நேரத்தை நிர்வகிக்கும் கலை!

''அப்பா, உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?'' - குழந்தை இப்படிக் கேட்டதும் பிரமித்தார் தந்தை. வியாபார ஆலோ சகரான அவர், தனது பணி குறித்த பெருமிதத்துடன், ''ஒரு மணி நேரத்துக்கு நூறு ரூபாய்!'' என்றார்!
விருட்டென பக்கத்து அறைக்கு ஓடிய குழந்தை, நூறு ரூபாயுடன் திரும்பி வந்தது. குழப்பத்துடன் பார்த்த தந்தையிடம் பணத்தைத் தந்து, ''இதை வெச்சுகிட்டு, எனக்கு ஒரு மணி நேரம் கதை சொல்லுங்க'' என்றது!
பொதுவாகவே பெரும்பாலானோர் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் விஷயம்... 'நான் ரொம்ப பிஸி; எனக்கு நேரமே இல்லை' என்பதுதான். ஆரவாரம், பதட்டம் எதுவுமின்றி, அதேநேரம் திறமையாக, குறித்த நேரத்தில் குறித்த செயல்களைச் செய்யும் பழக்கம் சிலருக்கு மட்டுமே உண்டு!
'காலம் பொன் போன்றது' என்பர். இது தவறு! நேரம் விலை மதிப்பற்றது. அதை உற்பத்தி செய்யவோ, பூமியில் தோண்டி எடுக்கவோ முடியாது. பொழுது போகவில்லை என நெட்டி முறிப்பவர்களுக்கும் சரி, பொழுது போதாது என்று பறப்பவர்களுக்கும் சரி... எல்லோருக்கும் சமமாக 24 மணி நேரத்தை அருளியிருக்கிறார் இறைவன்!
'ஒரு நிகழ்ச்சி, குறித்த நேரத்தில் துவங்கி, குறித்த நேரத்தில் நிறைவுறும்' என்று யாராவது சொன்னால், பலரும் அதை நம்ப முடியாமல் பார்க்கின்றனர்! எந்த நிகழ்ச்சிக்கும் காலம் கடந்து செல்வது கௌரவம் அல்ல; பண்பற்ற செயலே!
பணத்தை சரியாகக் கையாளத் தெரிவதைவிட, நேரத்தை சரியாகக் கையாளத் தெரிந்து கொள்வது அவசியம். இது தெரியாததால்தான், மேனேஜ்மென்ட் குருமார்களை நாட வேண்டியிருக்கிறது. நம் தேசத் தில் 2000 வருடங்களுக்கு முன்னரே அப்படியரு குரு இருந்திருக்கிறார். அவர்... திருவள்ளுவர்.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை (குறள்: 672)
உடனடியாக செய்ய வேண்டியவற்றை உடனேயும், காலம் தாழ்த்திச் செய்ய வேண்டிய செயல்களை காலம் கடந்தும் செய்ய வேண்டும்.
தேர்வுக்குத் தயாராகும் மாணவன், முதலில் செய்ய வேண்டிய செயல்- நன்றாகப் படிப்பது மட்டுமே. தேர்வு முடியும் வரை, விளையாட்டு- பொழுதுபோக்கு விஷயங்களை பின்னுக்குத் தள்ளி படிப்புக்கு முக்கியத்துவம் தந்து செயல்படுபவனே வெற்றி பெறுகிறான். 'கடமை முன்னுக்கும் களியாட்டம் பின்னுக்கும் இருக்க வேண்டும்' என்கிறார் சுவாமி சித்பவானந்தர்.
