உடற்குறையை நிவர்த்தி செய்யும் ஸ்ரீமகுடேஸ்வரர்!

முதபுரி, பிரமபுரி, ஹரிஹரபுரம், கறையூர், கன்மாடபுரம், கறைசை, பாண்டியூர், பாரத்வாஜ க்ஷேத்திரம், சிறுமேரு, தென் கயிலாயம்... இவ்வாறெல்லாம் போற்றப்படும் தலம்- காவிரிக்கரையில் எழிலுற மிளிரும் திருப்பாண்டிக் கொடுமுடி. கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்று.
ஆதி கருவூர் அதி வெஞ்சமாக்கூடல்நீதிமிகு கறைசை நீள் நணா - மேதினியில்நாதன் அவிநாசி நன்முருகன் பூண்டித் திருச்சோதிச் செங்கோடெனவே சொல் - என்று
இந்த ஏழு தலங்களையும் பற்றி, ஒரு பழந்தமிழ் பாடல் கூறும். வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் காவிரி, கொடுமுடியில் கிழக்கு நோக்கிப் பாய்கிறாள். காவிரியின் மேற்குக் கரையில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது திருக்கோயில்!

ஸ்வாமி, அம்பாள், பெருமாள் என மூவருக்கும் தனித்தனி கோபுரங்கள்! ஸ்வாமி கோயிலின் ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே நுழைந்தால், மகுடேஸ்வரர் முன்மண்டபம். வடகிழக்குப் பகுதியில் நவக்கிரகம், பைரவர் மற்றும் சனீஸ்வரர் சந்நிதிகள். அருகில் பாரத்வாஜ தீர்த்தம். முன்மண்டபத்தில் இருந்து ஸ்வாமி கோயில் வாயிலை அடையலாம். இனி வலம் வரலாமா? கிழக்குச் சுற்றில் இருந்து தெற்குச் சுற்றுக்குள் திரும்பினால் கணபதி, நால்வர் பெருமக்கள், அறுபத்து மூவர், சேக்கிழார், அருணகிரிநாதர். மேற்குச் சுற்றில்- தென்மேற்கு மூலை யில், சுயம்பு விநாயகர்; தல விநாயகரான இவரே காவிரி கண்ட விநாயகர்!
சிவ- பார்வதி திருமணத்தின் போது... இறைவனாரின் ஆணைப்படி, உலகை சமன் செய்ய தெற்கே புறப்பட்ட அகத்தியர், வரும் வழியில் விந்தியத்தின் செருக்கை அடக்கி விட்டு, மேற்கு மலைச் சாரலில் தவம் செய்து கொண்டிருந்தார்.
அவரது கமண்டலத்துக்குள் கங்கை நீர்! அதேநேரம், சீர்காழிப் பகுதியில் வளம் பெருக வேண்டும் என்ற தேவேந்திரனின் பிரார்த்தனையை ஏற்ற விநாயகர், காகமாக வந்து அகத்தியரின் கமண்டலத்தை தட்டி விட்டார். கமண்டல நீர் காவிரியாக பாய்ந்தது! பிரபுலிங்க லீலை, மணிமேகலை ஆகிய நூல்கள் இந்தச் சம்பவத்தைப் போற்றுகின்றன. காகம் கமண்டலத்தைத் தட்டிவிட்ட இடம், கொடுமுடித் துறை! இங்கேதான் காவிரி திசை மாறுகிறது; இங்கு அகத்தியர் பாறை உள்ளது.
