கொல்லிமலை யாத்திரை!

னிதனின் வாழ்வு சிறப்பதற்கும் மென் மேலும் மேம்படுவதற்கும் இறைவனால் படைக்கப்பட்டவை பஞ்ச பூதங்கள். பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சமே இதனுள் அடக்கம். இருக்க இடம் தருகிறது நிலம்; தாகம் தணிக்கிறது தரமான நீர்; சுவாசத்தை சுகமாக்குகிறது சுத்தமான காற்று; ஓசோனையும், ஒப்புயர்வில்லா மழையையும் உலக மக்களுக்கு வழங்கி வருகிறது வானம். உடலோடும் உயிரோடும் ஒன்றிணைந்து காணப்படுவது நெருப்பு.
ஆக... உயிர்களின் உருவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள் மிக மிக அவசியம்.பஞ்சபூதங்களுள் ஒன்றான நிலத்தின்பால் வருகின்றன மலைத் தொடர்கள்!
ஓங்கி உயர்ந்த மலைகள் உலகெங்கும் உண்டு. பிரமிப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தும் இந்த மலைகள், மனிதனால் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத அதிசயம்!
செழிப்புடன் விளங்கும் நிலத்தில், மனிதன் நிகழ்த்தி வரும் செயல்கள், மலைகளிலும் சாத்தியமே! உயிர்களின் வாழ்வும் பயிர்களின் வளர்ப்பும் இல்லாத மலைகள் வெகு குறைவு. குறிப்பிட்ட சிலவற்றை மலையில் பயிரிடு கின்றனர். இந்த சீதோஷ்ண நிலைக்கு மட்டுமே வளரும் தாவரங்களும் உண்டு. ஆனால், விதைப்பதும் விளைந்ததை கீழே கொண்டு சென்று வியாபாரம் செய்வதும் மிகுந்த சிரமத்துக்கு உரிய ஒன்று. இதனால் மலையில் விளை யும் சில பொருட்களின் விலையும் சற்றே அதிகம்!

மலைகளின் தோற்றம், காலம் ஆகியவற்றை துல்லிய மாக கண்டறிய முடியாது. மலைகளின் வயது சுமார் லட்சக்கணக்கான ஆண்டுகள் இருக்கலாம் என்கிறது விஞ்ஞானம்.
இந்துக்களின் வழிபாட்டில் மலைகளுக்கும் முக்கியத் துவம் உண்டு. புனிதமானவை; புண்ணியம் அருளுபவை என மலைகளைப் போற்றுகின்றனர். இந்திய தேசத்து மலைப் பிரதேசங்களுக்கு அயல் நாட்டவரும் அடிக்கடி வந்து, அவற்றின் புராதனத்தை அறிந்து புளகாங்கிதம் கொள்கிறார்கள். எனில், உள்ளூர்க்காரர்களைச் சொல்லவும் வேண்டுமா?
'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பர். முருகன் மட்டுமல்ல. கயிலை மலையில் முக்கண்ணனும் திருமலையில் அவரது மைத்துனரான மாலவனும் அருளாட்சி புரிகின்றனர்.
மலைகள் என்றாலே, அங்கே ஓர் அமைதி இருக்கும்; ஆனந்தம் இருக் கும். நகரங்களில் இருப்பது போல் சிக்கலான உணவு முறை இங்கே இல்லை. எல்லாமே எளிமைதான். பசியைத் தீர்த்துக் கொள்வதற்கு பசுமை யான காய்- கனிகள் அங்கே உண்டு. சில பச்சிலைகள், பசியையே விரட்டி விடும். நோய்கள் அண்டவே அண்டாது. மனம் மாசு படாது. இவற்றை எல்லாம் உணர்ந்தே சித்தர்களும் முனிவர் பெருமக்களும் மலைப் பிரதேசங் களுக்குள் குடில்களை அமைத்து தவத்தில் ஈடுபட்டனர்.