ஒருபுறம்... நமக்கும் சமுதாயத்துக்கும் செய்ய வேண்டிய பயனுள்ள காரியங்கள் பல இருக்கின்றன. மற்றொரு புறம் 24 மணி நேரமும் நூற்றுக்கணக்கான சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. வலைத்தளங்களோ, எல்லையற்று விரிந்திருக்கின்றன. வருடம் முழுவதும் கிரிக்கெட் மேளாவும் உண்டு! ஆக, நமக்கு எது தேவை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
'சாப்பிடுவது, போன் பேசுவது, டி.வி. பார்ப்பது என ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்வேன்' என பெருமை பேசுபவர்களுக்கு ஒரு வார்த்தை... எத்தனை இட்லிகள் உள்ளே சென்றன எனும் கணக்கு தெரியாமல், தொலைபேசியில் பேசிய வங்கிக் கணக்கு விஷயத்தை அரைகுறையாகக் காதில் வாங்கி, டி.வி.யில் தலைப்புச் செய்திகளையும் தவறவிட்டு... இப்படி எதையும் உங்களால் உருப்படியாகச் செய்ய முடியாது என்பதே உண்மை!
நேரத்தின் உன்னதத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இயற்கை நமக்கு அளித்த வரம்... அதிகாலை நேரம். வாழ்வில் சாதனை புரிய விரும்புவோர், அதிகாலை நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
'ச்சே... இன்னிக்கி திங்கட்கிழமை. ஆபீஸ் போகணுமே...' என அலறியபடி, வேண்டா வெறுப்பாக எழுந்திருப்பதை விட்டு விட்டு, இந்த ஓர் அற்புத நாளை வழங்கிய இறைவனுக்கு நன்றி கூறி, உற்சாகத்துடன் எழுங்கள்; மாற்றத்தை உணர்வீர்கள்.
கடந்த காலக் கவலை மற்றும் வருங்காலக் கனவுகளில் மூழ்குவோர் நிகழ்காலத்தைத் தவற விடுகின்றனர். உண்மையில் வாழ்க்கை என்பதே மிக நீண்ட நிகழ்காலம்தான்!
''உன் சைக்கிள் திருடு போய்விட்டது... இது என்ன காலம்?''- ஆசிரியர் கேட்க, ''கஷ்டகாலம் சார்'' என பதில் தந்தானாம் மாணவன்! யோசித்துப் பார்த்தால், கஷ்டகாலம் என்பது அவரவர் மனப் பக்குவத்தைப் பொறுத்தது. மிக மிக கஷ்டம் என நாம் நினைப்பதை, மற்றொருவர் மிக எளிதாக சமாளித்து விடுகிறார்தானே?!
'தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசும் வேடிக்கை மனிதர்கள்' என்று பாரதி கூறியது போல், தங்களுடைய விலை மதிப்பற்ற நேரத்தை பலரும் சீரியலுக்கும் செல்போனுக்கும் பலியிடுகின்றனர்.
நேர நிர்வாகம்- ஒரு கலை. மேலாண்மை வல்லுநர்கள், நேர ஒதுக்கீட்டின் நான்கு கூறுகளை விவரிக்கின்றனர். வாழ்க்கை யில் அவசர காலங்களில் செய்ய வேண்டியவை, நம் முன்னேற்றத்துக்காக செய்ய வேண்டியவை, கடமைகள் மற்றும் பொழுதுபோக்கு. இந்த நான்கில் எதற்காக அதிக நேரம் செலவிடுகிறோம் என்பதைப் பொறுத்தே நமது முன்னேற்றம் அமைகிறது. அருள் நூல்களின் கண்ணோட்டத்தில்... நமது முயற்சிகள் அனைத்தும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு குறிக்கோளை நோக்கியே உள்ளன. வாழ்க்கையில் எது குறித்து நாம் தீவிரமாக இருக்கிறோமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தே நேரத்தை செலவு செய்கிறோம்.
சம்பாதிப்பதை குறிக்கோளாகக் கொண்டவர், உடலை வருத்தி, உறவு களை இழந்து, உணர்ச்சிகளை இறுக்கி, வாழ்வில் செய்ய வேண்டியதை செய்ய வில்லையே எனும் ஏக்கத்துடன் இறக் கின்றனர். உலக சுகங்களை அனுபவிக்க அனுபவிக்க, ஆசை வளர்ந்து கொண்டே இருக்கும்; உடலும் உள்ளமும் சோர்வுறும்!