ஸ்ரீகாவிரி கண்ட விநாயகரை வணங்கி நகர்ந்தால், உமாமகேஸ்வரர் சந்நிதி. தொடர்ந்து, அகத்தீஸ்வரர்; அகத்தியர் வழிபட்ட லிங்கம் மற்றும் ஸ்ரீகஜலட்சுமி தாயாரை தரிசிக்கலாம். வடமேற்கு மூலையில், தேவியருடன் ஸ்ரீசுப்ரமணியர். மயில் மாத்திரம், வழக்கத்துக்கு மாறாக எதிர்த்திசை நோக்கி உள்ளது. 'கொடுமுடிக் குமரப் பெருமாளே' என அருணகிரிநாதர் போற்றும் வடிவேலனை வழிபட்டு வலத்தைத் தொடர்கிறோம். வடக்குச் சுற்றில்... சிவகாமியம்மை புன்னகைக்க, சபாபதி ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். அடுத்து, உற்ஸவ மூர்த்தங்
களின் சந்நிதி. பிராகாரத்தை வலம் வந்து விட்டோம். மகா மண்டபமும் அர்த்த மண்டபமும் கடந்து, ஸ்ரீமகுடேஸ்வரர் தரிசனம். லிங்க பாணம் சிகரம் போல் தோற்றம் தருகிறது!
தேவ சபையில்... 'யார் பெரியவர்?' என்பதில், ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் தகராறு! இந்திரன் போட்டி விதிமுறைகளை நிர்ணயித்தான். ஆதிசேஷன் மேருமலையைச் சுற்றிக் கொண்டு அமிழ்த்த வேண்டும்; வாயு, அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும். போட்டி தொடங்கியது. வாயுதேவன் காற்றடிக்க... மேரு மலையின் ஆயிரம் சிகரங்களில் ஐந்து சிகரங்கள், அங்கிருந்து பிய்த்துக்கொண்டு, தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது.
சிவப்பு மணி வீழ்ந்த இடம்- திருவண்ணா மலை; மாணிக்கம் வீழ்ந்தது- ரத்தினகிரி (சிவாய மலை அல்லது அய்யர் மலை); மரகதம் வீழ்ந்தது- ஈங்கோய் மலை; நீலமணி வீழ்ந்தது- பொதிகை மலை; வைரம் வீழ்ந்த இடம், கொடுமுடியானது.
மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் நான்கு, இன்று மலைகளாகவே காட்சி தர, வைர மணிமுடி மட்டும் சுயம்பு சிவலிங்க ஸ்வாமியாகக் காட்சி தருவது, இந்தத் தலத்தின் சிறப்பு! மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்று பெயர். தமிழில் கொடுமுடிநாதர் (கொடுமுடி என்றால் பெரிய சிகரம்). கல்வெட்டுகளில், மலைக்கொழுந்தீசர் எனவும், மகுடலிங்கர், கொடுமுடி லிங்கர், திருப்பாண்டிக் கொடுமுடி மகா தேவர், கொடுமுடி உடையார் எனவும் பெயர்கள் உள்ளன! குட்டையான சிவலிங்கத்தின் ஆவுடையார், சதுர வடிவானது; பாணத்தின் மீது, விரல் தடங்கள்; அகத்தியர் பூஜை செய்த காலத்து ஏற்பட்டவை...
பிரமன் மாலறியாத பெருமையன்தருமமாகிய தத்துவம் எம் பிரான்பரமனார் உறை பாண்டிக் கொடுமுடிகருமமாகத் தொழு மட நெஞ்சமே - என்கிறார் அப்பர்.
இந்த இறைவனின் மீதுதான், நமச்சிவாயத் திருப்பதிகம் பாடினார் சுந்தரர். மூலவர் கோஷ்டங்களில், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், துர்கை, தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம். கோஷ்ட தட்சிணாமூர்த்தி, வித்தியாசம் ஆனவர். காலடியில் முயலகன் கிடக்கிறான்; சனகாதி முனிவர்களில் ஒருவர் மட்டுமே இருக்கிறார்.
ஸ்வாமி சந்நிதிக்கு வலப்புறம் அம்பாள் சந்நிதி; இதுபோன்ற தலங்களை கல்யாண தலங்கள் என்பர். அம்பாள் சந்நிதி உள் பிராகாரத்தில், மேற்குச் சுற்றில் வரிசையாக சந்நிதிகள்... வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, சப்தமாதர். அம்பாள் சந்நிதியில், சரஸ்வதிக்கும் சந்நிதி உள்ளது.