வழிபாட்டுத் தலங்களாகத் திகழும் மலைப் பிரதேசங்கள் பற்றிக் கண்டு கொள்ளப்படாமல்தான் இருந்தது. ஆரோக்கியமும் ஆன்மிகமும்தான் மக்களை அங்கே திசை திருப்பியது. மலைப் பிரதேசத்துக் காற்றை சுவாசித்து உடலளவில் புத்துணர்வு பெறுவதற்கும், அங்கே குடி கொண்டிருக்கும் இறை உருவங்களை வணங்கி மனதளவில் அமைதி பெறுவதற்கும் யாத்திரை மேற்கொண்டனர்.
சபரிமலையில் ஐயப்பனை தரிசிப்பதும், சதுரகிரியில் மகா லிங்கத்தைத் தரிசிப்பதும் இதற்காகத்தான். வடக்கே உள்ள கயிலாசத்துக்கு வசதிப்பட்டவர் கள் செல்கிறார்கள்; வைஷ்ணவி தேவியைத் தரிசிக்க காஷ்மீர் செல்கிறார்கள்!
மலைகளை மகான்கள் ஆண்டது போல், மகாராஜாக்களும் ஒரு காலத்தில் ஆண்டிருக்கிறார்கள். தங்களது நிர்வாகம் பரவுவதற்கும், அரசாட்சி செழிப்பதற்கும் மலையில் விளையும் பொருட்களை வியாபாரம் செய்துள்ளார்கள்.மருத்துவ குணமும் ஆன்மிக பலமும் அதிகம் உண்டு என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தோம். இதைத் தவிர, பல்வேறு சிறப்புக் குணங்களும் அவற்றுக்கு இருந்தன. புராணங்களில், ஆன்மிக மணம் ததும்பும் ஏராளமான மலைகளைப் பற்றியும் அவற்றின் சிறப்புகள் குறித்தும் நிறைய தகவல்கள் உண்டு.
இலங்கை மன்னன் ராவணனுடனான போரில் லட்சுமணனுக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்து அவனைக் குணமாக்க ஒளஷதகிரி என்னும் மலையைப் பெயர்த்து எடுத்து வருமாறு பணிக்கப்பட்டார் அனுமான். அப்படி எடுத்து வரப்பட்ட மலையில் இருந்து சில மூலிகைகளைப் பயன்படுத்தி, லட்சுமணன் குணமானதாக ராமாயணம் சொல்கிறது. அனுமன், ஒளஷதகிரியைப் பெயர்த்துக் கொண்டு வாயு வேகத்தில் (வாயுபுத்திரன் அல்லவா!) பறந்து வரும்போது, இந்த மலையின் சிற்சில துண்டுகள் ஆங்காங்கே பூமியில் பெயர்ந்து விழுந்தன. இவை தனித் தனி மலைகளாக- மருத்துவ குணம் செறிந்து விளங்கு கின்றன; வணங்கப்படுகின்றன.
கயிலைமலையை எல்லோருமே அறிவோம். உமாதேவியுடன் ஈசன் உறையும் மலை. 'கயிலை மலையானே போற்றி' என்று அவன் திருப்பாதத்தைத் தினமும் தொழுகிறோம். தங்கள் வாழ்நாளுக்குள் ஒவ்வொரு இந்துவும் அவசியம் தரிசிக்க வேண்டிய புனிதமான மலை. கயிலைமலைக்கு இப்போது யாத்திரைகள் மலிந்து விட்டன.
ருஸ்யமுகபர்வதம் என்கிற மலைக்கு வாலி வந்தால் அவன் கல்லாக சமைந்து விடுவான் என்பது மதங்க மகரிஷியின் சாபம். எனவே, ஒரு கட்டத்தில் வாலிக்குப் பயந்து வாழ்ந்த சுக்ரீவன், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வாலியால் நுழையவே முடியாத இந்த மலையில் ஒளிந்து வாழ்ந்ததாகப் புராணம் சொல்கிறது. வன வாழ்க்கை ஏறத்தாழ முடிகின்ற தறுவாயில் ராம- லட்சுமணர்கள் அனுமனையும் சுக்ரீவனையும் இங்குதான் சந்தித் தார்களாம்.
