துளசி துலாபாரம்!

தன்னுடைய நகைகள் அனைத்தையும் வைத்த பின்பும், அவை கிருஷ்ணனின் எடைக்குச் சமமாக இல்லை’ என்னும் தவிப்பில் இருந்தாள் சத்யமாபா. ‘தனக்கு எதுவுமே தெரியாது’ என்பது போன்ற புன்னகையுடன், வழக்கம்போல அமர்ந்திருந்தான் ஸ்ரீகிருஷ்ணன். நாரதர், இந்த நாடகம் ஏனென்று தெரியாதவர்போல நின்று கொண்டிருந்தார்.
கிருஷ்ண தியானத்தில் ஆழ்ந்தவளான ருக்மிணி அங்கு வந்தாள். தராசில் குவிக்கப்பட்டிருந்த ஆபரணங்களை அகற்றச் சொன்னாள். இலை தாங்கும் அளவுக்கு எடையற்று இருப்பவனும், தன் விஸ்வ எடையோடு - பாலகிருஷ்ணனாக, கம்சன் மேல் குதித்து அவனை மாய்த்தவனுமான ஸ்ரீகிருஷ்ணனைத் துதித்தாள்.
தராசின் மறுதட்டில் அமர்ந்திருந்த கிருஷ்ணனின் எடை தானாகவே குறைய ஆரம்பித்தது. ருக்மிணி பக்தியுடன் சமர்ப்பித்த துளசிதளம், தராசின் அடுத்த தட்டில் அமர்ந்தது. மறுகணம், அந்தத் தட்டு கீழிறங்க ஆரம்பித்தது. நாரதர் ஆச்சர்யப்படுபவர் போல நடித்தார். கிருஷ்ணன் ஒன்றும் புரியாதவன்போல விழித்தான். சத்யபாமா பிரமித்து நின்றாள்.
அவளுக்குள் இருந்த ‘செல்வம் பற்றிய அகந்தை’யை அகற்றத்தான் இந்த நாடகம் என்பது, அவளுக்கும் ருக்மிணிக்கும்தான் தெரியாது. தெரிந்த மற்ற இருவருமே தெரியாத மாதிரி நடிக்கும்போது, இவர்கள் நிலையை என்னவென்று சொல்ல?
தராசுத் தட்டில் இருந்த துளசி தளத்தை பயபக்தியோடு எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்ட நாரதர் கேட்டார்:
“அம்மா ருக்மிணி, கிருஷ்ணனின் எடையை துளசிதளம் அளவுக்கு குறைத் துவிட்டாயே... எப்படி இதைப் புரிந்து கொண்டாய்?”
சற்றே நாணத்துடன் முறுவலித்த ருக்மிணி சொன்னாள்:
“சுவாமி, எங்களுக்கு மணமான புதிது... ஒருநாள் இவர் என்னிடம் கேட்டார்: ‘ருக்மிணி, உனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத என்னை மணந்து கொண்டாயே... இது வருத்தமாயில்லையா’ என்று. ஏன் என்றதற்கு பதில் சொன்னார்: ‘என்னைவிட வசதி படைத்த மன்னர்கள் உன்னை விரும்பினார்கள். அவர்களோடு ஒப்பிட்டா, நான் ஒண்ணுமில்லாதவன். என்னை ஏழைகளுக்கும் துறவிகளுக்கும்தான் பிடிக்கும். பலமிக்க மன்னர்களான ஜராசந்தன், சால்வன், சிசு பாலன்னு பலர் என்னை எதிரியாக நினைக்கிறார்கள். ஏன்? உங்க அண்ணன் ருக்மியும்தான். குணமில்லாதவன், தெளிவான நடத்தை இல்லாதவன்னு சொல்லப்படற ஒருத்தனை புருஷனா அடையறது கஷ்டமில்லையா?’ என்றார். எனக்கு மயக்கமே வந்தது.”
“அப்புறம்?”
ஆர்வமாக வெளிப்பட்டது சத்யபாமாவின் குரல்.
“கொஞ்சநேரம் எனக்கு நடுக்கமாகவே இருந்தது. இவரைத் தவிர, வேற எதுவுமே என் மனசுல இல்லை... பேச்சு, நினைப்பு, செயல்னு எல்லாம் இவரையே சார்ந்து இருக்கோம். இவரே இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டாரேன்னு தடுமாறினேன்... எங்க குலதெய்வமான கௌரியை நினைச்சேன்... பளிச்னு புரிஞ்சுது.”
“என்ன புரிந்தது ருக்மிணி?” இம்முறை நாரதர் கேட்டார்.
“இவர் யார்னு புரிஞ்சுது. அதனால சொன்னேன்: ஒண்ணுமில்லாதவர்னு உங்களை சொன்னீங்க, நிஜம்தான். உங்களைத் தவிர இந்தப் பிரபஞ்சத்துல எதுவுமே இல்லை. அதனால நீங்க ஒண்ணுமில்லாதவர்தான்.”
“அடடா... அற்புதமாச் சொன்னே!” பாராட்டினார் நாரதர்.
“ஏழைகளும் துறவிகளும் உங்களை விரும்புவாங்கன்னு சொன்னீங்க. எளிமை தான் ஏழைகளுக்குப் பிடிக்கும். யோகேஸ்வரனைத்தான் யோகிகளுக்குப் பிடிக்கும். அதுவும் சரிதான்னேன்.”