ஸ்ரீவடிவுடைநாயகி... அபய- வர ஹஸ்தங்களும் மலர்களும் திகழும் நான்கு திருக்கரங்கள்; கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு, ஒரு சின்னப் பிள்ளை போல நிற்கிறாள்! சௌந்தர நாயகி, பண்மொழி அம்மை, மதுரபாஷிணி, திரிபுரசுந்தரி என்றும் திருநாமங்கள் உண்டு. அனைத்திலும் சிறப்பு- அம்பாள், சதுரபீட ஆவுடையாரைத் தமது பீடமாகக் கொண்டு அருள்கோலத்தில் நிற்கிறாள்! அம்பாள் கோஷ்டத்தில் மூர்த்தங்கள் இல்லை; தனிச் சிலையாக சண்டேஸ்வரி உண்டு.
வடிவுடை நாயகியை வழிபட்டால், பேச்சு சரியாக வரும். நெடுநாள் பேசாத குழந்தைகள் பேசுவர், வாக்கு வன்மையும் கவித்துவமும் கிட்டும். இசைப் பயிற்சி பெறுவோர் இந்த அம்பாளை வழிபட்டால், அவர்களது இசையில் தெளிவும் இனிமையும் கூடுமாம் (20-ஆம் நூற்றாண்டில்கூட... இசையால் அனைவரையும் வசப்படுத்திய, 'கொடுமுடி கோகிலம்' என்று அறியப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் மூலம் இதன் உண்மை நமக்குப் புரிகிறது).
தெற்குச் சுற்றின் கோடியில் அனுமன் சந்நிதி. கரத்தில் கதை தாங்கி, வலது கரத்தால் அபயமும் காட்டுகிறார்; கோரைப் பல்; வாலில் மணி! அம்மன் சந்நிதி பின்புறம் தேவ தீர்த்தம். அதற்கும் சற்று மேற்காக, பிரம்மன் சந்நிதி. ஆமாம்! சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் மூவரும் பாடிய இந்த இறைவனை, பிரம்மனும் திருமாலும் வழிபட்டிருக்கின்றனர். ஸ்ரீவடிவாம்பிகை சமேத ஸ்ரீமகுடேஸ்வரராக அகத்தியருக்குக் காட்டிய திருமணக் கோலத்தை கண்டு களிப்புற்றனர்.
பிரம்மாவின் அடையாளம் வன்னி மரம்.ஸ்தல மரமும் அதுவே. இதன் அடியில்... அமர்ந்த கோலத்தில் பிரம்மன். பிரம்மாவின் நான்கு முகங்களை, நான்கு வேதங்களாகக் காணும் போது, அதர்வண வேதத்துக்கான மரம் - வன்னி. எனவே, இங்கே மும்முகனாகக் காணப்படுகிறார் பிரம்மன். இந்த வன்னி மரத்தில், முள்ளோ, பூவோ, காயோ கிடையாது! இங்கே இறைவனை வழிபட்டு அருள் பெறுகிறார் பிரம்மன். எனவே சாபமோ பாவமோ... இந்தத் தலத்தில் போய் விடும்.
வடக்கு நோக்கி வந்தால், திருமங்கை நாச்சியார் சந்நிதி. அடுத்து பள்ளி கொண்ட கோலத்தில், ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் சந்நிதி. இவர் கிருத யுகத்தில் ஆதிநாராயணர் என்றும், திரேதா யுகத்தில்- அனந்த நாராயணர்; துவாபர யுகத்தில்- வேத நாராயணர் என்றும் அழைக்கப்பட்டாராம். பெருமாளின் அருகில் கருடாழ்வார், தலைமாட்டில் ஸ்ரீதேவி, கால் மாட்டில் பூதேவி. நாபிக் கமலத்தில் பிரம்மன்; அவருக்கு வலப்புறம் நாரதர்; இடப்புறம்- வாசுதேவர். பெருமாளின் கால்மாட்டில் விபீஷணர்; அனுமன்; கவேர முனிவர் (இவரின் மகளாகத்தான் காவேரி அவதரித்தாள் என்பர்).
