குருவருள்

'த்வம் பிதா த்வஞ்ச மே மாதா
த்வம் பந்து ஸ்த்வஞ்ச தேவதா
ஸ்ம் ஸார பீதி- பங்காய
தஸ்மை ஸ்ரீ குரவே நம:'
_ ஸ்ரீகுரு கீதை


பொருள்: நீங்களே என் தந்தை; நீங்களே என் தாய். நீங்களே உறவு. நீங்களே தெய்வம். பிறவி பயத்தைப் போக்கும் குருவாகிய உமக்கு எனது நமஸ்காரம்.
வாழ்க்கை பயணத்தில் எப்போதும் நமக்கு உறுதுணையாக இருப்பது குருவின் திருவருளே! இதற்குச் சான்று... ஸ்ரீசாயிநாதனின் அருள்பெற்ற இமாம்பாய் சோடாய்கானின் அனுபவம்!
இமாம்பாய் சோடாய்கான்... ஒளரங்கபாத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி! ஒரு முறை, விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஆசிரியர் ஒருவரை... அவர் சரியான தகவல் அளிக்காததால், கடுமையாக அடித்து விட்டார் இமாம். ரத்தம் வழிய மயங்கி சரிந்தார் ஆசிரியர்.
விஷயம் மேலதிகாரிக்குச் செல்ல, இமாமை அழைத்து வேலையை ராஜினாமா செய்யும்படி உத்தரவிட்டார் அந்த அதிகாரி. அத்துடன், "ஆசிரியர், உன் மீது வழக்கு தொடர்ந்தால், கடும் தண்டனைக்கு ஆளாவாய்!" என்றும் இமாமை எச்சரித்தார்.
இதையடுத்து தனது வேலையை ராஜினாமா செய்த இமாம், 'வேறு தண்டனைகள் கிடைத்து விடக்கூடாதே' என்று கலங்கினார். இஸ்லாமிய மகானான தர்வேஸ்ஷா என்பவரைச் சந்தித்து, நடந்ததை விவரித்தார்.

உடனே, "ஷீர்டி சென்று பாபாவை தரிசித்தால் எல்லாம் நலமாகும்" என்று அருளிய அந்த மகான், "பாபா, பெரும் அவுலியா (இறை நேசர்) என்பதை நீ அறிந்து கொள்ள, ஒரு வழி சொல்கிறேன். பாபாவைகண்டதும் அவருக்குக் கேட்கும்படி, குர்ஆனின் முதல் அத்தியா யத்தை ஓது. உடனே அவர் ஆர்வத்துடன் உன்னைத் திரும்பிப் பார்ப்பார்!" என்றும் கூறினார்.
இதைக் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட இமாம், உடனடியாக ஷீர்டிக்குப் புறப்பட்டார்.
அங்கு, வீதியில் பெண் ஒருத்தியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் பாபா. அவரைக் கண்டதும் பரவசம் அடைந்தார் இமாம். தர்வேஸ்ஷா கூறியவாறு, பாபாவின் பின்னால் நின்றபடி, குர் ஆனின் முதல் அத்தியாயத்தை ஓதினார். சற்றும் தாமதிக்காமல் திரும்பிப் பார்த்தார் பாபா. அவரின் முகத்தில் கோபம்!
"யார் நீ? என்னிடம் ஏதோ கேட்க வருவது போல் பாவனை செய்கிறாயே ஏன்?" என்று கத்தினார். பிறகு, விறுவிறுவென துவாரகாமயிக்குள் சென்று விட்டார். இமாமும் உள்ளே செல்ல முயற்சித்தார். ஆனால் பாபா அதற்கு அனுமதிக்கவில்லை!
மனம் கலங்கிய இமாம், அங்கிருந்த காக்கா சாகேப்பிடம் (பாபாவின் தீவிர பக்தர்களில் இவரும் ஒருவர்.) சென்று பாபாவை சந்திக்க உதவும்படி கேட்டுக் கொண்டார்.
இமாம் மீது பரிதாபம் கொண்ட சாகேப், அவரை அழைத்துக் கொண்டு பாபாவிடம் சென்றார். "பாபா! இந்த அடியவரும் உம் குழந்தைதானே. இவரிடம் கோபிக்கலாமா?" என்று கேட்டார்.
பாபாவின் முகம் மாறியது. "இவனா குழந்தை? ஆசிரியரையே அடித்தவன் ஆயிற்றே!" என்றார் கோபம் சற்றும் தணியாதவராக!
இதைக் கேட்டதும் அதிர்ந்து போனார் இமாம். 'தான் செய்த தவறு பாபாவுக்கு எப்படித் தெரியும்?'என்று வியந்தார். 'மகான் தர்வேஸ் ஷா சொன்னது உண்மையே. இவர், இறைவனின் நண்பர்தான்!' என்றது அவரின் மனம்.
ஆசிரியரை அடித்து விட்ட குற்ற உணர்ச்சி... ஆசிரியர் வழக்கு தொடர்ந்தால் தண்டனை கிடைக்குமே என்ற பயம்... எல்லாவற்றுக்கும் மேலாக பாபா தன் மீது கருணை காட்ட மறுக் கிறாரே என்ற துக்கம்... அனைத்தும் ஒன்று சேர நிலைகுலைந்து நின்றார் இமாம்!
அவரின் எண்ண ஓட்டத்தை அறியாதவரா பாபா? அவர், இமாமையே உற்று நோக்கினார். பிறகு மெள்ள புன்னகைத்தவர், இமாமை அருகில் வரும்படி சைகை செய்தார். இமாமும் அருகில் சென்றார். அவரின் தலை மீது கை வைத்த பாபா, "அஞ்சாதே இமாம்! உன் மேல் ஒரு தவறும் இல்லை. ஆசிரியர் உன் மீது வழக்கு ஏதும் தொடர மாட்டார். கவலை வேண்டாம். அல்லா மாலிக்!" என்று இமாமை ஆசிர்வதித்தார்.
அதன்படியே அனைத்தும் நிகழ்ந்தன. பாதிக்கப் பட்ட ஆசிரியர் இமாமின் மீது வழக்குத் தொடரவில்லை. குருவருளால் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பும் இமாமுக்குக் கிடைத்தது. சாயி நாதனின் திருவருளை எண்ணி நெகிழ்ந்தார். ஆம்... இமாம், ஷீர்டி ஸ்ரீசாயிபாபாவின் தீவிர பக்தரானது இப்படித்தான்! காலங்கள் ஓடின!