விந்திய மலை என்பது நர்மதை நதிக்கு வட திசைப் பக்கம் உள்ள பிரமாண்ட மலை.கந்தமாதனமலை என்பது, கயிலை யாத்திரை சென்றபோது பாண்ட வர்கள் தங்கிச் சென்ற மலை. கந்தமாதனமலைக்கும் மால்யவான் மலைக்கும் இடையில்தான் மேருமலை உள்ளது.
_ இப்படிப் புராணம் புகழும் மலை களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். எத்தனையோ அருளாளர்களின் பாதம் பட்ட
புண்ணியப் பிரதேசங்கள் அவை.
இப்போது மலைகளைத் தேடி, ஆன்மிக அன்பர் களின் யாத்திரை அதிகரித்து வருகிறது. காரணம் செலவு குறைவு; (ஆரோக்கிய) சேமிப்பு அதிகம். பொதுவாக, உயரம் குறைவான சில மலைகளில் எளிதில் ஏறி, அங்கு உறையும் தெய்வங்களைத் தரிசித்து விடலாம். ஆனால் சதுரகிரி, வெள்ளியங்கிரி, பர்வதமலை, பொதிகைமலை என்று பயணம் கடினமான மலைகளும் உண்டு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மலை களுள் கொல்லிமலையும் ஒன்று.தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இது அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவு; ராசிபுரத்தில் இருந்து சுமார் 35 கி.மீ.; திருச்சியில் இருந்து சுமார் 80 கி.மீ.; சேலத்தில் இருந்து சுமார் 100 கி.மீ.!
கி.பி. 200-ஆம் ஆண்டுகளில் வல்வில் ஓரி என்கிற மன்னன் இந்தக் கொல்லிமலையை சிறப்பாக ஆட்சி புரிந்து வந்துள்ளான். கடையேழு வள்ளல்களில் ஒருவனான இவனது கொடைத் திறத்தைப் பற்றி சம காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பாடி உள்ளனர்.
இலக்கிய காலத்தில் 'கொல்லிப்பாவை' என்கிற பெண் தெய்வத்தை இங்கே பிரதானமாக வழிபட்டு வந்துள்ளனர். அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட பெண் தெய்வம் இது. இந்த தெய்வம், கொல்லிமலையில் குடி கொண்ட கதை மிகவும் சுவாரஸ்யமானது. முனிவர்கள் கொல்லிமலையில் தவம் இருப்பதற்குப் பல இடை யூறுகளை விளைவித்தனர் அரக்கர்கள். தங்கள் தவம் கெடக் கூடாது என்பதற்காகத் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த பெண் தெய்வத்தை விஸ்வகர்மா வடிவமைத்தாராம்.

சித்த புருஷர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தாகச் சொல்லப்படும் அறப்பளீஸ்வரர் என்கிற ஈசனின் அருமையான திருத்தலம் கொல்லிமலையில் உள்ளது. மலைவாசிகளும் அருகே உள்ள ஊர்மக்களும் போற்றிக் கொண்டாடும் மாசிப் பெரியண்ண ஸ்வாமியின் ஆலயம் கொல்லிமலையின் உச்சியில் அமைந்துள்ளது. கொல்லிமலையிலேயே, மிகவும் உயர்ந்த பகுதி இதுதான். இவை போக, இன்னும் ஏராளமான திருத்தலங்கள் இருக்கின்றன.
கொல்லிமலையில் மட்டும் சுமார் 270-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இவற்றுள் சிலவற்றுக்குப் பேருந்து வசதிகள் உள்ளன. பல கிராமங்களுக்கு இத்தகைய வசதிகள் குறைவு.
சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு போன்ற பல நூல்களில் புராதனமான கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன.