ஆலயத்தின் வடகிழக்குப் பகுதியில், நவக்கிரகங் கள், பைரவர், சனி பகவானுக்கான தனி சந்நிதி. இந்தக் கோயிலுக்கு நிறைய தீர்த்தங்கள்... காவிரி நதி, வன்னி மரம் அருகில் தேவ தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மடப்பள்ளிக்கு அருகில் பிரம்ம தீர்த்தம்.
கொடுமுடிக்கு வந்த பாரத்வாஜர், தினந்தோறும் காவிரியில் நீராடி, கோயில் பகுதியில் தான் அமைத்த தீர்த்தத்தில் நீர் கொண்டு சிவனாரை ஏத்திப் பணிந்து, வன்னி மரத்தடியில் அமர்ந்து, ஈசனின் ஆடல் கோலத்தையே சிந்தித்துத் தவம் செய்தார். இவருக்கு, சதுர்முக தாண்டவ கோலம் காட்டினார் சிவனார். பாதத்தின் கீழ் முயலகன் இல்லாமல், குஞ்சித பாதம் தூக்கி சிவனார் ஆடும் இந்தத் திருக்கோலம் அரிதானது; இதுபோன்ற மூர்த்தம் கோயிலில் உள்ளது. இந்தத் தலத்துச் சிவனாரை பாடும்போதே, 'நாதாந்த நட்டன்' (நடனமாடுபவன்) என்று பாடினார் அப்பர்.
காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் மூழ்கி, வன்னி யையும் சுவாமியையும், திருமாலையும் வழிபட, பிணிகளும், பேய்- பிசாசு, பில்லி சூன்யம் போன்ற குற்றங்களும், மனநோயும் நீங்கும்.
சைவ- வைணவ ஒற்றுமைக்கு பெயர் பெற்றது கொடுமுடி. வீதியுலாக்களில், சிவனும் விஷ்ணுவும் ஒன்றாகவே வலம் வருவர். பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில், சூரியக் கதிர்கள் ஸ்வாமி மற்றும் அம்மன் திருமேனிகளில் விழும். உமாதேவி, பிரம்மன், திருமால், தேவர்கள், அகத்தியர், பாரத் வாஜர், கன்மாடன், பாண்டு, கருடாழ்வார் என்று பலரும் இங்கே வழிபட்டுள்ளனர்.
மலையத்துவச பாண்டியனின் மகனுக்குப் பிறவி யிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டிய பின், குறை தீர்ந்தது. எனவே, அங்கவர்த்தனபுரம் ஆனது.
பாண்டியனும் இந்தக் கோயிலுக்கு மூன்று கோபுரங்கள், மண்டபங்கள் அமைத்தான். பல மூர்த்தங்களைச் செய்தான்; மடமும் அன்ன சாலையும் எழுப்பினான்; பெரிய தேரும் வழங்கி னான். பாண்டியனின் திருப்பணிகளைப் பெற்ற தால், ஊரும் பாண்டிக்கொடுமுடி ஆனது.
சித்திரை மாதம் பெருவிழா. ஆடி 18-ல், மூர்த்திகள் அனைவரும் காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பர். ஆடி மாதத்தில், அம்மனுக்கும் தாயாருக்கும் சந்தனக் காப்பு.
காவிரி துலா ஸ்தானம் செய்வது, கொடுமுடியிலும் வெகு சிறப்பானது. இதே ஊரில், மலையம்மன் கோயில் ஒன்றும் உள்ளது.
மும்மூர்த்திகளை வணங்கி, மூவகை குற்றங்களும் அகலப் பணிந்து, கொடுமுடியில் இருந்து விடைபெறுகிறோம்.

Comments