ஆயுள் பலம் தரும் லட்டு காணிக்கை

மதர்மனால் வணங்கி வழிபட்ட அற்புதமான திருத்தலம், மதுரையம்பதி எனப் போற்றப்படும் மதுரையில் அமைந்துள்ளது. இங்கே, தெற்கு மாசி வீதியில் உள்ள தென் திருவாலவாய ஸ்வாமி கோயில், நம் ஆயுளைக் கூட்டி, ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் திருத்தலம் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்.
மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க, எமதர்மன் பாசக்கயிற்றை அவன் மீது வீசும்போது, அது சிவலிங்கத்தின் மேல் பட்டது அல்லவா? இதில் கடும் கோபம் கொண்டார் சிவனார். அவரை சாந்தப்படுத்த, மதுரையம்பதியில் உள்ள இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை நோக்கி எமதர்மன் கடும் தவம் புரிந்தார் என்கிறது ஸ்தல புராணம்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இங்கு ஸ்வாமி- ஸ்ரீதிருவாலவாயர். அம்பாள்- ஸ்ரீமீனாட்சி அம்பாள். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன.  
சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவனுக்கு உரிய நாள், இந்த நாளில் விரதம் இருப்பது விசேஷம்! தொடர்ந்து 16 திங்கட்கிழமைகளில் சிவனாருக்கு விரதமிருந்து, மறுநாள் செவ்வாய்க்கிழமை லட்டு நைவேத்தியம் செய்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம்! கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரை, நெய் ஆகியன கலந்து 16 லட்டு பிடித்துப் படைப்பார்கள்.
ஸ்ரீமீனாட்சி அம்பிகைக்கும், வெள்ளிக்கிழமைதோறும் ஸ்ரீதுர்கைக்கும் பால், மஞ்சள் கொண்டு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து மனமுருகிப் பிரார்த்தித்தால், திருமண தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருக்கடையூர் திருத்தலம் போலவே, அறுபது மற்றும் எண்பதாம் கல்யாணங்கள் (சதாபிஷேகம்) இங்கேயும் சிறப்புற நடத்தப்படுகின்றன. தங்களின் அறுபதாம் கல்யாணம் மற்றும் சதாபிஷேகத்தில் வந்து சிவ- பார்வதியை வணங்கித் தொழுதால், தீராத நோய் தீரும்; ஆயுள் பலம் பெருகும்; மரண பயம் நீங்கப் பெற்று நிம்மதியாக வாழ்வார்கள் என்கின்றனர் பக்தர்கள்.
தினமும் காலை 7 மணியில் இருந்து 7.15 மணி வரை, பாலபிஷேகம் செய்து வில்வார்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால், சகல தோஷங்களும் விலகி, சந்தோஷமும் நிம்மதியுமாக நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

Comments