யாத்திரைக்கு புறப்பட்டனர். அந்தக் குழுவில் மிகவும் வயதான ஒருவர் இருந்தார்.
அவருக்குப் பலவித பணிவிடைகளைச் செய்தான் அதே குழுவில் இருந்த ஓர் இளைஞன். முதியவரின் மூட்டையை சுமந்தான். தினமும் இரவில் அவர் பாதங்களைப் பிடித்துவிட்டான். உணவு சமைத்தும் பரிமாறினான்.
வட இந்தியாவுக்குச் சென்ற அந்தக் குழுவினர் கோவர்த்தன மலையை தரிசித்தனர். யமுனை நதியில் பக்தி பொங்க நீராடினர். பிறகு பிருந்தாவனத்துக்கு வந்து சேர்ந்தனர்.
இளைஞன் மீது முதியவருக்கு அளவில்லாத பாசம் உண்டானது. ‘இந்தப் பயணத்துக்கு முன் எனக்கு இவனைத் தெரியாது. ஆனாலும் எண்ணற்ற பணி விடைகளை இவன் நமக்குச் செய்கிறானே! இப்படி ஒருவனை சந்திக்க நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்!’ என அவர் பரவச எல்லை கடந்தார். “இளைஞனே, எனக்கு அழகான ஒரு மகள் இருக்கிறாள். யாத்திரை முடிந்து ஊருக்குத் திரும்பியதும் அவளை உனக்கு மணமுடிக்கிறேன்” என்றார்.
இளைஞன் உவகையில் துள்ளிக் குதிக்கவில்லை. மாறாக, “மனித சேவை மாதவனின் சேவை என்பார்கள். அந்த அளவில்தான் உங்களுக்கு என்னால் ஆன உதவிகளை செய்தேன். இதற்காக உங்கள் மகளை மணம் முடிப்பது என்பதெல்லாம் வேண்டாம். தவிர, உங்களைப் பார்த்தாலே நிறையப் படித்தவர் என்றும் பெரும் செல்வந்தர் என்றும் தெரிகிறது. எனக்கு படிப்பும் குறைவு; பணமும் குறைவு. எனவே நமக்கிடையே சம்பந்தம் என்பது ஒத்துவராது” என்றான்.
ஆனால் முதியவரோ, தான் கூறியதில் பிடிவாதமாக இருந்தார். “நீயே என் வருங்கால மருமகன். இதில் உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றார்.
சில கணங்கள் யோசித்த இளைஞன், “மீண்டும் மீண்டும் இப்படி கூறி என் மனத்தில் ஆசை உண்டாக்கிவிட்டீர்கள். எனவே இதற்கு ஒத்துக் கொள்கிறேன். ஆனால், கோவிலுக்கு வந்து கடவுளுக்கு எதிரே நீங்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும்” என்றான். முதியவரும் ஒத்துக்கொண்டார். பிறகு இருவரும் அங்குள்ள கண்ணனின் ஆலயத்துக்கு சென்றனர். இறைவன் சன்னிதியில், “என் மகளை இந்த இளைஞனுக்கு கன்னிகாதானம் செய்வேன்” என்றார் முதியவர். இளைஞனும் “கண்ணா, நீதான் இதற்கு சாட்சி” என்றான்.
சில மாதங்களுக்குப் பிறகு இருவருமாக தங்கள் ஊருக்கு திரும்பினார். அவரவர் இல்லத்துக்குச் சென்றனர்.
முதியவர் தன் உறவினர்களை அழைத்து, தான் செய்து கொடுத்த சத்தியம் பற்றிக் குறிப்பிட்டார். அவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். “போயும் போயும் பணமும் கல்வியும் இல்லாத ஒருவனுக்கா உங்கள் மகளை மணமுடிக்கப் போகிறீர்கள்?” என்று பரிகசித்தனர். அதுவும் முதியவரின் மகனுக்கு பெரும் ஆத்திரமே வந்து விட்டது. “என் தங்கையை அந்தப் படிப்பறிவில்லாதவனுக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் சம்மதிக்கமாட்டேன். அப்படி நீங்கள் செய்தால் நானும் அம்மாவும் தற்கொலை செய்து கொள்வோம்” என்றான்.
முதியவர் தவித்தார். “மகனே, கண்ணனின் சன்னிதானத்தில் செய்த சத்தியத்தை நான் மீறலாமா? இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றால் கண்ணன் சாட்சி சொல்வாரே!” என்றார். அதற்கு அவர் மகன், “அவ்வளவு தொலைவிலிருந்தா கண்ணன் சாட்சி சொல்ல வருவான்? தவிர, நீதிமன்றத்தில் ‘நான் சத்தியம் செய்யவில்லை’ என்று கூட நீங்கள் சொல்ல வேண்டாம். எதுவும் நினைவில்லை என்று மட்டும் கூறினால் போதும்” என்றான்.
சில நாட்கள் கழிந்ததும் இளைஞன் முதியவர் வீட்டுக்கு பெண்கேட்டு வந்தான். முதியவரின் மகனோ, “உளறாதே! போய்விடு” என்று விரட்டினான். இதைப் பார்த்துக் கொண்டு முதியவர் பேசாதிருந்ததைக் கண்டதும் இளைஞன் அதிர்ச்சி அடைந்தான்.