வருடத்தில் 365 நாட்களும் நீரை வாரி இரைக் கின்ற 'ஆகாச கங்கை' எனும் அருவி இந்த மலை யின் கூடுதல் சிறப்பு. காபி, மிளகு, அன்னாசி, மரவள்ளிக் கிழங்கு, காய்கறிகள் என்று இயற்கை வளங்கள் மலைப் பிரதேசம் முழுதும் கொட்டிக் கிடக்கிறது. இந்த இடத்தின் மற்றொரு சிறப்பு... வாகனத்திலேயே மலைப் பகுதியில் பயணித்து கொல்லிமலையின் உச்சியை அடைய முடியும். நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், சேலம் போன்ற பகுதிகளில் இருந்து பேருந்துகள் செல்கின்றன.
''கொல்லிமலையின் வளத்தைக் கண்டு சித்தர்க ளும், முனிவர்களும் பல ஆயிரக்கணக்கான வருடங் களுக்கு முன் இங்கே தவம் இயற்றினார்கள். தவ வலிமையின் மூலம் எண்ணியது கிடைக்கப் பெற்றார்கள். பிறருடைய வறுமையையும் ஓரளவு போக்கினார்கள். அன்றைக்கு இருந்த அதே கொல்லிமலை - அதே மகத்துவத்தோடு இன்றும் விளங்கி வருகிறது.
தற்போதும் கொல்லிமலையில், சித்தர்கள் பலர் தவம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் சில நேரங்களில் பிறரின் கண்களுக்குத் தெரிவார்கள். அதுவும் எப்படித் தெரியுமா? சுய உருவத்தில் அல்ல. சாதாரணமான மனிதர்கள் போல் தெரிவார்கள். எப்போதேனும் சிலருக்கு அருள் வழங்குவார்கள். அத்தகைய அருளாசி கிடைத்தால் வாழ்க்கை முழுக்க ஆனந்தம்தான். அகத்தியர், போகர் போன்ற
சித்தர்கள் தங்கி இருந்த குகைகள் இங்கு உண்டு.
கொல்லிமலை என்கிற பெயர் மட்டும்தான் பலருக்குத் தெரியும். ஆனால், பிரமாண்டமான இந்த மலையின் உள்ளே முழுமையாகப் பயணித்து, இதன் மகத்துவத்தை அறிந்திருப்பவர்கள் வெகு குறைவு. கொல்லிமலையைப் பற்றி வெளியே வராத தகவல்கள் ஏராளம் இருக்கின்றன. இதை விரிவாகத் தெரிந்து கொண்டால் பரவசத்தின் உச்சிக்கே போய் விடுவீர்கள்'' என்றார் நாம் சந்தித்த கொல்லிமலைவாசி ஒருவர்.
ஆம்! அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்தது கொல்லிமலை! பலர் சொல்லும் தகவல்கள், நம்மைப் பிரமிக்க வைக்கின்றன; ஆச்சரியப்பட வைக்கின்றன; ஆதாரம் அற்றவையாக இருந்தாலும், அவை அதிர்ச்சி ஊட்டுகின்றன.
வியக்க வைக்கும் இந்த மலையைப் பற்றி, அடுத்த இதழில் இருந்து விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
கொல்லிமலை... ஓர் அறிமுகம்!
மிழகத்துக்குக் கிடைத்த ஓர் அருங் கொடைதான் புனிதமான இந்த மலை. சித்தர்களின் சாந்நித்தியமும் இறையருளும் சங்கமிக்கும் இந்தப் புண்ணிய மலையில் அதிசயங்கள் மற்றும் அமானுஷ்யங்களுக்கு பஞ்சமில்லை!
பசுமை நிறைந்த கொல்லிமலை அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், உறங்கும்போது கூட தங்களின் கால்களை இந்த மலையின் பக்கமாக நீட்டி படுக்க மாட்டார்களாம். ஆம்... இவர்களின் மனதில் இறைவனின் திருவடிவமாகவே ஆழப் பதிந்திருக்கிறது கொல்லிமலை!

Comments