அனைத்தும் அருளும் ஆஞ்சநேயர் சந்நிதானம்!

சென்னை- சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீஆஞ்சநேயர் கோயில். சுமார் ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில், மிகச் சிறந்த பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.
வடக்குத் திசை பார்த்தபடி, ஸ்ரீராமரின் திருப்பாதங்களைத் தாங்கிக்கொண்டு, கைகூப்பியபடி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீஅனுமன். இவருக்குத் துளசிமாலை, வடைமாலை எனச் சார்த்தி, சந்தனம் அல்லது வெண்ணெய்க் காப்பு செய்து, 11 முதல் 1008 வரை, பிராகாரமாகச் சுற்றி வந்து வேண்டிக்கொண்டால், திருமணத் தடை அகலும்; சந்தான பாக்கியமும் கிட்டும் என்கின்றனர் பக்தர்கள்.
அதேபோல், இந்தத் தலத்தில் காட்சி தரும் ஸ்ரீகருடாழ்வாரும் சிறப்புக்கு உரியவர். பொதுவாகவே, எல்லா வைணவத் தலங்களிலும் ஸ்ரீகருடாழ்வார் கருவறையின் மூலவரைப் பார்த்துக் கைகூப்பியபடி தரிசனம் தருவார். ஆனால் இங்கு, தன் திருக்கரத்தில் அமிர்தக்கலசத்தை ஏந்தியபடி அற்புதமாகத் தரிசனம் தருகிறார்.
ஸ்ரீகருடாழ்வாருக்குத் துளசி மாலை சார்த்தி மனதாரப் பிரார்த்தித்தால், வீடு- மனை வாங்கும் யோகம் கிட்டும்; வீட்டில் உள்ள வாஸ்து பிரச்னைகள் யாவும் தீர்ந்து, வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் நிறைந்திருக்கும்; உணவுக்கு ஒரு குறைவும் இருக்காது என்பது ஐதீகம்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீதுர்கை, ஸ்ரீஹயக்ரீவர் ஆகியோரும் இங்கே தரிசனம் தருகின்றனர். இங்குள்ள ஸ்ரீதும்பிக்கை ஆழ்வாரை வணங்கினால், கணவன்- மனைவிக்கு இடையே உள்ள பிரச்னைகள் யாவும் தீர்ந்து, கருத்தொருமித்து வாழ்வார்கள்.
இந்தத் தலத்தில் வேப்ப மரமும் அரச மரமும் பின்னி வளர்ந்திருக்க, அந்த மரத்தடியில் ராகு- கேது பகவான் இருந்தபடி, பக்தர்களின் நாக தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள், ராகு- கேது பெயர்ச்சியால் பாதிக்கப்படுவோர் இங்கு வந்து நாகர் விக்கிரகங்களை வழிபட்டுப் பரிகாரம் செய்து கொண்டால், விரைவில் தோஷங்கள் நீங்கப் பெற்று, ராகு- கேதுவின் பரிபூரண அருளைப் பெறலாம்.
செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடைக்கு ஆளான பெண்கள், செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து நாக தோஷ நிவர்த்தி செய்து கொண்டால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல், அரச மரத்தை 18 முறை பிராகார வலம் வந்து, ஸ்ரீஅனுமனை கண்ணாரத் தரிசித்து வேண்டிக் கொண்டால், விரைவில் நினைத்தபடி வாழ்க்கை அமையும் என்று பிரார்த்தனை நிறைவேறிய பெண்கள் அனுபவபூர்வமாகத் தெரிவிக்கிறார்கள்.
குழந்தை வரம் இல்லையே என வருந்துவோர், நாகருக்குப் பாலபிஷேகம் செய்து, அரச மரத்தில் மஞ்சள் துணியால் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
இந்தக் கோயிலில், ராகு- கேது பரிகார ஹோமங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன.                                                                                     

Comments