குறை பொறுத்தவர்!

அஷ்ட சகஸ்ரம் என்ற கிராமத்துக்கு ஸ்ரீமத் ராமானுஜர் தன் சிஷ்யர்களோடு விஜயம் செய்தார். அந்த ஊரிலிருந்த யக்ஞேசர் என்ற தனவந்தர் இல்லத்துக்கு வருவதாகச் சீடர்களிடம் சொல்லி அனுப்பினார். திரும்பி வந்த சீடர்கள் மூலம் சரிவர அவர் உபசரித்து அனுப்பாததை அறிந்து, ‘சரி. நாம் வரதாச்சாரி வீட்டுக்குச் செல்வோம்’ என்று புறப்பட்டார் பீடாதிபதி.
வரதாச்சாரி வீட்டு வாசலில் நின்ற படி, வரதா! உள்ளே என்ன செய்கிறா?" என்று குரல் கொடுத்தார். வரதனின் மனைவியிடம் இருந்தது ஒரே புடவை. அதைத் துவைத்து உலர்த்திவிட்டு பாதிச் சேலையொன்றைச் சுற்றிக்கொண்டு வேலை பார்த்தவள், கைகளைக் கதவுக்கு வெளியே நீட்டி, தானிருப்பதைத் தெரியப் படுத்தினாள். எம்பெருமானார் நிலைமையைப் புரிந்துகொண்டு தன் தலைப் பாகையை எடுத்து உள்ளே வீசினார். அது கீழே விழாமல் பற்றி அணிந்து கொண்டு வெளியே வந்து அனைவரையும் நமஸ்கரித்தாள். என் பர்த்தா சற்று நேரத்தில் வந்து விடுவார். தாங்கள் சீடர்களோடு வீட்டுக்குள் வந்து களைப்பாறுங்கள். முதலில் தீர்த்தம் அருந்துங்கள்" என கூஜாவிலும், சொம்பிலும் நீர் எடுத்து வந்து உபசரித்தாள். வீட்டில் சாப்பிட எதுவுமே இல்லையெனினும் விருந்தினரை வெறும் வயிற்றோடு அனுப்புவது குலத்துக்கு இழுக்கு என்று வேதம் சொல்லிக் கொடுத்த பாடத்தை அடியொற்றி நடந்தாள்.
அந்த மங்கையின் ஊர் பருத்திக் கொல்லை. ஒரு பணக்காரன் தன் மோகத்தை பலமுறை அவளிடம் வெளிப்படுத்தினான். அவனுக்குத் தகுந்த அறிவுரை கூறி அவளும் மறுத்துக் கொண்டிருந்தாள். இப்போது, நெருப்புக்கு இரையாகப் போகும் தன் தேகத்தைப் பயன்படுத்தி, ஆசார்யாருக்கும் அவரது தொண்டர்களுக்கும் அன்னமிடும் பாக்கியத்தைப் பெற முடி வெடுத்தாள்.
ஸ்வாமி! சற்றே பொறுத்துக்கொண்டால், நான் சென்று தளிகை சாமான்களோடு வந்துவிடுவேன்" என அனுமதி பெற்றுப் புறப்பட்டாள் நங்கை. ஆசார் யார், நடப்பதை அறியாதவரா! செல்வந்தன் வீடு சென்றவள், உன் விருப்பத்துக்கு நான் உடன்படுகிறேன். முதலில் எனக்கு அதிதிகளுக்கு உணவிட பணம் கொடு. அவர்கள் சென்றதும் வருகிறேன்" என்றாள். அவனோ, கள்ளுண்ட குரங்கானான். அவளுக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து, ஏமாற்றாமல் வந்துவிடு, காத்திருப்பேன்" என உளறினான்.
மளிகை சாமான், காய்கறி எல்லாவற்றையும் அவள் வாங்கிக்கொண்டு வருகையில் கணவன் வரதனும் வந்துவிட்டான். அவனிடம் நிகழ்ந்ததை எடுத்துரைத்தாள். அவனும் அவள் செயலைப் பாராட்டினான். ஆச்சார்ய குழாமுக்கு வயிறார உணவிட்டனர். இரவு வந்தது. மழை கொட்டியது. குடைபிடித்து மனைவியை அழைத்துச்சென்று தனவந்தர் வீட்டில் விட்டான் வரதாச்சாரி. காலையில் வந்து அழைத்துப் போகிறேன்" என்று இல்லாளிடம் கூறினான்.
அமுது படைக்க உதவிய புண்ணியரே! குரு தேவரின் ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தாங்களும் அருந்தக் கொண்டு வந்துள்ளேன்" என மோகாந்தக்காரனிடம் தீர்த்தத்தை அளித்தாள் பருத்திக் கொல்லை பத்தினி. அதை அருந்தியவன் ஞானம் பெற்று, அவள் கால்களில் சாஷ்டாங்கமா விழுந்து நமஸ்கரித்தான். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அமுதிட ஒரு கற்புக்கரசியின் கற்பை விலையாகக் கேட்ட காமுகன் என்ற அபவாதம் எனக்கு வேண்டாம். இந்தக் கொடிய சிந்தனைக்கு என்ன பிராயச்சித்தம்?" என உடையவரிடம் வந்து அடி பணிந்து அழுதான். மனம் திருந்தி வேதனையுற்ற அவவனுக்கும் ஸமஸ்காரம் செய்து அவனையும் சிஷ்யராக ஏற்றுக்கொண்டார் உடையவர்.

Comments