ஒரு முறை, பாபாவை தரிசிக்க ஷீர்டிக்கு வந்த இமாம் ஊருக்குத் திரும்பும் முன், பாபாவிடம் ஆசிபெற விரும்பி அவரிடம் சென்றார்.
"இப்போது செல்ல வேண்டாம்; நேரம் சரியில்லை. புயலும், நெருப்பும் இடர்பாடுகளைத் தரும் அபாயம் இருக்கிறது. உனது பயணத்தை தள்ளி வை!" என்றார் பாபா. ஆனாலும், இமாமுக்கு வீட்டுக்கு திரும்பும் எண்ணமே மேலோங்கி இருந்தது. பாபாவின் அறிவுரையை பொருட்படுத்தாமல், புறப்பட்டு விட்டார்!
சுமார் 12 மைல் தூரம் பயணித்து, 'வாரி' எனும் கிராமத்தை அடைந்தார் இமாம். அந்த ஊரின் கிராம அதிகாரி, இமாமை தடுத்து நிறுத்தி, "வானிலை சரியில்லை. புயல் உருவாகும் போல் தெரிகிறது. ஆகவே, பயணத்தை ரத்து செய்யுங்கள்" என்றார்.
இமாம் என்ன நினைத்தாரோ... கிராம அதிகாரியின் அறிவுரையையும் பொருட்படுத்தாமல், நடையைக் கட்டினார். வாரி கிராமத்திலிருந்து சுமார் 3 மைல் தொலைவு கடந்திருப்பார் இமாம்... புயலுடன் பெரு மழை பெய்ய ஆரம்பித்தது. இமாம் ஓட்டமும் நடையுமாக பயணத்தைத் தொடர்ந்தார். திடீரென பளீரிட்ட மின்னல், பெரும் சத்தத்துடன் அருகில் இருந்த மரத்தைத் தாக்கியது. அப்போது, எவரோ தன்னை முன்னோக்கித் தள்ளுவது
போல் உணர்ந்த இமாம், சற்றுத் தள்ளி போய் விழுந்தார். மறு கணம் அரச மரம் இரண்டாகப் பிளந்து விழுந்தது. சற்று தாமதித்திருந்தாலும் மரம் இமாமின் தலை மீது விழுந்திருக்கும்!
தனக்கு நேரவிருந்த பேராபத்தை நினைத்து உறைந்து போனார் இமாம். 'நேரம் சரியில்லை; பயணத்தைத் தள்ளிப் போடு என்று பாபா எச்சரித்தாரே. அவரது அறிவுரையை அலட்சியம் செய்து விட்டேனே... ச்சே!' என்று தன்னையே நொந்து கொண்டவர், அங்கிருந்து புறப்பட யத்தனித்தார். ஆனால் எதிரில் அவர் கண்ட காட்சி, சிலிர்க்க வைத்தது! ஆம்... இரண்டு பழுப்பு நிற நாய்களுடன் சாந்தமே உருவாக நின்றிருந்தார் ஸ்ரீசாயி பாபா!
கண்களில் நீர் மல்க, "மன்னியுங் கள் பாபா. தங்களின் எச்சரிக்கையை நான் மீறியபோதும்... முன்னே தள்ளி விட்டு, மரம் என்மீது விழுந்து விடாமல் என்னைக் காப்பாற்றிய தங்களின் கருணையே கருணை!' என்றபடி அந்தக் கருணாமூர்த்தியின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்தார் இமாம். அவர் நிமிர்ந்து பார்த்தபோது, பாபா அங்கு இல்லை!
குரு தரிசனம் தந்த தெம்புடன், தைரியமாக பயணத்தைத் தொடர்ந்தார் இமாம். வழியில், ஓர் ஆறு குறுக்கிட்டது. அதைக் கடந்தால் இமாமின் கிராமம். ஆற்றின் ஆழத்தை யூகிக்க முடியவில்லை.கண்ணை மூடி, பாபாவை தியானித்தபடி ஆற்றில் இறங்கி நடந்தார் இமாம். என்ன ஆச்சரியம்... முழங்கால் அளவே நீர் ஓடியது. சில நிமிடங்களில் கரையேறியவர், திரும்பிப் பார்த்தார். நொங்கும் நுரையுமாக... மரங்களையும் கிளைகளையும் அடித்துச் செல்லும் ஆற்று வெள்ளமும் அதன் பேரிரைச்சலும் அவரை திகைக்க வைத்தன.
'எல்லாம் பாபாவின் திருவருள்' என்று முணுமுணுத்தபடி கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
'ஆற்றில் ஆபத்தின்றி கரையேற்றிய பாபா, துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையிலும் தன்னை கரையேற்றுவார்!' என்ற நம்பிக்கையும் அதனால் எழுந்த மகிழ்ச்சியும் அவர் மனதை நிறைத்திருந்தன!

Comments