பக்தியில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம்?

நாம் எல்லாருமே பக்தி என்று நினைப்பது உண்மையாக பக்திதானா? இப்படித்தான் பக்தி இருக்க வேண்டுமா?’
சென்னை அம்பத்தூர் இந்தியன் வங்கி காலனியில் உள்ள ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவனத்தில், ‘ஸ்ரீமத் ஹரிகதாம்ருத ஸாரம்’ குறித்து சொற்பொழிவு நடந்தது. அப்போது திருமலை - திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான் முரளிதரதாசர் பேசியதிலிருந்து, குட்டிக் கதைகள் இரண்டு...
“ராமபிரான் வனவாசம் சென்றபோது நடந்த ஒரு சம்பவம். மூன்று திருடர்கள் ஒரே வீட்டுக்குச் சென்று ஒரே பொருளைத் திருடினார்கள். ஆஞ்சநேயர் இவர்களைப் பிடித்து , ராமனிடம் அழைத்து சென்று உண்மையை சொல்லி இருக்கிறார்.
ராமரும் அதை பொறுமையுடன் கேட்டு, முதல் திருடனைப் பார்த்து, “ஏன் திருடினாய்?” என்று கேட்டாராம், இரண்டாம் திருடனைப் பார்த்து, “ போ” என்று கடிந்துக் கொண்டாராம், மூன்றாம் திருடனுக்கு உடல் முழுதும் சாணம் தடவி ஊரை வலம் வரும்படி தண்டனை கொடுத்தாராம்.
ஆஞ்சநேயருக்கு ஆச்சர்யம், ஒரு பொருளை திருடிய மூன்று திருடர்களுக்கும், வெவ்வேறு வகையான தண்டனையை ஏன் ராமர் வழங்கினார் என்று. ராமரிடம் இதைப்பற்றி கேட்டார். “நீ போய் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து வா” என்றார் ஸ்ரீராமர்.
ஆஞ்சநேயர் அங்கு சென்றபோது, முதல் திருடன் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்ய தயாராக இருந்தான். அவனிடம் ஆஞ்சநேயர் “ஏன் விழப்போகிறாய்?” என்றார். “ ராமனே என்னை ஏன் திருடினாய் என்று கேட்டு விட்டார். நான் இருந்து என்ன பயன்?” என்றானாம் அவன்.
இரண்டாவது திருடனைப் பார்க்க போனார். அவன் ஏதும் பெரிதாக மாறவில்லை என்பது ஆஞ்சநேயருக்கு புரிந்தது. மூன்றாவது திருடன் உடல் எல்லாம் சாணம் போன்ற அசிங்கங்களைப் பூசி தெருவில் ஊர்வலம் வருகிறான். அவனுடைய மனைவி அழுது புலம்புகிறாள், அவன் சிறிதும் அச்சமின்றி அவளிடம் “ குளிக்க வெந்நீர் போடு, வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு வேறு வீட்டுக்கு திருடப் போகவேண்டும்” என்றான்.
இதைப்பார்த்த ஆஞ்சநேயர் மீண்டும் ராமனைச் சந்திக்க விரைந்தார்.
“என்ன ஸ்வாமி? இவர்கள் மூன்றுபேரும் ஒவ்வொரு நிலையில் இருக்கிறார்களே?” என்றபோது, ராமன் சொன்னார்: “அது தெரிந்துதான் நான் ஒவ்வொருவருக்கும் வேறு-வேறு தண்டனை அளித்தேன்.”
நாம் எல்லாருமே இந்த மூன்றாம் நிலையில்தான் இருக்கிறோம், பாகவதம், ராமாயணம் போன்ற ஸத் விஷயங்களைக் கேட்கிறோம்; ஆனால் நம்மை நாம் இன்னும் பக்தி நிலைக்கு உயர்த்திக் கொண்டு போகவில்லை.
கோகுலத்தில், கிருஷ்ணன் பால், வெண்ணெய் என்று தங்கள் வீட்டில் திருடிச் சாப்பிடுவதை கண்டுபிடித்த கோபியர்கள், அவனைக் கட்டிப் போட கூடி திட்டமிட்டு இருந்தார்கள். அதற்கு ஏற்றாற்போல், யசோதை அவர்களிடம், “ இன்று மாலை கிருஷ்ணனுக்கு ஆரத்தி செய்யப் போகிறோம், நீங்கள் அனைவரும் வீட்டுக்கு வரவேண்டும்” என்று சொல்லிச் சென்றாள். கோபியர்களுக்கு பேரானந்தம்.
கிருஷ்ணனைப் பிடிக்க சரியான தருணம் என்று முடிவு செய்தார்கள். தங்க மணிகளை, தங்கக் கயிற்றில் கோர்த்து அரைஞாண் கயிறாக்கி கிருஷ்ணனுக்குப் பரிசாக வழங்கத் திட்டமிட்டு இருந்தனர். வெண்ணெய் திருட அவன் வரும்போது மணிகள் ஒலிக்கும். அவனைப் பிடிக்கலாம் என்பதே அவர்களது திட்டம். அதேபோல், கிருஷ்ணனுக்கு அந்த மணியைக் கட்டிவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள். குட்டி கிருஷ்ணனின் துள்ளலுக்கு மணி ஜல்ஜல்லென்று அழகாய் அடித்துக்கொண்டே இருந்தது. கிருஷ்ணனுக்கு கோபியர்களின் திட்டம் தீர்க்கமாகத் தெரிந்தது.
காலை விடிந்ததும், குடுகுடுவென்று வெளியே ஓடிவந்து கோபியர்கள் வீடுகளுக்குக் கிளம்பினான். அவன் கட்டியிருக்கும் மணிகளைப் பார்த்து, “நீங்கள் ஓசை எழுப்பாதீர்கள்” என்று ஆணையிட்டான். மணிகளும் அவன் நடக்கும்போது கூட கொஞ்சமும் ஓசை எழுப்பவில்லை. அவன் வெண்ணெயை எடுக்கும்போதும், ஓசை தரவில்லை. ஆனால் அதை வாயில் போட்டுக் கொண்டபோது மணிகள் சப்தமாக ஒலித்தன.
கிருஷ்ணனுக்கு ஒரே கோபம். “அது எப்படி நான் சொல்லியும் நீ ஓசை எழுப்பினாய்?” என்றான். மணிகள் சொல்லின: “ கிருஷ்ணா! நைவேத்தியம் ஆகும் போது, நாங்கள் ஓசை எழுப்புவது இயல்பான பழக்கம், அதனால்தான் ஓசை எழுப்பினோம்.” ஜடம் என்று நாம் கருதும் பொருளுக்குக் கூட கடவுள் மீது இத்துணை பக்தி இருக்கிறதே, நமக்கு அப்படி இருக்கிறதா? இப்படிப்பட்ட பக்திதான் நம்மை பகவானிடம் சேர்ப்பிக்கும். அதற்கான சுலப வழி, பகவானின் திருநாமங்களை மனமொன்றிச் சொல்வதுதான்!
இந்த உடலானது வாழை இலை போன்றது. நமது பக்தியின் வெளிப்பாடுகளான ஜபம், தியானம், ஸத் விஷயங்கள், பகவான் நாமங்களை சொல்வது போன்றவை இலையில் போடப்படும் உணவுப் பதார்த்தங்கள். பதார்த்தங்கள் எப்படி இருக்கின்றன என்பது முக்கியமே தவிர, வாழை இலை மட்டுமே முக்கியமில்லை.

Comments