சுந்தரபாண்டியன் கட்டிய சொக்கநாதர் கோயில்!

சொக்கநாதர் என்றதும் நம் நினைவுக்கு வருவது மதுரை. ஆனால், அதே பெயருடன்... அதுவும் மதுரைக்கு அருகிலேயே உள்ள மற்றொரு தலத்திலும் கோயில் கொண்டிருக்கிறார் தென்னாடுடைய ஈசன்.
மதுரையிலிருந்து சுமார் 49 கி.மீ. தொலைவில் உள்ளது அருப்புக்கோட்டை. இங்கே பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்.
12-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஆலயம் என்கிறார்கள். ஆனால், உறுதியான ஆதாரங்கள் இல்லை. மணவூரில் வாழ்ந்த அரசகுரு பரஞ்ஜோதி தேசிகர் என்பவரது சாபத்துக்கு விமோசனம் வேண்டி, ஆதியில் வில்வ வனமாகத் திகழ்ந்த இந்த இடத்தில் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சிவாலயம் எழுப்பியதாக தல புராணம் விவரிக்கிறது.
''இந்த மன்னன் ஆரம்பிச்சு வெச்ச ஆனி பிரம்மோற்ஸ வம் இன்னிக்கும் வருஷா வருஷம் சிறப்பா கொண்டாடப் படறது. இதுல என்ன விசேஷம்னா... திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்லயும் இங்கேயும் ஒரே நாள்ல- ஒரே நட்சத்திரத்துல ஆனித் தேரோட்டம் நடக்கும்!'' என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார், 90 வயது ராமநாத சிவாச்சார்யர்.
பரவசத்துடன் ஆலயத்தை வலம் வந்தோம். ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீமுருகன் உட்பட இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் தெய்வ மூர்த்தங்கள் அனைத்துமே மிக அழகு. இங்கே, முருகனின் மயில்வாகனம் வலப்புறம் அல்லாது இடப்புறம் நோக்கி நிற்பது விசேஷ அம்சமாம். எனவே, இங்கே வந்து திருமணம் செய்து கொண்டால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சுபமுகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.
கருவறையில் லிங்கத் திருமேனி யராக அற்புத தரிசனம் தருகிறார் ஸ்ரீசொக்கநாதர். தினமும் நான்கு கால பூஜைகள், தமிழ் மாதப் பிறப்பு உற்ஸவம், ஐப்பசி மாத அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தெப்போற்ஸவம், மார்கழி மாத பூஜை, மகா சிவராத்திரி, பிரதோஷ வைபவங்கள் அனைத்தும் சிறப்பாக நடைபெறுகின்றன. தவிர, இங்கே வள்ள சித்தருக்கு தை மாதம் நடைபெறும் பூஜை மிக விசேஷம்.
வள்ள சித்தரா? ஆம்... சிவபிரான், தானே எல்லாம் வல்ல சித்தராக மதுரையில் எழுந்தருளி திருவிளையாடல் நிகழ்த்தினார்; வரகுண பாண்டியனின் கர்வம் அடக்க கல் யானையை கரும்பு தின்ன வைத்தார்! எல்லாம் வல்ல சித்தரான சிவபிரானையே, வள்ள சித்தராக இங்கே வழிபடுகிறார்கள்! ஸ்ரீமீனாட்சிதேவி கருணை நாயகியாக அருள் தருகிறாள். ஸ்ரீகாலபைரவரையும் இங்கே தரிசிக்கலாம். தேய்பிறை அஷ்டமி நாட்களில் நடக்கும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீகால பைரவரை வழிபட்டால், தீவினைகள் அகன்று சர்வ நன்மைகளும் கைகூடும். தினமும் நடைபெறும் அன்னதானம் இந்தக் கோயிலின் சிறப்பம்சம்!

Comments