“என்ன ஆயிற்று இவருக்கு? என்னை முன்பின் காணாதவர்போல நடந்து கொள்கிறாரே!” ஆதங்கம் பொங்க உரக்கக் குரல் கொடுத்தான். “ஐயா, எனக்கு வாக்குக் கொடுத்துவிட்டு இப்போது மௌனமாக இருந்தால் என்ன அர்த்தம்?”
பெரியவர் ஏதும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார். அவர் மகனோ இளைஞனை அடித்து வெளியே விரட்டினான்.
திகைத்துப் போன இளைஞன், நியாயத்துக்காகப் போராடத் தீர்மானித்தான். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தான்.
முதியவர் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டார். மகன் சொல்லிக்கொடுத்த படியே, “எனக்கு எதுவும் நினைவு இல்லை” என்றார்.
உடனே அவரது மகன் சாட்சிக் கூண்டில் ஏறி, “என் தந்தை நிறைய பணத்தோடு புண்ணிய யாத்திரை கிளம்பினார். இதை அறிந்து அவர் கூடவே சென்ற இந்த இளைஞன் அந்த பணத்தைத் திருடிக்கொண்டதுடன், அவர் மனம் பேதலிக்கும்படி விஷச் செடிகளின் சாற்றினை அவருக்கு அளித்துவிட்டான். இதனால்தான் அவருக்கு நடந்தது எதுவும் நினைவின்றிப் போனது” என்றான்.
நீதி வழங்க அமர்ந்திருந்த பெரியவர்கள் அனுபவசாலிகள். முதியவரின் கண்களில் தென்பட்ட கலக்கத்தை உணர்ந்துகொண்டனர்.
இளைஞரைப் பார்த்து, “இந்த முதியவர் தன் மகளை உனக்குத் திருமணம் செய்வதாக வாக்களித்ததுக்கு சாட்சி உண்டா?” என்று கேட்டனர்.
“உண்டு. கோபாலன்தான் சாட்சி” என்றான் அவன்.
“அந்த கோபாலன் நேரில் வந்து சாட்சி கூறட்டும். அப்போது என் மகளை இவனுக்கு மணம் செய்துதருகிறேன்,” என்றார் முதியவர்.
இளைஞன் மீண்டும் வட இந்தியாவுக்குப் புறப்பட்டான். கண்ணனின் கோவிலை அடைந்தான். கண்ணீர் பொங்க முறையிட்டான். “எனக்குக் கல்யாண ஆசை இல்லை. ஆனால் உன்னை சாட்சியாகக் கொண்டு செய்த உறுதிமொழியை ஒருவர் மீறலாமா? எனவே, சாட்சி சொல்ல நீ என்னுடன் ஊருக்கு வர வேண்டும்” என்றான். தொடர்ந்து இப்படி கதறியபடி கண்ணன் சன்னிதானத்தில் அவன் முறையிட, கோபாலன் மனம் கனிந்தது.
“சரி வருகிறேன். ஆனால், நான் பின்னே நடந்து வருவேன். நான் வருவதை என் தண்டை ஒலி உனக்கு உணர்த்தும். எந்த இடத்திலும் நீ என்னைத் திரும்பிப் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்தால் அதற்குமேல் நான் உன்னைத் தொடரமாட்டேன்” என்றார். இளைஞனும் இதற்கு மகிழ்வுடன் ஒப்புக்கொண்டான். இருவருமாகக் கிளம்பினர். தனது ஊரின் எல்லைப் பகுதி வந்ததும் “கோபாலா, எங்கள் ஊர் வந்துவிட்டது” என்றபடி திரும்பினான் இளைஞன்.
கண்ணன் புன்னகைத்தார். “நம் ஒப்பந்தப்படி நான் இனியும் உன்னை தொடரமாட்டேன். என் சாட்சியை இங்கிருந்தே சொல்கிறேன்” என்றார். இளைஞன் ஊருக்குள் சென்று விவரத்தைக் கூறியதும் வியப்பு பரவியது. கண்ணன் நேரிடையாக வந்து சாட்சி கூறுகிறானா? ஊர் எல்லையை நோக்கி அனைவரும் குவியத் தொடங்கினர்.
கண்ணனனைக் கண்ட அடுத்த கணமே முதியவரின் உடல் நடுங்கியது. உண்மையை ஒப்புக்கொண்டார். இளைஞனுக்கு நீதி கிடைத்தது. அவனுக்குத் திருமணம் நடந்தேறியது.
நாளடைவில் சாட்சி கூறிய அந்த சுந்தரத் திருவுருவத்தை ஒரிசாவில் உள்ள கட்டாக் பகுதிக்கு எடுத்துச் சென்றான் ஒரு மன்னன். அங்கு அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. ‘சாட்சி கோபால்’ என்ற பெயருடன் அங்கு தன் வற்றாத திருவருளை இன்றளவும் வழங்கி வருகிறான் கண்ணன்.
Comments
Post a Comment