சங்கடம் தீர்த்த சரபேஸ்வரர்!

ஒரு வெள்ளிக்கிழமை, சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவனைத் தரிசித்தோம். அப்போது ஒருவர், “கோயிலுக்கு முன் அமைந்துள்ள மண்டபத் தூணில் சரபேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். ஞாயிறு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரையிலான ராகுகால நேரம் சரபருக்கு உகந்த பூஜை நேரம்” என்றார். ஞாயிறன்று அங்கு சென்றோம். பெருங்கூட்டம். சரபருக்கு அபிஷேக ஆராதனை நடந்து முடிந்தது. சொற்பொழிவாளர் சரபரின் சிறப்பை விளக்கிக் கூறிவிட்டு, “ஏதேனும் உங்களுக்கு பிரார்த்தனை இருப்பின், சரபனிடம் அதைத் தெரிவித்து, ஆறு வாரங்கள் தொடர்ந்து தரிசனம் செய்தால், எண்ணிய காரியம் ஈடேறுவது உறுதி” என்றார்.
அந்த நேரத்தில் என் இரண்டாவது மகள் பி.ஈ. வகுப்பில் சேர முயற்சி பண்ணிக் கொண்டிருந்தார். கவுன்சிலிங்கில் விரும்பிய கல்லூரி கிடைக்கவில்லை. நான் பணிபுரிந்த நிறுவனத்திலுள்ளவர்களின் வாரிசுகளுக்கு ஒரு கல்லூரியில் ஐந்து இலவச சீட்டுகள் வழங்கியிருந்தார்கள். அதற்கு விண்ணப்பம் செய்தோம். அதில் என் மகளின் ரேங்க் 18.சரபனிடம் என் மகளின் கனவான பி.ஈ. படிப்புக்கு உதவி செய்ய வேண்டினோம். தொடர்ந்து ஞாயிறுதோறும் நடந்தே கோயம்பேடு சென்று சரபரை வணங்கி வருவேன்.

இதனிடையே கல்லூரியிலிருந்து வரிசைப்படி அட்மிஷன் போட்டு வந்தார்கள். முதல் மூன்று சீட்டுகளுக்கு, முதல் மூன்று ரேங்க் பெற்றவர்கள் செலக்ட் ஆகிவிட்ட னர். 4வது, 5வது ரேங்க் பெற்றவர்கள் வேறு கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். எனவே 6வது ரேங்க் பெற்றவருக்கு நான்காவது சீட் ஒதுக்கப்பட்டது. இருப்பதோ ஒரு சீட். என் மகள் ரேங்க் 18. நம்பிக்கை இழக்காமல் ஸ்ரீசரபரை வேண்டி வந்தோம். அது ஆறாவது வாரம். இரண்டொரு நாளில், கல்லூரியிலிருந்து என் மகளுக்கு அட்மிஷன் வந்தது. அதாவது 7வது ரேங்கி லிருந்து 17வது ரேங்க் வரை பெற்றவர்கள் வேறு கல்லூரிகளில் இடம் கிடைத்து சேர்ந்துவிட்டதால், 18வது ரேங்க் பெற்ற என் மகளுக்கு 5வது சீட் கிடைத்தது. அதாவது, Management Quotaவில் 3 லட்சம் கட்டினால் மட்டுமே கிடைக்கக்கூடிய IT சீட் இலவசமாக கிடைத்தது. ‘சங்கடங்கள் தீர்ப்பான் சரபேஸ்வரன்’ என்ற அந்தச் சொற்பொழிவாளரின் சத்தியபூர்வமான வார்த்தைகள், இன்றும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

Comments