ஸ்ரீவரதராஜபெருமாள்

ஞ்சைத் தரணியில் உள்ள ஆலயங்களில், மிகவும் புகழ்பெற்ற பெரியகோயிலையும் திருவையாறு திருத்தலத்தையும் எல்லோரும் அறிவோம். தஞ்சைப் பெருவுடையார் எனப்படும் ஸ்ரீபிரகதீஸ்வரர் கோயிலில் சதயப் பெருவிழா பிரமாண்டமாகக் கொண்டாடப்படும். அதேபோல் திருவையாறு ஸ்ரீஐயாறப்பர் கோயில் விழாவும் பிரசித்தம்.
அதுமட்டுமா? தியாகப்பிரம்ம ஆராதனை விழா திருவையாறில் கோலாகலமாக நடைபெறுவது, உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதானே!
இந்த நாளில், தியாகராஜரின் திருச்சமாதியில் ஆராதனைகள், பூஜைகள் என அமர்க்களப்படும். இதில் கலந்துகொள்ள மிகப் பிரபலமாக உள்ள கர்னாடக சங்கீத வித்வான்கள் முதல், சங்கீதம் கற்றுக்கொண்டிருக்கிற மாணாக்கர்கள் வரை எத்தனையோ பேர் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் வருவார்கள்.
சிற்ப நுட்பங்களாலும் பிரமாண்டத்தாலும் நம்மைக் கவர்கிற திருவையாறு திருத்தலம் சப்த ஸ்தான தலங்களில் முக்கியமானதும் முதன்மையானதுமான அற்புதமான தலம் என்கின்றனர் பக்தர்கள்.
திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய தலங்களை சப்த ஸ்தான ஸ்தலங்கள் எனப் போற்றுவார்கள். திருவையாறு ஸ்ரீஐயாறப்பர்- ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி, திருப்பழனம் ஸ்ரீஆபத்சகா யேஸ்வரர்- ஸ்ரீபெரியநாயகி, திருச்சோற்றுத்துறை ஸ்ரீஓதவனேஸ்வரர்- ஸ்ரீஅன்னபூரணி, திருவேதிக்குடி ஸ்ரீவேதபுரீஸ்வரர்- ஸ்ரீமங்கையர்க்கரசி, திருக்கண்டியூர் ஸ்ரீபிரம்மசிரகண்டீஸ்வரர்- ஸ்ரீமங்கலநாயகி, திருப்பூந்துருத்தி ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர்- ஸ்ரீசௌந்தரநாயகி, திருநெய்த்தானம் ஸ்ரீநெய்யாடியப்பர்- ஸ்ரீபாலாம்பிகை ஆகிய இறைத்திருமேனிகளின் உத்ஸவ மூர்த்தங்கள் ஒன்று கூடி தரிசனம் தரும் நாளில், ஏராளமான அன்பர்கள் தரிசித்து மகிழ்வார்கள்.
வருடந்தோறும் சித்திரை முழு நிலவுக்கு அடுத்த நாள், சப்த ஸ்தான தலங்களில் உள்ள உத்ஸவத் திருமூர்த்தங்கள் சப்பரங்களில் அழைத்துவரப்படுவார்கள். நந்திதேவருக்கும் சேஷாம்பிகைக்கும் நடைபெறும் திருமணத்துக்கு வருவதையும், அவர்களுக்குச் சீர்வரிசை செய்யும் ஏழு தலங்களின் ஸ்வாமிகளையும் கண்ணாரத் தரிசித்து மகிழ்வார்கள். ஏழு தலத்து உத்ஸவர்களும் தனித்தனிச் சப்பரங்களில் வர, கூடவே நந்திதேவரும் சேஷாம்பிகையும் மற்றுமொருச் சப்பரத்தில் வீதியுலா வர... பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமாம், இந்தத் திருவிழா. சப்த ஸ்தான விழாவைத் தரிசிப்பதற்கு, தஞ்சாவூரில் இருந்தும் கல்லணையில் இருந்தும் அரியலூரில் இருந்தும் கும்பகோணத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், குடும்பத்தாருடன் வண்டி கட்டிக் கொண்டு வருவார்களாம்.
அப்படி வரும்போது, வழியில் உள்ள ஆலயங்களையெல்லாம் தரிசித்துக் கொண்டே வந்து, நிறைவாக திருநெய்த்தானம் எனப்படும் தில்லை ஸ்தானத்தில் ஸப்த ஸ்தான ஸ்தலங்களின் மூர்த்திகளையும், திருவையாறு ஸ்ரீஐயாறப்பர் மூலவரையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம்.
தஞ்சாவூரில் இருந்து கரந்தை, பள்ளி அக்ரஹாரம் என ஒவ்வொரு தலமாகத் தரிசித்தபடியே திருவையாறு நோக்கிச் செல்லும் போது, அம்மன்பேட்டை என்கிற அழகிய கிராமம் வரும். அந்த ஊருக்குள் நுழைந்தால், அற்புதமாகக் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலை அடையலாம்.
ஒருகாலத்தில் பெரிய மதிலுடனும் அழகிய நீண்ட பிராகாரத்துடனும் பிரமாண்டமாக இருந்த கோயில் இது. பெருந்தேவித் தாயாரும் ஸ்ரீவரத ராஜரும் அத்தனை அழகுடனும் சாந்நித்தியத் துடனும் காட்சி தந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒரேயரு சந்நிதி மட்டுமே உள்ள கோயிலாகச் சுருங்கிப் போயிருக்கிறது ஆலயம்.