பணம் சம்பாதிப்பதோ, இன்பம் அனுபவிப்பதோ... ஓட்டையான குடத்தில் தண்ணீர் பிடிக்கிற கதைதான்! நம் உள்ளத்தில் இருக்கும் வெறுமையை இவை ஒருநாளும் போக்கிவிடுவதில்லை.
வாழ்வில் வெற்றியும் உண்மையான மன அமைதியையும் பெற விரும்புவோர், நேரத்தை சரியாக செலவிடத் தெரிந்திருக்க வேண்டும். உடலைப் பேண, உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க வேண்டும். மனநலனைப் பேண, நல்ல நூல்களைத் தேடிப்பிடித்துப் படிக்கவும் நல்லோருடன் பேசிப் பழகவும் நேரம் ஒதுக்க வேண்டும். உறவுகளைப் பேண, குடும்பத்தாருடன் நேரம் ஒதுக்க வேண்டும்.வயதான பெற்றோர், பிறந்து வளர்ந்த கிராமம், படித்த பள்ளிக்கூடம் ஆகியவற்றைப் பார்க்க நேரமின்றி... தங்களின் வேர்களை இழந்து... இதற்காக காலம் கடந்து வருந்துபவர்கள் பலர்.
'நேரத்தை வீணாக்கக் கூடாதுன்னா... கொஞ்சம்கூட ரிலாக்ஸ் பண்ணிக்கவே கூடாதா?' என்று கேட்கலாம். போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு மணிக் கணக்கில் தூங்குவதாலோ, இலக்கே இல்லாமல் சேனல்களை மாற்றியபடி டி.வி-யில் லயித்திருப்பதாலோ உங்களின் மனம் புத்துணர்ச்சி பெறாது! ஓய்வு என்பது உங்களுக்குப் புத்துணர்ச்சி தருவதாக இருக்க வேண்டும். அதில் தரமும் முக்கியம்! காற்றோட்டமான இடத்தில் நீண்ட நடைப்பயிற்சி, செடிக்கு நீரூற்றுதல், சிறு குழந்தைகளுடன் விளையாடுதல், படிப்பு சொல்லித் தருதல் போன்றவையும் பொழுதுபோக்குகள்தான்!
பண விஷயத்தில் ஒருவர் தாராளமாக இருக்கலாம். ஆனால், நேரம் குறித்த விஷயத்தில் அப்படி இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. உடலும் மனமும் நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் போதே நல்ல பல செயல்களைச் செய்துவிட வேண்டும்.
ஓய்வுக் காலத் திட்டங்களை வங்கிகள் பரிந்துரைக் கலாம்; பிற்காலத்தில் இப்படி இருப்பேன்... அப்படி இருப்பேன்... என கனவு காணலாம். ஆனால், எதிர்பார்த்தபடி இருப்போமா?! இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே! நாம் வாங்குகிற பொருட்களுக்கு கியாரண்டி கார்டு இருக்கிறது; நமக்குத்தான் இல்லை!
'நேற்று இருந்தார்; இன்று இல்லை' எனும் சிறப்பு கொண்ட உலகம் இது. அப்படியிருக்க... வாழும் காலத்தில் நேரம் குறித்த சரியான விழிப்பு உணர்வு இல்லையெனில், பெறுவதற்கு அரிய மனிதப் பிறவியைப் பெற்றும், அதனை சரிவர பயன்படுத்திக் கொள்ளாத முட்டாளாகி விடுவோம்! முட்டாள்கள் காலத்தை வீணடிக்கின்றனர்; சராசரி மனிதர்கள் காலத்தைப் பயன்படுத்துகின்றனர்; அறிவாளிகள் காலத்தையே வெல்கின்றனர். காலத்தையெல்லாம் கடந்து நிற்பவர் கடவுள்; அவரைச் சார்ந்திருப்பதன் மூலமே காலத்தை வெல்லலாம். மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி, சிரஞ்ஜீவியானதன் தத்துவமும் இதுதானே?!

Comments