“ம்... பிரமாதம்.”
“குணமில்லாதவர்னு சொல்லிக்கிட்டீங்க. நிஜம்தான். குணங்களைக் கடந்தவன்தான் பகவான். அவனுக்கு ‘நிர்க்குணன்’னு பேர் உண்டு. அதனால குணமில்லாதவர் என்று சொல்றது பொருத்தம்.”
“ஓ... அப்புறம்?”
“தெளிவான நடத்தை இல்லை என்று சொன்னதும் நிஜம். ஏன்னா, இவரோட லீலா விநோதங்களை யோகிகள்கூட புரிஞ்சுக்க முடியாது. அவ்வளவு சூட்சுமம் அதுல இருக்கும். அதே மாதிரி, மன்னர்கள் யார் வேணா இவரை எதிரியா நினைக்கலாம். ஆனா, இவர் எதிரியா நினைக்க யாருமே கிடையாது. அவ்வளவு ஆற்றல் உண்டு இவருக்கு.
அதுமட்டும் இல்லை; செல்வம், அந்தஸ்து, அழகுன்னு சொல்ற வார்த்தைகளுக்குப் பொருளே இவர்தான். அப்படியிருக்கும்போது, சராசரியாச் சொல்லப்படற அந்த விஷயங்கள் இவர் முன்னால பொருட்டில்லை! அதனால, இவரை கல்யாணம் பண்ணதுதான் சரின்னேன்.”
ருக்மிணி சொல்லி முடித்ததும் நாரதர் வியந்து சொன்னார்:
“அம்மா. நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நூற்றுக்கு நூறு நிஜம். பகவானோட தன்மை என்னன்னு வேதம் சொல்றதோ, அதை அவ்வளவு அழகா, நுட்பமா சொல்லியிருக்க... உன்னைத் தவிர வேற யாராலும் இப்படிச் சொல்ல முடியாது. நீ தராசுல வைச்ச துளசிதளம் வெறும் இலை இல்லை; நீ பூஜித்த பிரசாதம். ஏன்னா, துளசியே பக்தியோட பிருந்தையோட, வடிவம். அதை, ஆத்மார்த்த பக்தியோட சமர்ப்பிச்சதுல, நீ கண்ணனை எடையில்லாம ஆக்கிட்ட.”
அவர் சொல்லும்போதே குறுக்கிட்டாள் ருக்மிணி:
“அப்படி சொல்ல வேண்டாம் மகரிஷி. அவர் அந்த பக்தியை ஏற்று, தன்னை எடையற்றவரா ஆக்கிக்கொண்டார். அவர் பக்திக்கு முன்னால இலகுவா இருப்பார்; அன்புக்கு முன்னால இலகுவா இருப்பார்; பிரேமைக்கு இலகுவா இருப்பார்; படிப்பு, அறிவு, அதிகாரம், ஆணவம், செல்வம்... இதெல்லாம் முன்வரும்போது, அவரோட கனம் தாங்க முடியாம ஆயிடும். அவர் அந்த இடங்கள்ல அசைக்க முடியாதவரா மாறிடுவார்.”
ருக்மிணி பேசப்பேச கண்ணனின் திருமுகத்தில் புன்னகை மேலும் விகசித்தது. சத்தியபாமாவின் முகம், தன்னுடைய தவறை எண்ணிக் குமைந்ததை வெளிக்காட்டியது. அதை நிஜம் என்பதுபோல, சட்டென்று ருக்மிணியை விழுந்து வணங்கினாள் பாமா.
அதிர்ந்த ருக்மிணி அவளை எழுப்பி தன்னோடு அணைத்துச் சொன்னாள்:
“ச்சே... இதென்ன என்னைப்போய்...?”
“இல்லை அக்கா... உன்னுடைய அன்பு, உயிரோட்டமானது. அதற்குள் கனிவு, பக்தி, அடக்கம், சாந்தம் என்று அனைத்தும் நிறைந்திருக்கின்றன. எனக்குள் ஆணவமும், பொறாமையும் பரவியிருந்தன. இல்லாவிட்டால், என் நாதனை துலாபாரத்தில் அமர வைத்திருப்பேனா? என் செல்வம் அவரை மீட்டுத் தரவில்லை. உங்கள் அன்புதான் மீட்டிருக்கிறது. அதனால்தான் வணங்கினேன்.”
‘செல்வம் பற்றிய அகந்தையைப் போக்க நடத்தப்பட்ட நாடகம்தான்’ என்று நம்பியிருந்த நாரதர் அதிர்ந்து போனார்.
‘ஹே... கிருஷ்ணா, ருக்மிணியின் மீது பாமா கொண்டிருந்த பொறாமையையும் போக்குவதற்காக இந்த நாடகமா? நாடகத்தில் பங்கேற்ற எனக்கும் சொல்லாத விஷயமல்லவா இது. உன் லீலைக்கு எல்லையேயில்லை’ என்று சொல்வது போல், கிருஷ்ணனைப் பார்த்தார்.
கிருஷ்ணன் வழக்கம் போன்றே ஒன்றுமறியாத புன்னகையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

Comments