மதிலைக் காணோம்; பிராகாரங்களோ மண்டபங்களோ ஏதுமில்லை. உள்ளே நுழைந்ததும் தென்படுகிற பலிபீடம், துவஜஸ்தம்பம், கருடாழ்வார் என எதுவும் இல்லை. பார்த்தால் பதறிப் போவோம். 'வரதா... என்ன இது சோதனை. உலகுக்கே வரம் தரும் உன்னைக் கவனிப்பார் இல்லையா?’ என்று ஏங்கித் தவிப்போம்.
மிச்ச சொச்சமாக இருக்கிற ஒரேயரு சந்நிதியும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் தருணத்தில் இருக்கிறது. மேற்பூச்சு முழுவதும் பெயர்ந்துபோய், அடுக்கி வைக்கப்பட்ட செங்கற்களாக இருக்கும் சந்நிதியைப் பார்க்கிற போது, நம் நெஞ்சம் பதைபதைக்கும்!  
''ஒருகாலத்தில் விழாக்களும் வைபவங்களும் விமரிசையாக நடைபெற்ற கோயில் இது. எங்கிருந்தெல்லாமோ அன்பர்கள் இங்கு வந்து, பெருமாளையும் தாயாரையும் வஸ்திரம் சார்த்தி, புளியோதரை நைவேத்தியம் செய்து, பிரார்த்தித்துச் செல்வார்கள். பிறகு, தங்களின் பிரார்த்தனை நிறைவேறிவிட்ட பூரிப்புடன் நேர்த்திக்கடனைச் செலுத்துவதற்காகவும் வருவார்கள். ஆனால், கோயில் சிதிலமடைந்து போனதால், எங்களின் மொத்த கிராமமே களையிழந்து போய்விட்டது'' என வருத்தத்துடன் தெரிவிக்கிறார், ஓய்வுபெற்ற ஆசிரியரும் திருப்பணிக் கமிட்டியின் பொருளாளருமான மதிவாணன்.
நெய் மணக்க நைவேத்தியம், மணம் கமழும் ஊதுவத்திப் புகை, வாசமும் பச்சை வண்ணமுமாகத் திகழும் துளசி என நறுமணத்துடன் திகழ்ந்த ஸ்ரீவரதராஜரின் ஆலயத்தில், ஆளுயரத் துளசி எப்போதாவது தான், எவரேனும் சார்த்துகிறார்கள். ஒருநாளில், மூன்று கால பூஜையோ ஆறு கால பூஜையோ செய்து அமர்க்களப்பட்ட கோயிலில், இன்றைக்கு ஒருகால பூஜை என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்கிறார் கோயிலின் கார்த்திகேய குருக்கள்.
ஒருகாலத்தில், சோழ தேசத்தின் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வண்டி கட்டிக் கொண்டு வலம் வந்து தரிசித்த ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில், மீண்டும் வளமுடன் திகழவேண்டாமா? பரிவார தெய்வங்களும் பிராகார அழகும் கொண்டு, கோயில் பொலிவுடன் அமைந்தால்தானே நமக்கெல்லாம் நிம்மதியும் நிறைவும்!
வரங்களை அள்ளித் தரும் ஸ்ரீவரதர், வஸ்திரங்கள் அணியாமல், புதிது புதிதாக வஸ்திரங்கள் இல்லாமல் இருக்கலாமா? மணக்க மணக்க புளியோதரையும் வெண் பொங்கலும் படையலிட்டு வணங்குவது நம் கடமை அல்லவா? செங்கல் பூச்சுகள் பெயர்ந்து, இடிந்து விழும் நிலையில் சந்நிதி இருக்கலாமா? கருணையே வடிவான ஸ்ரீபெருந்தேவித் தாயாரும், ஸ்ரீவரதராஜ பெருமாளும் ஓட்டுக்குடிசையில் இருப்பது தகுமா?
அம்மன்பேட்டை ஸ்ரீவரதருக்கு, அவர்தம் ஆலயத் திருப்பணிக்கு அள்ளிக் கொடுப்போம்! அந்தக் கிராமத்து மக்கள் மனம் மகிழும்படி, அனைத்து மக்களும் வந்து தரிசித்துப் பலன்களைப் பெறும்படி சுபிட்சம் நிலவுகிற நிலைமை, வாசக அன்பர்களான நம்மால்  விளையட்டும்.
பெரியகோயில் வரும்போது, திருவையாறு வரும்போது, அப்படியே அம்மன்பேட்டை ஆலயத்துக்கும் வாருங்கள். ஸ்ரீவரதனின் பேரருளையும் பெறுங்கள்!

எங்கே இருக்கிறது?
தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது அம்மன்பேட்டை. தஞ்சாவூரில் இருந்து அடிக்கடி டவுன் பஸ் வசதி உண்டு. அம்மன்பேட்டை கடைத்தெரு பஸ் ஸ்டாப் என்று சொன்னால் இறக்கிவிடுவார்கள்.
இங்கிருந்து ஊருக்குள் நுழைந்ததுமே, ஸ்ரீபெருந்தேவித் தாயார் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள், ஓட்டுக்குடிசையில் இருப்பதைப் பார்க்கலாம்!

Comments